1907-ம் ஆண்டு ஜூலை 27-ம் நாள் தஞ்சை மாவட்டம் செம்மங்குடி என்கிற கிராமத்தில் பிறந்து 1985-ம் ஆண்டு ஜுன் 6-ம் நாள் சிதம்பரத்தில் அமரரானவர் எழுத்தாளர் மௌனி, தன் 78 ஆண்டு வாழ்க்கையில் எழுதிய கதைகள் 24 மட்டுமே. “24 கதை எழுதி இறவாப்புகழ் பெற்றவர்” என்கிற பிம்பத்தோடுதான் எப்போதும் மௌனி அறிமுகம் செய்யப்படுவார். அக உலகத்தை எழுத்தில் கட்டியெழுப்பிய முதல் தமிழ் எழுத்தாளர் அவர்தான் என்பது அவர் குறித்த இன்னொரு பிம்பம்.
‘ஒதுங்கி நின்று ஒரு குறிப்பிட்ட கோணத்தில் நோக்கிய அனைத்தையும், கனமான விஷயத்தை ஏற்க மறுக்கிற மெலிந்த வார்த்தைகளில் சொல்லி விடுகிற காரியத்தை மெளனி சாதித்திருக்கிறார். இந்த அளவுக்கு இந்தச் சாதனையைசெய்து வெற்றி பெற்றவர்கள் என்று இன்றைய தமிழ்ச் சிறுகதையில் வேறு ஒருவரையும் சொல்லமுடியாது. அவர் நடையும் நோக்கும் பூரணமானவை. இந்த அம்சம் சிறந்தது, தனிப்பட்டது என்று பிரித்தெடுக்க முடியாது.’ - இது மெளினியைப் பற்றி க.நா.சு. கட்டமைத்த பிம்பம். (க. நா. சுப்ரமணியம் 1959-ல் எழுதிய கட்டுரை)
‘‘எழுதும் முனைப்போ, ஆர்வமோ இல்லாத இந்த எழுத்துமேதை மௌனியைப் பற்றி என்ன சொல்ல? அவர் ஒன்றும் எழுதிக் குவிப்பவர் இல்லை. அவர் முதலில் எழுத ஆரம்பித்ததே, இதில் ஏதாவது உருப்படியாக செய்யமுடியுமா என்று பார்க்கத்தான்.” என்று தொடங்கும் விமர்சகர் வெங்கட் சாமிநாதன் இப்படித் தொடர்கிறார், ”மெளனியின் இலக்கிய முன்னோடிகள் என்று, தமிழில் யாரையும் குறிப்பிட்டுச் சொல்லி விடமுடியாது. வசன அமைப்புகளிலிருந்து கதையம்சம் வரை, வேறொருவருடனும் அடையாளம் காட்டமுடியாத தனித்தன்மையை அவர் கலை விளக்குகிறது” - இது வெங்கட்சாமிநாதன் தூக்கிக் காட்டிய மௌனியின் பிம்பம்.
“மௌனி எழுதுவதற்கு நிரம்ப கால அவகாசம் எடுத்துக்கொள்வார். ஒவ்வொரு சொல்லையும் சுண்டிச் சுண்டிப் பார்ப்பார். ஒரு நாளைக்கு ஒரு வாக்கியத்தோடு நிறுத்திக் கொண்டதும் உண்டு. தமிழில் முதலில் வரவில்லை என்றால் ஆங்கிலத்தில் எழுதிவிடுவார். பின்னால் தமிழ்ப்படுத்துவார். ஒரு கதைக்கு இருபது டிராப்ட் கூடப் போட்டிருக்கார்.”என்று 20 ஆண்டு காலம் அவரோடு பழகிய கி.அ.சச்சிதானந்தம் வேறொரு பிம்பத்தைக் கட்டமைக்கிறார்.
ஆனால், சச்சிதானந்தம் சொன்னதுக்கு நேர்மாறாக மௌனியைச் சந்தித்துப் பேசிய அனுபவத்தைப் பகிர்ந்துகொள்கிறார், இலங்கை எழுத்தாளர் எம்.ஏ.நுஹ்மான். ‘‘தன் கதைகளை ஒரே இருப்பில் எழுதி முடித்து விடுவதாக மெளனி சொன்னார். ஒரே இருப்பில் முடியாவிட்டால், முடிந்த அவ்வளவும்தான் கதை’’ என்றார். ‘‘டால்ஸ்டாய் போன்ற பெரிய எழுத்தாளர்கள் தங்கள் கதைகளைப் பலமுறை திருத்தித் திருத்தி எழுதுவார்களாமே... டால்ஸ்டாய் தன் ‘புத்துயிர்’ நாவலை ஏழுமுறை திருப்பி எழுதியதாகச் சொல்கிறார்களே, நீங்கள் அப்படிச் செய்வதில்லையா?’’ என்று கேட்டேன். ‘‘இல்லை’’ என்றார். செப்பனிடும் பழக்கம் இல்லை என்றும் ஒரே முறையில் எழுதுவதுதான் என்றும், எழுத்துப் பிழைகள் இருந்தால் அதைத் திருத்திக்கொள்வார் என்றும் சொன்னார்” - இது வேறொரு பிம்பம்.
கைலாசபதி, திகசி போன்ற மார்க்ஸிய விமர்சகர்கள் மௌனியின் எழுத்து மேட்டிமைவாதம் மற்றும் இருண்மைவாதத்தில் சிக்கியவை. அவருக்குச் சமூகப்பார்வையும் இல்லை; சமகால வாழ்வு குறித்த அக்கறையும் இல்லை என்று கடுமையாக விமர்சித்தார்கள்.
எல்லாவற்றுக்கும் உச்சமாக புதுமைப்பித்தன் சொன்னதுதான் தமிழ் இலக்கிய உலகில் காலங்கள் தாண்டி மீண்டும் மீண்டும் எதிரொலித்துக்கொண்டே இருக்கிறது.
“தமிழ் மரபுக்கும் போக்குக்கும் புதிதாகவும் சிறப்பாகவும் வழிவகுத்தவர் ஒருவரை சொல்லவேண்டுமென்றால் மெளனி என்ற புனைபேரில் எழுதிவருபவரைச் சொல்லவேண்டும். அவரை தமிழ்ச் சிறுகதையின் திருமூலர் என்று சொல்லவேண்டும். கற்பனையின் எல்லைக்கோட்டில் நின்று வார்த்தைக்குள் அடைபடமறுக்கும் கருத்துகளை மடக்கிக் கொண்டுவரக்கூடியவர் அவர் ஒருவரே” என்பது புதுமைப்பித்தன் சொன்ன கருத்து.
தன்னுடைய மன உத்வேகத்தைச் சொல்வதற்கு தமிழ் மொழி போதுமானதாக இல்லை என்று மௌனி சொன்னதாக ஒரு சொற்றொடர் வேறு ஓடிக்கொண்டே இருக்கிறது. அது இன்னும் அவர்மீதான மயக்கத்தை அதிகரித்தது.
நான் என் இருபதாவது வயதில் -1974-ல் முதன்முதலாக மௌனியை ‘அழியாச்சுடர்’ தொகுப்பின் வழி வாசித்தபோது இந்தப் பிம்பங்கள் என்னை அமுக்குப்பிடி போட்டுக் கட்டி வைத்திருந்தன. என் சொந்தக் கண் கொண்டு வாசிக்க சிரமப்பட்டேன். தவிர அன்றிருந்த கனவுலகவாசி மனநிலையில் மௌனியின் பல கதைகள் கிறக்கம் தந்தன. ஏன்? அழியாச்சுடர், காதல்சாலை, மனக்கோலம் எல்லாவற்றுக்கும் மேலாக பிரபஞ்ச கானம் போன்ற கதைகளில் மனதைப் பறிகொடுத்திருந்தேன். ஆனாலும், புதுமைப்பித்தன் அளவுக்கு மௌனியை எனக்குப் பிடித்திருக்கவில்லைதான் அப்போது.
நீண்ட இடைவெளிக்குப் பின் இப்போது வாசிக்கையில் குறைகளும் பளிச்செனத் தெரிய வாசிக்க முடிகிறது. அவருடைய வாழ்க்கை பற்றியும் அப்போது தெரிய வாய்ப்பிருக்கவில்லை. இன்று பல்வேறு கோணங்களில் அவருடைய வாழ்வு, படைப்பு பற்றி பல நூல்கள் வந்துவிட்டன.
1926 வரை கும்பகோணத்தில் படித்த மௌனி, 1929-ல் திருச்சியில் கணிதத்தில் இளங்கலைப் பட்டம் பெற்றார். திருமணத்துக்குப் பின் கும்பகோணத்தில் தன் வீட்டில் 14 ஆண்டுகள் வசித்தார். இந்தக் காலத்தில் அவர் வேலை எதுவும் செய்யவில்லை. 1943-ல் தன் குடும்பச் சொத்து மற்றும் தொழிலைக் கவனிக்க என்று சிதம்பரம் சென்று அங்கே தங்கினார். ஒரு நெல் அரவை மில் வைத்திருந்தார். அதனால் `மில் மணி அய்யர்’ என்று அழைக்கப்பட்டார்.
தன் ஆரம்பகால வாழ்வைப்பற்றியும் கதைகள் எழுதத் தொடங்கியது பற்றியும் 1965-ல் வெளியான பி.எஸ்.ராமையா மணிவிழா மலரில் அவரே சொல்வது, ``35 ஆண்டுகளுக்கு முன் படித்து முடித்து, வேலைக்குப் போகாமல் கும்பகோணத்தில் காலம் கழிக்கும் அநேக மாஜி மாணவர்களில் நானும் ஒருவனானேன். ஆர்வ மிகுதியில் படித்தும், தெளிவு காண அநேக விஷயங்கள் பற்றி விவாதித்தும் பொழுதைப் போக்கிக் கொண்டிருந்தோம். எத்துறை என்பதின்றி, அரசியல், சங்கீதம், வேதாந்தம், மொழி பிரச்னை, இலக்கியம் இத்யாதி இத்யாதி என எதைப்பற்றியும் ஆங்காங்கே அவ்வப்போது கூடிப்பேசுவது உண்டு…
1933-ம் வருடத்தில் மகாமகம் வந்தது. அதற்காக ஒரு மாதம் ஒரு விரிவான கண்காட்சி நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது. அந்த ஒருமாத காலம் அந்த மைதானத்தில் நாங்கள் கூடிப்பேசி பொழுதைக் கழித்தோம். அந்தச் சமயந்தான் ராமையா எங்களுக்கு அறிமுகமானார். அவர் கதர் போர்ட் ஸ்டாலுக்காக வந்திருந்தவர் என நினைக்கிறேன்…. ஒருநாள் ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் அவர் கூறியது ஞாபகத்தில் இருக்கிறது. அதுதான் உள்ளூரப் பதிந்து ஒரு வருஷத்துக்கு மேலாக ஊறி என்னை எழுதும்படி தூண்டியது போலும். என்னைப்பார்த்து ``நீங்கள் சிறுகதைகள் நன்றாக எழுத முடியுமென நினைக்கிறேன். மணிக்கொடி பத்திரிகைக்கு எழுதுங்கள்” என்று அவர் சொன்னார். எவ்விதத்தில் நான் சிறுகதை ஆசிரியனாக முடியும் என்று அவருக்குத் தோன்றியது என்பதை அவரால்தான் சொல்ல முடியும்” `எனக்குப்பெயர் வைத்தவர்’ என்னும் கட்டுரையில் இப்படிச் சொன்ன மௌனியின் முதல் சிறுகதை `ஏன்?’ 1936 பிப்ரவரியில் வெளியானது.
``சுசீலா, வக்கீல் ராஜம் ஐயரின் மூத்த பெண். அவள் சிறு வயதிலிருந்தே அதிக வசீகரத் தோற்றமுடையவளென்று பிரசித்தம். சற்று மாநிறமாயினும், அவள் இரு விழிகளும் அதிக கருமையாகவும், புருவங்கள் செவ்வனே வளைந்து மிகக் கருப்போடினவையாகவும் இருந்தன. ஏன், ஏன் என்ற கேள்விகளை அவள் கண்கள் சதா கேட்பவை போன்று தோன்றும்” என்று தொடங்கும் `ஏன்?’ கதை, பள்ளி பருவத்தில் தோன்றும் காதல் கதை. பத்தாம் வகுப்புப் படிக்கும் மாதவனுக்கு எட்டாம் வகுப்புப் படிக்கும் சுசீலா மீது விருப்பம் தோன்றுகிறது. அவன் தினமும் நாம் இருவரும் சேர்ந்தே பள்ளிக்குச் செல்வோம் என்கிறான். அதற்கு அவள், “ஏன்?” என்கிறாள். `சுசீ உன்னை என்றும் மறக்க மாட்டேன்’ என்கிறான். அதற்கும் அவள், “ஏன்?” என்கிறாள். அதற்கு மேல் இதை அவனால் விளக்க முடியவில்லை. விருப்பத்தை சுசீலா எதிர்கொள்கிற விதத்தில் அந்த அளவில் அந்த விருப்பம் கலைந்து போகிறது. சுசீலாவிற்கு வேறிடத்தில் திருமணம் நடக்கிறது.
நான்காண்டுகள் கழிகின்றன. கல்லூரியிலிருந்து விடுமுறைக்கு வரும் மாதவன், சுசீலா ஒரு கைக்குழந்தையுடன் இருப்பதைப் பார்க்கிறான். அவன் சுரம் கண்டு இறக்கும் தருவாயில், `ஏன், ஏன்’ என்று புலம்புகிறான். முடிவெடுக்க முடியாத, எதிர்கொள்ளத் தெரியாத பருவம் அது. அவன் காய்ச்சலில் மரணமடைகிறான். தூக்கிச் செல்லும் உடலை சுசீலா காண்கிறாள். கண்ணீர் வருகிறது. `ஏன், இந்தக் கண்ணீர்?’ என்று தனக்குள்ளே கேட்கிறாள்.
“சுசீலாவும் புக்கம் சென்று ஒரு மாதம் ஆகப்போகிறது. இப்போது ஊரிலிருந்து வந்தது முதல் அவள் கண்கள் என்றுமில்லாத ஒரு மகத்தான சோகம் கலந்த வசீகரத் தோற்றமுடையவையாக ஏன் தோன்றுகின்றன என அறிய முடியாமலே அவளைப் பார்க்குங்கால் ஆனந்தமடைந்துகொண்டிருந்தான் அவள் கணவன்.” - என்று முடியும் அக்கதையில் வரும் சுசீலாவின் கண்களுக்காக நாங்கள் அன்று விழுந்து கிடந்தோம் எனலாம். ரொம்பச் சாதாரணமான கதைதான் இது. ஆனாலும், அந்தக் கண்கள் மட்டும் பயங்கர வசீகரமாகத் தொடரத்தான் செய்கிறது.
இரண்டாவதாக வெளியான `குடும்பத்தேர்’ என்கிற கதை, தன் தாயைச் சமீபத்தில் இழந்திருந்த கிருஷ்ணய்யர் அவளைப் பற்றிய நினைவுகளில் ஆழ்ந்துபோய் அவற்றை விவரிப்பதுபோல் அமைந்தது.
``உலகம் சீர்கெட்டுச் சிதைவுபடுவதின் காரணம் குடும்ப வாழ்க்கையில் சமாதானமற்று இருப்பதுதான் என்பதை ஸ்பஷ்டமாக அறிந்தார். குடும்பத்தினர் ஒருவரிடமும் அதன் பொறுப்பு அடைபட்டுக் கிடக்கவில்லை. ஒருவர் ஏற்கும்படியான அவ்வளவு லேசானதல்ல. எல்லோரிடமும் அது இருப்பது முடியாது. அப்போது அது குடும்பப் பொறுப்பாகாது…
வெகுநேரம் அப்படியே சாய்ந்து கொண்டிருந்தார். உள்ளிருந்து தன் மனைவி விளக்கை எடுத்துச் சென்றதும் அவருக்குத் தெரியாது… அவர் கடைசிக்குழந்தை, `அப்பா நாழிகையாச்சு. சாப்பிட வா-’ என்று கூப்பிட்டதால் திடுக்கிட்டு எழுந்தார். வீதியில் சென்று அங்கிருந்தே பெருமாளைத் தரிசித்துவிட்டு கதவைத் தாளிட்டு உள்ளே சென்றார். மனதில் ஒரு பெரிய பளுத்தொல்லை நீங்கினதான உணர்ச்சி…பலங்கொண்டதான ஓர் எண்ணம். எதிர்கால வாழ்வு லேசானதாகத் தோன்றியது. ஒரு அளவற்ற ஆனந்தம்…. புரியாத வகையில் அவர் மனது `குடும்பம் ஒரு விசித்திர யந்திரம். பழுதுபட்டுப் போன ஒரு பாகத்தினால் அது நிற்பதில்லை. அதற்குப் பிரதி மறுபாகம் தானாகவே உண்டாகிவிடும் என்று என்னவெல்லாமோ எண்ணியது.” - மௌனியின் கதைகளில் இந்த ஒரு கதைதான் குடும்பம் என்ற அமைப்பில் பிடிப்போடு எழுதப்பட்ட கதை. மற்ற கதைகளில் எல்லாம் மனித உறவுகள் பற்றி மௌனியின் பார்வை நிச்சயமற்ற விநோதமான நிலைகளில் வெளிப்படுகின்றன.
பிரபஞ்ச கானம் கதை சங்கீதத்தில் ஞானம் உள்ள, ஆனால், பாடமுடியாதபடி இருதயநோய் உள்ள ஒரு பெண்ணின் கதை. அப்பெண்ணின் காதலன் பார்வையில் இக்கதை சொல்லப்படுகிறது. திருமண நலங்கின்போது அவள் பாட நிர்ப்பந்திக்கப்படுகிறாள். அவளது பாட்டு பிரவாகம் போலப் பாய்கிறது. ஆழ்ந்து லயித்துப் பாடியபடி அவள் இறக்கிறாள்.
``அவன் அவ்வூர் வந்து, மூன்று வருஷம் ஆகிறது. வந்த சமயம், மேல் காற்று நாளே ஆயினும், அன்றைய தினம் உலகத்தின் வேண்டா விருந்தினன் போன்று காற்று அலுப்புறச் சலித்து ரகசியப் புக்கிடமாக, மரக்கிளைகளில் போய் ஒடுங்கியது போன்று அமர்ந்திருந்தது.” என்று பிரபஞ்சகானம் தொடங்குகிறது.
``அடிக்கடி அவன், தன் வாழ்க்கைப் புத்தகத்தைப் பிரித்து வெறித்துத் திகைத்து திண்ணையில் நிற்பதுண்டு. பின் புரட்டுதலில் கவலைக் கண்ணீர் படிந்து, மாசுபட்ட ஏடுகள், அவன் மனக்கண்முன் தோன்றும். முன்னே எழுதப்படாத ஏடுகளில், தன் மனப்போக்கு கொண்டு எழுதுவதால், பளீரெனத் தோன்றுபவை சில, மங்கி மறைதல் கொள்ளுபவை சில. இரண்டுமற்று சில நேரத்தில், எதையோ நினைத்து உருகுவான்...
அவன் அவ்வூர் வந்தபின், அவள் பாடிக் கேட்டதில்லை. அவள் பாடியே மூன்று வருஷத்திற்கு மேலிருக்கும். அவள் ஒருதரம் நோய்வாய்ப்பாட்டுக் கிடந்தபோது, அவள் இருதயம் பலவீனப்பட்டு இருப்பதாகச் சொல்லிப் பரிசோதனை செய்த டாக்டர் அவள் பாடுவது கூடாதென்றார். அது முதல், அவள் சங்கீதம் அவளுள்ளே உறைந்து கிடந்தது. அவளுக்கு வீணையிலும் பயிற்சி உண்டு. ஒரு தரம், அவள் வீணைவாசிக்க அவன் கேட்டான். அதன் பிறகு அவளுடைய சங்கீதத்தைப் பற்றியும், பிரபஞ்சத்தைப் பற்றியும் அவன் அபிப்பிராயமும் உறுதியாகிவிட்டது. அவள்தான் சங்கீதம்; பிரபஞ்ச கானம் அவளுள் அடைபட்டுவிட்டது என்று எண்ணலானான். காகத்தின் கரைதலும், குருவிகளின் ஆரவாரமும், மரத்திடைக் காற்றின் ஓலமும் காதுக்கு வெறுப்பாகி விட்டன. அவளுடைய சங்கீதம் வெளிவிளக்கம் கொள்ளாததனால் இயற்கையே ஒருவகையில் குறைவுபட்டது போலவும், வெளியில் மிதப்பது வெறும் வறட்டுச் சத்தம்தான் என்றும் எண்ணலானான்...
சுமார் ஒன்றரை மணி நேரம் வாசித்தாள். அவ்வளவு நேரமும் ஒரே விநாடி போலக் கழிந்துவிட்டது. உலகமே குமுறி சங்கீத மயமானதாக நினைத்தான். அவள் வாசித்துக் கொண்டிருக்கும் போதே நடுவில் இவன் மனதில் பளீரென்று ஓர் எண்ணம் தோன்றியது. அதை உதற முடியாத ஓர் உண்மையென உணர்ந்தான். அவள் பாட்டின் பாணியும் அதைப் பலப்படுத்தியது. இவன் மனத்தில் ஒருவகை பயம் தோன்ற ஆரம்பித்து, உடல் குலுங்கியது. அவள் முடிக்கும் முன்பே தன் இதயம் பிளந்துவிடுமென நினைத்தான். அவள் வாசிப்பதை நிறுத்திவிட மாட்டாளா என்று துடித்துக்கொண்டே கேட்டு நின்றான்…”
கதையின் இறுதிக்கட்டத்தில் கல்யாண வீட்டில் அவள் பாடும் காட்சியை மௌனி விவரிக்கும் விதமே ஒரு சங்கீதப் பிரவாகம்தான்:
”அவள்பாட ஆரம்பித்தாள். ஆரம்பித்த அவள் கொஞ்சம் கொஞ்சமாக மெய்மறந்தாள். சாஸ்திர வரையறுப்பை அறிந்தும் கட்டுப்பாட்டின் எல்லையை உணர்ந்தும், உடைத்துக்கொண்டு பிரவாகம் போன்று அவள் கானம் வெளிப்பட்டது. அங்கிருந்த யாவரும் மெய்மறந்தனர். தலை கிறுகிறுத்து ஒன்றும் புரியாமல் இவன் தூணோடு தூணாகி விட்டான்.
அவள் சங்கீதத்தின் ஆழ்ந்த அறிதற்கரிய ஜீவ உணர்ச்சி கற்பனைகள், காதலைவிட ஆறுதல் இறுதி எல்லையைத் தாண்டிப் பரிமாணம் கொண்டன. மேருவைவிட உன்னதமாயும், மரணத்தைவிட மனத்தைப் பிளப்பதாயும், மாதரின் முத்தத்தைவிட ஆவலைத் தூண்டி இழுப்பதாயும் இருந்தன. மேலே, இன்னும் மேலே, போய்க் கொண்டிருந்தன...
அவள் ஒரு மணி நேரம் பாடினாள். அவளுள் அடைபட்ட சங்கீதம் விரிந்து வியாபகம் கொள்ளலாயிற்று. வெளி உலகம் கொஞ்சம் கொஞ்சமாக மாறுதல் அடைந்துகொண்டிருந்தது...
இவன் மனப்புத்தகம், பிரிந்து உணர்ச்சி மிகுதியில் படிக்கப்பட்டது. 'காலம்' விறைத்து நின்றுவிட்டது... அந்தியின் மங்கல் வெளிச்சம் மறையுமுன் மஞ்சள் கண்டது. இவன் முகம் ஒளிகொண்டு சவக்களைப் பெற்றிருந்தது.
கடைசிக் காகக் கூட்டத்தின் ஒருமித்த கரைதல் கூச்சல் கேட்டது. முற்றத்துக் கொட்டகையின் மீது குருவிகள் உட்கார்ந்துகொண்டு ஆரவாரித்தன. இவன் திடீரென்று, வாய்திறந்து ''ஐயோ... அதோ... சங்கீதம், இனிமை, இன்பம் எல்லாம் திறந்த வெளியில், நிறைகிறதே...'' என்று கத்தினான். அதே சமயம், அவளும் கீழே சாய்ந்தாள். 'இயற்கை அன்னை' தன் குறையை, நிவர்த்திக்கொண்டாள். இழந்ததை, அணைத்துச் சேர்த்துக் கொண்டாள்... ஆகாயவீதி, அழகு பட்டது. மேக மலை மறைப்பினின்றும் விடுபட்ட பிறைச்சந்திரன் சோபை மிகுந்து பிரகாசித்தது. வெளியே, அவ்வூர் குறுகிய விதியே ஒரு களை கொண்டது. ”
கணிதத்திலும் சங்கீதத்திலும் தத்துவத்திலும் ஈடுபாடு கொண்டவராக மௌனி இருந்தார். ஒரு பணக்கார வீட்டுப்பையனுக்கு வீட்டில் வைத்துக் கணிதம் ட்யூஷன் எடுத்திருக்கிறார். அதுபற்றி எம்.வி.வெங்கட்ராம் தனது நினைவுகளில் எழுதியிருக்கிறார். எம்.வி.வெங்கட்ராமின் இந்த மௌனி பற்றிய நினைவுப்பதிவுகள் மௌனியைப்பற்றி அதுகாறும் கட்டற்றுக் கட்டமைக்கப்பட்டிருந்த கற்பிதங்களைத் தகர்த்துவிட்டது என்றே சொல்ல வேண்டும்.
“மெளனி வாரத்தில் 3, 4 நாள் எங்கள் தெருவுக்கு வருவார்; டியூஷன் முடிந்த பிறகு வாரம் ஒருமுறையாவது என்னைப்பார்க்க வருவார். அவர் வருவதையும், பேசுவதையும் நான் மிகவும் விரும்பினேன்; வேண்டினேன். ஆனால், அவருடைய கருத்துகள் என்னைத் திகைப்புறச் செய்தன. வெறும் சென்டிமென்ட்ஸ் வைத்துக் கவிதை எழுதும் பாரதியார் ஒரு கவிஞனா?” என்று அவர் பலமுறை சொன்னதை வியப்புடன் கேட்பேன். ஒரு சந்திப்பின்போது, நேற்று ராத்திரி பிச்சமூர்த்தி, ராஜகோபாலனோடு பேசிக்கொண்டிருந்தேன். இவன்கள் எல்லாம் என்ன கதைகள் எழுதுகிறான்கள். சரியான அப்ரோச்சே இல்லை' என்று பரிகாசம் செய்தார். அவருடைய பல சந்திப்புகளால், புதுமைப்பித்தன், பிச்சமூர்த்தி, கு. ப. ரா., சிதம்பர சுப்புரமணியன், சிட்டி, ராமையா முதலிய மணிக்கொடி எழுத்தாளர் யாரையும் அவர் எழுத்தாளராக ஏற்றதில்லை என்பது தெரிந்தது. நான் மிகவும் மதித்த இலக்கியப் படைப்பாளிகளை எல்லாம் அவர் பீடத்திலிருந்து கீழே தள்ளிவிடுவதை நான் வேதனையோடு பார்த்துக்கொண்டிருந்தேன்.”
மௌனியின் தமிழ் அறிவின் மீது முதன் முதலாக சந்தேகத்தைக் கிளப்பியவர் எம்.வி.வெங்கட்ராமன். அவரது கதைகளில் மிளிரும் மேதமையை வியக்கும் அவரே அவருடைய மொழியறிவு பற்றி இப்படிக் கூறுகிறார்.
“ஆவலும் மகிழ்ச்சியுமாகக் கதையைப் படிக்கத் தொடங்கினேன். முதலில் எழுத்துகள் புரியவில்லை. பிறகு, ஒரு வாக்கியமும் முடிவுபெறவில்லை, அடுத்த வாக்கியம் எங்கே ஆரம்பமாகிறது என்றும் புரியவில்லை. இலக்கண அமைதியோ, தெளிவோ கதையில் காணோம். எனக்கு ஒரே மலைப்பாக இருந்தது. கரிச்சான்குஞ்சுவும் படித்தார். நாலைந்து பக்கம் படித்ததும், இதென்ன, ஒன்றும் புரியவில்லை. அவரையே சரிசெய்து கொடுக்கச் சொல்லலாமே! என்றார். வேண்டாம், அவர் திருத்திக்கொடுப்பதற்குள் மாதம் போய்விடும், நான் எடிட் செய்கிறேன்.
``கதையைத் திருத்தம் செய்ய எனக்குச் சில நாள்கள் ஆயின. மெளனியின் சிறுகதை வடிவம் அவருக்கு இயல்பாக வந்த ஓர் அற்புதம் போகிற போக்கில் காட்சிகளைத் தோற்றுவிப்பதும், பிம்பங்களை (images) உயிர்ப்பிப்பதும் அவருடைய எழுத்துகளின் வலிமை. இந்த அவருடைய பெருமைகளுக்குச் சற்றும் ஊனம் ஏற்படாமல் கதையைத் திருத்தம் செய்ய எனக்கு மிகக் கவனம் தேவைப்பட்டது. கால், அரை, முற்றுப்புள்ளிகளைக்கூட ஜாக்கிரதையாகப் பயன்படுத்தவேண்டியிருந்தது...
இரண்டாவது கதை வந்து சேர்ந்தது. அதுவும் முதல் கதைபோலவே இருந்தது. நானே அதையும் ஒழுங்குபடுத்தி 'நினைவுச்சுவடி’ என்ற பெயரிட்டு தேனீயில் வெளியிட்டேன்... மெளனியின் தமிழ் பற்றி எனக்குக் கவலையும் வியப்புமாக இருந்தது. மணிக்கொடியில் வெளியான கதைகளின் கைப்பிரதிகளும் இப்படித்தான் இருந்தனவா? பி. எஸ். ராமையா எடிட் செய்தாரா, வேறு யாராவது அவருக்கு உதவினார்களா? அல்லது மெளனியின் கைப்பிரதிகள் சரியான தமிழில் இருந்தனவா?”
மொழியறிவை வைத்து ஒரு படைப்பாளியின் உன்னதமான எல்லைகளைத் தொடும் படைப்பாற்றலைக் குறைத்து மதிப்பிடக் கூடாது என்கிற வாதத்தை நானும் ஏற்றுக்கொள்கிறேன். ஆனால், மௌனிக்குத் தன் படைப்புகளின் மீது ஆகக்கூடுதலான உயர் அபிப்ராயம் இருந்ததும், தமிழ் மொழியையும் தமிழ் வாசகர்களையும் அவர் மிகவும் குறைத்து எடை போட்டதும் ஏற்க இயலாதவை.
``ஐநூறு வருடமானாலும் நான் என் 24 கதைகளில் உருவாக்கிய அக உணர்வுகளின் நுட்பங்களை தமிழ் புரிந்துகொள்ளாது” என்று மெளனி சொன்னார். இதெல்லாம் ரொம்ப ஓவர். இதற்கு எழுத்தாளர் ஜெயமோகன் சொன்ன பதிலோடு நான் உடன்படுகிறேன்.
``தமிழ் இலக்கியத்தின் பெரும்பகுதி அகத்துறையே. என் வாசிப்பில் அகச் சித்திரிப்பில் உலக இலக்கியத்தின் மிகச்சிறந்த உதாரணங்கள் தமிழிலேயே உள்ளன. அகவுலகைச் சித்திரித்த தமிழ்க் கலைஞர்கள் நூறு பேரின் பெயரை பட்டியலிட்டால் மெளனியை இலக்கிய நுண்ணுணர்வுள்ள எவருமே சேர்க்கத் துணியமாட்டார்கள். மெளனியின் பிரச்னை என்ன? புதுமைப்பித்தன் தவிர்த்த மற்ற தமிழ் நவீனத்துவ படைப்பாளிகளைப்போலவே மெளனியும் தமிழ் இலக்கிய மரபில் அறிமுகம் உள்ளவரல்ல. அவருக்கு உண்மையிலேயே தமிழ் வந்து சேர்ந்திருக்கும் இடம், அதன் விரிவும் மகத்துவமும் தெரியாது.
கல்லூரிக் கல்வி மூலம் தான் கற்ற மேலைக் கற்பனாவாதத்தைத் தன்னுடைய அக்ரகாரப் புழங்குமொழியில் சொல்ல முயன்றார் அவர். பிரவுனிங்கும், கூல்ரிட்ஜும் ஷேக்ஸ்பியரால் பண்படுத்தப்பட்ட மில்டனால் அகலப்படுத்தப்பட்ட மொழியில் எழுதினார்கள். கிரேக்கச் செவ்வியல் மரபின் பெரும் படிமச்செல்வத்தை, சொல்வளத்தை சுவீகரித்துக் கொண்டு எழுதினார்கள். மெளனியின் படைப்புமொழி எந்த மரபிலிருந்தும் வேர்நீர் பெறாத இலைவெளுத்த செடி.”
மரணம், வாழ்வின் நிச்சயமின்மை, ஆண்-பெண் உறவு ஆகியவற்றைப் பற்றியே தன் எல்லாக் கதைகளிலும் எழுதியவர் மௌனி.
இவ்வளவு பலவீனங்களுடனான மௌனியின் எழுத்து, ஏன் காலம்காலமாக விதந்தோதப்பட்டு வருகிறது என்பது ஒரு முக்கியமான கேள்வி. என்னுடைய வாசிப்பில் மௌனியின் கதைகளில் கதை என்று பெரிதாக ஒன்றும் இல்லை.ஒருவித தீவிர மனநிலையில் எல்லாக் கதாபாத்திரங்களும் பேசுவதும், கதையின் போக்கில் இயல்பாகத் தெறித்து விழும் சில நுட்பமான வரிகளுமே அவருக்கு இத்தகைய ஓர் இடத்தைத் தந்ததாக உணர்கிறேன்.
“ஆழித் தண்ணீரில் எல்லை பிரித்துக் கோடிட்டதுதானா நம் வாழ்க்கை….?அசைந்து அசைந்து மிதக்கும் தோணி (மனம்) எல்லை கடக்க அறியாது கடந்தடு போலும்!”
“அவன் அழகின் பாழ்பட்ட வசீகரன்”
“சூனிய வெளியில் வாழ்க்கையின் லஷ்யப்பாதையை அமைக்க, அவள் இரு விழிகளும் சுடரொளியாக அமைந்தனவெனக் கண்டான்”
அழியாச்சுடர் கதையில் வருகின்ற புகழ்பெற்ற வாசகம், “நாம் சாயைகள்தானா? எவற்றின் நடமாடும் நிழல்கள் நாம்?”
இப்படியான தெறிப்புகளே மௌனிக்கு ஓர் அந்தஸ்தைத் தந்துவிட்டன எனலாம். இந்தத் தத்துவச்சாயல் கொண்ட கவித்துவமான தெறிப்புகளை உரைநடையில் கொண்டுவந்த முதல் தமிழ்படைப்பாளி அவர்தான் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. சிறுகதையையே கவிதையாக மாற்றி ஜாலம் புரிந்தவர் என்பதால் ஒரு வியப்பும் மயக்கமும் அவர்மீது நமக்கு இருந்துகொண்டே இருக்கிறது.
அடுத்த வேளை சோத்துக்கு என்ன வழி என்று நடுத்தெருவில் நிறுத்தப்பட்ட புதுமைப்பித்தனின் வாழ்க்கையைப்போன்ற ஒரு வாழ்க்கையல்ல மௌனிக்குக் கிடைத்தது. ஒரு வேலைக்கும் போகாமல் இலக்கிய-தத்துவ அரட்டைகளுக்கு நாள்களைத் தத்தம் செய்ய முடிந்த வாழ்க்கைப்பின்னணி அவருடையது. க.நா.சு இலக்கியத்துக்காக சொந்த ஊரைவிட்டு ஒரு டைப் ரைட்டருடன் சென்னைக்குக் குடிபோக முடிந்ததைப்போல, பொருளாதார நெருக்கடி அற்ற வாழ்க்கைதான் மௌனிக்கும்.
ஆனாலும், அவர் பெற்ற மகன்களில் மூத்த மகன் முப்பத்திரண்டாம் வயதில் சாலை விபத்தில் மரணமடைந்தார். இரண்டாவது மகன் இருபத்தெட்டாம் வயதில் மனச்சிதைவுக்கு ஆளாகி மனநோயாளியாகத் திண்ணையில் அமர்ந்துவிட்டார். மௌனி ,தன்னுடைய மேதமை அத்தனையையும் பெற்ற மகன் என நம்பிய கணிணித்துறை வல்லுநரான, மூன்றாவது மகன் மணமாகி இரண்டு ஆண்டுகளில் திடீரெனக் குளியலறையில் மின்சாரம் தாக்கி இறந்துவிட்டார்.
புத்திர சோகத்தில் மூழ்கிய வாழ்க்கைதான் அவருக்கு லபித்தது. இந்தப் புறச்சூழல்தான் அவருடைய எழுத்தில் வாழ்வின் நிச்சயமின்மை குறித்துப் பேசவைத்தது. அன்றைக்கு வீறு கொண்டெழுந்த தேசிய இயக்கத்திலோ, சமூக சீர்திருத்த இயக்கத்திலோ 40களில் அவர் வாழ்ந்த தஞ்சைச் சீமையில் சாட்டையடிக்கும் சாணிப்பாலுக்கும் எதிராகக் கிளர்ந்தெழுந்த பண்ணையடிமைகளின் போராட்டத்திலோ, அவர் மனம் ஈடுபாடு கொள்ளவில்லை. அக்கிரகாரத்தைவிட்டு வெளியேறாத வாழ்க்கைச் சூழலில் வைத்தே அவரது படைப்புகளைக் காண முடியும். அப்புறம் எப்படி அவரைச் சிறுகதையின் திருமூலர் என்று புதுமைப்பித்தன் சொன்னார்?
``இந்தத் திருமூலர் பட்டத்தை பெரிதாகக் கருத வேண்டியதில்லை. மௌனியும் கருதியதாகத் தெரியவில்லை. ஓர் அதிர்ச்சிக்காக வெளிப்படுத்திய கருத்து என்றே நான் கருதுகிறேன்” என்பது அசோகமித்திரனின் வாக்கு.
``மெளனியை சிறுகதையின் திருமூலர்' என்று புதுமைப்பித்தன் ஏதோ வேகத்தில் குறிப்பிட்டுவிட்டார் என்றே எனக்குத் தோன்றுகிறது. `என்னை நன்றாக இறைவன் படைத்தனன், தன்னை நன்றாகத் தமிழ் செய்யுமாறே’ என்று அடக்கமானவர் திருமூலர். தமிழரால் எந்த ஆழத்துக்கும் செல்ல முடியும், எந்த உயரத்துக்கும் ஏற முடியும் என்பதைச் செய்துகாட்டியவர். தமிழ் மொழியை எவ்வளவு அழகாய்க் கையாள முடியும் என்பதை இன்றைய எழுத்தாளர்களுக்கும் உணர்த்தும் வழிகாட்டி. பிழையின்றி தமிழ் எழுத முடியாத ஒருவரைத் திருமூலரோடு ஒப்பிட்டுப் பேசுவது பொருத்தமற்றது. 'திருமூலரோடு என்னை ஒப்பிட்டு புதுமைப்பித்தன் ஏன் பேசினார்’ என்று அவரையே கேட்க வேண்டும் என்று மெளனியே கூறுகிறார்.” என்பது எம்.வி.வெங்கட்ராமின் கூற்று.
மௌனியைக் கொண்டாடுவோம். மௌனியை வாசிப்போம். தெய்வநிலைக்கு உயர்த்தி அவருக்கும் பிற முன்னோடிகளுக்கும் அநியாயம் செய்யாதிருப்போம்.
ஆர். எஸ். மணி என்பது மெளனியின் இயற்பெயர். மெளனி என்னும் புனைப்பெயரை அவருக்கு சூட்டியவர் ஆசிரியர் பி. எஸ். ராமையா. புனைப்பெயரைப் பொய்யாக்கி நிறையப்பேசுகிற சுபாவம் அவருக்கு என்பது இன்னொரு நகை முரண்.
(தொடரும்)