ஒவ்வொன்றுக்கும் பரிசு: ரூ.200
இதிலுமா சினிமா மோகம்?!


எங்கள் உறவினரின் மறைவுக்குக் கண்ணீர் அஞ்சலி நோட்டீஸ் அடித்து ஒட்டியிருந்தார்கள். அதில் இறந்தவரின் புகைப்படத்தைப் போட்டு, அவர்களின் அபிமான நடிகரின் படத்தையும் போட்டிருந்தனர். அந்த நடிகர் சிரித்துக்கொண்டிருப்பது போல் இருந்தது படம்! துக்க சம்பவத்தை தெரிவிக்கும் நோட்டீஸில் அபிமான நடிகரின் படம் தேவையா... அதுவும் பொருத்தமே இல்லாமல்..?! போட்டி நடிகரின் தீவிர ரசிகர்கள் நோட்டீஸில் சாணி அடித்தால் கூடுதல் களேபரம் ஆகிவிடாதா?
சினிமா ரசிகர்களே... இனியாவது சற்று அடக்கி வாசியுங்கள்!
- எம்.ஏ.நிவேதா, திருச்சி
பட்டால்தானே தெரிகிறது..!

மகளிர் சுயஉதவிக் குழுவுக்கு கடன் தருவதாக கூறி, ஒரு தனியார் நிதி நிறுவனத்தின் பெயரை சொல்லிக் கொண்டு, எங்கள் ஊருக்கு காரில் நான்கு பேர் வந்தார்கள். இருபது பேருக்கு ஒரு தலைவி என பிரித்து 5 குழுக்களை உருவாக்கி, சந்தா பணம் என கூறி ஒருவருக்கு இருநூறு ரூபாய் வீதம் வசூல் செய்துவிட்டு, ஒரு முகவரி கொடுத்து, ‘நாளை அங்கே எல்லோரும் வர வேண்டும்’ என்று தெரிவித்தார்கள். நாங்களும் சென்றோம் அங்கு சென்று பார்த்தால் கொடுக்கப்பட்ட முகவரியில் அந்த நிதி நிறுவனம் இல்லை...
மட்டன்-சிக்கன் சென்டர்தான் இருந்தது! அந்த கடைக்காரரிடம் கேட்டோம். ``ஏம்மா இப்படி ஏமாந்தீங்க... சந்தா பணம் கேட்டா, தர்ற கடன்ல கழிச்சிக்கிட்டு தர சொல்ல வேண்டியதுதானே!’’ என்றார். அனுபவப்பட்டால்தானே புத்தி வருகிறது!
தோழிகளே... மகளிர் சுயஉதவிக் குழுவுக்கு தனியார் நிதி நிறுவனங்கள் சார்பில் கடன் கொடுக்கிறேன் என்று சொல்லி வந்தால் தீர விசாரியுங்கள். எங்கள் அனுபவம் வேறு யாருக்கும் வேண்டாமே..!
- பி.கவிதா, சிதம்பரம்
வெளியே புதுமை... உள்ளே பழைமை!

என் தோழி வீட்டு கிரகப்பிரவேசத்துக்கு சென்றிருந்தேன். வீட்டின் வெளிப்புற தோற்றம் மிகவும் மாடர்னாக, கண்ணைக் கவரும் விதத்தில் இருந்தது. என்னை வரவேற்ற தோழி, வீட்டைச் சுற்றிக் காண்பித்தாள். பாத்ரூம் மற்றும் டாய்லெட்டில் சொரசொரப்பான சிமென்ட்டும், மற்ற எல்லா இடங்களிலும் உள்ள தரைகளில் சாதாரண சிமென்ட்டும் போடப்பட்டிருந்தன. ``வெளிப்புறம் மாடர்னா இருக்கு; உள்ளே தரை ஓல்டு மாடலாக இருக்கே... மொசைக், டைல்ஸ் போட்டிருந்தா கூடுதல் அழகாக இருந்திருக்கும்’’ என்றேன். ``மொசைக் மற்றும் டைல்ஸ் பதித்த தரைகளில் ஆபத்து அதிகம். குழந்தைகள், வயதானவர்கள் வழுக்கி விழுந்துவிடாமல் பாதுகாப்பாக இருக்க இப்படி அமைத்துள்ளோம். வெறும் அழகுக்காக வீடு கட்டிக்கொள்வதில் எனக்கு உடன்பாடில்லை’’ என்று விளக்கமளித்தாள் தோழி.
அவளின் வித்தியாசமான, பிராக்டிகலான சிந்தனையை பாராட்டி விட்டு விடைபெற்றேன்.
- பி.அமுதா, சேலம்
மனம் கவரும் மஞ்சள்கயிறு!

தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் திருமணம் ஆன பெண்கள் மங்கல நாணாக மஞ்சள்கயிறு அணிந்து செல்வதைப் பார்க்கும்போது, மகிழ்ச்சியாக உள்ளது. ஆனால், பொது இடங்களில் பார்க்கும் பெண்கள் சிலரின் கழுத்தில் உள்ள அந்த மஞ்சள்கயிறு பல நாட்கள் அணிந்து உள்ளதால், வேர்வையாலும், தூசியாலும் அழுக்குப் படிந்து கறுப்பு நிறமாக மாறி உள்ளதைப் பார்க்க மனதுக்கு கஷ்டமாக இருக்கிறது. எனவே, விலை அதிகம் இல்லாத இந்த மஞ்சள்கயிற்றை, அது கலர் மாறும் முன் பெண்கள் மாற்றிக்கொண்டால் பார்க்க நன்றாக இருக்குமே!
- கே.சீதாலட்சுமி, மதுரை