Published:Updated:

இதுவும் இந்தியாவுக்கான அவமானமே!

இதுவும் இந்தியாவுக்கான அவமானமே!

இதுவும் இந்தியாவுக்கான அவமானமே!

குடும்பத்தின் வறுமை களைய, குழந்தைகளின் பசி போக்க, வாங்கிய கடனுக்கு வட்டி கட்ட... கடல் கடந்து சவுதி அரேபியாவுக்கு வீட்டு வேலைக்குச் சென்றார், கஸ்தூரி என்கிற 56 வயது தமிழ்ப் பெண். வேலைக்குச் சென்ற இரண்டே மாதங்களில் வீட்டு உரிமையாளரின் துன்புறுத்தல் காரணமாக, அவரது கை மணிக்கட்டோடு துண்டிக்கப்பட்டிருக்கிறது. சோதனைக்கு வந்த தொழிலாளர் துறை அதிகாரிகளிடம், கொத்தடிமையைவிட கொடூரமான முறையில் தன்னை நடத்தும் வீட்டு உரிமையாளர் குறித்து முறையிட்டதுதான் கஸ்தூரி செய்த பிழை! இதற்காக ஒரு கை துண்டிக்கப்பட்ட நிலையில் இப்போது ரியாத் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார். குடும்பத்தின் கண்ணீரைத் துடைப்பதற்காக, தேசம்விட்டு தேசம் சென்ற ஏழைப் பெண்ணின் வாழ்வு, இப்போது இன்னும் துயரமானதாக மாற்றப்பட்டிருக்கிறது. ஆனால், இது கஸ்தூரிக்கு மட்டுமான துன்பமா? 

இந்தியாவில் இருந்து வளைகுடா நாடுகளுக்கு உடல் உழைப்புப் பணிகளுக்குச் செல்லும் தொழிலாளர்களின் துயரம் சொல்லி மாளாதது. குறிப்பாக, வீட்டு வேலைகளுக்குச் செல்லும் பணிப்பெண்கள் அடிமைகளைவிடவும் இழிவாக நடத்தப்படுகின்றனர். மிக அதிகமான வேலை நேரம், மலைக்கவைக்கும் வேலைகள், வீட்டுச் சிறை, சரியான உணவு இல்லாமல் எப்போதும் பசி, தூக்கமின்மை, நாயைப்போல வீட்டின் ஒரு மூலையில் முடங்கிப் படுத்துக்கொள்ள வேண்டிய இழிநிலை, இதற்கு மேலும் அடி, உதை, சித்ரவதை. இவற்றை யாரிடமும் சொல்லி அழக்கூட முடியாத கையறுநிலை, பாஸ்போர்ட் மற்றும் விசாவை வீட்டு உரிமையாளர் பிடுங்கி வைத்துக்கொள்வதால் தப்பித்துச் செல்ல முடியாத கைவிடப்பட்ட நிலை... என அது ஒரு நரகம். இதில் சிக்கிச் சீரழியும் தமிழகப் பெண்களின் எண்ணிக்கை பல்லாயிரம்!

பணிப்பெண்கள் மட்டும் அல்ல... இங்கு இருந்து வளைகுடா நாடுகளுக்குச் சென்று, கட்டுமான வேலை உள்ளிட்ட உடல் உழைப்பு வேலைகளில் ஈடுபடும் பெரும்பாலான தொழிலாளர்களின் நிலையும் பரிதாபம்தான். தேனியைச் சேர்ந்த ஓர் இஸ்லாமிய இளைஞர், தொழிற்சாலை வேலை என சவுதி அரேபியாவுக்கு அழைத்துச் செல்லப்பட்டு, சுட்டெரிக்கும் வெயிலில் ஒட்டகம் மேய்க்க விடப்பட்டார். அந்தக் கொடிய வதைக்கூடத்தில் இருந்து சமீபத்தில்தான் அவர் தப்பித்து வந்திருக்கிறார். இப்படி தப்பி வந்தோரின் எண்ணிக்கையும், கஸ்தூரியைப் போல வெளியில் தெரிய வந்தவர்களின் எண்ணிக்கையும் மிக, மிக சொற்பம். ராட்சச சிலந்தி வலையில் மாட்டிக்கொண்டு தப்பிக்கப் போராடும் சிறு பூச்சியைப்போல, எப்படியேனும் இதில் இருந்து தப்பிவிட வேண்டும் என ஒவ்வொரு நிமிடமாகக் கடத்திக்கொண்டிருக்கும் அபலைத் தொழிலாளர்களின் எண்ணிக்கையோ, எக்கச்சக்கம்.

சொந்த நாட்டில் வாழ வழி இல்லாமல்தான் இவர்கள் வெளிநாடுகளுக்குப் பிழைக்கச் செல்கின்றனர். அங்கு அவர்களின் பணி உரிமைகளையும் வாழ்க்கைச்சூழலையும் உத்தரவாதப்படுத்தவேண்டியது இந்திய அரசின் கடமை. அதற்காகத்தான் ஐக்கிய நாடுகள் சபையும் சர்வதேசத் தொழிலாளர்நலச் சட்டங்களும் இருக்கின்றன. ஆனால், தேவயானி கோப்ரகடே என்கிற அதிகாரியை விசாரித்தால் மட்டும், 'அது இந்தியாவுக்கான அவமானம்’ எனப் பதறித் துடிக்கும் இந்திய அரசு, லட்சக்கணக்கான தொழிலாளர்கள் ஒவ்வொரு நாளும் சிதைக்கப்படுவது குறித்து கண்டுகொள்வதே இல்லை.

ஒவ்வொரு நாடாகச் சுற்றுப்பயணம் செய்யும் பிரதமர் நரேந்திர மோடி, தொழிலதிபர்களைத் தேடித் தேடிச் சந்திக்கிறார்; தொழில் தொடங்க அழைப்புவிடுக்கிறார். அந்த ஆர்வத்தில் பாதியையேனும் வெளிநாடுகளில் வதைபடும் இந்தியத் தொழிலாளர்களின் நலனை மேம்படுத்துவதிலும் காட்ட வேண்டும். அவர்களின் உரிமைகளை உத்தரவாதப்படுத்தி, பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும். இதுதான் இப்போதைய உடனடித் தேவை!