எண்ணம் வண்ணம்: சந்தோஷ் நாராயணன்

''இந்தக் கடிகாரத்தில் ஒரு மணி நேரத்தை முன்னாடி அல்லது பின்னாடி ஸ்கிப் பண்றது மூலமா உலகத்தையே ரிவைண்டு அல்லது ஃபார்வேர்டு பண்ண முடியும் தெரியுமா? காலம் இனி
என் கட்டுப்பாட்டில். அதன் வழியா உலகமும்!'' - இறுமாப்புடன் சொன்னான் விஞ்ஞானி அவிக்டர்.
அவனை ஏறிட்டுப் பார்த்த அஃபெயில் கேட்டான், ''ரிவைண்டு - ஃபார்வேர்டு பண்ணும்போது மனித நிகழ்வுகள் மாறுமா?''
''நிச்சயமா... ஒருதடவை நடந்தது மறுபடியும் ரிவைண்டு பண்ணினாக்கூட நடக்க வாய்ப்பே இல்லை!'' என்றான் அவிக்டர். தீமையின் கனல் மிளிரும் அவிக்டரின் கண்களைப் பார்த்து அஃபெயில் கேட்டான், ''உலகத்தையே உன் கட்டுப்பாட்டில் கொண்டுவரும் இந்த வாட்சை எப்போது கண்டுபிடித்தாய்?''
'பல ஆண்டுகளாக என் வெறித்தனமான ஆராய்ச்சி மூலம், அரை மணி நேரம் முன்னாடிதான்!''
தடாரென அந்த வாட்சைப் பிடுங்கி ஒரு மணி நேரம் பின்னோக்கித் திருப்பினான் அஃபெயில். அவிக்டர் அவன் பக்கத்தில் வந்து வாட்சை உற்றுப் பார்த்தான். பிறகு, அஃபெயிலைப் பார்த்துச் சொன்னான்... ''காலத்தை முன்னும் பின்னுமாகத் திருப்ப முடியுமானு பல ஆண்டுகளா வெறித்தனமா ஆராய்ச்சி பண்ணிட்டு வர்றேன். ஆனா, எங்கேயோ ஏதோ ஒரு கண்ணி மிஸ்ஸாகுது!'' என்றான் கவலைக் குரலில்.
அஃபெயிலுக்கோ அந்த வாட்ச் எப்படி தன் கைக்கு வந்தது எனப் புரியவில்லை!

டூத்பிரஷ்ஷின் வரலாற்றைத் தேடினால் பாபிலோனியர்கள், எகிப்தியர்கள் போன்றவர்கள் சில குறிப்பிட்ட மரத்தின் குச்சிகளில், ஒரு முனையைச் சிதைத்து பல் துலக்கியதாகத் தெரிகிறது. ஆம், நமது பாட்டன்கள், பாட்டிகள் செய்ததுதான்... இங்கே வேப்பங்குச்சி அல்லது ஆல். இப்போதும் அதைச் செய்பவர்கள் உண்டு. குச்சியை உடைத்து,
ஒரு முனையை பற்களால் மென்று, நான்கூடத் துலக்கியிருக்கிறேன். பல் இடுக்கில் பதுங்கி இருக்கும் கிராஃபிக்ஸ் கிருமிகள் பற்றிய பீதி எல்லாம் இல்லாமல், நம் முன்னோர்கள் அதைச் செய்திருக்கிறார்கள்.
ஆனால், சீனர்கள் விடுவார்களா? வாசனை வீசும் சில மரத்தின் குச்சிகளை மென்று, அப்படியே துலக்கி, விளம்பரங்களில் சொல்வதுபோல 24 மணி நேர 'ஃப்ரெஷ்னெஸ்ஸை’க் கொண்டு வந்திருக்கிறார்கள். பிறகு, அவர்களே எலும்புகள் அல்லது மூங்கில் குச்சிகளில் பன்றிகளிடம் இருந்து சேகரிக்கப்பட்ட முடிகளை (ரொம்பத் தடிமனாக இருக்கும்போல) நட்டு டூத்பிரஷ்ஷாகப் பயன் படுத்தியிருக்கிறார்கள். இந்த டிசைன் ஐரோப்பாவுக்குச் சென்றபோது, பன்றிகளின் முடிகளுக்குப் பதிலாக குதிரை முடிகள், சில பறவைகளின் இறகுகள் என மாற்றம் பெற்றிருக்கிறது. 1780-ல் இங்கிலாந்தைச் சேர்ந்த வில்லியம் அடிஸ், பசுக்களின் எலும்புகளைச் செதுக்கி, அதில் பன்றி முடிகளை நட்டு, நாம் இன்று உபயோகிக்கும் டூத்பிரஷ் வடிவத்தை உருவாக்கியிருக்கிறார். கிட்டத்தட்ட 1938-ல் நைலான் முடிகள், பிரஷ்ஷில் வந்த பிறகுதான் இந்த முடிகளின் பயன் ஒரு முடிவுக்கு வந்திருக்கிறது.
இன்று எலெக்ட்ரிக் டூத்பிரஷ் வரை வந்துவிட்டது. கரித்தூளில் பல் துலக்கியவர்களை, 'காட்டுமிராண்டிகள்’ எனச் சொன்ன வியாபார உலகம், நம் அப்பா-அம்மாக்களின் கைகளில் நைலான், பிளாஸ்டிக் டூத்பிரஷ்களை திணித்தது. இன்று அதே கரித்தூளை, 'கார்பன் மேட் பிரஷ் அண்ட் பேஸ்ட்’ என இங்கிலீஷில் மிரட்டி, நமக்கே திரும்பவும் விற்கிறது. அதையும் பல் இளித்தபடி நாம் வாங்குகிறோம்...
கரி, பல்லுக்கு இல்லை முகத்துக்கு!

'முதல் மரியாதை’யில் சிவாஜி கணேசன் குறும்பாகத் தூக்கும் அந்தக் கல், நமது மரபின் வீர விளையாட்டுகளில் ஒன்று. சுமார் 100 கிலோ எடையுடன் வழுவழுப்பாக இருக்கும் இந்தக் கல்லை கிட்டத்தட்ட கட்டி அணைத்துதான் தூக்கவேண்டி இருக்கும். தூக்கிய கல்லை, அப்படியே அலேக்காக தோள்களைத் தாண்டி பின் பக்கமாகக் கீழே போடுவார்களாம்.
'கல்லைக் கட்டித் தூக்க முடியாதவன், கல்யாணம் கட்டி என்ன பண்ணப்போறான்?’ என நினைத்திருப்பார்கள்போல. அதனால்தான், 'கல்லைத் தூக்குபவர்களுக்குத்தான் பெண்ணைக் கொடுப்போம்’ என அடம் பிடித்திருக்கிறார்கள் அந்தக்கால பெருசுகள். உடல் ஆரோக்கியமே வளமான வாழ்க்கைக்கு அடிப்படை என்பதை அறிந்தவர்கள்!
இளவட்டக் கல்லைத் தூக்கப்போகிறவர்களுக்கு கருப்பட்டியில் பலகாரங்கள் செய்து கொடுப்பார்களாம். ஆனால், இன்றைய ஃபாஸ்ட்ஃபுட் இளைஞர்களால் அந்தக் கல்லை உருட்டவாவது முடியுமா என்பது தெரியவில்லை. இன்றும் சில கிராமங்களில் நமது வரலாற்றைப்போலவே மண்ணில் புதைந்து கிடக்கின்றன இந்த இளந்தாரி கற்கள்.
சமீபத்தில் சென்னையில் 'செம்மை நலம்’ நண்பர்கள் நடத்திய 'பிரண்டை திருவிழா’வில் இந்த இளவட்டக் கல்லையும் வைத்திருந்தார்கள். நண்பர்களில் சிலர் சங்ககாலத் தலைவர்களாக மாறி கல்லைத் தூக்குவதைப் பார்த்தேன். என்னையும் முயற்சிசெய்யச் சொன்னார்கள். ஏற்கெனவே கல்யாணமாகிவிட்டதால் நான் முயலவில்லை!

அருகில் இருக்கும் படங்களில் நீங்கள் பார்ப்பவை, ஏதோ ஒரு சயின்ஸ் ஃபிக்ஷன் படத்தின் செட் என நினைத்துவிடாதீர்கள். இவை எல்லாம் பிரபல ஆர்க்கிடெக்ட் ஃப்ராங் கேரியின் (Frank Gehry) கட்டட வடிவமைப்புகள்.
கனடாவைச் சேர்ந்த 86 வயது ஃப்ராங் கேரி, இன்றைக்கும் மோஸ்ட் வான்டட் கட்டட வடிவமைப்பாளர்களில் ஒருவர் (ஃபேஸ்புக்கின் இப்போதைய அலுவலகம் இவர் கைவண்ணம்தான்!). இவருடைய இந்தக் கட்டடங்கள் கடந்த அரை நூற்றாண்டுக்கு முன்பு மேற்கு உலகில் உருவான போஸ்ட் மார்டனிஸப் பாதிப்பில் உருவானவை. 'போஸ்ட் மார்டனிஸம் ஓவியங்களில் சரி... கட்டட வடிவமைப்புகளில் தேவையற்ற விரயம்’ என விமர்சிப்பவர்களும் உண்டு. 'ஒரு கட்டடத்தின் தேவை என்ன? மனிதர்கள் புழங்க வேண்டும். ஆனால், இந்த வகை போஸ்ட் மார்டன் கட்டடங்கள் தேவை இல்லாத டிசைன்களுடன் வீண்செலவும் டாம்பீகமும்தான்’ என்பது சில விமர்சகர்களின் தரப்பு. ஆனால், 'கலை என வந்தால் அதெல்லாம் பார்க்கக் கூடாது. அது வடிவமைப்பாளனின் சுதந்திரம்’ என்கிறது எதிர்த்தரப்பு. இவர்கள் கட்டட வடிவமைப்பைக்கூட ஒரு சிற்பம்போல பார்ப்பவர்கள்.

எது எப்படியோ, ஃப்ராங்கின் வடிவமைப்புகளை, பிக்காசோவின் ஓவியங்களுடன் ஒப்பிட்டுக் கொண்டாடுகிறார்கள் அவர் ரசிகர்கள். அவர் ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் முதல் சில்வர் டைட்டானியம் வரை, உலோகங்களை உபயோகப்படுத்தி பளபளவென ஃப்யூச்சரிஸ் டிக்காக வெளித்தோற்றத்தை அமைக்கும் விதம் பாராட்டுக்களையும் விமர்சனங்களையும் ஒருங்கே பெறுபவை. 'வெளியேதான் இவ்வளவு சீன். உள்ளே ஒண்ணுமே இல்லை’ என்பவர்களும் உண்டு. 'நான் கட்டடங்களின் வடிவத்துக்கு ஒரு எமோஷனை அளிக்க
விரும்புகிறேன். அது காற்றில் நடனம் ஆடி அசைவது போன்ற தன்மையுடன் இருக்கும்’ எனக் கவித்துவமாகச் சொல்கிறார் ஃப்ராங்க்.
சிலிக்கன் வேலியில் இவர் பிரமாண்டமாக உருவாக்கியிருக்கும் ஃபேஸ்புக் அலுவலகக் கட்டடத்தின் கூரை மட்டுமே ஒன்பது ஏக்கரில் பச்சைப்பசேல் என மரங்களுடன் உருவாக்கப்பட்டிருக்கிறது. பறவைப் பார்வையில் கிட்டத்தட்ட ஒரு சிறிய மலைபோல தெரியவேண்டும் என்பது மார்க் ஸ¨க்கர்பெர்கின் எதிர்பார்ப்பு. ஆனால், இது வழக்கமான ஃப்ராங்க் கட்டடங்களைப்போல இல்லை. 'தேவையற்ற டிசைன்கள் வேண்டாம்’ என மார்க் கேட்டுக்கொண்டதை ஃப்ராங்க் 'அன்லைக்’ பண்ணவில்லை!

'இந்த அநியாயத்தைத் தட்டிக்கேட்க யாருமே இல்லையா?’ என்று நீண்ட பேருந்துப் பயணங்களில் 'மோட்டல்’களில் ஒதுங்கும் பலர் குமுறியிருக்கலாம்.
இறங்கினால் கிறுகிறுக்க வைக்கும் உச்சஸ்தாயியில் ஏதேனும் குத்துப்பாட்டு காது கிழிக்க, கழிவறை நோக்கி கால்கள் நடக்கும். சில அப்பாடக்கர்கள் காசு கொடுக்காமல் சாலையின் மூலையில் காரியத்தை நடத்த நைஸாக நகருவார்கள். கங்காணி போல கையில் குச்சியுடன் அவர் களைக் கழிவறைக்குத் துரத்துவதற்கு என்றே மோட்டல்களில் தனியே ஆள் வைத்திருக்கிறார்கள். கழிவறைக்கு இவர்கள் வாங்கும் கட்டணத்தைப் பார்த்தால் 'கழிக்கப்போவது சிறுநீரா அல்லது பெருநீரா?’ என்ற சந்தேகம் வந்துவிடுகிறது. கொள்ளை காசு வாங்க காட்டும் அக்கறையில், பாதிகூட உள்ளே சுத்தமாக வைத்திருப்பதில் இல்லை.
சிங்கிள் டீயில் இருந்து சின்ன பாக்கெட் ஸ்நாக்ஸ் வரை அரபு தேசத்தில் இருந்து இறக்குமதி செய்ததுபோல, விலை வைத்து பயணிகளின் பாக்கெட்டுக்கு உலை வைக்கிறார்கள். பகல் (அல்லது இரவு) கொள்ளை.
இந்த மோட்டல் எனும் கான்செப்ட், இரண்டாம் உலகப்போருக்குப் பிறகுதான் உலகம் எங்கும் வந்ததாகப் படித்தேன். அதனால்தானோ என்னவோ நம் ஊர் மோட்டல்கள் பெரும் அக்கப்போராக இருக்கின்றன.

மோட்டல்களில் பேருந்து நிற்கும்போது, 'வண்டி பத்து நிமிஷம் நிக்கும்...’ என்பார் கண்டக்டர். பத்து நிமிடங்களுக்குள்ளாகவா இவ்வளவு களேபரமும்?!