மற்ற எபிசோடுகள்
Published:Updated:

கலைடாஸ்கோப் - 12

எண்ணம், வண்ணம்: சந்தோஷ் நாராயணன்

கலைடாஸ்கோப் - 12

''பூமாதேவிக்கும் விஷ்ணுவின் வராக அவதாரத்துக்கும் பிறந்தவன்தான் நரகாசுரன். ஸ்ரீமத் பாகவதத்தில் இருக்கிறது'' என்றார் திண்ணையில் இருந்தபடி தாத்தா. 

''அப்புறம் எதுக்கு விஷ்ணுவோட இன்னொரு அவதாரமான கிருஷ்ணரே அவரைக் கொலை செய்யணும்?'' என்றபடி பட்டாசு பார்சலைப் பிரித்தான் அபி.

''கிருஷ்ணர் மட்டும் இல்லே... காளியும் சத்யபாமாவும்கூட நரகாசுரனைக் கொன்னதா வெவ்வேறு கதைகள் இருக்கு'' என்றார் தாத்தா.

'அப்போ மகன் இறந்தா பூமாதேவிக்கு ரொம்ப ரொம்பக் கஷ்டமா இருந்திருக்கும் இல்ல தாத்தா'' என்ற அபி,

ஒரு வெடி பாக்கெட்டை எடுத்துக்கொண்டு முற்றத்தில் இறங்கினான்.

'இருந்திருக்கலாம். ஆனா, அதுதான் விதி'' என்ற தாத்தாவைப் பார்த்துக்கொண்டே அபி, ஒரு வெடியை உருவி தரையில் நிற்கவைத்தான்.

''அப்போ பூமாதேவிக்குக் கோபமே வந்திருக்காதா...அவங்க கோபத்தை எப்படிக் காட்டியிருப்பாங்க?'' என்றான் ஊதுவத்தியின் கனலைப் பார்த்தபடி.

தாத்தா புன்னகைத்தார்.

குனிந்து வெடியின் திரியைப் பற்றவைத்தபோதுதான் வெடியின் மீது அச்சிடப்பட்டிருந்த லக்ஷ்மியின் உருவத்தைப் பார்த்தான்.

அவளது சிறு கண்கள் கலங்கியிருப்பதுபோல

ஒரு கணம் தோன்றியது. கோபமாகப் பார்ப்பதுபோல் இருந்தது. மறுகணம் வெடி சுக்குநூறாக, பெரும் சத்தத்துடன் வெடித்துச் சிதறியது. தன் பாதத்துக்குக் கீழே பூமி அதிர்வதைப்போல ஒரு நொடி உணர்ந்தான்.

'பூமாதேவி லக்ஷ்மியின் ஓர் அவதாரம்தான்' என தாத்தா சொன்னது வெடிச் சத்தத்தில் அவன் காதில் விழவில்லை!

கலைடாஸ்கோப் - 12

'இருள் என்பது குறைந்த ஒளி’ என்றான் பாரதி. இந்த ஒளிக்கும் இருளுக்கும் இடையிலான விளையாட்டுத்தான் புகைப்படக் கலை. புகைப்படக் கலை மட்டும் அல்ல, வேறு சில கலைஞர்களும் ஒளியை எப்படிப் பயன்படுத்துவது என்பதில் மேதைமையைக் காட்டியிருக்கிறார்கள். ஓவியர் 'ரெம்ப்ரான்ட்’தான் ஆயில் பெயின்டிங்கில் ஒளியை அசாத்தியமாக வரைந்துகாட்டியவர். அவருடைய ஒளி அமைப்பு இன்றும் சினிமாட்டோகிராஃபர்களுக்கு இன்ஸ்பிரேஷன். ஆனால், ஒளியையே தனது சிற்பங்களுக்கான ஊடகமாகப் பயன்படுத்துகிறார், இத்தாலியன் ஆர்ட்டிஸ்ட் ஃபாப்ரிஸியோ கார்னெலி (Fabrizio Corneli). எப்படி? படங்களைப் பாருங்கள். அவர் ஒளியைப் பயன்படுத்தி, அதனால் உருவாகும் நிழல்களில் உருவங்களை அற்புதமாகக் கொண்டுவந்துவிடுகிறார். ஒளியைச் செதுக்குவது என்றால் இதுதான்போல. விளக்குகள், அட்டைகள், மரத்துண்டுகள், மெட்டல் ஷீட்டுகள் போன்றவற்றைப் பயன்படுத்தி, சுவர்களில் மேஜிக்கலாக ஒளிச்சிற்பங்களை உருவாக்கிவிடுகிறார்.

கலைடாஸ்கோப் - 12

கணித மற்றும் ஒளி பற்றிய அறிவியல் அறிவும் இல்லையென்றால், இதைக் கொண்டுவருவது அசாத்தியம். பொறுமையும் மிகமிக நுட்பமான வேலைப்பாடுகளும் தேவைப்படும் கலை இது!

கலைடாஸ்கோப் - 12

இப்போதெல்லாம் தீபாவளிக்கு காலையில் எண்ணெய்க் குளியல் போட்டுக்கொண்டே யாரையாவது அனுப்பிவைத்தால், ஈரம் காயும் முன்னரே புதுத் துணி வீட்டுக்கு வந்துவிடும். ரெடிமேடுகளின் காலம். நான் சிறுவனாக இருந்தபோது நிலைமை இப்படி இல்லை. தீபாவளிக்கு உடுப்பு வேண்டுமானால் ஒரு மாதம் முன்பே துணி எடுத்து, டெய்லரிடம் கொடுக்க வேண்டும். அவர் டேப்பை வைத்து கழுத்திலும் இடுப்பிலும் கையிலும் எல்லாம் விட்டு, நம்மை ஒரு பாலே நடனக்காரனைப்போல ஆக்கி அளவுகள் எடுப்பார். எடுத்ததை கணக்குப்பிள்ளைபோல ஒரு நோட்டிலும் குறித்துக்கொள்வார். டாக்டர்களிடம்கூட அவ்வளவு பயபக்தியோடு உடம்பைக் காட்டியிருக்க மாட்டோம். இப்போதுபோல இருந்த இடத்தில் இருந்துகொண்டு, எப்போது வேண்டுமானாலும் ஆன்லைனில் அவனே போட்டிருக்கும் மீடியம், ஸ்மால், லார்ஜ் சைஸை நம்பி, ஒரே க்ளிக்கில் கார்டு நம்பரைத் தேய்த்து ஆர்டர்கொடுக்கும் காலமா அது? துணி எடுப்பதே தீபாவளிக்கோ பொங்கலுக்கோதான். இதில் டெய்லரின் கணக்கில் ஏதாவது கஷ்டம் என்றால், நஷ்டம் நமக்குத்தான். பெரும்பாலும் அப்படி நடக்காது.

ஆனால், தீபாவளிக்கு முந்தின வாரத்தில் இருந்தே நடையாக நடக்க வேண்டும். அவர்களும் சொன்ன சொல்லை மாற்ற மாட்டார்கள், 'நாளைக்கு ரெடியாகிடும்’. காஜா வைக்கும் பையன்கள் முதலாளிக்குத் தெரியாமல் மர்மமாகப் புன்னகைப்பார்கள். எல்லோரிடமும் இதையே சொன்னால் அப்போ அவர்கள் எதைத்தான் தினமும் மாங்குமாங்கு எனத் தைத்துக்கொண்டிருக்கிறார்கள் என ஒருவருக்கும் விளங்காது. அப்படி இப்படி போக்குக் காட்டி நம் படபடப்பைப் படரவைத்தாலும், தீபாவளிக்கு முந்தின சில நாட்கள் தீயாய் வேலைசெய்து முடித்துவிடுவார்கள். தீபாவளி என்பது, பட்டாசுகளின் வாசனை மட்டும் அல்ல... இந்தப் புத்தாடை வாசனைகளும்கூடத்தானே!

இன்று ரெடிமேட் கடைகளில் யார் யாரோ ட்ரையல் பார்த்த உடைகளை வாங்கி, புத்தாடை எனப் போட்டுக்கொண்டு நிற்கும்போது, அந்த டெய்லர் அண்ணன்களை ஒரு கணம் நினைத்துப்பார்க்கிறேன்!

கலைடாஸ்கோப் - 12

'லைக்’ சிம்பல்கள், இன்று ஃபேஸ்புக்கின் துரத்தலால் சீப்பு, சோப்புபோல நாம் அன்றாடம் பார்க்கும் ஒரு வஸ்துவாகப் பழகிவிட்டன. லைக் சிம்பல்களின் வடிவம் கட்டைவிரலை உயர்த்திக் காட்டும் 'தம்ப்ஸ் அப்’ சிக்னல் என்பது சிசுக்களுக்கும் தெரியும். இந்த 'தம்ப்ஸ் அப்’ சிக்னலின் விரலாற்றை ஸாரி... வரலாற்றை, கொஞ்சம் நோண்டிப் பார்க்கலாம் என உத்தேசம்.

'கிளாடியேட்டர்’ படம் பார்த்திருப்பீர்கள். பழங்கால ரோமில் நடக்கும் வீரவிளையாட்டைப் பற்றிய படம். 'கிளாடியேட்டர்கள்’ என்னும் அடிமை வீரர்களைச் சண்டையிடவிட்டு, அரசரும் மக்களும் சுற்றியிருந்து கரகோஷிப்பார்கள். அந்தச் சண்டையின் முடிவில் ஒருவன் வீழ்ந்தே ஆகவேண்டும் அல்லவா... அப்படி வீழ்ந்தவனை என்ன செய்யலாம் என்பதற்கு அரங்கத்தில் இருக்கும் மக்கள் ஆரவாரத்துடன் தங்கள் கைகளை முறுக்கி, கட்டைவிரலை மட்டும் தூக்கி 'தம்ப்ஸ் அப்’ சிம்பல் காட்டுவார்களாம்.

'தம்ப்ஸ் அப்’ காட்டினால் 'மிட்டே’ என அர்த்தம், மொழிபெயர்த்தால் 'அவனை விட்டுவிடு’ எனப் பொருள். அதேநேரம் கட்டைவிரலை கீழ்நோக்கிக் காட்டி 'லுகுலா’ என மக்கள் கத்தினால், 'அவனைப் போட்டுத்தள்ளு’ என அர்த்தமாம். மக்களின் இந்த சிக்னல்களுக்கு ஏற்ப அரசர் முடிவெடுப்பாராம். இந்த கிளாடியேட்டர் தம்ப்ஸ் அப் கதைக்கு 19-ம் நூற்றாண்டில் 'ழான் லியோன் ஜெரோம்’ என்கிற ஓவியர் வரைந்த 'பொல்லிஸ் வெர்சோ’ என்னும் ஓவியத்தை ஆதாரமாகக் காட்டுகிறார்கள்.

பின்னால் இரண்டாம் உலகப்போர் காலத்தில்தான் இந்த தம்ப்ஸ் அப் சிக்னல் அமெரிக்காவில் பிரபலமாகியிருக்கிறது. நம் ஊரில் வாகனங்களைக் கிளப்பும் முன்னர் எலுமிச்சையை நசுக்குவதுபோல, யுத்த விமானங்களை ஓட்டும் பைலட்டுகள் கீழே இருக்கும் வீரர்களுக்கு இப்படி 'லைக்’ சிம்பல் காட்டிவிட்டுத்தான் மேலே கிளப்புவார்களாம். பிறகு, அது பிறரைப் பாராட்டும் ஓர் உடல்மொழியாக, மக்களின் அன்றாட வாழ்க்கையுடன் கலந்து உலகம் எங்கும் பரவிவிட்டது.

இன்று சமூக வலைதளங்கள் வரவால் இந்த சிம்பல் சாகாவரம் எய்திவிட்டது. கிளாடியேட்டர் கதை கேட்கும்போதுதான், 'ஏன் மார்க் இன்னும் ஃபேஸ்புக்கில் டிஸ்லைக் பட்டன் கொண்டுவரத் தயங்குகிறார்?’ என்பது விளங்குகிறது. சும்மாவே நம் மக்கள் ஒருவனைப் பிடிக்கவில்லை என்றால் 'லுகுலா’ எனப் பந்தாடுகிறார்கள். அதனால்தானோ என்னவோ, மார்க் உஷாராக டிஸ்லைக்குக்குப் பதிலாகப் கோபம் உள்ளிட்ட சில பாவனைகளைக் காட்டுகிற மாதிரி 'எமோடிகான்’களை (சில நாடுகளில் மட்டும்) இப்போதைக்கு சோதனைக்கு விட்டிருக்கிறார். நெட்டிசன்கள் 'லைக்’குகிறார்களா... பார்க்கலாம்!

கலைடாஸ்கோப் - 12

பள்ளி நாட்களில் இருந்தே நமக்கு தமிழில் பிடித்த வார்த்தை 'விடுமுறை’. பள்ளிக் காலத்தில் வாரம் இரண்டு நாட்கள் விடுமுறை கிடைக்கும். ஆனாலும் வீட்டுப்பாடங்கள் மண்டைக்குள் உட்கார்ந்து 'மண்டே’யை ஞாபகப்படுத்திக் கொண்டிருக்கும். ஞாயிறு மாலையே ஒரு மாதிரி டல்லடிக்க ஆரம்பித்துவிடும். அதுவாவது பரவாயில்லை என வேலைக்குச் செல்லத் தொடங்கிய பிறகு தோன்றியிருக்கும்.

சோவியத் யூனியன், 1929-ம் ஆண்டு முதல் தன் உற்பத்தித்திறனை அதிகரிக்க, 'தொடர்ந்து ஐந்து நாட்கள் வேலை... ஆறாவது நாள் லீவு’ எனத் திட்டமிட்டு காலண்டரையே மாற்றியது எனக் கேள்விப்பட்டிருக்கிறேன். ஞாயிறு என்பது எல்லாம் இல்லை. ஆறாவது நாளாக எந்தக் கிழமை வருகிறதோ அன்று லீவு. கொஞ்சம் சிக்கலான முயற்சி. 1940-ம் ஆண்டில் அவர்களே அதைத் தூக்கிவிட்டார்கள்.

இப்போது வேலைக்குச் செல்பவர்களில் பெரும்பாலானவர்களுக்கு ஞாயிறு மட்டுமே லீவு. அதுவும் டி.வி சேனல்களில் தாவி, சில மணி நேரங்களில் கடந்து விடுகிறது. சில மல்டி நேஷனல், கார்ப்பரேட் கம்பெனிகள் சனி, ஞாயிறு என இரண்டு நாட்கள் லீவு கொடுக்கிறார்கள். ஆனால், வார நாட்களில் கரும்பாகப் பிழிந்துவிடுகிறார்கள் என்பது வேறு விஷயம்.

ஆச்சர்யமாக, ஐந்து நாட்கள் வேலை என்பது தொழிலாளர்களின் உற்பத்தித்திறனையும் செயல்பாடுகளையும் குறைக்கிறது என, இப்போது மேற்கில் யோசிக்கிறார்கள். மூளை உழைப்புத் தேவைப்படும் மென்பொருள் துறை போன்றவற்றுக்குத்தான் இந்தக் கதை. அதனால் வாரத்துக்கு நான்கு நாட்கள் மட்டும் வேலை, மீதி மூன்று நாட்கள் லீவு.

கலைடாஸ்கோப் - 12

உதாரணத்துக்கு 'ட்ரீஹவுஸ்’ என்னும் வெப்டிசைன் நிறுவனத்தை நடத்தும் ரியான் கார்சன் என்கிற அமெரிக்கர் தன் கம்பெனியில் இப்படி மூன்று நாட்கள் லீவை அறிவித்திருக்கிறார். 'ஐந்து நாட்கள் தினமும் எட்டு மணி நேரம் வேலை செய்வதைவிட நான்கு நாட்கள் தினமும் பத்து மணி நேரம் வேலைசெய்தால் வாரத்துக்கு மூன்று நாட்கள் லீவு கொடுப்பது நல்லதுதான். அது அவர்களின் பணித்திறனையும் அதிகரிக்கிறது’ என்கிறார். சில ஆய்வுகளும் இது உண்மை எனக் காட்டுகிறது.

கார்ப்பரேட்டுகள் கையில் கம்பெனி லேப்டாப்பையும் மொபைலையும் தந்து 'வொர்க் ஃப்ரம் ஹோம்’ எனச் சொன்னார்கள். கேட்க ஜாலியாகத்தான் இருந்தது. ஆனால், 24 மணி நேரத் தொழிலாளி என்பதுதான் அதன் மறைமுக அர்த்தம். இன்று மூன்று நாட்கள் திட்டம். 'சோழியன் குடுமி சும்மா ஆடாது!’ என முன்னோர்கள் சொல்வார்கள். கார்ப்பரேட் குடுமியும் அப்படித்தான் அல்லவா?