மற்ற எபிசோடுகள்
Published:Updated:

ஹாய் மதன் கேள்வி - பதில்

ஈஃபல் டவரும் அண்ணா நகர் டவரும்!

சு.மு.சுரேஷ், தகட்டூர்.

தாப்ஸி, அனுஷ்கா, அமலா பால், அசின், தமன்னா - இவர்களில் 'நடிப்பது’ யார்?

ஹாய் மதன் கேள்வி - பதில்

  மீனாகுமாரி, சாவித்ரி, ஷபனா ஆஸ்மி, பத்மினி, ஸ்மிதா பட்டேல்... ஏன், சுஜாதா, சரிதா, சுஹாசினி... இப்படித் தேர்ந்தெடுத்த சிலரைப் போல, ஒரு பெண்ணை மையமாகவைத்து எடுக்கப்படும் ஏதாவது ஒரு படத்தில் இவர்கள் நடித்துக் காட்டட்டும். பிறகு, 'இவர்களில் நடிப்பது யார்’ என்று சொல்கிறேன்!

##~##

எஸ்.சண்முகசுந்தரம், வைத்தீஸ்வரன்கோவில்.

பிறப்பைத் தீர்மானித்த இறைவன், இறப்பின் ரகசியத்தை மறைத்தது ஏன்?

  நீங்கள் எப்போது பிறக்கிறீர்கள்?

'வெளியே வரும்போதுதான்’ என்றா நினைக்கிறீர்கள்? அல்லது கருவாக உருவாகும்போதா? அல்லது அப்பாவிடம் பாதியாகவும் அம்மாவிடம் பாதியாகவும் இருந்தபோதா? பிறப்புக்கு முன்னும் ரகசியம்தான். இறந்த பின்னும் ரகசியம் தான். இந்த இரண்டு ரகசியங்களும் தெரிந்துவிட்டால், நாம் மன நோயாளியாக ஆகி, பிறப்புக்கும் இறப்புக்கும் இடைப் பட்ட காலத்தை அனுபவிக்காமல் போய்விடுவோம். வாழ்க்கையை நீங்கள் அனுபவிக்க வேண்டும் என்பதற்காகத்தான் இறைவன் இந்த இரண்டு ரகசியங்களையும் மறைத்துவைத்துவிட்டான்!

வி.எல்.உதயசங்கர், மும்பை-30.

பல பெண்கள் புருவங்களை 'ஷேவ்’ செய்துகொண்டு புதிய புருவம் வரைந்துகொள்கிறார்கள். ஷேவ் செய்யப்பட்ட புருவம் மீண்டும் வளராதா? (இரண்டு ஜோடிப் புருவங்களைக் கற்பனை செய்யப் பயமாக இருக்கிறது!)

  எல்லா முடிகளும் ஒன்றுதான் - ஒவ்வொரு முடிக்கும் வேர் உண்டு. ஆகவே, எந்த முடியும் மீண்டும் வளரும். இதை எல்லாம் (ஷேவ்!) ஆரம்பித்துவிட்டால் விடாமல் தொடர வேண்டும். வேறு வழி இல்லை! கோத்ஸ் என்கிற பண்டைய ஜெர்மானிய மக்களிடையேகூட (2,000 ஆண்டுகளுக்கு முன்) இந்தப் பழக்கம் இருந்தது. யார் கண்டார்கள்? எதிர்காலத்தில் நான்கு புருவங்கள் ஃபேஷன் ஆகலாம்!

வித்யா ராகவன், பெங்களூரு-11.

மனிதர்களை ஒப்பிடுவது உங்களுக்குப் பிடிக்காது என்று ஒரு முறை சொல்லியிருக்கிறீர்கள். சரி, நீங்களே மனிதர்கள் அல்லாத எதையாவது ஒப்பிடுங்களேன்?

  மூளையை அலைக்கழிக்கும் கேள்வி! இரண்டு டவர்கள்?! 1889-ம் ஆண்டு பாரீஸில் உலகக் கண்காட்சி (World Fair) நடந்தது. அதற்காக நகரின் நடு மையத்தில் ஒரு பிரபல இன்ஜினீயர் ஆச்சர்யமான டவர் ஒன்றைக் கட்டினார். அவர் பெயர் கஸ்டாஃப் ஈஃபல். டவரின் பெயரும் அதுவே! கண்காட்சிக்குப் பிறகு டவரைக் கழட்டிவிடுவதாக ஐடியா. ஆனால், அதுவோ பிரமாதமாக இருந்தது. மனசே வரவில்லை. அப்படியே விட்டுவிட்டார்கள்! சென்னையில் 50-களின் கடைசியில், இன்றைய அண்ணா நகர் ஒரு மைதானமாக இருந்தது. அங்கே பெரிய தொழிற் கண்காட்சி ஒன்று நடந்தது. அப்போது நடு மையமாக ஒரு டவர் கட்டினார்கள். அதையும் 'அழகாக இருக்கிறது’ என்று அப்படியே விட்டுவிட்டார்கள். அதுதான் அண்ணா நகர் டவர்! ஈஃபல் டவருடன் ஒப்பிடும்போது இது 'ஜுஜுபி’தான் என்றாலும் டவர் - டவர்தானே!

பி.பாலாஜி, சென்னை-40.

உலகக் கவிஞர்களில் பலர் சின்ன வயசிலேயே இறந்துவிட்டார்கள் என்பது உண்மைதானா?

  அப்படி ஒரேயடியாக முடிவுக்கு வர முடியாது. புகழ்பெற்றவர்களில் சிலர் அல்பாயுசில் இறந்ததாலேயே நமக்கு அப்படிச் சொல்லத் தோன்றுவது உண்மை. அப்படிப் பார்த்தால், மகா மேதைகளான இசைக்கலைஞர் களில் (composers) முக்கியமான சிலர் இளம் வயதி லேயே, நாற்பதை

ஹாய் மதன் கேள்வி - பதில்

எட்டுவதற்குள் இறந்திருக்கிறார்கள். மொஸார்ட், சோபின், மெண்டல்ஸன், ஷூபர்ட்! அதுவே தொண்டு கிழங்களாகி இறந்த கலைஞர்களும் கவிஞர்களும் உண்டு. லிஸ்ட் வேண்டுமா?!

எம்.மங்கையர்க்கரசி, திண்டுக்கல்.

சில சமயம் சர்வாதிகாரமே தேவலை என்று உங்களுக்குத் தோன்றியது உண்டா?

இல்லை! சர்வாதிகாரத்தில் நியாயம் கிடையாது. அதில் ஒரே ஒருவர் மட்டும்தான் ஊழல்வாதியாக இருப்பார். ஜனநாயகத்தில் எல்லோரும் ஊழலில் ஈடுபடலாம். லஞ்சத்தை சோஷலிசரீதியில் பகிர்ந்து அளிப்பது ஜனநாயகம்தான்!