மற்ற எபிசோடுகள்
Published:Updated:

நம்பர் 1 நிக் வாலெண்டா - 30

நம்பர் 1
பிரீமியம் ஸ்டோரி
News
நம்பர் 1 ( முகில் )

முகில்

ந்த நாய்கள் காட்டுக்குள் ஓடுகின்றன. சிறுவன் நிக், நாய்களின் பின்னால் ஓடுகிறான். எங்கெங்கும் பெரிய மரங்கள், ராட்சசப் பூக்கள். எங்கோ யானை பிளிறும் சத்தம்; அருகிலேயே சிங்கத்தின் கர்ஜனை; புலியின் உறுமல். எதற்கும் பயப்படாமல் அவன் ஓடிக்கொண்டே இருக்கிறான். ஒரு புல்வெளி விரிகிறது. அது மலைச்சரிவை நோக்கி நீள்கிறது. புல்வெளியைக் கடந்து நாய்கள் மலை மீது ஏற, இவனும் ஏறுகிறான். மலையின் உச்சியில் இருந்து ஒரு மாபெரும் பள்ளத்தாக்கில், பேரிரைச்சலுடன் கண்கள்கொள்ளாத அளவில் அருவி ஒன்று பாய்கிறது. நிக் மூச்சிரைக்க அங்கே சென்று நிற்கிறான். 'அருவியின் குறுக்கே நடந்து செல்’ என ஒரு குரல் அன்பாகக் கட்டளையிடுகிறது. அவன் திரும்பிப் பார்க்கிறான். வெள்ளை உடை அணிந்த பெரியவர் ஒருவர் புன்னகையுடன் நிற்கிறார். 'போ, அருவியின் குறுக்கே நடந்து செல்.’ அவன் சந்தோஷமாக நடந்து செல்ல ஆயத்தம் ஆகிறான். 

கனவு கலைய, திடுக்கிட்டு விழித்துப் பார்க்கிறான் சிறுவன் நிக். இது அவனுக்கு அடிக்கடி வரும் கனவுதான். யார் அந்தப் பெரியவர், எங்கே இருக்கிறது அந்த அருவி? குழப்பம் சூழ, மீண்டும் தூங்கிவிடுகிறான். ஆனால், அதற்கான விடையைத் தேடுவதில்தான், தன் வாழ்வின் அர்த்தமே அடங்கியிருக்கிறது என்பதைப் பின்னர் புரிந்துகொண்டான் நிக் வாலெண்டா.

யார் இந்த நிக்? அசகாய சர்க்கஸ் வீரர். இரண்டு உயரமான இடங்களுக்கு இடையே கம்பியைக் கட்டி, எந்தவிதமான பாதுகாப்பும் இல்லாமல் ஒரு கம்பை மட்டும் இரு கைகளிலும், கிடைமட்டமாகப் பிடித்தபடி நடந்துசெல்லும் 'Wire Walk’ என்ற ஆபத்தான கலையின், உலகின் நம்பர் 1 வீரர். அதில் ஒன்பது கின்னஸ் உலக சாதனைகள் படைத்திருக்கிறார். புவியீர்ப்பு விசைக்கு எதிராக நின்று, நிக் எடுத்து வைத்துக்கொண்டிருக்கும் ஒவ்வோர் அடியும் அத்தனை த்ரில்.

நம்பர் 1 நிக் வாலெண்டா - 30

வாலெண்டா குடும்பத்தினர் பரம்பரை சர்க்கஸ்காரர்கள். முன்னோர்களில் முக்கியமானவர் கார்ல் வாலெண்டா (நிக்கின் கொள்ளு தாத்தா). 1905-ம் ஆண்டு ஜெர்மனியில் பிறந்தவர். ஆறு வயதிலேயே சர்க்கஸில் வித்தைகள் செய்ய ஆரம்பித்தவர். 'The Flying Wallendas' என்ற பெயரில் தன் குடும்பத்தினருடன் இணைந்து, ஆபத்தான சர்க்கஸ் வித்தைகளை அறிமுகப்படுத்தியவர். பல்வேறு உயரமான இடங்களுக்கு இடையே, கீழே வலை ஏதும் இல்லாமல், கம்பியின் மேல் நடப்பது அவருக்குத் தூக்கத்திலும் கைகூடிய வித்தை. தன் 65-வது வயதில் ஜார்ஜியாவின் தலுல்லா (tallulah) நதிப் பள்ளத்தாக்கின் இடையே கம்பியிலும், தன் 69-வது வயதில் அமெரிக்காவின் கிங்ஸ் தீவில் 1,800 அடி தூரம் கம்பியிலும் நடந்து, புதிய உலக சாதனைகள் படைத்தார். 1978-ம் ஆண்டு  தன் 73-வது வயதில் ப்யூர்டோ ரிகோவின் இரண்டு உயரமான கட்டடங்களுக்கு இடையே, கம்பியில் நடந்தபோது வீசிய அதிகக் காற்றினால் நிலைதடுமாறினார். கீழே விழுந்தார்; உயிர் உடனே பிரிந்தது!

கார்லின் மகள் ஜெனி. ஜெனிக்குப் பிறந்தவள் டெலிலா. டெலிலாவுக்கும் டெரிக்கும் பிறந்தவர் நிக் வாலெண்டா. சர்க்கஸ்தான் குடும்பத்தை வாழவைத்தது. நிக், வயிற்றில் ஆறுமாதக் குழந்தையாக இருக்கும்போதுகூட கம்பியின் மீது அசால்ட்டாக நடந்து கைத்தட்டல்கள் வாங்கினார் டெலிலா. ஆக, நாடி, நரம்பு, ரத்தம், சதை, மரபணு அனைத்திலும் சர்க்கஸ் வெறி நிறைந்தவனாகவே நிக் வளர்ந்தான். இரண்டு வயதிலேயே இரண்டு அடி உயரத்தில் கம்பியின் மீது நடக்கப் பழகினான். அது அவனுக்கு மிகவும் பிடித்திருந்தது. 'நிக், நடந்தது போதும். சாப்பிட வா’ என அம்மா அழைத்தால், 'இன்னும் கொஞ்ச நேரம் ப்ளீஸ்...’ என்பான். 'வாழ்க்கை முழுக்க அதுலதான் நடக்கப்போற. இப்ப வா’ என்பார் டெலிலா.

நாய்களுடன் வித்தை காண்பிக்கும் குட்டிக் கோமாளியாக, நிக்கின் சர்க்கஸ் வாழ்க்கை ஆரம்பமானது. கூடவே, கம்பி மீது நடக்கும் பயிற்சியும். குட்டிக் கால்களால் நிக் கம்பி மீது நடக்க, ஏதாவது பொருட்களை அவன் மீது தூக்கி எறிந்து, அதைச் சமாளித்து அவன் நேர்த்தியாக நடக்கும்படி பெற்றோர் பயிற்சி அளித்தனர். ஆறாவது வயதில் நிக்கை முதல் முறையாக நயாகரா நீர்வீழ்ச்சிக்கு அழைத்துச் சென்றனர். ஆச்சர்யத்தில் விரிந்த நிக்கின் கண்கள், கலங்கவும் செய்தன. கனவில் நான் கண்ட இடம் இதுதான். 'இங்கே நான் ஏற்கெனவே வந்திருக்கிறேன்’ என்ற நிக்கை, டெரி ஒன்றும் புரியாமல் பார்த்தார். 'இதன் குறுக்கே ஒருநாள் கம்பியில் நடக்க வேண்டும்’ என்ற எண்ணம் அப்போதே அவனுக்குள் விதையாக விழுந்தது.

நம்பர் 1 நிக் வாலெண்டா - 30

நிக், வளர வளர தன் வாலெண்டா குடும்பத்தின் சர்க்கஸ் பெருமைகளைப் புரிந்துகொள்ள ஆரம்பித்தான். குறிப்பாக, கொள்ளு தாத்தா கார்லின் சாகசங்கள் எல்லாம் அவனைச் சிலிர்க்கச்செய்தன. எனில், அருவிக் கனவில் வரும் பெரியவர், கார்ல்தான் என நிக் நம்பினான். கம்பி மீது நடக்கும் வித்தையில் ஈர்ப்பு அதிகமானது. இன்னொரு பக்கம் சர்க்கஸ் தொழில் நசிந்துகொண்டிருந்தது. உயிரை பணயம் வைத்து உயரத்தில் சாகசம் செய்த நிக்கின் பெற்றோர், வருமானத்துக்காக உயரமான கட்டடங்களின் ஜன்னல்களையும் சுத்தம் செய்துகொண்டிருந்தனர். இதை எல்லாம் கண்டு வெறுத்து, 'நான் ஒருபோதும் சர்க்கஸ்காரன் ஆக மாட்டேன்’ என்றும் சொல்ல ஆரம்பித்தான். படிப்பில் கவனம் குவித்தான். குழந்தைகள் மருத்துவர் அல்லது பைலட் ஆக வேண்டும் என்ற ஆசை அவனுக்குள் வளர்ந்தது.

1993-ம் ஆண்டில் டெலிலா, சர்க்கஸில் வாலெண்டா பரம்பரை வாழ்வாங்கு வாழ்ந்து, வீழ்ந்த வரலாற்றை 'The last of the Wallendas' என்ற புத்தகமாக வெளியிட்டார். நிக்கை வருத்தம் சூழ்ந்தது. வருங்காலத்தில் வாலெண்டா பரம்பரையின் சர்க்கஸ் பெருமைகளை உலகம் மறந்துவிடுமா?

நிக் கல்லூரிக்குச் சென்றுகொண்டிருந்த காலம். உறவினர் ஒருவர் தேடி வந்தார். 'நம் குடும்பத்தின் அடையாளமான பிரமிடு சாகசத்துக்கு, மீண்டும் உயிர்கொடுக்க நினைக்கிறேன்’ என்றார். அது என்ன? கார்ல் வாலெண்டா, தன் சகோதரருடன் இணைந்து பல வருட உழைப்பில் உருவாக்கிய சாகச வித்தை அது. 1947-ம் ஆண்டில் முதன்முறையாக அதை அரங்கேற்றினார். சில அடி உயரத்தில் கம்பியின் மேல் வரிசையாக நான்கு பேர். அவர்களுக்கு இடையே பொருத்தப்பட்ட கம்பியில் இருவர். அந்த இருவருக்கு இடையில் இருக்கும் கம்பியின் மீது உள்ள நாற்காலியில் ஒரு பெண். இப்படி மூன்று வரிசைகளில் ஏழு பேர் நின்று பிரமிடு வடிவத்தை உருவாக்கும் அசாத்திய வித்தை. கீழே வலை உள்ளிட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் எதுவுமே கிடையாது. வாலெண்டா சர்க்கஸின் அற்புத அடையாளமாக இந்தப் பிரமிடு சாகசம் பல காலம் விளங்கியது.

1962-ம் ஆண்டு டெட்ராய்டு நகரத்தில் கார்ல் வாலெண்டா, தன் குடும்பத்தினருடன் பிரமிடு சாகசம் நிகழ்த்திக்கொண்டிருந்தார். உயரத்தில் இருந்த பெண், நாற்காலியின் மீது ஏறி கையசைத்தபோது, பிரமிடின் முதல் வரிசையில் முதலாவதாக இருந்த டயாட்டர் என்பவர் நிலைதடுமாற, பிரமிடு நிலைகுலைந்தது. மூவர் காயமின்றித் தப்பிக்க, கீழே விழுந்த இருவர் இறந்தனர். கார்லின் மகன் முடமானார். கார்லுக்கு இடுப்பில் எலும்பு முறிவு. இந்த அசம்பாவிதத்துக்குப் பிறகும் மறுநாளே மருத்துவமனையில் இருந்து எழுந்து வந்து, தான் பயிற்சி அளித்த மற்ற நபர்களுடன் இணைந்து, பிரமிடு சாகசத்தை நிகழ்த்தி, கூட்டத்தை அதிரவைத்தார் கார்ல். அவருக்குப் பிறகு அந்தச் சாகசம் வழக்கொழிந்துபோனது.

'கார்லுக்காக நாம் பிரமிடு சாகசத்தை மீண்டும் நிகழ்த்தியே தீர வேண்டும்!’ - உறவினர் கேட்டதற்கு டெலிலாவும் டெரியும் ஒப்புக்கொண்டனர். நிக்கும் அதற்காகப் பயிற்சிபெற முன்வந்தார். வாலெண்டா குடும்பத்தில் பலரும் மீண்டும் இணைந்தார்கள். பிரமிடு சாகசத்தை மறு உருவாக்கம் செய்து மீண்டும் அரங்கேற்றினர். (வீடியோ: www.youtube.com/watch?v=44OO0-pOSvg).   வெற்றிகரமாகச் செய்துமுடித்து தரை இறங்கிய நொடியில் அனைவரது கண்களிலும் ஆனந்தக் கண்ணீர். 'இனி கம்பியின் மீதுதான் என் வாழ்க்கை’ என நிக் உறுதியாக முடிவெடுத்தார். 'சர்க்கஸ் அழியவில்லை. மாறியிருக்கிறது’ என்ற புரிதலுடன் புதிய சாகசங்களை அறிமுகப்படுத்தி, பரம்பரைப் பெருமையை மீட்டெடுக்கும் நடவடிக்கைகளில் தீவிரமாக இறங்கினார்.

அதில் முக்கியமானது 'கீலீமீமீறீ ஷீயீ ஞிமீணீtலீ’ சாகசம். உயரமான கட்டடத்தின் மீது சுற்றிச்சுழலும் ஒரு வளைய அமைப்பின் மீது தடதடவென நடக்கும் வித்தை (வீடியோ: www.youtube.com/watch?v=tt1S8P2dJcY) . தீம் பார்க், கேஸினோ, பிற பொழுதுபோக்கு இடங்களில் நிக் சாகசங்களை நிகழ்த்த ஆரம்பித்தார். உறுதுணையாக அம்மா, அப்பா, உறவினர்கள், புதிதாக மனைவி எரண்டிராவும் இணைந்திருந்தார். அது ஓர் அழகான காதல் கதை.

எரண்டிராவும் பாரம்பர்ய சர்க்கஸ் குடும்பத்தில் இருந்து வந்தவரே. வாலெண்டா குழுவுடன் வித்தைகாட்ட அவர் இணைந்தபோது, தூக்கம் தொலைத்தார் நிக். இருவரும் கம்பி மீது நடக்கும்போது, துணைக்குக் காதலும் நடைபயின்றது. கனடாவின் மான்ட்ரியல் நகரத்தில் ஒரு சர்க்கஸ் நிகழ்ச்சியில், சுமார் 18,000 பேர் முன்னிலையில் 30 அடி உயரக் கம்பியின் நடுவே மண்டியிட்ட நிக், தன் முன் நின்றுகொண்டிருந்த எரண்டிராவிடம் காதலைச் சொன்னார். முகம் சிவக்கக் காதலை ஏற்றுக்கொண்டார் எரண்டிரா. அரங்கம் அதிர்ந்தது. ஒரு வாரத்தில் திருமணம் செய்துகொண்டார்கள். (இப்போது அவர்களுக்கு மூன்று குழந்தைகள்.)

2001-ம் ஆண்டு ஜப்பானில் நிக், வாலெண்டா குடும்பத்தினருடன் இணைந்து, எட்டு பேராக நான்கு அடுக்கு பிரமிடு சாதனை செய்தார். இது அவரது முதல் கின்னஸ் உலக சாதனை. அதற்குப் பின் கம்பியில் சைக்கிள் ஓட்டுவது, கம்பியில் பைக் ஓட்டியபடி மனைவியுடன் சேர்ந்து மயிர்க்கூச்செரியும் சாகசங்கள் புரிவது (வீடியோ: www.youtube.com/watch?v=Fo8-GLKl1Ec),  அந்தரத்தில் கம்பியின் நடுவில் உட்கார்ந்தபடி போன் பேசுவது, காபி குடிப்பது என விதவிதமாக தன் வித்தைகளை வித்தியாசப்படுத்தினார். ஏதாவது உயரமான இடங்களைக் கண்டாலே 'இதற்கும் அதற்கும் இடையில் கம்பியைக் கட்டி நடக்கலாமா?’ என அவரது சிந்தனை காற்றுவெளியில் மிதக்க ஆரம்பித்தது.

2008-ம் ஆண்டு. நியூஜெர்சி. 135 அடி உயர புரூடென்ஷியல் சென்டரில் இருந்து கம்பி வழியாக 250 அடி நடந்தார். கீழே வலை கிடையாது. கரணம் தப்பி, வலையில் விழுந்தும் வாலெண்டா குடும்பத்தினர் இறந்திருக்கிறார்கள் என்பதால், கார்ல் ஒருபோதும் அவற்றை நம்பியது இல்லை. அதையே நிக்கும் பின்பற்றினார். புரூடென்ஷியலில் காலால் நடந்து கடந்த பிறகு, ஹேண்டில் பாரும் டயரும் நீக்கப்பட்ட சைக்கிளையும் கம்பியில் ஓட்டிச் சாதித்தார். 'கடைசி சில அடிகளில் பின் சக்கரம் சற்றே வழுக்க ஆரம்பிக்க, ஒருவழியாக வந்து சேர்ந்துவிட்டேன்.’ அதிக உயரத்தில் அதிக தொலைவுக்கு கம்பியில் சைக்கிள் ஓட்டிய விதத்தில் நிக் புதிய கின்னஸ் சாதனை படைத்தார். (வீடியோ: www.youtube.com/watch?v=iscKQiOkgaY&spfreload=10).

நம்பர் 1 நிக் வாலெண்டா - 30


 

'அதுக்கும் மேலே’ எங்கே கம்பி கட்டலாம் என நிக்கின் பார்வை உயர்ந்துகொண்டே சென்றது. 2009-ம் ஆண்டு வரை உயரமான

15 இடங்களில் பிசகு இல்லாமல் நடந்து சாதித்தார். பிட்ஸ்பெர்க் நகரின் ஒரு நதியைக் கடக்க கயிற்றில் கால்வைத்தார் நிக். குறிப்பிட்ட நேரத்தில் மழையும் காற்றும் சேர்ந்துகொண்டன. தவிர, எப்போதும் எண்ணெய் இடப்படாத கம்பியில்தான் நடப்பார் நிக். அன்று அங்கே அமைக்கப்பட்டிருந்ததோ எண்ணெய் கசியும் கம்பி. நிக் பின்வாங்கவில்லை. தன் ஷூக்களை கழற்றி எறிந்துவிட்டு, வெறும் காலுறைகளுடன் (200 அடி உயரத்தில் 1,084 அடி நீளம்) நடந்து கடந்தார். நிக்கின் சாகசங்களுக்கான ஏற்பாடுகளை, அதற்கு உரிய கட்டுமானங்களை எல்லாம் கவனித்துக்கொள்வது அவரது தந்தை டெரி.

ப்யூர்டோ ரிகோவில் கார்ல் விழுந்து இறந்த அதே கட்டடங்களுக்கு இடையில் நடந்து கடக்க வேண்டும் என்பது நிக்கின் லட்சியங்களில் ஒன்று. அதே எண்ணம் டெலிலாவுக்கும் இருந்தது. குடும்பத்தினர் பயந்தனர்; தடுத்தனர். நீண்ட யோசனைக்குப் பிறகு, மகனும் அம்மாவும் அதே இடத்தில் அமைக்கப்பட்ட கம்பியில் கால் பதித்தனர். கம்பியின் ஒருபுறம் இருந்து நிக் நடந்து வர, எதிர்ப்புறம் இருந்து அம்மா டெலிலா நடந்து வந்தார். கார்ல் எந்தப் புள்ளியில் தடுமாறி விழுந்தாரோ, அதே இடத்தில் டெலிலா கம்பியில் அமர்ந்தார். நிக், டெலிலாவை நெருங்கி, சாதுர்யமாகத் தாண்டினார். கூட்டம் பதறியது. பின், டெலிலா மீண்டும் எழுந்து நிற்கவும் உதவினார். தூரத்தைக் கடந்து முடிப்பதற்குச் சில அடிகள் முன்பாக நிக், கம்பியில் மண்டியிட்டு கார்லுக்காக முத்தம் ஒன்றைப் பறக்கவிட்டார். 'கார்லின் மரணம் எங்களைக் காலம்காலமாகத் துரத்திக் கொண்டேயிருந்தது. இதோ அதே பாதையிலேயே அவரது கனவை நாங்கள் நிறைவேற்றிவிட்டோம். கார்லைப் பெருமைப்படுத்திவிட்டோம்!’

அடுத்த இலக்கு, இளவயது முதல் துரத்தும் அந்தக் கனவு அருவியின் குறுக்கே நடப்பது. அந்த அருவி நயாகரா! 19-ம் நூற்றாண்டில் பல கலைஞர்கள், நயாகரா நதி ஓடும் பள்ளத்தாக்கின் குறுக்கே கம்பியில் நடந்து விதவிதமான சாதனைகள் செய்திருக்கிறார்கள். ஆனால், யாருமே அருவியை ஒட்டி, கம்பி கட்டிக் கடந்தது இல்லை. கிட்டத்தட்ட அரைவட்ட வடிவில் விழும் நயாகராவின் ஒரு முனை இருப்பது அமெரிக்காவில். மறுமுனை இருப்பது கனடாவில். அந்த இரு கரைகளுக்கு இடையில் கம்பி அமைத்து நயாகராவைக் கடப்பது நிக்கின் திட்டம். ஆனால், சுமார் 120 வருடங்களாக நயாகராவில் சாகசங்களைத் தடை செய்திருந்தார்கள். நிக், 2010-ம் ஆண்டு முதலே இரண்டு அரசுகளிடமும் அனுமதி கேட்டுப் போராட ஆரம்பித்தார். ஏகப்பட்ட சட்டச் சிக்கல்கள். பலரது உதவியுடன் நிக் தொடர்ந்து வற்புறுத்த, ஒருவழியாக நயாகராவைக் கடக்க அனுமதிக்கும் மசோதா, அமெரிக்கத் தரப்பில் நிறைவேற்றப்பட்டது.

கனடா தரப்பில் கடும் இழுபறி. விதிமுறைகள் அனுமதிக்காது என்பது தொடங்கி, கூடும் கூட்டத்தால் சுற்றுச்சூழல் கெட்டுவிடும் என்பதுவரை பல்வேறு முட்டுக்கட்டைகள். 'இதனால் நயாகராவின் சுற்றுலா வருமானம் அதிகரிக்கும்’ என நிக் போராடினார். 'நயாகராவில் நடப்பதைவிட, அதற்கான அனுமதி வாங்குவது கடினமாக இருக்கிறது’ என நிக் மனம் வெறுத்தபோது கிரீன் சிக்னல் விழுந்தது.

நம்பர் 1 நிக் வாலெண்டா - 30

நயாகரா சாகச பட்ஜெட்டும் எதிர்பார்த்ததைவிட எகிறியது. கட்டமைப்புக்கான செலவில் இருந்து பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கான செலவு வரை, தவிர இரு அரசுகளும் நிர்ணயித்த லொட்டு லொசுக்கு கட்டணங்கள் என உத்தேசமாக $1.3 மில்லியன் தேவைப்பட்டது. சாகசத்தை நேரடியாக ஒளிப்பரப்ப ABC சேனலுக்கு உரிமம் கொடுத்து, பொதுவில் நிதி திரட்டி, விளம்பரதாரர்களைப் பிடித்து, இப்படி பல வழிகளில் செலவைச் சமாளித்தார் நிக். இத்தனைக்கு மத்தியிலும் பயிற்சியிலும் ஈடுபட்டார். உயரத்தில் நிக் நடக்க, தீயணைப்பு வாகனங்கள் நீரைப் பீய்ச்சியடிக்க, ராட்சசக் காற்றாடிகள் சுழன்றன. அவற்றின் மத்தியில் நடந்து பழகினார் நிக். பல மணி நேரங்கள் நயாகரா கரையில் உட்கார்ந்து, அந்த அருவியை, தன் பாதையை, உணர்ந்து உள்வாங்கிக்கொண்டார். அவர் முழுமையாகத் தயாரானார். ஆனால் ABC சேனல், கம்பியோடு இணைக்கப்பட்ட ஒரு பாதுகாப்பு வொயரை, நிக் தன் முதுகில் இணைத்துக்கொண்டுதான் சாகசம் மேற்கொள்ள வேண்டும் எனக் கறாராகச் சொன்னது. நிக்குக்கு அதில் உடன்பாடு இல்லை. முடியவே முடியாது எனக் கடுமையாக எதிர்த்தார். ஆனால், திட்டமே பாழாகிப்போகும் என்ற நிலையில் அரை மனதுடன் ஒப்புக்கொண்டார்.

2012-ம் ஆண்டு, ஜூன் மாதம். 'நயாகரா என்றெல்லாம் நினைக்காதே. எப்போதும் நடக்கும் அதே கம்பிதான். இடம் வேறு. அவ்வளவுதான். உன்னால் நிச்சயமாக முடியும்.’ நம்பிக்கையுடன் அமெரிக்கப் பகுதியில் இருந்து முதல் அடியை எடுத்துவைத்தார் நிக். அது இரவு மணி 10:16. அந்த நேரத்தில் மின் உற்பத்திக்காக நயாகராவின் நீரின் குறிப்பிட்ட அளவு எடுத்துக்கொள்ளப்படுவதால், நீர்வரத்து சற்றுக் குறைவாக இருக்கும். ஆனால், பனிமூட்டமும் காற்றும் எதிர்பார்த்ததைவிடக் கடுமை காட்டின. பேரிரைச்சலுடன் நொடிக்கு 60,000 கேலன் விழும் நீரால் தெறிக்கும் சாரலில், 2 இன்ச் விட்டம் உள்ள கம்பி முழுக்க நனைந்திருந்தது. டெலிலா தன் மகனுக்காக, வழுக்காத, அதிகப் பிடிமானம் கொண்ட சிறப்பு ஷூக்களைத் தயாரித்துக் கொடுத்திருந்தார். புவியீர்ப்பு விசையைச் சமப்படுத்தும் விதத்தில் கையில் நீண்ட கம்பு ஒன்றை (40 அடி நீளம், 16 கிலோ கிராம் எடை) கிடைமட்டமாகப் பிடித்தபடி ஒவ்வோர் அடியாக, கவனமாக எடுத்துவைத்தார் நிக். முதுகுடன் பொருத்தப்பட்டிருந்த, அதுவரை அவர் அணிந்தே இருக்காத பாதுகாப்பு வொயர்தான் பெரும் தொந்தரவாகத் தெரிந்தது. (நிக் அதைப் பாதி வழியில் கழட்டிவிடுவார் எனச் சிலர் நினைத்தார்கள். ஆனால், சேனலுடனான ஒப்பந்தத்தை மதித்து அப்படி எதுவும் செய்யவில்லை!)

நம்பர் 1 நிக் வாலெண்டா - 30

இரு புறமும் சேர்த்து இரண்டு லட்சத்துக்கும் அதிகமான பார்வையாளர்கள் திரண்டிருந்தார்கள். தவிர நேரடி ஒளிபரப்பில் கோடிக்கணக்கான விழிகள் இமைக்க மறந்திருந்தன. நிக், அந்தரத்தில் நடக்க நடக்க, ஒவ்வொருவரது இதயத்துடிப்பும் எகிறிக் கொண்டிருந்தது. நயாகரா வாழ் வல்லூறுகள், பறந்து வந்து நிக்கைத் தாக்கும் ஆபத்தும் இருந்தது. வேறு எதையும் யோசிக்காமல் தன் பாதையில் தீர்க்கமாக நடந்தார் நிக்.

பாதையின் மையத்தை அடைந்தார். கீழே 220 அடி ஆழத்தில் நீரின் சங்கமத் தாண்டவம். 'எங்கே இருக்கிறாய் நீ?’ என மனதில் விநோதக் கேள்வி. திடீரென எல்லாம் ஏதோ கனவுபோல தோன்றியது. நிக் நிலைதடுமாறாமல்,ABC நிருபருடன் தன்னில் பொருத்தப்பட்ட மைக்கில் பேசியபடி நடந்தார். அதிகக் குளிர்; ஈரம். கைகள் விறைத்தன. உடல் வலிமை இழப்பதாகத் தோன்றியது. நினைவில் கார்ல் வந்தார். உதடுகள் கடவுளைப் பிரார்த்தித்தன. எரண்டிராவும் குடும்பத்தினரும் வெலவெலத்து நின்றனர். 90 சதவிகிதத் தூரத்தைக் கடந்தபின், நிக் மண்டியிட்டு முத்தம் ஒன்றைப் பறக்கவிட்டார். மக்களின் ஆர்ப்பரிப்பில் நயாகராவின் இரைச்சலும் அமுங்கியது. இரவு 10:41. நயாகராவின் குறுக்கே கம்பியில் 1,800 அடியைக் கடந்து, கனடாவின் டேபிள் ராக் பகுதியை அடைந்த முதல் மனிதராக, புதிய கின்னஸ் உலக சாதனை படைத்தார் நிக். வாலெண்டா குடும்பத்தினர் நெகிழ்ந்து நின்றனர். நிக்கின் முகத்தில் நயாகராவையே வென்ற ஆனந்தம். (வீடியோ: www.youtube.com/watch?v=Ka2vnJWQxyo). அந்தக் கரையில் கனடா அதிகாரிகள் நிக்கை வரவேற்றார்கள். நிக், தன் உடைக்குள் நனையாமல் வைத்திருந்த பாஸ்போர்ட்டை எடுத்து நீட்டினார். 'உங்கள் பயணத்தின் நோக்கம் என்ன?’ அதிகாரிகள் கேட்டதற்கு நிக் பெருமிதத்துடன் அளித்த பதில், 'உங்கள் கனவை வெல்லும் முயற்சியை ஒருபோதும் விட்டுவிடாதீர்கள் என உலக மக்களுக்குச் செய்தி சொல்வதே’!

நிக்கின் அந்த நடையால், அமெரிக்காவிலும் கனடாவிலும் நயாகராவின் சுற்றுலா லாபம் அந்த ஆண்டில் அதிகரித்தது. நிக்கும் மில்லியன் கணக்கில் சம்பாதித்துவிட்டார் என்றுதான் பலரும் சொன்னார்கள். நிஜத்தில் $50,000 வரை நஷ்டப்பட்டுத்தான் சாதனையை நிகழ்த்தியிருந்தார் நிக். அதற்காக முடங்கிவிடவும் இல்லை. அடுத்த இலக்கை நிர்ணயித்தார். அரிசோனாவின் கிராண்ட் கேன்யான் பள்ளத்தாக்கின் குறுக்கே, லிட்டில் கோலராடோ நதியின் மேலே நடப்பது. மொத்தம் 1,400 அடி நீளம், அதுவும் 1,500 அடி உயரத்தில் கடப்பது. 2013-ம் ஆண்டு ஜூன் மாதம் நிக், அந்த அதீத உயரத்தில் நடக்கத் தொடங்கினார். பயணத்தில் இரண்டு முறை அதிக காற்றால் சற்றே தடுமாறிச் சமாளிக்க வேண்டி இருந்தது.

22 நிமிடம், 54 நொடியில், கடைசி சில அடிகளைக் குடுகுடுவென ஓடிக் கடந்து, மண்ணை முத்தமிட்டு மகிழ்ந்தார் நிக். மற்றும் ஓர் உலக சாதனை.

2014-ம் ஆண்டு. சிகாகோவில் நிக், 588 அடி உயரம் உள்ள ஒரு கட்டடத்தின் உச்சியில் இருந்து, 671 அடி உயரம் உள்ள இன்னொரு கட்டடத்தின் உச்சியை நோக்கி, 19 டிகிரி சாய்வில் கட்டப்பட்ட கம்பியில் நடந்து கின்னஸ் சாதனை படைத்தார். அதே இரவில், இரண்டு கட்டடங்களுக்கு இடையில், கண்களைக் கட்டிக்கொண்டு, 500 அடி உயரத்தில், 94 அடி தூரத்தைக் கடந்து தனது ஒன்பதாவது கின்னஸ் சாதனையை வரலாற்றில் பதித்தார்.

இதுவரை தன் சாகசங்களில் எந்த விபத்தையும் சந்திக்காத நிக், குமுறும் எரிமலையின் குறுக்கே நடக்க வேண்டும், பிரமிட், ஈஃபிள் டவர், மலேசியா ட்வின் டவர், மச்சுபிச்சுவில் நடக்க வேண்டும்... என அபாயகரமான வருங்காலத் திட்டங்கள் பலவற்றையும் வைத்துள்ளார்.

'எந்த உயரத்தைக் கண்டும் நான் பயப்படுவது இல்லை. நான் பயப்படுவது கடவுளுக்கு மட்டுமே. மரணம் எந்த விதத்திலும் வரலாம். நான் எனது 50 வயது வரை கம்பியின் மீது வாழவே விரும்புகிறேன். வயதாகி, இயற்கையான மரணத்தைச் சந்திக்கவே ஆசைப்படுகிறேன். என் செயல்கள் மற்றவர்களுக்குப் பைத்தியக்காரத்தனமாகத் தோன்றலாம். ஆனால், நான் இந்தக் கலைக்காகவே படைக்கப்பட்டிருக்கிறேன். எதிலும் எப்போதும் முதல் அடியை எடுத்துவைப்பதுதான் கடினம். தைரியமாக இறங்கி, ஆபத்துகளை எதிர்கொள்ளப் பழகிவிட்டால் எதுவும் சாத்தியமே. ஏனெனில், அனுபவத்தை வேறு எதைக் கொண்டும் ஈடுசெய்யவே இயலாது’ இது நிக்கின் அனுபவ வார்த்தைகள்!

மனதால் தயாராகு!

வாரத்தில் ஆறு நாட்கள், தினமும் ஆறு மணி நேரம் கம்பி மீது பயிற்சி. தவிர வாரத்துக்கு 10 மணி நேரம் எடை தூக்கும் பயிற்சி, 5 மணி நேரம் ஏரோபிக்ஸ் பயிற்சி மேற்கொள்கிறார் நிக். 'சிறிய உயரமோ, மிக அதிக உயரமோ கம்பியில் நடப்பதற்கு முதலில் மனதளவில் தயாராவதுதான் மிக முக்கியம்’ என்பது நிக்கின் அனுபவ வார்த்தைகள்!

எது மாதிரியும் இல்லாத புது மாதிரி!

2011-ம் ஆண்டு, ஹெலிகாப்டரில் 250 அடி உயரத்தில் ஒரு பாரில் ஒரே கையால் தொங்குதல், காலால் தொங்குதல், பல்லால் கடித்தபடி தொங்குதல்... என புதிய உலக சாதனை படைத்தார் நிக். ஆனால், அதற்குப் பின்னர் சில மாதங்கள் கழுத்துவலியால் அவதிப்பட்டார்.

நம்பர் 1 நிக் வாலெண்டா - 30

நிக்கின் குழந்தைகளுக்கும் சர்க்கஸில் ஆர்வம். குறிப்பாக அவரது கடைசி மகள் எவிட்டா, கம்பி வித்தையில் கவனம் செலுத்திவருகிறாள்.

2015-ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் ஃபுளோரிடாவில் அமைக்கப்பட்டிருக்கும் 400 அடி உயர ராட்சச ராட்டினத்தின் (Orlando Eye)  உச்சியில், எந்தவிதப் பாதுகாப்பும் இல்லாமல் ஏறி நடந்து பார்வையாளர்களை மெய்சிலிர்க்கச் செய்தார் நிக்.

‘Never Give Up’ நிக்கின் மந்திர வாசகம் இதுவே. 'உலகின் சிறந்த வொயர் வாக்கர் என என்னைச் சொல்ல மாட்டேன். சாதனைகளை முறியடிப்பது என் நோக்கம் அல்ல. இதுவரை நிகழ்த்தப்படாத சாதனைகளைச் செய்வதில்தான் என் கவனத்தைச் செலுத்துகிறேன்’!