Published:Updated:

``கண்ணு முன்னாடி 44 பேரை எரிச்சிக் கொன்னாங்க!" கீழ்வெண்மணி கொடூரம் சொல்லும் காவல்காரர் #Venmani

``கண்ணு முன்னாடி 44 பேரை எரிச்சிக் கொன்னாங்க!" கீழ்வெண்மணி கொடூரம் சொல்லும் காவல்காரர் #Venmani

``கண்ணு முன்னாடி 44 பேரை எரிச்சிக் கொன்னாங்க!" கீழ்வெண்மணி கொடூரம் சொல்லும் காவல்காரர் #Venmani

``கண்ணு முன்னாடி 44 பேரை எரிச்சிக் கொன்னாங்க!" கீழ்வெண்மணி கொடூரம் சொல்லும் காவல்காரர் #Venmani

``கண்ணு முன்னாடி 44 பேரை எரிச்சிக் கொன்னாங்க!" கீழ்வெண்மணி கொடூரம் சொல்லும் காவல்காரர் #Venmani

Published:Updated:
``கண்ணு முன்னாடி 44 பேரை எரிச்சிக் கொன்னாங்க!" கீழ்வெண்மணி கொடூரம் சொல்லும் காவல்காரர் #Venmani

"அப்ப எனக்கு பன்னெண்டு, பதிமூணு வயசு இருக்கும். ஆனா, எல்லாமும் அப்படியே ஞாபகத்துல இருக்கு. வெண்மணியில் நடந்த அந்தக் கொடூரத்தை மறக்க முடியுமா என்ன?" என்கிற சேதுபதி குரலில் உணர்ச்சிக் கொந்தளிப்பு.

1968-ம் ஆண்டு இதே டிசம்பர் 25. நாகப்பட்டினம் மாவட்டம் (அந்தக் காலகட்டத்தில் ஒருங்கிணைந்த தஞ்சாவூர் மாவட்டமாக இருந்தது), கீழ் வெண்மணி எனும் சின்னஞ்சிறு கிராமத்தில், ஓர் ஓலைக் குடிசைக்குள் குழந்தைகளும் பெண்களும் முதியவர்களுமாக 44 பேர் எரித்துக் கொல்லப்பட்டனர். அனைவருமே பொருளாதாரத்தாலும் சாதிய அமைப்பாலும் தாழ்த்தப்பட்டவர்கள். அந்தச் சோகச் சம்பவம் நடந்து 50 ஆண்டுகள் ஆகிவிட்டது. அந்தக் கொடூரச் சம்பவத்தின் நினைவாக, அங்கே நினைவுக் கட்டடம் எழுப்பப்பட்டு வருகிறது. அந்தக் கட்டத்தை காவல் காப்பவர்தான் சேதுபதி.

"எங்க யாருக்கும் சொந்தமாக நிலம் கிடையாது. இந்தப் பகுதி பண்ணையாருங்ககிட்டதான் வேலை பார்க்கணும். காலையில் சூரியன் உதிக்கிறதுக்கு முன்னாடி வயல்ல இறங்கிடணும். நல்லா இருட்டின பெறகுதான் வயலைவிட்டு வரணும். ஆம்பளங்க கோமணம்தான் கட்டிக்கணும். துண்டைத் தோள்ல போட்டுக்கக் கூடாது. கைக் குழந்தை இருந்தாலும், பொம்பளைங்க வேலைக்கு வந்துடணும். வயல் வரப்புல இருக்கும் கருவ மரத்துல புடவையில் ஏனைக் கட்டி, குழந்தையைத் தூங்கப் போட்டுட்டு வேலையைப் பார்க்கணும். குழந்தை பசியால் அழுது, பால் கொடுக்கப் போனாலும் திட்டு வாங்க வேண்டியிருக்கும். இன்னும் நிறைய கொடுமைங்க நடந்துச்சு. 

'செங்கொடி இயக்கம்' வந்துக்கு அப்புறம், இவ்வளவு நேரம்தான் வேலை பார்ப்போம். வேலைக்குத் தக்க சம்பளம் கொடுக்கணும். எங்க இஷ்டத்துக்கு துணிகளைக் கட்டிப்போம்னு தைரியமா சொல்ல ஆரம்பிச்சோம். இது பண்ணயாருங்களுக்குப் பிடிக்குமா. அவங்க ஒரு சங்கம் ஆரம்பிச்சாங்க. இரிஞ்சூர் கோபால கிருஷ்ண நாயுடுதான் அதுக்குத் தலைவர். அந்தச் சங்கத்தில் எங்களையும் சேரச் சொன்னாங்க. நாங்க முடியாதுன்னு சொல்லிட்டோம். இதனால் அடிக்கடி ஏதாச்சும் பிரச்னை வரும். 

அன்னைக்கும் அப்படித்தான், டீ குடிச்சுட்டிருந்த எங்க ஊரு தலைவருங்க முனியன், முத்துசாமி இரண்டு பேரின் கைகளையும் கட்டி இழுத்துட்டு வந்தாங்க. ஊர்க்காரங்க ஒண்ணா கூடி அவங்கள காப்பாத்தினாங்க. சரி, இதோடு முடிஞ்சிடும்னு நினைச்சோம். ஆனா, இருட்டின பெறகு, இரிஞ்சூர் பக்கத்திலிருந்து அருவா, கத்தி, கம்பு, துப்பாக்கி எல்லாம் எடுத்துட்டு பெரிய கும்பல் வந்துச்சு. ஊர்க்காரங்களும் கையில் கிடைச்ச கற்களைவெச்சு அவங்களை எதிர்த்து தாக்கினாங்க. ஆனா, அவங்க துப்பாக்கியால் சுட ஆரம்பிச்சதும் சிதறி ஓட வேண்டியதாயிடுச்சு. 

ஆம்பளைங்க எல்லாம் ஊருக்கு வெளியே ஓடிப்போயிட்டாங்க. குழந்தைங்க, பொம்பளைங்க எல்லாம் ராமையாவின் குடிசைக்குள்ள போய் ஒளிஞ்சுக்கிட்டாங்க. எங்க வீடு அதுக்கு பின்னாடிதான் இருந்துச்சு. அதனால், வீட்டுப் பக்கத்திலிருந்த ஒரு குழிக்குப் பக்கத்தில் ஒளிஞ்சுக்கிட்டேன். கும்பலா வந்த ஆளுங்க, அந்தக் குடிசையின் வாசக் கதவை வெளிப்புறமா தாழ்ப்பாள் போட்டாங்க. பெட்ரோலை கூரை மேல ஊத்திக் கொளுத்திட்டாங்க. நெருப்பு கொளுந்துவிட்டு எரியுது. உள்ளேருந்து 'அய்யோ, அம்மானு' ஒரே சத்தம். குடிசைக்குள்ளிருந்து தப்பிச்சு வெளியே ஓடிவந்த ஆளுங்களைக் கம்பால அடிச்சாங்க. அப்படித்தான் பழனிவேலு வெளியில் குதிச்சப்போ, அவர் தொடையிலேயே வெட்டிட்டாங்க. என் கண்ணு முன்னாலேயே எல்லாரும் சாம்பலா மாறினதைப் பார்த்தேன்'' கண்களைத் துடைத்துக்கொண்டு, சில நிமிடங்கள் மெளனமாக இருந்த சேதுபதி தொடர்கிறார். 

''என்னோடு விளையாண்ட பசங்க, அக்கா, அண்ணினு நான் கூப்பிட்டவங்க எல்லாம் கரிக்கட்டையாகக் கெடந்தாங்க. அப்புறம் போலீஸ் வந்துச்சு. தீயணைக்கிறவங்க வந்தாங்க. ஆனா, எல்லாம் முடிஞ்சுப்போச்சு. அப்புறம் கேஸ் நடந்துச்சு. இந்தக் கொடுமைக்குக் காரணமாக இருந்தவங்க எப்படியோ தப்பிச்சுட்டாங்க. சில வருஷம் கழிச்சு, கோபால கிருஷ்ண நாயுடுவை சில பேரு சேர்ந்து வெட்டிக் கொன்னுட்டாங்க. 'கூலியைச் சேர்த்து கொடுங்க, மான மரியாதையோடு வாழ விடுங்க'னு ஒரு மனுஷனுக்குத் தேவையான அடிப்படை உரிமையைக் கேட்டதுக்கு, வெண்மணி கொடுத்த விலை அதிகம்" என்று கனத்த குரலோடு முடிக்கிறார் சேதுபதி.

ஊருக்கே உணவு அளிக்கும் விவசாயிகளின் துயரங்கள் சொல்லி மாளாதவை. சரியான நேரத்துக்குத் தண்ணீர் கிடைப்பதில்லை, நெல்லுக்கு உரிய விலை இல்லை... உட்பட இன்றும் விவசாயிகள் படும் பாடு ஏராளம். அவை தீர்த்து வைக்கப்பட வேண்டியது அவசியம் மட்டுமல்ல; அவசரமும்கூட.