விகடன் டீம்
'அறம் செய விரும்பு’ திட்டம் நிகழ்த்தும் உதவிப் பணிகளின் அப்டேட்..!
அரசுவெளி அரசு உண்டு உறைவிட தொடக்கப் பள்ளி
பழுப்பேறிய தேகங்கள், செம்பட்டை தலைமுடி, கசங்கிய ஆடைகள் - இவைதான் ஒருகாலத்தில் திருவண்ணாமலை மாவட்டம், ஜவ்வாதுமலை அரசுவெளியில் உள்ள அரசு உண்டு உறைவிடத் தொடக்கப் பள்ளி மாணவர்களின் அடையாளங்கள். இவற்றை தன் சொந்த முயற்சியால் மாற்றியிருக்கிறார், 'அறம் செய விரும்பு’ தன்னார்வலர்களில் ஒருவரான ஆசிரியை மகாலட்சுமி.

போக்குவரத்து வசதி இல்லாத, உள்ளடங்கிய இந்தப் பள்ளிக்கு வேலைக்கு வருவதற்கு ஆசிரியர்கள் யாரும் விரும்புவது இல்லை. ஆனால், ஆசிரியர் மகாலட்சுமி இங்கு பணிக்குச் சேர்ந்து, காடு மேடுகள் சுற்றி, பிள்ளைகளைப் பள்ளிக்கு அழைத்துவந்து, குளிக்கவைத்து, முடி வெட்டி, தலை வாரி, கதைகள் சொல்லிக் கவர்ந்து... இன்று 109 மாணவர்கள் படிக்கும் பள்ளியாக மாற்றியிருக்கிறார். இங்கு படித்த மூன்று மாணவர்கள் இன்று கல்லூரி வாசலை எட்டிவிட்டனர். இந்தப் பள்ளிக்கு 'அறம் செய விரும்பு’ திட்டத்தில் இருந்து கம்ப்யூட்டர், புரொஜெக்டர், ஸ்கிரீன், பிரின்ட்டர் ஆகியவற்றை வழங்கினார். புதியக் கருவிகளைக் கண்டதும் மாணவர்கள் முகங்களில் அத்தனை குதூகலம். எல்.சி.டி ஸ்கிரீனில் வீடியோ பார்த்ததும் ஒரே கொண்டாட்டம்.

''இவங்க இதுவரைக்கும் கம்ப்யூட்டரையே பார்த்தது இல்லை. நகரத்து ஸ்கூல்போல நவீன முறையில கம்ப்யூட்டர்ல பாடம் நடத்த ஆசைப்பட்டேன். அதை 'அறம் செய விரும்பு’ நிகழ்த்தியிருக்கு'' என நெகிழ்ந்தார் மகாலட்சுமி!
கோவை மாவட்டம் கொரவன்கண்டி, புதுக்காடு
கேரளா மாநில எல்லையில் அடர்ந்த வனத்துக்குள் இருக்கின்றன இந்த மலைக்கிராமங்கள். கோவையில் இருந்து ஆனைக்கட்டி சென்று, அங்கிருந்து வனப்பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் ஜீப்பில் பயணித்தால், இந்தக் கிராமங்களை அடையலாம். மிக மோசமான சாலைகள். பவானி ஆற்றங்கரையில் அமைந்துள்ள இந்தக் கிராமங்களில் வசிப்பவர்கள் தீப்பெட்டி வாங்க வேண்டும் என்றால்கூட, ஆற்றைக் கடந்து அந்தப் பக்கம் உள்ள ஊர்களுக்குத்தான் செல்ல வேண்டும். இல்லாவிட்டால், 8 கி.மீ தூரம் சுற்றி வர வேண்டும். பவானியில் பெரும்பாலான நாட்களில் தண்ணீர் ஓடும் என்பதால், 'பரிசல் இருந்தால் ஆற்றைக் கடந்துவிடுவோம்’ என்பது இவர்களின் கோரிக்கை. இரண்டு புதிய பரிசல்களுடன் அங்கு சென்றபோது கிராமத்து மக்களின் முகங்களில் புன்னகை ஒளி. தன்னார்வலர் லட்சுமணனின் நிதியில் இருந்து இந்தப் பரிசல்கள் அளிக்கப்பட்டன.

தேனி மாவட்டம் பளியன்குடி
தமிழ்நாடு - கேரளா மாநிலங்களின் எல்லையில் இருக்கும் இந்த ஊரில், 24 பளியர் இனக் குடும்பங்கள் வசிக்கின்றன. இவர்களின் குழந்தைகள் படிக்க இங்கு ஒரு பள்ளி இருக்கிறது; வகுப்பறை இருக்கிறது. ஆனால், அடிப்படைத் தேவைகள் இல்லை. மாணவர்கள் அமர்ந்து படிக்க - எழுத டெஸ்க், பெஞ்ச் போன்றவற்றை வழங்க தன்னார்வலர் உமர் ஃபாரூக் பரிந்துரை செய்திருந்தார். அவற்றை அப்படியே கொண்டுசேர்த்தோம். ''சின்னப்பசங்க தரையில உக்கார்ந்து குனிஞ்சு எழுதும்போது, தன்னை அறியாம தூங்கிடுவாங்க. டெஸ்க் கொடுத்ததால பசங்க சந்தோஷமா, உற்சாகமா படிக்க வருவாங்க'' என்கிறார் தலைமை ஆசிரியர் முருகன்.

தேவகோட்டை பிரியங்கா
புதுக்கோட்டை மாவட்டம் குடுமியான்மலையில் உள்ள அரசு விவசாயக் கல்லூரியில் முதலாம் ஆண்டு பட்டயப் படிப்பு படித்துவருகிறார் பிரியங்கா. சொந்த ஊர் தேவகோட்டை. பிரியங்காவின் அப்பாவுக்கு, சென்னையில் ஒரு டீக் கடையில் வேலை. இவருக்கு இரண்டு மகள்கள், ஒரு மகன். அதில் கடைசிப் பெண்தான் பிரியங்கா. ப்ளஸ் டூ-வில் நல்ல மதிப்பெண் எடுத்து அரசுக் கல்லூரியில் சேர்ந்துவிட்டாலும் ஃபீஸ் கட்ட வசதி இல்லை. முதல் செமஸ்ட்டரையே வேறு ஒருவரின் உதவியுடன்தான் முடித்திருக்கிறார். மீதம் உள்ள செமஸ்ட்டருக்கு என்ன செய்வது என தத்தளித்து நின்றவேளையில்தான், தன்னார்வலர் சொக்கலிங்கம் மூலம் இப்போது 50 ஆயிரம் ரூபாய் கல்வி உதவியாகப் பெற்றிருக்கிறார். ''இவ்வளவு பெரிய தொகை உதவியா கிடைக்கும்னு நான் நினைச்சுக்கூடப் பார்க்கலை. விகடனுக்கும் லாரன்ஸுக்கும் நன்றி'' எனக் கண்கள் கலங்குகிறார் பிரியங்கா!
அறம் தொடரும்!
'அறம் செய விரும்பு’ திட்டத்துக்காக எட்டாம் கட்டமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் 10 தன்னார்வலர்கள் பற்றிய அறிமுகம்...
ஜெயவீணா - நீச்சல் வீராங்கனை

தமிழ்நாட்டின் தங்க மீன், இந்தியாவின் நம்பர் 1 நீச்சல் வீராங்கனை. சமீபத்தில் சிங்கப்பூரில் நடந்த உலக நீச்சல் சாம்பியன்ஷிப் போட்டியில் சீனியர்களையே திணறடித்த ஜூனியர் ஜெயவீணா, முதல் வரிசையில் இடம்பிடித்திருக்கிறார். ''எனக்கு மீனவ நண்பர்கள் அதிகம். மீனவச் சமூகத்தில் நல்லா படிக்கிற பசங்களுக்கு உதவி செய்ய விருப்பம்!''
மதன் கார்க்கி
திரைப்படப் பாடலாசிரியர், வசனகர்த்தா

'கார்க்கி ஆராய்ச்சி நிறுவனம்’ என்கிற பெயரில் ஏழைக் குழந்தைகளுக்கான கல்வி மற்றும் மொழி வளர்ச்சிக்கான பணிகளில் ஈடுபட்டுவருகிறார். ''மொழியை எளிதாகக் கற்றுத்தர உதவும் சாதனங்கள் மற்றும் ஏழை மாணவர்களுக்கான ஆரம்பக் கல்வி தடை இல்லாமல் கிடைப்பதற்கான பணிகளில் தொடர்ந்து இயங்கிவருகிறேன். இந்தத் திட்டத்தின் மூலம் அந்தச் செயல்பாடுகளை அடுத்த கட்டத்துக்குக் கொண்டுசெல்வேன்!''
கலா பாலசுந்தரம், மென்பொருள் பொறியாளர்

மென்பொருள் நிறுவனம் ஒன்றில் மிக உயர்ந்த பொறுப்பில் பணியாற்றும் கலா பாலசுந்தரம், 'அலெர்ட்’ எனும் தன்னார்வ அமைப்பை நடத்திவருகிறார். ''சாலை விபத்து, தீ விபத்து, திடீர் மாரடைப்பு என எதுவாக இருந்தாலும், 'கோல்டன் ஹவர்’ எனப்படும் முதல் அரை மணி நேரத்துக்குள் முதலுதவிச் சிகிச்சை அளிப்பது தொடர்பான விழிப்புஉணர்வைப் பரப்பும் எண்ணம் உண்டு. இந்தத் திட்டத்தின் மூலமும் அது சார்ந்த செயல்களில் ஈடுபடுவேன்!''
விஜய் அசோகன் - சமூக ஆர்வலர்

நார்வேயில் ஆய்வுசெய்து தமிழ்நாடு திரும்பியிருக்கும் நானோ சயின்டிஸ்ட். 'தேனியில் அமைய உள்ள நியூட்ரினோ ஆய்வகம் மக்கள் நலனுக்கு விரோதமானது’ எனச் சொல்லி, அறிவியல் ஆதாரங்களுடன் வாதாடி வருபவர். ''அறிவியல், மக்களுக்கானதாக மாற வேண்டும் என்பதே என் கனவு. கிராமப்புற மாணவர்களின் அறிவியல் கண்டுபிடிப்புகள் வெளி உலகத்துக்கு தெரிவது இல்லை. அவர்களின் அறிவியல் கண்டுபிடிப்புகளை ஊக்குவிக்கவும், கல்வி மேம்பாட்டுக்காகவும் இந்தத் திட்டத்தின் கீழ் செயல்படுவேன்!''
தளபதி - வழக்குரைஞர்

கோபிசெட்டிப்பாளையத்தைச் சேர்ந்த வழக்குரைஞர். ஈமுகோழி பித்தலாட்டத்தை வெளியில் கொண்டுவந்ததில் முன் நின்றவர். பவானி ஆறு பாசன விவசாயிகள் சங்கத் தலைவராகவும் இருக்கிறார். ''கல்வி, அறிவியல், ஆகியவற்றில் பழங்குடியின மக்கள் இன்னும் முன்னேற வேண்டியிருக்கிறது. பழங்குடிச் சமூகக் குழந்தைகளின் கல்விக்குத் தேவையான புத்தகங்கள், பள்ளி உபகரணங்களை வழங்க விருப்பம்!''
அஞ்சனா, தொலைக்காட்சி நிகழ்ச்சித் தொகுப்பாளர்

டி.வி நிகழ்ச்சித் தொகுப்பாளர்களில் அதிக லைக்ஸ் குவிக்கும் சின்சியர் சீனியர். சன் மியூஸிக் தொகுப்பாளராக கடந்த ஏழு ஆண்டுகளாக அஞ்சனா டாப் ட்ரெண்டிங்கிலேயே இருக்கிறார். ''இப்போ இருக்கிற சொசைட்டி செட்டப், முதியவர் களையும் சிறுவர்களையும் ரொம்ப வாட்டி வதைக்குது. அடிப்படை உதவிகள்கூட அவங்களுக்குக் கிடைப்பது இல்லை. அப்படியான ஆதரவற்றவர்களுக்கு என்னால முடிஞ்ச உதவியை இந்தத் திட்டம் மூலம் செய்வேன்!''
நிகில் முருகன் - மக்கள் தொடர்பாளர்

தமிழ் சினிமாவின் துடிப்பான மக்கள் தொடர்பாளர். ''தினமும் நூற்றுக்கணக்கான மக்களைச் சந்திப்பது என் பணி இயல்பு. அப்போது என்னிடம் பலர் உதவி கேட்பார்கள். அவர்களில் சிலருக்கு உதவ இந்தத் திட்டம் எனக்கு நல்ல களம்!''
ஜெயராணி - பத்திரிகையாளர், எழுத்தாளர்

ஒடுக்கப்பட்ட, அடித்தட்டு மக்களின் நலனுக்காக எழுதியும் களத்தில் பணியாற்றியும் வருபவர். ''மனிதக் கழிவுகளை அகற்றும் தொழிலாளர்களின் நலனுக்கு உதவும் எண்ணம் இருக்கிறது. இயந்திரங்களின் உதவி இல்லாமல் அந்தப் பணியில் ஈடுபடும் சிலர், திடீரென இறக்க நேர்கிறது. அவர்களின் குடும்பம் எந்த உதவியும் கிடைக்காமல் தவிக்கிறது. அவர்களுக்கு உதவ ஆசை!''
சுபத்ரா - சமூக ஆர்வலர்

கணக்காளரான சுபத்ரா, சென்னையில் நண்பர்களுடன் இணைந்து 'மது விழிப்புஉணர்வு நண்பர்கள்’ என்கிற பெயரில் சிறு இயக்கத்தை நடத்திவருகிறார். ''இன்றைய சேரி மற்றும் கிராமப்புறங்களில் இளவயது மதுப்பழக்கம் மிகப் பெரிய சவாலாக இருக்கிறது. 'மது, மகிழ்ச்சியைத் தரும்’ என்ற தவறான நம்பிக்கை சிறுவர் மற்றும் இளைஞர்களிடம் இருக்கிறது. இதை உடைத்து விழிப்புஉணர்வை ஏற்படுத்தவும், மதுவால் சிதைந்த குடும்பத்தினருக்கு உதவவும் முனைவேன்!''
ரமணா - பண்பலை நிகழ்ச்சித் தொகுப்பாளர்

மதுரை ரேடியோ மிர்ச்சி பண்பலை நிகழ்ச்சித் தொகுப்பாளர். நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக 'கொஞ்சம் காபி கொஞ்சம் மெலடி’ என்ற கலகலப்பான ஷோ நடத்திவருகிறார். ''ஆதரவற்றக் குழந்தைகளுக்கு அத்தியாவசியப் பொருட்கள், பாடப்புத்தகங்கள் வாங்கிக் கொடுப்பேன். மாற்றுத்திறனாளிகளின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்திசெய்ய முயற்சிப்பேன்!''
'அறம் செய விரும்பு’ திட்டம் பற்றி அறிய...
இந்தத் திட்டத்தின் செயல்பாடுகள் அவ்வப்போது ஆனந்த விகடனிலும், இதற்கான பிரத்யேக வலைதளம் மூலமும் பகிரப்படும். திட்டம் தொடர்பான தகவல்களை www.vikatan.com/aramseyavirumbu என்ற வலைதளத்தின் மூலம் அறிந்துகொள்ளலாம். இந்தத் திட்டம் மூலம் உதவ விரும்புபவர்கள் / உதவி வேண்டுபவர்கள் aram@vikatan.com என்ற மின்னஞ்சல் முகவரிக்குத் தொடர்புகொள்ளலாம்!
படங்கள்: சு.குமரேசன், எம்.உசேன், சொ.பாலசுப்ரமணியன், எஸ்.சாய் தர்மராஜ்,
எம்.விஜயகுமார், வீ.சக்தி அருணகிரி, ரமேஷ் கந்தசாமி, கா.முரளி, தி.ஹரிஹரன், மீ.நிவேதன்,
ஜி.சதீஷ்குமார், த.ஸ்ரீனிவாசன்.