மற்ற எபிசோடுகள்
Published:Updated:

மந்திரி தந்திரி - 28 !

மந்திரி தந்திரி
பிரீமியம் ஸ்டோரி
News
மந்திரி தந்திரி ( விகடன் டீம் )

விகடன் டீம், படங்கள்: வீ.சக்தி அருணகிரி ஓவியங்கள்: ஹாசிப்கான், கார்த்திகேயன்மேடி

'மந்திரி தந்திரி’-களில், யாருக்கும் இல்லாத சிறப்பு இந்த வார சிறப்பு விருந்தினருக்கு உண்டு. ஆனால், பெருந்தலைவர் காமராஜர், பேரறிஞர் அண்ணா என பெருமதிப்புமிக்கவர்களால் அலங்கரிக்கப்பட்ட 'தமிழ்நாடு முதலமைச்சர் பதவி’க்கு இவரால் எந்தச் சிறப்பும் நேரவில்லை. அரசியலில் ஓ.பன்னீர்செல்வத்தின் ஆளுமையை இந்த அளவுக்கே பதிவுசெய்ய முடியும்! 

2001-ம் ஆண்டு, அ.தி.மு.க ஆட்சிப் பொறுப்பு ஏற்கிறது. அமைச்சரவையில் வருவாய்த் துறை அமைச்சராக இடம்பிடித்து, முதல்முறையாக சட்டமன்றத்துக்குச் செல்கிறார் ஓ.பன்னீர்செல்வம். அங்கே அமைச்சர்கள் வரிசையில் கடைசி ஓரத்தில்தான் அவருக்கு இருக்கை ஒதுக்கப்படுகிறது. துறைரீதியான மானியக் கோரிக்கைகள் நிறைவேற்றவேண்டிய நேரம். பன்னீர்செல்வத்தின் முறை வரும்போது, 'எனது துறையின் மாணிக்கக் கோரிக்கையை நிறைவேற்றித் தாருங்கள்’ என அப்பாவியாக அவர் சொல்ல, சொந்தக் கட்சியின் சீனியர்களே சிரிப்பை அடக்கச் சிரமப்படுகிறார்கள். சபை முடிந்த பிறகு, அவரை அழைத்து அவை நடவடிக்கைகளைப் பற்றி விவரிக்கிறார்கள்.

'மானியக் கோரிக்கை’யைக்கூட 'மாணிக்கக் கோரிக்கை’ என அன்று சொன்னவர், பின்னர் தமிழ்நாடு முதலமைச்சர் நாற்காலியை இரண்டு முறை அலங்கரிப்பார் என அவரே எதிர்பார்த்திருக்க மாட்டார். இன்று நிதி மற்றும் பொதுப்பணித் துறை அமைச்சராக, அ.தி.மு.க கேபினெட்டில் 'நம்பர்2’-வாக இருக்கும் ஓ.பன்னீர்செல்வத்தின் வரலாறு முதல் தகராறு வரை பார்ப்போமா!

மந்திரி தந்திரி - 28 !

அமைதிக்குப் பெயர் பன்னீர்!

தேனி மாவட்டம் பெரியகுளத்தின் விவசாயக் குடும்பத்தின் முதல் ஆண் வாரிசாகப் பிறந்த பிள்ளைக்கு, குலதெய்வப் பெயரான 'பேச்சிமுத்து’ எனப் பெயரிட்டார்கள். அதுதான் பின்னர் பன்னீர்செல்வம் ஆனது. பி.யூ.சி முடித்துவிட்டு 'உத்தமபாளையம் ஹாஜி கருத்த ராவுத்தர் கவுதியா கல்லூரி’யில் சேர்ந்தார். நட்பு, மோதல், காதல், ஜாலி, கேலி, கிண்டல் என நவரசங்களும் கொட்டிக்கிடக்கும் இடம்தான் கல்லூரி. ஆனால், அங்கும் ஒருவர் அமைதியாக இருக்க முடியும் என்றால், அது நம் பன்னீர்தான். இளங்கலை பொருளாதாரம் படிக்கப்போன பன்னீரிடம், கல்லூரிப் பருவத்துக்குரிய எந்த உற்சாகத் துள்ளலும் இல்லை. மதிய உணவு இடைவேளையில்கூட தனியே அமர்ந்து சாப்பிடுவார். அப்படி இப்படி என கல்லூரிப் படிப்பை முடித்தவருக்கு, உத்தியோகம் ஒன்றும்

கை கொடுக்கவில்லை.

பெரியகுளம், கயிலாச நாதர் கோயில் அருகே இருந்த குடும்ப நிலத்தில் விவசாயம் செய்யத் தொடங் கினார். பெரியகுளத்தைச் சுற்றி இருந்த டீ ஸ்டால்களுக்கு பால் கிராக்கி இருந்தது. அதைக் கவனித்த பன்னீர், தங்கள் நிலத்திலேயே பால்பண்ணை அமைக்க முடிவெடுத்தார். விஜயன் என்கிற நண்பர்தான் ஜாமீன் கையெழுத்து போட்டார். நண்பர்கள் உதவியோடு பால்பண்ணை வைத்து சுற்றுவட்டார டீக்கடைகளுக்கு பால் சப்ளை செய்தார். அப்படி விற்றதுபோக எஞ்சிய பாலை காசாக்க நினைத்தவர், 'பி.வி கேண்டீன்’ என்ற பெயரில் தானே ஒரு டீக்கடை ஆரம்பித்தார். பி - என்பது பன்னீர்செல்வம்... வி - என்பது வங்கிக் கடனுக்கு ஜவாப்தாரி கொடுத்த நண்பர் விஜயனின் பெயர். இப்போதும் டீக்கடை இருக்கிறது... ஆனால் பெயர்தான் இல்லை.

சிறு வயதில் இருந்தே சிவாஜி கணேசனின் தீவிர ரசிகர் பன்னீர். எம்.ஜி.ஆர் கட்சி ஆரம்பித்த பின்னர் அ.தி.மு.க-வில் சேர்ந்தார். அப்போது அ.தி.மு.க-வில் இலக்கிய மேடைப் பேச்சாளராகத் திகழ்ந்த கம்பம் செல்வேந்திரன்தான், ஒருங்கிணைந்த மதுரை மாவட்ட இளைஞர் அணிச் செயலாளர். அவருக்கு ஆதரவாளராகச் செயல்பட்டதற்குப் பரிசாக, பன்னீருக்கு பெரியகுளம் நகர எம்.ஜி.ஆர் இளைஞர் அணிச் செயலாளர் பதவி கிடைத்தது. எம்.ஜி.ஆர் மறைவுக்குப் பிறகு 'ஜா’ - 'ஜெ’ என கட்சி பிளவுற்றபோது, 'ஜானகி அணிக்கு’ நடிகர் சிவாஜி ஆதரவு கொடுத்தார். சிவாஜி அபிமானியான பன்னீர், 'ஜா’ அணிக்குப் போனார். 1989-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் போடி தொகுதியில் ஜெயலலிதா போட்டியிட்டார். அவரை எதிர்த்து ஜானகி அணியில் நிறுத்தப்பட்டவர் நடிகை 'வெண்ணிற ஆடை’ நிர்மலா.

தொகுதியில் ஜெயலலிதா வேட்புமனுத் தாக்கல் செய்துவிட்டுப் போன பிறகும் 'வெண்ணிற ஆடை’ நிர்மலா வேட்புமனு தாக்கல் செய்யவில்லை. எப்போது வேட்புமனு தாக்கல் செய்வார் என்பதும் மர்மமாகவே இருந்தது. அரசியல் குழிபறிப்பு காரணமாக எதிர்தரப்பினர் வேட்பாளரை மடக்கிவிட்டார்களோ என்ற பதற்றம் நிலவிய சமயம், திடீரென 'வெண்ணிற ஆடை’ நிர்மலாவைக் கொண்டுவந்து நிறுத்தி, ஜெயலலிதா உள்பட பலருக்கும் அதிர்ச்சி அளித்தார் பன்னீர். ஆம், அதுவரை 'வெண்ணிற ஆடை’ நிர்மலாவைப் பாதுகாப்பாகவும் தலைமறைவாகவும் வைத்திருந்து, வேட்புமனு தாக்கல் செய்யவைத்ததில் பன்னீருக்குப் பெரும்பங்கு உண்டு. போடி தொகுதியில் ஜெயலலிதாவை வீழ்த்த, கடுமையாக வேலைபார்த்தார் பன்னீர். ஆனாலும், ஜெயலலிதாவே ஜெயித்தார்.

தேர்தலுக்குப் பின்னர் 'ஜெ’-'ஜா’ அணிகள் இணைய, ஜெயலலிதாவின் தலைமையைப் பணிவாக ஏற்றுக்கொண்டார் பன்னீர். பெரியகுளம் நகரச் செயலாளர் ஆனவர், பின்னர் பெரியகுளம் நகராட்சி சேர்மன் பதவியையும் பிடித்தார். யாருக்கும் எதிராக அரசியல் செய்யாமல், தன் வளர்ச்சிக்காக பிறரை இம்சிக்காமல் அமைதியாக இருந்தவர் பன்னீர். ஆனால், 1999-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல், பன்னீரின் வாழ்க்கையில் பெரும் திருப்புமுனையை உண்டாக்கியது. முதலமைச்சர் பதவி முதல் இன்றைய அவரது அந்தஸ்து வரை அனைத்துக்குமான விதை, அந்தத் தேர்தல் சமயத்தில்தான் விழுந்தது.

மந்திரி தந்திரி - 28 !

போயஸ் கார்டனின் செல்லப் பிள்ளையாக வலம்வந்த டி.டி.வி.தினகரனை, அந்தத் தேர்தலில் பெரியகுளம் தொகுதி வேட்பாளராக்கினார் ஜெயலலிதா. பன்னீர்செல்வத்தின் தம்பி ராஜாவின் வீடு, தேர்தல் அலுவலகமாக மாறியது. அங்குதான் தினகரனும் தங்கினார். அப்போது பன்னீருக்கு ஒதுக்கப்பட்ட வேலை, தேர்தல் வரவு-செலவுகளைப் பார்ப்பது. அத்துடன் தினகரனை வெற்றிபெறவைப்பதற்கான வேலைகளையும் இழுத்துப்போட்டுக்கொண்டு பார்த்தார். எதிர் முகாமில் இருந்த 'ஆக்டிவ்’ புள்ளிகளை அமைதியாக்கினார். அந்தச் சூட்சுமங்கள் பலன் அளிக்க, தினகரன் ஏகபோகமாக வென்றார். வெற்றிக்கு கைமாறாக, பன்னீர்செல்வத்துக்கு மாவட்டச் செயலாளர் பதவியை வாங்கிக்கொடுத்தார் தினகரன். அப்போது முதல் இப்போது வரை பன்னீருக்கு அரசியலில் ஏறுமுகம்தான். 2001-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் வென்று வருவாய்த் துறை அமைச்சராக கேபினெட்டில் இடம்பிடித்தார். காரணம், தினகரனின் நல்லாசி. அமைச்சராக சைரன் காரில் வலம்வந்தாலும் தினகரன் முன் பன்னீர் உட்கார மாட்டார். அவ்வளவு பணிவு!

முதலமைச்சரான சில மாதங்களிலேயே டான்சி வழக்கில் தண்டனை பெற்ற ஜெயலலிதா, முதலமைச்சர் பதவியைப் பறிகொடுத்தார். வேறு வழி இல்லாமல் உடனடியாக அடுத்த முதலமைச்சரைத் தேர்ந்தெடுக்கவேண்டிய கட்டாயம். 'தனக்கு மிகமிக விசுவாசமாக இருக்கக்கூடியவர் யார்?’ என ஜெயலலிதா விவாதித்தபோது, பன்னீரைச் சுட்டிக்காட்டினார் தினகரன். 'நீங்கள்தான் முதலமைச்சர்’ என தலைவி சொன்னபோது, பன்னீர் வியர்த்து நடுநடுங்கிப்போனார். கவர்னர் மாளிகையில் பதவியேற்பு. ஜெயலலிதாவும் சசிகலாவும் சோபாவில் கம்பீரமாக வீற்றிருக்க, தமிழ்நாட்டின் புதிய முதலமைச்சராகப் பதவியேற்க இருந்த பன்னீர், நாற்காலியில் அமர்ந்தும் அமராமலும் விளிம்பில் ஒண்டிக்கொண்டிருந்தார். பதவிப்பிரமாணம் எடுப்பதற்கு முன்னும் பின்னும் ஜெயலலிதா காலில் விழுந்து எழுந்தார். சில மாதங்களுக்குப் பின்னர் ஜெயலலிதா மீண்டும் முதலமைச்சரானபோது, ஆட்சியிலும் கட்சியிலும் பன்னீர்தான் நம்பர்2. பின்னர் 2011-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க ஆட்சியைப் பிடித்தபோது, மீண்டும் அதே போன்றதொரு சிக்கல்.

சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று ஜெயலலிதா பதவி இழக்க, 13 வருடங்களுக்கு முன்னர் கவர்னர் மாளிகையில் ஜெயலலிதா முன்பு எப்படி உட்கார்ந்து இருந்தாரோ, அதே பவ்யத்துடன் இரண்டாவது முறையும் முதலமைச்சராகப் பதவியேற்றுக்கொண்டார் பன்னீர். ஆனால், இந்த முறை அந்த பவ்யம் பயத்தினால் உண்டாகவில்லை. மனதளவில், உடல் அளவிலேயே அப்படி ஆகிவிட்டார் பன்னீர். 'அம்மா’ கேபினெட்டில் சீனியர்களும் ஜூனியர்களுமாக பலர் 'அவுட்’ ஆகிக்கொண்டிருக்க, பல வருடங்களாக 'நாட்-அவுட்’ பேட்ஸ்மேனாக இருக்கிறார் பன்னீர். எம்.எல்.ஏ., அமைச்சர், முதலமைச்சர், பொருளாளர், அவை முன்னவர் என, சகல பதவிகளையும் அனுபவித்துவிட்டார் பன்னீர். அதன் ரகசியம் என்ன தெரியுமா? பன்னீரின் விசுவாசம்! 'அம்மா’வின் அபிமானத்துக்காக எதுவும் செய்யத் துணியும், முதலமைச்சராக எதையும் செய்யாமல் இருக்கத் துணியும் பன்னீர், தனக்கான பொறுப்புகளில் அந்த அக்கறையைக் காட்டியிருக்கிறாரா? பார்ப்போம்!

துறையில் சாதித்தது என்ன?

காவிரி, முல்லைப் பெரியாறு, பாலாறு என உயிர்நாடிப் பிரச்னைகளின் நாடி என்னவென பொதுப்பணித் துறை அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்துக்குத் தெரியுமா என்பதே சந்தேகமாக இருக்கிறது. காரணம், பன்னீர் முதலமைச்சராக இருந்த காலத்தில்தான் கர்நாடகா அரசு காவிரி ஆற்றின் குறுக்கே மேக்கேதாட்டூ என்ற இடத்தில் அணை கட்டும் விவகாரம் பற்றி எரிந்தது. கர்நாடகா அரசின் அராஜகச் செயல்பாட்டைக் கண்டித்து மேக்கேதாட்டூவுக்கு எதிராக தமிழ்நாடு விவசாயிகள் பந்த் அறிவித்தார்கள். அ.தி.மு.க தவிர மற்ற அனைத்துக் கட்சிகளும் அந்த பந்த்துக்கு ஆதரவு தெரிவித்தது. அப்போது, 'விவசாயிகளின் பந்த்தை ஆதரிக்கிறோம் அல்லது எதிர்க்கிறோம்’ என ஒரு வார்த்தைகூடச் சொல்லவில்லை அ.தி.மு.க அரசு. ஆனால், தமிழ்நாடு அரசியல் கட்சிகள் அனைத்தும் கைகோத்து நடத்தும் அந்த பந்த்தில் பங்கெடுக்காமல்போனால், தங்கள் மீது 'கறை’ விழுந்துவிடுமோ என யோசித்து பந்த்துக்கு முந்தைய தினம் சட்டமன்றத்தில் தனித் தீர்மானம் ஒன்றை ஏகமனதாக நிறைவேற்றினார் முதலமைச்சர் பன்னீர். 'மேக்கேதாட்டூவில் அணை கட்ட நடவடிக்கை எடுக்கக் கூடாது என, கர்நாடகா அரசுக்கு மத்திய அரசு அறிவுரை கூற வேண்டும்’ என்பதே தீர்மானத்தின் சாராம்சம்.

மந்திரி தந்திரி - 28 !

அணையைக் கட்டத் திட்டமிட்டு, அதற்காக விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க 25 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி, வேலைகளைத் துரிதப்படுத்தியது கர்நாடகா அரசு. ஆனால், கர்நாடகாவைக் கண்டிக்காமல், மத்திய அரசை அறிவுரை வழங்கக் கேட்டது தமிழ்நாடு முதலமைச்சரின் 'அபார’ வியூகம். தீர்மானத்தில், கர்நாடகாவைக் கண்டிக்கும் கடுமையான வாசகங்கள் இல்லை. ஏன் அந்தக் கள்ள மௌனம்? 'கர்நாடகா உயர் நீதிமன்றத்தில் அப்போது நடைபெற்றுவந்த ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்குதான் காரணம். அதனால் கர்நாடகாவுக்கு எதிராக உறுதியான நிலைப்பாடு எடுக்காமல், தமிழ்நாடு  விவசாயிகளின் நலன்களைப் பற்றி கவலைப்படாமல் மென்மையான போக்கைக் கடைப்பிடித்தார் பன்னீர்’ என அப்போது விமர்சனங்கள் எழுப்பப்பட்டன. ஆக, தமிழகத் தாய்மடி வறண்டு விவசாயிகள் பரிதவித்தாலும் பரவாயில்லை... 'அம்மா’வுக்கு எந்தச் சங்கடமும் நேர்ந்துவிடக் கூடாது என்பதே பன்னீரின் சிந்தனையாக, செயலாக இருந்தன!

நதிநீர் இணைப்பு சடங்கு!

'நதிகளை இணைப்பதை, அரசு முதன்மைப் பணியாகக் கருதுகிறது. மணிமுத்தாறுடன் பல கிளை நதிகளை இணைக்க 3,787 கோடி ரூபாய் ஒதுக்கப்படும். மணிமுத்தாறை வைகை ஆற்றுடன் இணைக்க 1,379 கோடி ரூபாய் ஒதுக்கப்படும். 2014-15 நிதி ஆண்டுக்குள், மாநிலத்தில் பாயும் நதிகளை இணைக்கும் திட்டங்களைத் தொடந்து செயல்படுத்திட 119.98 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும்’ என்றெல்லாம் வருடாவருடம் பிரமாண்ட அறிவிப்புகளை பட்ஜெட்டில் வாசிப்பது பன்னீர் பழக்கம். ஆனால், அவை எதுவும் களப்பணியாக வேகம் எடுக்கவில்லை. அறிவிக்கப்பட்ட பல திட்டங்களும் தொழில்நுட்ப நடைமுறை சிக்கல், மாற்றுக் கருத்துக்கள், ஆய்வறிக்கை தயாரித்தல் என பல காரணங்கள் அடுக்கப்பட்டு பத்திரமாகக் கிடப்பில் இருக்கின்றன.

நீர்நிலைகள் பயனற்றுப்போகாமல் பாதுகாப்பது ஓர் அரசின் கடமை. ஏரிகள் சூறையாடப்பட்டால் பயிரிடும் பரப்பு, உணவுதானிய உற்பத்தி, நிலத்தடி நீர்வளம் குறைவதோடு சுற்றுச்சூழல் சீர்கேடுகளும் பெருக்கெடுக்கும். ஆனால், ஏரி ஆக்கிரமிப்புகளை அகற்றுவதில் அரசு அக்கறைகாட்டுவது இல்லை. பொதுமக்களிடம் சுவரொட்டிகளை ஒட்டியும் தண்டோரா போட்டும் விழிப்புஉணர்வை ஏற்படுத்தும் அரசு, ஏனோ ஆக்கிரமிப்பாளர்களை மட்டும் கண்டுகொள்வதே இல்லை. நீர்வள ஆதாரத் துறையால் பராமரிக்கப்படும் 14,098 ஏரிகளில், வெறும் 4,087 ஏரிகள் மட்டுமே முழுமையாகப் பாதுகாக்கப் பட்டிருக்கின்றன. எஞ்சியுள்ள ஏரிகளை யார் பாதுகாப்பார்கள்?

முதலமைச்சர் பன்னீர்... என்ன சாதித்தார்?

உத்வேகமான அதிகாரிகள், பொறுப்பான குடிமக்கள், தொழில்நுட்ப வசதிகள், அடிப்படைக் கட்டமைப்புகள், மக்கள் வளம், செல்வ வளம் என அனைத்தும் நிரம்பியிருக்கும் தற்போதைய காலகட்டத்திலும் தமிழ்நாடு சில காலம் 'இருண்ட மாநிலமாக’ காட்சியளித்தது. அது... முதலமைச்சர் பன்னீரின் ஆட்சிக் காலம்!

சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதா சிறைக்குச் சென்ற பின்னர், கண்ணீரும் கவலையுமாக தமிழ்நாடு முதலமைச்சராகப் பொறுப்பேற்றுக்கொண்டார் ஓ.பன்னீர்செல்வம். அழுகாச்சி மந்திரிசபை பதவியேற்பு, கோட்டைக்குச் செல்லாமல் கோயில் கோயிலாக ஏறி இறங்கிய அமைச்சர்கள், புதிய திட்டங்கள் இல்லாதது என அரசின் மொத்த நிர்வாகமும் ஸ்தம்பித்துக் கிடந்தது. கோட்டையில் முதலமைச்சர் அறைக்குள்கூட செல்லத் துணியாமல் ஒதுங்கியிருந்தார். நலத்திட்ட உதவிகள், அரசு நிகழ்ச்சிகள் எதிலுமே பங்கேற்காமல் 'கொலு பொம்மை’யாக நடமாடிக்கொண்டிருந்தார். ஜெயலலிதா மீண்டும் முதலமைச்சராக வந்து தொடங்கிவைக்க வேண்டும் என்பதற்காகவே, முதலீட்டாளர்கள் மாநாடு, புதிய கட்டடங்கள் திறப்பு, அம்மா குழந்தைகள் நலப் பெட்டகம், அம்மா உணவகங்கள், மெட்ரோ ரயில் என அனைத்தையும் கிடப்பில் போட்டு, தன் தலைவி சிறையில் அடைபட்டதற்காக தமிழ்நாடு மக்களுக்கு தண்டனை கொடுத்தது நியாயமா ஓ.பி.எஸ்.?

பண்டிகை தினங்களில் மாநிலத்தின் முதலமைச்சர் வாழ்த்து சொல்வது என்பது ஒரு சம்பிரதாயம். அதைக்கூடச் செய்யவில்லை பன்னீர். கடந்த வருடம் தீபாவளி, கிறிஸ்துமஸ், இந்த வருடப் புத்தாண்டு, பொங்கல் விசேஷங்கள் 'முதலமைச்சரின் வாழ்த்து’கள் இல்லாமல் கடந்துபோனது தமிழ்நாடு அரசியல் வரலாற்றில் முதல் முறை. பால் விலையை லிட்டருக்கு

10 ரூபாய் உயர்த்தியதும் மின் கட்டணத்தை அதிகரித்ததும் தவிர ஓ.பன்னீர்செல்வம் ஆட்சியில் எதுவுமே நடந்துவிடவில்லை. ஜல்லிக்கட்டு உரிமையைப் பறிகொடுத்தது, டெங்கு காய்ச்சலைக் கட்டுப்படுத்தாமல்விட்டது, பருப்பு மற்றும் முட்டை கொள்முதலில் ஊழல் என, களங்கங்களே முதலமைச்சர் ஓ.பி.எஸ்-ஸுக்கு உரித்தாகின.

நிதிச்சுமை... கடன்சுமை..!

மதுவால் கரன்சிகளைக் குவித்தபோதும் நிதிச்சுமையால் 'தள்ளாடி’க்கொண்டிருக்கிறது தமிழ்நாடு அரசு. அரசின் கடன் தொகையை நான்கு லட்சம் கோடி ரூபாய்க்கு இழுத்துக்கொண்டு வந்துவிட்டது பன்னீரின் நிதி நிர்வாகம். '2014-15ம் ஆண்டில் அரசின் கடன் 1.81 லட்சம் கோடி ரூபாய் மட்டுமே.

மந்திரி தந்திரி - 28 !

2015-16ம் ஆண்டில் 2.11 லட்சம் கோடி ரூபாயாக அதிகரிக்கும்’ என சட்டமன்றத்தில் சொல்லியிருக்கிறார் ஓ.பன்னீர்செல்வம். ஆனால், இது தமிழ்நாடு அரசு நேரடியாக வாங்கிய கடன் மட்டுமே. மின்சார வாரியம் உள்ளிட்ட அரசின் பொதுத் துறை நிறுவனங்கள் வாங்கிய கடன்களைச் சேர்க்கவில்லை. மின்வாரியத்தின் கடன் சுமை 1.60 லட்சம் கோடி ரூபாய். போக்குவரத்துக் கழகம் உள்பட மற்ற நிறுவனங்களின் கடனையும் சேர்த்தால் பொதுத் துறை நிறுவனங்களின் கடன் இரண்டு லட்சம் கோடி ரூபாயை எட்டும். ஒட்டுமொத்தமாகப் பார்த்தால், தமிழ்நாட்டின்  மொத்தக் கடன் சுமை நான்கு லட்சம் கோடி ரூபாயைத் தொடும். 'குடும்பம் நடத்தவே கடன் இன்றியமையாத விஷயம் எனும்போது, அரசாங்கம் நடத்த கடன் பெறுவதில் என்ன தப்பு?’ எனக் கேள்வி எழலாம். வாங்கிய கடனைத் திருப்பிச் செலுத்த, வருவாய்க்கான வழிவகைகளைத் தேடுவான் சாமானியன். ஆனால் தமிழ்நாடு அரசோ, கடனைத் திருப்பிச் செலுத்துவதற்கான அக்கறையோ, வருவாயைப் பெருக்குவதற்கான திட்டமிடல்களையோ மேற்கொள்வதே இல்லை.

டாஸ்மாக் வருவாயை உயர்த்துவதில் காட்டும் அக்கறையை, வணிக வரி, கலால், முத்திரை மற்றும் பதிவுத் துறை வருவாயில் ஓ.பன்னீர்செல்வம் காட்டவே இல்லை. இன்னொரு பக்கம் இலவசங்களில் அரசின் கரன்சி கரைந்துகொண்டிருக்கிறது.

ஆட்சியைத் தக்கவைக்கும் உள்நோக்கமோ என்னவோ, அரசின் நிதியை வாரி இலவசத் திட்டங்களில் வீணடித்துவருகிறார்கள். இதனால் நிதிநிலை இன்னும் படுபாதாளத்துக்குப் போய்க்கொண்டிருக்கிறது. இலவச மிக்ஸி, கிரைண்டர், மின்விசிறிக்கு 2,000 கோடி ரூபாய், பசுமை வீடுகளுக்கு 1,260 கோடி ரூபாய், இலவச லேப்டாப்களுக்கு 1,100 கோடி ரூபாய், தாலிக்குத் தங்கம் திட்டத்துக்கு 751 கோடி ரூபாய், இலவச வேட்டி சேலை திட்டத்துக்கு 499 கோடி ரூபாய், இலவச கறவை மாடுகள், ஆடுகளுக்கு 242 கோடி ரூபாய்... என ஆண்டுக்கு 20 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் மேல் இலவசம் மற்றும் மானியத்துக்கு மட்டுமே செலவாகிறது. 2014-15ம் ஆண்டில் இலவசத் திட்டங்களுக்கும் மானியத்துக்கும் ஒதுக்கப்பட்ட நிதி மட்டும் 20,899 கோடி ரூபாய். அதுவே அரசின் நேரடிக் கடனுக்கான வட்டியாக மட்டும் ஆண்டுக்கு 17,856 கோடி ரூபாயை அரசு செலுத்திவருகிறது. அரசு வாங்கிக் குவிக்கும் கடன்களால் தமிழ்நாட்டில் உள்ளவர்கள் ஒவ்வொருவர் தலையிலும் சுமார் 57,053 ரூபாய் கடன் சுமத்தப்பட்டிருக்கிறது. மாநிலத்தையும் பொது மக்களையும் மீள முடியாத கடன் வெள்ளத்தில் மூழ்கடித்ததே ஓ.பி.எஸ்-ஸின் சாதனை!

இப்படியே போனால் விவசாயத்தில் சுணக்கம், தொழில் உற்பத்தியின்மை, மின்வெட்டு, வறுமை, வேலைவாய்ப்பின்மை போன்ற பிரச்னைகளை எல்லாம் எப்படித் தீர்ப்பது? சுமார் 85 லட்சம் படித்த இளைஞர்கள் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவுசெய்துவிட்டு வேலைக்காகக் காத்துக்கிடக்கிறார்கள். இவர்களுக்கு நிதி அமைச்சர் என்ன வழிகாட்டுவார்? விவசாயம், கல்வி, சுகாதாரம் ஆகிய மூன்று துறைகளிலும் சரிவிகித வளர்ச்சி இருந்தால்தானே, ஒரு மாநிலம் முழுமையான வளர்ச்சியை எட்ட முடியும்.

ஆனால், இந்த நிதர்சன நிலவரம் எதையும் கண்டுகொள்ளாமல், 'தமிழ்நாட்டில் அடுத்த 11 ஆண்டுகளில் வறுமையை ஒழிக்க நடவடிக்கை எடுக்கப்படும். குடிசை இல்லாத மாநிலமாக தமிழ்நாடு மாற்றப்படும். தனிநபர் வருமானம் ஆறு மடங்கு உயர்த்தப்படும். ஏற்றத்தாழ்வற்ற, வறுமையற்ற சமூதாயத்தை அமைப்போம். உலகத்தரம் வாய்ந்த பாதுகாப்பான சாலைகள், நகரங்கள், தங்குதடையற்ற மின்சாரம் ஆகியவற்றைக் கிடைக்கச்செய்வது எமது லட்சியம்’ என்றெல்லாம் 'தமிழ்நாடு தொலைநோக்குத் திட்ட’ அறிவிப்பில் ஜம்பமாக அறிவித்துக்கொண்டிருக்கிறது அ.தி.மு.க அரசு.

ஓ.பி.எஸ்-ஸின் நிதி நிலைமை பற்றி கேட்கிறீர்களா? அதற்கு எப்போதுமே பஞ்சம் இருந்தது இல்லையே!

ஹரே கிருஷ்ணா... ஹரே கிருஷ்ணா!

மந்திரி தந்திரி - 28 !

சென்னையின் குடிநீர் தேவையைப் பூர்த்திசெய்யும் கிருஷ்ணா குடிநீர்த் திட்டம் மூலம், ஒவ்வோர் ஆண்டும் ஆந்திரா 12 டி.எம்.சி தண்ணீரை தமிழ்நாட்டுக்கு வழங்க வேண்டும். ஆனால், இந்த நான்கரை வருடங்களுக்கும் சேர்த்து, 22 டி.எம்.சி-க்கும் குறைவான அளவே தண்ணீர் வந்திருக்கிறது. இதற்காக ஒருமுறைகூட ஓ.பி.எஸ் ஆந்திரா பக்கம் எட்டிப்பார்க்கவே இல்லை.

கூவம் நதி... இல்லை நிதி!

மந்திரி தந்திரி - 28 !

'கூவம் நதியை முழுமையாகச் சீரமைத்து மீட்டெடுக்க, பெரும் திட்டம் ஒன்று 3,833 கோடி ரூபாய் மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும். பாதிக்கப்படக்கூடிய குடும்பங்களுக்கு நிவாரணம் அளிக்கவும் மறுகுடியமர்வு செய்யவும் 2,077 கோடி ரூபாய் செலவிடப்படும். இந்தத் திட்டங்களை, 'சென்னை நதிகள் சீரமைப்பு அறக்கட்டளை’ ஒருங்கிணைப்பு அமைப்பாக இருந்து செயல்படுத்தும்!’ என்ற பட்ஜெட் அறிவிப்பும் கிடப்பிலேயே இருந்தது. திடீர் ஞானோதயத்தில் ஒருங்கிணைந்த கூவம் நதி சுற்றுச்சூழல் சீரமைப்புத் திட்டத்துக்கு சில வாரங்களுக்கு முன் அடிக்கல் நாட்டியிருக்கிறார் ஜெயலலிதா. அடிக்கல் நாட்டவே இத்தனை மாதங்கள் என்றால்?!

'அம்மா’ன்னா சும்மாவா?

மந்திரி தந்திரி - 28 !

பன்னீர்செல்வம் முதலமைச்சராக இருந்த காலகட்டத்தில்தான், ஜெயலலிதாவின் 67-வது பிறந்த நாள் வந்தது. நீதிமன்றத்தால் ஜெயலலிதா தண்டிக்கப் பட்டிருந்தார். ஆனால், அதைப் பற்றி எல்லாம் கவலை இல்லாமல் ஜெயலலிதாவின் பிறந்த நாளை அரசு விழா கணக்காகக் கொண்டாடி மகிழ்ந்தார் பன்னீர். தலைமைச் செயலகமே கொண்டாட்டக் களமாக மாறியது. 67 லட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டத்தை, ஓ.பன்னீர்செல்வம் தொடங்கிவைத்தார். அரசின் சாதனைக் கண்காட்சிகளில் ஜெயலலிதாவின் படங்கள் இடம்பெற்றன. தமிழ்நாடு அரசின் அதிகாரபூர்வ தகவல் பலகைகள், இணையதளங்களில் 'தமிழ்நாடு முதலமைச்சர்’ என ஜெயலலிதாவின் பெயரும் படமுமே இடம்பெற்று இருந்தன. இவை எல்லாம் அரசியலமைப்புச் சட்டத்துக்கு நேரடியாக விடப்பட்ட சவால்கள்.

பஞ்சரான பட்ஷெட் அறிவிப்புகள்!

மந்திரி தந்திரி - 28 !

நிதி அமைச்சராக இருந்து இதுவரை ஐந்து முறை பட்ஜெட் தாக்கல் செய்திருக்கிறார் ஓ.பன்னீர்செல்வம். ஆனால், அவற்றில் அறிவிக்கப்பட்ட திட்டங்கள், வெள்ளைக் காகிதங்களில் கறுப்பு மையால் அச்சடிக்கப்பட்ட எழுத்துக்களாகவே காட்சியளிக்கின்றன!

அறிவுசார் பூங்கா

மந்திரி தந்திரி - 28 !

'சென்னை டி.பி.ஐ வளாகத்தில், ஒருங்கிணைந்த அறிவுசார் பூங்கா அமைக்கப்படும். அதில் பள்ளிக் கல்வி சார்ந்த அனைத்தும் சிறப்பாக வடிவமைக்கப்பட்ட கட்டடங்களில் இடம்பெறுவதோடு கூட்ட அரங்குகள், பயிற்சி மற்றும் கலந்துரையாடல் மையங்கள், புகைப்படக் காட்சிக்கூடத்துடன் கூடிய கல்வி தொலைத்தொடர்பு மையம் போன்ற நவீன வசதிகளும் ஏற்படுத்தப்படும்’ என 2011-12ம் ஆண்டு அறிவித்தார் பன்னீர். அது வெற்று அறிவிப்பே!

மோனோ ரயில்

மந்திரி தந்திரி - 28 !

'மோனோ ரயில் திட்டத்தைச் செயல்படுத்த, அரசு உரிய நடவடிக்கைகளைத் தொடங்கியிருக்கிறது. சர்வதேச ஒப்பந்தப்புள்ளிகள் கோரப்பட்டுள்ளன. 8,500 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மூன்று வழித்தடங்கள் கொண்டதாக திட்டம் அமல்படுத்தப்படும்’ என்றெல்லாம் பட்ஜெட் உரைகளில் பில்டப் கொடுத்தார் பன்னீர். ஆனால், இம்மியும் வேலை நடக்கவில்லை!

மின்சாரம்

மந்திரி தந்திரி - 28 !

4,800 கோடி ரூபாயில் 800 மெகாவாட் உடன்குடி விரிவுத் திட்டம், 9,600 கோடி ரூபாயில் 1,600 மெகாவாட் உப்பூர் அனல்மின் திட்டம், 3,600 கோடி ரூபாயில் எண்ணூர் அனல்மின் இயந்திரத்துக்குப் பதிலாக 600 மெகாவாட் திறன் கொண்ட புதிய மின் இயந்திரம் நிறுவும் திட்டம் என, பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட எந்தத் திட்டமும் நிறைவேறவில்லை!

மீன் வளம்

மந்திரி தந்திரி - 28 !

'ஆழமற்ற கடல் பகுதிகளில் மீன்களின் அளவு மிகக் குறைவாக இருப்பதால் ஆழ்கடல் மீன்பிடிப்பை ஊக்குவிக்க, நடுக்கடலில் மீன் பதப்படுத்தும் அலகு ஏற்படுத்தப்பட்டு, தாய்க் கப்பல் ஒன்று நடுக்கடலில் நிறுவப்படும். வணிகரீதியில் ஆழ்கடல் மீன்பிடி படகுகளுக்குத் தேவையான உதவிகளை அளித்து, மீன் பிடிக்கும் புதிய உத்தியை அரசு மேற்கொள்ளும். இந்தத் திட்டத்தின் கீழ் வங்காள விரிகுடாவில் ஒன்றும், இந்தியப் பெருங்கடலில் மற்றொன்றுமாக இரண்டு கப்பல்கள் நிறுத்தப்படும்’ என்றெல்லாம் பட்ஜெட்டில் சொன்னது... காற்றோடு போச்சு!

மந்திரி தந்திரி - 28 !

• முதல்முறையாக அமைச்சரானபோது பெரியகுளம் அருகில் உள்ள கயிலாசநாதர் கோயிலுக்குப் போனார் பன்னீர். அந்த ராசியோ என்னவோ, முதலமைச்சர் பதவி வரை எட்டிப்பிடித்தார். அதனாலேயே கயிலாசநாதருக்கு ராஜகோபுரம் எழுப்பி, 2012-ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடத்தினார்.

• ஊருக்கு வந்தால் கயிலாசநாதரையும் பெரியகுளம் பாலசுப்ரமணியரையும் தரிசிக்காமல் இருக்க மாட்டார். குலதெய்வக் கோயிலான ஸ்ரீவில்லிபுத்தூர் பேச்சியம்மனையும் உருகி உருகி வணங்குவார். சென்னையில் இருந்தால் பார்த்தசாரதி, ஆஞ்சநேயர் கோயில்களுக்குப் போவார்.

• கட்சிக்காரர்கள் யாராக இருந்தாலும் வீட்டு விசேஷங்களுக்கு அழைத்தால், தவறாமல் ஆஜராகி 1,000 ரூபாய் 'மொய்’ வைப்பார்.

• கார் பயணங்களில் ஸ்பீக்கரில் எம்.ஜி.ஆர் பாடல்கள்தான் ஒலிக்கும்.

• ஜோதிடம், வாஸ்து ஆகியவற்றில் அதீத நம்பிக்கை. நல்ல நேரம் பார்த்துதான் வெளியில் கிளம்புவார்.

• அமைச்சர், முதலமைச்சர் என பளபள பதவிகளில் அலங்கரித்திருந்தாலும் பெரியகுளத்தில் இருக்கும் பலருக்கும் பன்னீர் இன்று வரை 'சேர்மன்’தான். 'சேர்மன் பேசுறேங்க’ என பன்னீருக்கே சில நேரங்களில் வாய் வந்துவிடும். அந்த அளவுக்குப் பழசை மறக்காதவர்!

• வாட்ச், மோதிரம் அணிய மாட்டார். வெளியூர் செல்லும்போது மட்டும் வாட்ச்சை சட்டை பாக்கெட்டில் வைத்துக்கொள்வார்.

• இளமைக் காலத்தில் வாலிபால் ஆட்டம் விருப்ப விளையாட்டு. புல்லட் ஓட்டுவது என்றால், அத்தனை இஷ்டம்!

தம்பி... தங்கக் கம்பி அல்ல!

மந்திரி தந்திரி - 28 !

பெரியகுளம் நகராட்சியின் சேர்மன் ராஜா. இவர் ஓ.பன்னீர்செல்வத்தின் தம்பி. இவரைச் சுற்றி எக்கச்சக்க சர்ச்சைகள் வட்டமடிக்கின்றன. 'ஓ.பி.எஸ் ஊரில் இல்லாத நேரத்தில் நிழல் மந்திரி ராஜாதான்’ எனச் சொல்கிறார்கள் தேனி மாவட்ட ரத்தத்தின் ரத்தங்கள். தலித் பூசாரி தற்கொலை விவகாரத்தில் ராஜா சிக்கிய விவகாரம், தமிழ்நாடு முழுவதும் அதிர்வலைகளை உண்டாக்கியது. 'அரசியல் காரணங்களுக்காக என் மீது பழி போடப்படுகிறது’ எனச் சொல்லி முன்ஜாமீன் கேட்டார் ராஜா. இவர் சேர்மனாக இருக்கும் பெரியகுளம் நகராட்சிதான் சிறந்த நகராட்சி எனச் சொல்லி, ஜெயலலிதா விருது கொடுத்தார். ஆனால், 'சுகாதாரச் சீர்கேட்டின் உச்சமாக இருந்தது பெரியகுளம். அப்படிப்பட்ட பெரியகுளத்துக்கு சிறந்த நகராட்சி விருதா?!’ என விமர்சனங்கள் கிளம்பின!