மற்ற எபிசோடுகள்
Published:Updated:

நம்பர் 1 மைக் ஸ்பென்சர் பெளன் - 32

நம்பர் 1
பிரீமியம் ஸ்டோரி
News
நம்பர் 1 ( முகில் )

முகில்

வ்வொரு முறை ஆழ்ந்து தூங்கி எழும்போதும் மைக் ஸ்பென்சர் பௌன், தனக்குள் சில கேள்விகள் கேட்டுக்கொள்வார்... 'நாம இப்ப எங்க இருக்கோம்... இது எந்த ஊர்... எந்த நாடு... எந்த கண்டம்?’ - 23 வருடங்களாக இதே கேள்விகளுடன்தான் கண் விழிப்பார்.  காரணம், மைக் ஒரு தன்னிகரற்ற தேசாந்திரி; நவீன நாடோடி; நாம் வாழும் காலத்தின் ஆகச் சிறந்த பயணி. தன் பயணத்தால் மைக் செய்திருக்கும் சாதனையை, உலகில் பிறந்த எவரும் இதுவரை செய்தது இல்லை. அதைப் பரிபூரணமாக உணர, மைக்கின் அனுபவங்களோடு நாமும் பயணம் செய்வோம்... 

கனடாவின் மேற்குப் பகுதியில் அமைந்த பெருநகரமான கால்கேரியில் பிறந்தவர் மைக் ஸ்பென்சர் பௌன் (1969, ஜனவரி 24). சிறுவயது முதலே பயணம் செய்வதில், குறிப்பாக காடுகளுக்குள் சென்று தங்கி, சுற்றிப்பார்ப்பதில் அலாதி ஆர்வம். கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியாவில் உள்ள அடர்ந்த பைன் மரக் காடுகளுக்குள் நுழைந்து, தொலைந்து, இயற்கையோடு இயற்கையாகக் கலந்து கரைவது மைக்கின் பொழுதுபோக்கு. அதுவும் மாதக்கணக்கில் மனிதர்களோடு தொடர்பே இல்லாமல், கானகத்தில் கூடாரம் அமைத்து பறவைகளுடன், காட்டுவாழ் உயிரினங்களுடன் கதை பேசியபடி, கிடைப்பதைப் புசித்து வாழ்வதே மைக்கின் சொர்க்கம்.

அதில் ஆபத்துகளையும் அவர் சந்தித்தது உண்டு. ஒருமுறை மலைவாழ் சிங்கத்தின் பசிவெறிப் பார்வைக்குள் சிக்கிய மைக், அதன் துரத்தலில் ஓடித் தப்பிப் பிழைத்ததே பெரிய விஷயம். அதேபோல கரடிகள் மத்தியிலும் மாட்டிக்கொண்டு உயிர் பிழைத்திருக்கிறார். பல நாட்கள் உணவே கிடைக்காமல், உயிர் வாழ்ந்தும் மீண்டுவந்திருக்கிறார். இருந்தாலும் இந்த ஆதி மனித வாழ்க்கையே மைக்குக்குப் பிடித்தது.

நம்பர் 1 மைக் ஸ்பென்சர் பெளன் - 32

ஒருநாள் மைக், இயற்கை எழில் சூழ்ந்த ரம்மியமான ஓரிடத்தில் மெய்மறந்து அமர்ந்திருந்தார். திடீரென வருங்காலம் குறித்த சிந்தனைகள் உள்ளே ஓட ஆரம்பித்தன. 'என்னவாகப்போகிறேன் நான்? 9 டு 5 அலுவலகத்தில் உட்கார்ந்து தலையைப் பிய்த்துக்கொண்டு, வார இறுதிகளில் மதுக்கோப்பைகளுடன் வலுக்கட்டாயமாக சந்தோஷத்தைத் தேடும் வாழ்க்கையில்  உடன்பாடே இல்லை. இந்த இடம் எவ்வளவு அழகாக இருக்கிறது! இதேபோல உலகம் எங்கும் எத்தனையோ அழகழகான இடங்கள், காட்சிகள் காணக்கிடைக்கும் அல்லவா? அவை ஒவ்வொன்றையும் தேடித் தேடிச் சென்று பார்த்த மனிதர் யாராவது இருப்பாரா? வாய்ப்பே இல்லை. எனில், அந்த மனிதனாக நான் ஏன் இருக்கக் கூடாது?’

பாஸ்போர்ட், பாஸ்போர்ட் சைஸ் புகைப்படங்கள், சில ஆவணங்கள், உடுத்தியதுபோக கூடுதலாக ஒரு செட் உடை, பாஸ்போர்ட் அலுவலகம் செல்வதற்கு என காலர் வைத்த ஒரு சட்டை, ஒரு கோப்பை, ஒரு டம்ளர், ஒரு கொசுவலை, பழம் வெட்டும் கத்தி, ஆணிகள் உள்ளிட்ட சில சிறிய பொருட்கள், கொஞ்சம் பணம்... இவை அனைத்தையும் வைக்க ஒரு முதுகுப் பை, அது நனையாமல் பாதுகாக்க ஒரு கவர். மைக், தன் 21-வது வயதில் வீட்டைவிட்டுக் கிளம்பினார். அவரது அப்போதைய நோக்கம், தான் வாழும் வட அமெரிக்கக் கண்டத்தின் இயற்கை எழில் பிரதேசங்களைக் கண்டு லயிப்பது. மைக், தன் பயணத்தைத் தொடங்கிய ஆண்டு 1990.

ஆரம்பத்தில் காடு, மலை, நதி, ஏரி, அருவி, பள்ளத்தாக்கு... என இயற்கையைத் தேடித்தான் அலைந்தார் மைக். மத்திய அமெரிக்க நாடுகள், கரீபியன் தீவுகளில் மைக் சந்தித்த விதவிதமான மனிதர்களும், கண்டுணர்ந்த பல்வகைக் கலாசாரங்களும் அவரை 'மனித வாழ்வியல்’ நோக்கி ஈர்த்தன. இந்த உலகில் இப்படி எத்தனையோவிதமான மனிதர்கள் வசிக்கிறார்கள். அவர்களை எல்லாம் தேடித் தேடிச் சந்தித்து, அவர்களது கலாசாரத்தை உணர வேண்டும் என்ற ஆவல் உருவானது. அதுவரை இலக்கு இல்லாமல் சுற்றித்திரிந்த மைக், அதன் பிறகு சற்றே திட்டமிட்டு பயணம் செய்ய ஆரம்பித்தார். எங்கும் எப்போதும் அவசரப்படவே இல்லை. தவிர்க்கவே முடியாதபட்சத்தில் மட்டும் விமானப் பயணம். மற்றபடி தரை வழியிலோ, நீர் வழியிலோ கிடைக்கிற வாகனத்தில் எதிர்பாராத 'சொகுசு’  பயணம். சமயங்களில் நடராஜா சர்வீஸும் உண்டு. மிகக் குறைந்த வாடகையில் கிடைக்கிற தங்கும் இடங்களையே தேர்ந்தெடுத்தார். 'இலவசமாகத் தங்கிக்கொள்ளலாமா? நல்லது. தங்கள் அன்புக்கு நன்றி!’ உணவும் அப்படியே. கிடைத்ததை ரசித்து, ருசித்துப் புசித்தார். பசி தீருவதைவிட, புதிய ஓர் உணவைச் சுவைத்த அனுபவமே திருப்தியாக இருந்தது.

சில வருடங்கள் கடந்தன. வட அமெரிக்கக் கண்டத்தை, கரீபியன் தீவுகளைக் கண்டுகளித்த மைக், தென் அமெரிக்கக் கண்டத்தில் கால் பதித்தார். 'இப்படியே உலகின் ஏழு கண்டங்களையும், அவற்றில் உள்ள நாடுகளையும் சுற்றிப்பார்க்க இயலுமா? எந்த ஒரு வசதியும் இல்லாத ஆதிகாலத்திலேயே நம் முன்னோர்கள் நடந்து, ஓடி, நீந்தி, கடந்து என கண்டம்விட்டுக் கண்டம் பரவி, பூமி எங்கும் குடியேறியிருக்கிறார்கள். எனில், இத்தனை வசதிகள் நிறைந்த இந்தக் காலத்தில் என்னால் முடியாதா என்ன! நிச்சயம் இது அபூர்வ முயற்சி. இதை நிறைவேற்றுவதே என் வாழ்வின் ஒரே லட்சியம். என்ன... இதற்குப் பல வருடங்கள் ஆகலாம். மீதம் இருக்கும் வாழ்நாள் முழுவதுமே தேவைப்படலாம் அல்லது முயற்சியின் பாதியில் வாழ்க்கை முடிந்தே போகலாம். பரவாயில்லை. இருப்பது ஒரு வாழ்க்கை. நான் வாழும் பூமியை முழுவதுமாகக் கண்டு ரசிக்க விரும்புகிறேன். ஆபத்தும் மரணமும் எந்த வடிவிலும் வரலாம். அதற்காக என்னால் வீட்டிலேயே முடங்கிக்கிடக்க இயலாது. இனி, இந்த உலகமே எனது வீடு.’

பயணம் தொடங்கிய ஐந்தாவது வருடத்தில் மைக்கின் மனநிலை இது. 'நினைத்ததைப் பரிபூரணமாக முடிக்க இயலுமா?’ எனும் சந்தேகத்துடன்தான், அடுத்த ஐந்து வருடங்கள் நாடோடியாகத் திரிந்தார். ஆனால், அப்போதே கிட்டத்தட்ட உலகின் பாதி நாடுகளைச் சுற்றிவந்திருந்தார். உலகின் அனைத்து நாடுகளையும் பார்த்துவிட வேண்டும் என்ற வெறி அப்போது தீவிரமானது. தென் அமெரிக்கக் கண்டத்தில் சில வருடங்கள், ஐரோப்பிய நாடுகளில் சில வருடங்கள், ஆப்பிரிக்கக் கண்டத்தில் சுமார் நான்கு வருடங்கள், ஆஸ்திரேலியாவில் சில மாதங்கள், ஆசியக் கண்டத்தில், வெவ்வேறு காலகட்டங்களில், பல்வேறு நாடுகளில் பல வருடங்கள், அன்டார்டிகாவில் சில காலம் என மைக்குக்குக் கிடைத்த பயண அனுபவங்கள் ஒவ்வொன்றும் தனித்துவமானவை.

நம்பர் 1 மைக் ஸ்பென்சர் பெளன் - 32

கௌதமாலாவின் மாயன் காலக் கோயில்களின் உச்சியில் நின்று, பறக்கும் உணர்வுடன் உலகை ரசித்தது, எகிப்தில் இருந்து சூடான் வழியாக எத்தியோப்பியாவை நைல் நதி வழியே படகில் கடந்தது, மங்கோலியாவின் மனம் மயக்கும் புல்வெளிகளில் குதிரைகளில் பயணம் செய்தது, அங்கே அல்டாய் மலையடிவாரத்தில் 'யர்ட்’ எனப்படும் வட்டவடிவ மங்கோலியப் பாரம்பர்யக் கூடாரங்களில் நாட்கணக்கில் தங்கியது, மடகாஸ்கரின் ஆச்சர்ய விலங்கான லெமுரைத் தேடி வியந்தது, மேற்கு பசிபிக் பெருங்கடலில் உள்ள பாலவ் (Palau) தீவுகளில் நீருக்கு அடியில் லட்சக்கணக்கான தங்க ஜெல்லி மீன்களுடன் நீந்தியது, குஜராத்தின் கிர் காடுகளில் ஆசியச் சிங்கங்களைக் கண்டு மலைத்தது, எவரெஸ்ட் சிகரத்தின் அடிவாரத்தில் (பேஸ் கேம்ப்) தங்கி அதன் பிரமாண்டத்தை, குளிரை உணர்ந்தது, பஞ்சாப் பொற்கோயிலின் மினுமினுப்பில் மயங்கியது, கடற்கரைச் சாலைகளின் பயணம் வழியே அமெரிக்காவின் பல நகரங்களைச் சுற்றி வந்தது, 'மாலி’யின் மந்திரக்காரர்களுடனும் மண்டை ஓடுகளுடனும் தங்கி இருந்தது, ருட்யார்ட் கிப்ளிங்கால் 'உலகின் எட்டாவது அதிசயம்’ என வர்ணிக்கப்பட்ட நியூசிலாந்தின் 'மில்ஃபோர்ட் சவுண்ட்’ இயற்கைப் பேரெழிலைப் பருகியது, பெருவின் மச்சுபிச்சுவில் இன்கா இன பாரம்பர்யச் சின்னங்களைக் கண்டு மகிழ்ந்தது, அன்டார்டிகாவில் பென்குவின்களோடு தத்தக்கா பித்தக்கா நடை பழகியது, இலங்கையின் Unawatuna கடற்கரைப் பிரதேசத்தில் கிடைக்கும் தனித்துவ மாம்பழங்களின் சுவையில் கிறங்கியது, சிரியாவின் பல்மைரா பாலைவனத்தில் பற்றற்றுத் திரிந்தது, ஆல்ப்ஸ் மலைப்பிரதேச ரெட் ஒயினையும் சீஸ் கட்டிகளையும் கணக்கு வழக்கு இல்லாமல் உண்டது, ஜோர்டானின் பெட்ரா நகரச் சிதிலங்களில் இண்டியானா ஜோன்ஸ் நினைவுடன் நடமாடியது, மலேசியாவின் டீர் குகைகளின் அழகில், அமைதியில் மூழ்கித் திளைத்தது, மத்திய ஆப்பிரிக்க நாடான காபோனின் ஆப்பிரிக்க யானைகளின் கம்பீரத்தில் சிலிர்த்தது, ரஷ்யாவில் மான்கள் இழுத்துச் செல்லும் பனிச்சறுக்கு வாகனத்தின் அதிவேகப் பயணத்தை அனுபவித்தது, ஆஃப்கானிஸ்தானில் அழிக்கப்பட்ட பாமியன் புத்தர் சிலைகள் இருந்த இடத்தில் மௌனமாகத் தொலைந்தது, ஈஸ்டர் தீவுகளின் மோவாய் என்ற மாபெரும் மனிதச் சிலைகளுடன் அமர்ந்து தன்னை மறந்தது, ஜிம்பாப்வேயின் ஆர்ப்பரிக்கும் விக்டோரியா அருவி நீர்ப்பரப்பில் ஆளைக் கவிழ்க்கும் சாகசப் படகுப் பயணம் செய்தது... இன்னும் இன்னும்.

சரி, இத்தனைக்கும் பணம்?

'உலகைச் சுற்றி வர பணமும் தேவைதான். பணம் மட்டுமே அடிப்படைத் தேவை அல்ல’ என்பது மைக்கின் அனுபவ மொழி. ஒவ்வொரு வருடத்திலும் சுமார் ஒரு மாதத்தை மட்டும் பணம் சம்பாதிப்பதற்காக ஒதுக்கினார் மைக். எங்காவது செல்லும்போது, எதையாவது பார்க்கும்போது, 'அட’ என மைக்கின் பிசினஸ் மூளையில் மின்னல் வெட்டும். அதைச் செவ்வனே செயல்படுத்தி பணம் பண்ணிவிடுவார்.

அப்படித்தான் இந்தோனேஷியக் கடற்கரை ஒன்றில் சிற்பி ஒருவர், மரங்களில் விதவிதமான அளவுகளில் கோழி உருவச் சிலைகளை அற்புதமாக வடித்துவைத்திருந்தார். விலையும் மலிவாகவே இருந்தது. அந்தக் கோழிச் சிலைகளுக்கு 'கொழுத்த விலை’ கிடைக்கும் எனத் தோன்றியது. 'அத்தனை சிலைகளையும் நானே வாங்கிக்கொள்கிறேன்’ என்றார் மைக். கோழிச் சிலைகளுடன் கனடாவுக்குச் சென்ற மைக், அடுத்த சில நாட்களில் அனைத்தையும் விற்றுக் காசாக்கிவிட்டு, மீண்டும் முதுகில் பையை மாட்டிக்கொண்டு கிளம்பினார்.

ஒருமுறை ஜாவாவில் காபி மரங்கள் மேலும் தழைத்து வளர்வதற்காக வெட்டப்படுவதைக் கண்டார். அந்த மரக்கட்டைகளை 'விறகாக எரிக்க’ எனச் சொல்லி, மொத்தமாக விலைகொடுத்து வாங்கிய மைக், அவற்றை பாலிக்குக் கொண்டுசென்றார். அங்கே, தான் கண்ட தச்சர்களிடம் கொடுத்து 'காபி டேபிள்’ வடிவமைக்கச் சொன்னார். விதவிதமான வடிவங்களில் தயாரான காபி டேபிள்களை, கன்டெய்னர்கள் மூலம் வட அமெரிக்கக் கண்டத்துக்குக் கொண்டுசென்றார். 'இவை வெறும் காபி டேபிள்கள் அல்ல. காபி மரத்திலேயே செய்யப்பட்ட காபி டேபிள்கள்’ என்றார். அனைத்தும் சடுதியில் விற்றுத் தீர்ந்தன. கை நிறையக் காசு. இப்படி விதவிதமான வணிகம் செய்து பணம் சம்பாதித்த மைக், ஒருபோதும் யாரிடமும் சம்பளத்துக்கு வேலை பார்க்கவில்லை. எப்போதும் கடனும் வாங்கியது இல்லை.

மைக் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய தருணங்கள் உண்டு. அடுத்த நொடியில் உயிரோடு இருப்போமா இல்லை தலை தனியாகக் கழன்றுவிடுமா என்ற அளவில் அபாயத்தில் சிக்கிக்கொண்ட தருணங்களும் உண்டு.

2003-ம் ஆண்டு. ஈராக். அமெரிக்கப் படைகள் அடுத்தகட்ட ஆக்கிரமிப்புப் போரைத் தீவிரமாக்கியிருந்த சமயம். மைக், ஈராக் எல்லைக்குள் லஞ்சம் கொடுத்து நுழைந்தார். பதைபதைப்பான சூழலில், சதாம் உசேனின் சொந்த நகரமான டிக்ரிடுக்கு (Tikrit) சென்றார் மைக். ஈராக்கியர்கள், மைக்கை அமெரிக்கர் எனப் புரிந்துகொண்டால் காலி. ஆக, ஓர் ஈராக்கியர் போல உடையணிந்து கொண்டு, சதாமை நேசிக்கும் ஒருவரை நட்பு பிடித்துக்கொண்டு, டிக்ரிடை வலம்வந்தார்.

பாகிஸ்தான் குறித்துதான் பலரும் பலவிதங்களில் மைக்கைப் பயமுறுத்தி வைத்திருந்தார்கள். தீவிரவாதம் நிறைந்த தேசம். பாகிஸ்தானியர்களிடம் அன்பு என்பதே கிடையாது. அமெரிக்கர்களுக்கும் கனடியர்களுக்கும் அங்கே துளி பாதுகாப்புகூட கிடையாது. ஆனால், மைக் பாகிஸ்தான் சென்றபோது அந்தப் பிம்பங்கள் எல்லாமே உடைந்தன. தோழமை பாராட்டிய மக்கள், காசுகூட வாங்காமல் நேசம் காட்டிய டாக்ஸி ஓட்டுநர்கள், தனக்கு என வைத்திருந்த கடைசி ரொட்டியை மைக்குக்குக் கொடுத்து உபசரித்த மலைக்கிராமத்துப் பெரியவர்... என மிக மிகக் குறைந்த செலவில் பாகிஸ்தானைச் சுற்றிப்பார்க்கவும் முடிந்தது. மைக் சந்தோஷமாக உச்சரித்தார் 'ஐ லவ் பாகிஸ்தான்!’

அதே சமயம் பாகிஸ்தானில் சி.ஐ.ஏ., மைக்கைச் சந்தேகத்தின் பெயரில் கைது செய்தது. பல மணி நேரம் காவலில்வைத்து விசாரித்தது. 'உளவாளி இல்லை’ என உறுதியான பிறகே விடுதலை செய்தது. இப்படி மைக், பலமுறை, பல்வேறு தேசங்களில் கைதாகி விடுதலையாகி இருக்கிறார். சிலமுறை துப்பாக்கி முனையில் மிரட்டப்பட்டு, பின் எப்படியோ சமாளித்துத் தப்பியும் வந்திருக்கிறார்.

ருவாண்டா அனுபவம் அப்படிப்பட்டதே. மைக், ருவாண்டாவுக்குள் நுழையும்போது, ஐ.நா பணியாளர்கள் சிலர் எச்சரித்துத் தடுத்தனர். 'வேண்டாம்... நிச்சயம் கொன்றுவிடுவார்கள்.’ பயணத்தில் இந்தத் தேசத்தை மட்டும் தவிர்க்க முடியுமா என்ன? மைக் ருவாண்டாவுக்குள் நுழைந்தார். ஆங்காங்கே ஹூட்டு இனப் போராளிகள் குத்திக் கிழிக்கும் பார்வையை வீசினர். துப்பாக்கி முனையில் தடுத்து நிறுத்தினர். மைக், தைரியம் தெறிக்கும் உடல் மொழியுடன் தன்னிடம் இருந்த கார்டு ஒன்றை நீட்டினார். அது முன்னர் ஒருமுறை கஜகிஸ்தானில் சந்தித்த அமெரிக்கர் கொடுத்தது. ஐ.நா செக்யூரிட்டி இன்ஸ்பெக்டரான அவரது விசிட்டிங் கார்டு. அதை லேமினேட் செய்து வைத்திருந்த மைக், இங்கே நீட்டினார். அதைச் சரியாக வாசிக்கக்கூடத் தெரியாத போராளிகள், மைக்கை ஓர் அதிகாரி என நினைத்து சல்யூட் அடித்து வரவேற்றனர். பிரச்னை தீர்ந்தது.

ஆஃப்கானிஸ்தானின் ஹீரத்தில் இருந்து, துர்க்மெனிஸ்தானின் எல்லையை நடந்தே அடைந்தார் மைக். அங்கு இருந்த பெண் அதிகாரி ஒருவர், மைக் எதைப் பற்றியும் கவலைப்படாமல் உலகம் சுற்றும் வாலிபன் என்பதைத் தெரிந்துகொண்டு கடும் கோபம்கொண்டார். 'ஊர் சுற்றியது போதும். ஒழுங்காக ஒரு வேலையைத் தேடு. கல்யாணம் செய்துகொள். குடும்பத்துடன் இரு. சரியா?’ மைக், அதற்கு ஒப்புக்கொண்டதாகச் சொன்ன பிறகே, பாஸ்போர்ட்டில் முத்திரை குத்தினார் அந்தப் பெண்.

புதிய நாட்டுக்கு, நகரத்துக்கு செல்லும் முன் அது குறித்த தகவல்களை, பாதுகாப்பானதா, பதற்றம் நிறைந்த பகுதியா என ஓரளவு தெரிந்துகொண்டுதான் மைக் அங்கே செல்வார்.

பாதுகாப்புக்காக போலி ஆவணங்களைத் தயார்செய்யவும் தயங்கவில்லை. சோவியத் யூனியனில் இருந்து சிதறுண்ட நாடுகளுக்குள் செல்லும்போது, தற்காப்புக்காக ரஷ்ய செய்தித் தாள்களை கக்கத்தில் செருகியபடி அலைந்தார். சில இடங்களில் விதவித பிசினஸ் கார்டுகளுடன் வியாபாரிபோல திரிந்தார். சில நாடுகளில் குறைந்த விலை செல்போனை வாங்கி வைத்துக்கொண்டார். அங்கே தென்படும் தைரியமான பெண் ஒருத்தியுடன் நட்பை ஏற்படுத்தி, தொடர்புக்கான எண் வாங்கிக்கொண்டார். ஏதாவது இக்கட்டான சூழலில் அகப்படும்போது, அந்தப் பெண்ணுக்கு, மைக் போன்செய்து கொடுத்துவிடுவார். எதிரில் உள்ளூர் மொழியில் பெண் ஒருத்தி பேசப் பேச, மைக்கை விட்டுவிடுவார்கள்.

எப்போதும் மைக்குக்கு மொழி என்பது ஒரு பிரச்னையாக இருந்தது இல்லை. உலகின் பல பிரதேசங்களில் ஆங்கிலமே அவருக்குப் பெரிதும் கைகொடுத்தது. தவிர, தனக்குத் தெரிந்த ஸ்பானிஷ், பிரெஞ்சு, ரஷ்ய மொழி வார்த்தைகளைக்கொண்டு ஏதோ பேசிச் சமாளித்தார். மற்றபடி சைகை பாஷைதான். 'வலது கை விரல்களைக் குவித்து வாய்க்கு அருகில் கொண்டுசென்றால் உணவு வேண்டும் என்பது உலகுக்கே புரியும். அது போதுமே அல்லது கிச்சனுக்குச் சென்று தேவையானதைக் கைகாட்டி வாங்கிக்கொள்வேன்’ என்கிறார். சில சூழ்நிலைகளில் வார்த்தைகள் இல்லாமல் மௌனமாகக் கடந்துசெல்வதே அவரை ஆபத்துகளில் இருந்து காப்பாற்றியும் இருக்கிறது.

2010-ம் ஆண்டில் சோமாலியாவுக்குச் செல்ல அனுமதி கேட்டார் மைக். 'இவனுக்குப் பைத்தியமா?’ என அதிகாரிகள் யோசித்தனர். 'உலகின் பெரும்பாலான நாடுகளைச் சுற்றிவந்துவிட்டேன். சோமாலியாவின் தலைநகரமான Mogadishu அழகிய கடற்கரைகளைப் பார்க்க விரும்புகிறேன்’ என்றார் மைக். மைக்கின் பாஸ்போர்ட்களைப் பரிசோதித்த அதிகாரிகள், அதில் பல்வேறு தேசங்களின் முத்திரைகள் பதிக்கப்பட்டிருப்பதைக் கண்டு அதிசயத்த பிறகே அனுமதி கொடுத்தனர். வறுமையும் குற்றங்களும் பின்னிப்பிணைந்த சோமாலியாவுக்குச் சுற்றுலா வந்த இந்த நூற்றாண்டின் முதல் பயணி என்ற பெருமை மைக்குக்குக் கிடைத்தது. அந்த மக்களும் கடற் கொள்ளையர்களும் மைக்கை எந்தவிதத்திலும் துன்புறுத்தவில்லை. சோமாலியா சுற்றுலாவால் சர்வதேச அளவில் செய்திகளில் இடம்பிடித்தார் மைக்.

நம்பர் 1 மைக் ஸ்பென்சர் பெளன் - 32

தனது பயணத்தை அமைதியான சூழல் ஒன்றில் முடிக்க நினைத்த மைக், அதற்காக தேர்ந்தெடுத்த நாடு அயர்லாந்து. தன் வாழ்வின் 23 ஆண்டுகளைச் செலவிட்டு, 195-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சுற்றிவந்த மைக், 2013-ம் ஆண்டில் தன் 44-வது வயதில் அயர்லாந்தை வந்தடைந்தார். அவரது பாஸ்போர்ட்டில் அயர்லாந்தின் முத்திரை பதிக்கப்பட்டது. மீடியா, மைக்கின் வருகையை திருவிழாவாகக் கொண்டாடியது. மைக்கைப் போலவே, உலகின் 190 நாடுகளுக்குச் சென்றோர் என நூற்றுக்கும் மேற்பட்ட நபர்கள் உள்ளனர். ஆனால், அவர்கள் அந்தந்த நாடுகளுக்குச் சென்று, ஓரிரு நாட்கள் தங்கி சுற்றிவிட்டு அல்லது வெறுமனே அங்கே பாதம் பதித்து பாஸ்போர்ட்டில் முத்திரையும் பதித்துவிட்டுத் திரும்பும் அவசரகதி பயணத்தையே மேற்கொள்கிறார்கள். மைக், ஒவ்வொரு நாட்டுக்கும் சென்று, அங்கே மக்களோடு மக்களாக சில காலம் தங்கி, நிதானமாகச் சுற்றிப்பார்த்து, அந்தக் கலாசாரத்தை அனுபவித்து உணர்ந்து பயணம் செய்திருக்கிறார். ஆக, மனிதகுல வரலாற்றிலேயே பூமியில் அதிகத் தொலைவு பயணம் செய்த நபர் என்ற பெருமை மைக் ஸ்பென்சர் பௌனுக்கு மட்டுமே உண்டு. அவர் மேற்கொண்ட பயணம்போல இன்னொன்றை, இன்னொருவரால் செய்ய இயலாது என்பதே நிஜம். மைக்கின் எண்ணமும் அதுவே.

'உலக நாடுகள் பலவற்றிலும் தகிக்கும் பிரச்னைகளால், தீவிரவாதத்தால், பொருளாதாரச் சீரழிவுகளால் பயணங்களின் பொற்காலம் என்பது முடிந்துவிட்டதாகவே நான் கருதுகிறேன். என்னாலேயே மீண்டும் ஒருமுறை இப்படி ஒரு பயணத்தை நிச்சயம் மேற்கொள்ள முடியாது!’ - இது மைக்கின் அனுபவப் பயணமொழி!

இனி... கேர்ள் ஃப்ரெண்ட்! 

நம்பர் 1 மைக் ஸ்பென்சர் பெளன் - 32

தன் 23 வருடப் பயணத்துக்குப் பிறகு, தன் தாயுடன் தங்கியிருக்கும் மைக், 'இனிமேல்தான் கேர்ள் ஃப்ரெண்ட் தேட வேண்டும்’ என்கிறார். தன் பயண அனுபவங்களை எழுதி, விரிவான புத்தகமாகக் கொண்டுவரும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார். உலகம் சுற்றிய வாலிபர் மைக்கின் அந்தப் புத்தகத்துக்கு எதிர்பார்ப்பு எகிறுகிறது!

செல்போன், கேமரா இல்லை!

** எட்டுத்திக்கும் சுற்றிவந்த மைக், தன் கையில் கேமரா வைத்துக்கொண்டது கிடையாது. எல்லாம் அடுத்தவர்கள் எடுத்துக்கொடுத்த புகைப்படங்களே.

** கையில் நிரந்தரமாக மொபைலும் வைத்துக்கொண்டது கிடையாது. ஏதோ ஓர் இடத்தில் இருந்து, எப்போதோ ஒருமுறை தன் அம்மாவுக்கு போன் பேசுவார். இ-மெயில் புழக்கத்தில் வந்த பிறகு, அதைப் பயன்படுத்த ஆரம்பித்தார். பின்னர் ஃபேஸ்புக், மைக்குக்கு வசதியாக இருந்தது. வருடம் முழுக்க எங்கெங்கோ சுற்றினாலும் கிறிஸ்துமஸ் சமயத்தில் மட்டும், பெரும்பாலும் கனடாவில் அம்மாவுடன் இருப்பதையே மைக் விரும்பினார்.

நம்பர் 1 மைக் ஸ்பென்சர் பெளன் - 32

** மைக், தன் பயணத்தில் மிகக் குறைந்த காலம் தங்கியிருந்த நாடு, வாடிகன். ஒரே ஒருநாள் மட்டுமே.

** அர்ஜென்டினாவில் இருந்து கப்பலில் சுற்றுலாப் பயணியாக அன்டார்டிகா சென்றுவந்தார் மைக். அந்தப் பயணத்துக்குத்தான் மைக், அதிகம் செலவு செய்யவேண்டியிருந்தது.

** வெளிநாட்டுப் பயணிகளிடம் வழிப்பறி செய்வோர், அநியாயமாகப் பணம் பறிக்க நினைப்போர் எங்கும் உண்டு. ஆகவே, அந்நியர் ஒருவரைப் பார்த்த உடனேயே நம்பலாமா, வேண்டாமா என்பதைக் கவனமாக உள்ளுணர்வின் உதவியோடு முடிவெடுத்ததாகச் சொல்கிறார் மைக்.

** மைக், 1990-ம் ஆண்டில் தான் கொண்டு சென்ற அதே முதுகுப் பையுடன்தான் 2013-ம் ஆண்டில் தன் பயணத்தை நிறைவுசெய்தார்.

** மைக்கின் பயண அனுபவங்களைச் சொல்லும் ஆடியோ பேட்டி :  http://www.openworldmag.com/1-openworld-podcast-mike-spencer-bown-worlds-extensively-traveled-man/