கவிதை: இசை
இந்த அதிகாலை பயணிகள் ரயிலில்
சுண்டல் வாடையொடு கலந்து
துயரவாடை வீசிக்கொண்டிருக்கிறது.
குழந்தையான சிறுவனொருவன்
என்னெதிரே நீண்ட இருக்கையில் கிடக்கிறான்.
இடுப்புக்குக் கீழே இரண்டு குச்சிகள்.
ஒன்று மற்றொன்றின் மீது அணைந்து கிடக்கிறது.
சுண்டுவிரலைப் போன்றதான கட்டைவிரல்
வாயைப் போன்றதான ஓட்டைக்குள்
அழுந்திக் கிடக்க
நிலைகொள்ளா விழியிரண்டும் எங்கேயோ வெறிக்கின்றன.

புதிதாய் வந்தமரும் ஓர் இளைஞன்
தன் ஸ்மார்ட்போனை முடுக்கிவிடுகிறான்.
'டங்காமாரியான ஊதாரி’ எங்கள் பெட்டிக்குள்
வந்து குதித்தான்.
நான் அந்த இளைஞனை
அவன் போனை
அந்தக் காலத்தை முறைத்துக்கொண்டிருந்தேன்.
பார்க்கவே கூடாது என்று
முகம் திருப்பியிருந்தபடியால்
பார்க்க வேண்டும் பார்க்க வேண்டும் என்று தோன்றிக்கொண்டிருந்தது.
நாசூக்காய் ஓரக்கண் ஓட்டுகையில்
கண்டேன்
அந்தக் குச்சிபாதம் ஆடிய ஆட்டம்
அப்படி... அப்படி...
விளங்காத காலே ஆயினும்
அதை அப்படி ஆட்டு
என் செல்லமே!