மற்ற எபிசோடுகள்
Published:Updated:

கலைடாஸ்கோப் - 13

எண்ணம், வண்ணம்: சந்தோஷ் நாராயணன்

''இரவு என்பது, மனிதர்களுக்கு கண்களில்தான் இருக்கிறது. பல்லாயிரம் வருடங்களாக இரவில்

கலைடாஸ்கோப் - 13

தூங்கித் தூங்கி மூளை பழகிப்போய்விட்டது.' 

'ஆம்... ஆந்தை போன்ற இரவு உயிர்களுக்கு இருட்டு என்பதே இல்லை. வெளிச்சம் அதன் கண்களில், மூளையில் இருக்கிறது. நாங்கள் இப்போது ரகசியமாகச் செய்யும் இந்தச் சோதனை, ஆந்தை போன்ற இரவு உலாவிகளின் ஜீன்களை மனிதர்களுடன் கலப்பது பற்றி. அது வெற்றிபெற்றால், மனிதர்களுக்கு இரவு என்பதே இல்லை. 24 மணி நேரமும் பகல்தான்' என்றார் டாக்டர்.

'என்ன பயன்?' - இது தலைவர்.

'புரொடக்டிவிட்டி... நாட்டின் புரொடக்டிவிட்டியைக் கட்டுக்கடங்காமல் உயர்த்தலாம். மனிதவளத்தை இதைப்போல் பயன்படுத்திக்கொள்ள இன்னொரு வாய்ப்பு இல்லை. அதற்கான முதல் பலி இவன். பெயர் நிஷாந்த்' என, டாக்டர் கை நீட்டிய இடத்தில் சுறுசுறுப்பான கண்கள் அலைபாய, சேரில் கட்டிவைக்கப்பட்டிருந்தான் ஓர் இளைஞன்.

ஒளிரும் விளக்குகளை ஒவ்வொன்றாக அணைத்தார் டாக்டர். இருட்டு மைபோல பரவியது. தலைவர் இருட்டில் தடுமாறினார்.

'நிஷாந்த்... உனக்கு எப்படி இருக்கிறது?' என இருளில் கேட்டார் டாக்டர்.

'என்ன ஆச்சு... ஓ... லைட்டை அணைத்துவிட்டீர்களா? எனக்கு வித்தியாசம் ஒன்றும் தெரியவில்லை. நான் ஒரு இரவு மிருகம் ஆகிவிட்டேனா டாக்டர், எனக்கு இரவு என்பது இல்லையா?' என்றான் நிஷாந்த்.

''இது நீ செய்கிற தியாகம்.'

இருளின் அமைதி.

'எல்லாவற்றையும் பார்க்க முடிகிறது டாக்டர்... பகலில் துல்லியமாகப் பார்ப்பதைப்போல. தலைவர், நீங்கள், மற்றும்...' என்றான்.

'மற்றும்?' என டாக்டர் கேட்டபோது, தன் முகத்தின் மீது வேகமாக மூச்சுக்காற்று படுவதை ஒரு கணம் உணர்ந்தார்.

'மற்றும் என் கையில் இருக்கும் கயிறு' என்றான்.

சிலுவைக் குழந்தைகள்!

குழந்தைகள் மீதான வன்முறையை, உலகம் முழுக்கப் பார்த்துக்கொண்டிருக்கிறோம். எல்லா வகை வன்முறைகளும் சென்று முடிவது குழந்தைகள் மீதுதான். அவை பொருளாதாரத்தின், யுத்தத்தின், மதத்தின், ஜாதியின் பெயரால் நடந்துகொண்டிருக்கின்றன. இவை பற்றிய அறிவோ - கவலையோ இல்லாத, பட்டாம்பூச்சிகளை மட்டும் துரத்திக்கொண்டு திரியும் அவர்களின் பால்யம், பெரியவர்களின் 'ஈகோ’வால் சாகடிக்கப்பட்டு, அநாதைகளாக்கப்பட்டு தெருவில் தள்ளப்படுகிறது. இது எல்லா நாடுகளுக்கும் பொருந்தும்.

கலைடாஸ்கோப் - 13

கியூபாவைச் சேர்ந்த டிசைனர் எரிக் ரவேலா (Erik Ravelo)  இந்த வலியை, தனது படைப்புகளில் வெளிப்படுத்தினார். இது ஒருவகையான மனித இன்ஸ்டாலேஷன் ஆர்ட். அதைப் புகைப்படங்களாக எடுத்து இணையத்தில் வெளியிட்டார். அவை, யுத்தங்கள் முதல் பாலியல் சுரண்டல் வரை சிலுவைகளில் அறையப்பட்ட குழந்தைகள். அது பார்வையாளர்களுக்கு அந்த வலியைக் கடத்துவதாக இருந்தது.

கலைடாஸ்கோப் - 13

இந்தப் படைப்பை வெளியிட்டதற்காக அவருக்குப் பல மிரட்டல்கள்.

கலைடாஸ்கோப் - 13

'குழந்தைகள் பாதுகாக்கப்பட வேண்டியவர்கள். அதை முகத்தில் அறைவதுபோல உலகுக்குச் சொல்ல நினைத்தேன். அதையே இந்தப் படைப்புகள் பேசுகின்றன’ என்கிறார் எரிக்.

'வெள்ளைப்பூக்கள் உலகம் எங்கும் மலர்கவே...’ என்ற ஏ.ஆர்.ரஹ்மானின் குரல்தான் ஞாபகம் வருகிறது. உலக வரலாற்றைப் பார்க்கும்போது, வன்முறைகளுக்கு எதிராக, எப்போதும் தங்கள் குரலைப் பதிவுசெய்துகொண்டே இருக்கிறார்கள் கலைஞர்கள். ஆனால், வன்முறையாளர்கள்தான் தங்கள் காதுகளையும் கண்களையும் திறப்பதே இல்லை!

ஆன்டனா!

80-களில்... ஊரில் டி.வி இருந்த வீடுகள் குறைவு. வீடுகளின் கூரைகள் மீது துருத்திக்கொண்டு உயர்ந்து நின்ற ஆன்டனாக்கள் செல்வச்செழிப்பின் அடையாளம். இந்த ஆன்டனாக்களை அண்ணாந்து பார்க்கவே சந்தோஷமாக இருக்கும்.

ஞாயிற்றுக்கிழமை காலையில் ராமாயணம், மகாபாரதம், மாலையில் சினிமா என டி.வி இருக்கிறவர்கள் வீடு ஹவுஸ்ஃபுல்லாகி, ஜன்னல் கம்பிகளில் எல்லாம் தொங்கிக்கொண்டு பார்ப்பார்கள். பிரத்யேகமான இசையுடன் இரண்டு அரை வட்டங்கள் சுழன்று, தூர்தர்ஷன் லோகோவுடன் 'செய்திகள்’ என்னும் வாக்கியம் ஒளிர்ந்தால், இடைவேளைபோல அவரவர்கள் வீட்டுக்குச் சாப்பிடக் கிளம்பிவிடுவார்கள். வெள்ளிக்கிழமை 'ஒளியும் ஒலியும்’ மறக்க முடியுமா? 

கலைடாஸ்கோப் - 13

இதை எல்லாம் பார்க்க முடியாமல் சில நேரங்களில் ஆன்டனாக்கள் மக்கர் பண்ணி, டி.வி திரையில் கோடுகளாக ஓட ஆரம்பிக்கும். அப்போது யாராவது கூரை மீதோ மொட்டைமாடி மீதோ ஏறி ஆன்டனாவை அஷ்டகோணங்களில் திருப்பியபடி, 'இப்போ தெரியுதா... இப்போ தெரியுதா..?’ எனக் கேட்டுக்கொண்டே இருப்பார். கீழே நிற்பவரோ லாரி கிளீனர்போல மாதிரி 'லெஃப்ட்ல  திருப்பு... ரைட்ல திருப்பு’ என கைகளால் காற்றில் கதகளி ஆடுவார்.

'வம்சம்’ படத்தில் செல்போன் சிக்னல் கிடைக்காமல், மரத்தில் ஏறிப் பேசுவார்களே, அதுபோல சில ஊர்களில் டி.வி சிக்னல் சரியாகக் கிடைக்கவில்லை என, மரத்தில்  ஆன்டனாவைக் கட்டிவைத்திருப்பதைப் பார்த்திருக்கிறேன்.  வீடுகளை இணைக்கும் அரைஞாண் கயிறுபோல கறுப்பு கேபிள்கள், ஊரின் குறுக்கும் நெடுக்கும் ஓட ஆரம்பித்த 90-களின் தொடக்கத்தில் இருந்து, கொஞ்சம்

கொஞ்சமாகக் காணாமல்போக ஆரம்பித்தன இந்த ஆன்டனாக்கள். நினைவின் இடுக்குகளில் சிக்கிக்கொண்ட 'மீன்முள்’போல இருக்கிறது ஆன்டனா!

கலைடாஸ்கோப் - 13

சுத்தியல்

சுத்தியல் என்பது உழைப்பின் குறியீடு. சுத்தியலின் வரலாறு, மனிதகுலத்தின் இரண்டு லட்சம் ஆண்டுகளுக்கு மேல் பின்னோக்கிப் போகக்கூடியது. கற்காலத்தில், எலும்புகளையும் மரங்களையும் உடைக்க சுத்தியல் போன்ற வடிவத்தை உபயோகித்திருக்கிறார்கள் நம் மூதாதையர்கள். ஒரு சுத்தியலை நீங்கள் ஏந்திக்கொண்டு நிற்கிறீர்கள் என்றால், பல்லாயிரம் ஆண்டு வரலாற்றைக் கைகளில் ஏந்தி நிற்கிறீர்கள் என அர்த்தம். மனிதன் இன்றும் உபயோகிக்கும் மிகப் பழைமையான கருவிகளில் ஒன்று சுத்தியல்.

சிலைகளைச் செதுக்குவதில் இருந்து, வேட்டை மிருகங்களின் எலும்புகளை நொறுக்குவது வரை சுத்தியலுக்கு மனித மனதைப்போலவே 'கலையும் கொலையும்’ என இரு பக்கங்கள் உண்டு. பிற்கால மெசபடோமிய வரலாற்றில்தான், உலோகத்தாலான தலைப்பகுதியில் மரக் கைப்பிடியை நுழைத்துச் செய்த சுத்தியல்களை உபயோகித்திருக்கிறார்கள். பிறகு தொழிற்புரட்சிக் காலகட்டத்தில், விதவிதமான பணிகளுக்கு விதவிதமான சுத்தியல்கள் புழக்கத்தில் வந்துள்ளன.

ஒருபக்கம் ஆணிகளை அறையவும், மறுபக்கம் ஆணிகளை பிடுங்கி எடுக்கவும் பயன்படும் சுத்தியலை 'கிளா ஹாம்மர்’ என்கிறார்கள். அதைக் கண்டுபிடித்தது அமெரிக்காவின் டேவிட் மெடோல் என்கிற இரும்புக்கொல்லர் என்பதில், அமெரிக்கர்கள் பெருமைப்படுவார்களாக இருக்கும். ஆனால், 'ஆணியே பிடுங்க வேணாம்’ எனும் வாக்கியம் நம்மவர்களின் கண்டுபிடிப்பு என்பதில் எனக்குப் பெருமை!

கலைடாஸ்கோப் - 13

தன்னம்பிக்கைப் புத்தகம் எழுதுவது எப்படி?

ஒவ்வொரு புத்தகக் கண்காட்சியிலும், எழுத்தாளர்கள் நொந்துகொள்ளும் விஷயம் ஒன்று உண்டு. அதிகமாக விற்கும் புத்தகங்களாக இருப்பவை சமையல் குறிப்புப் புத்தகங்கள்; அடுத்து தன்னம்பிக்கைப் புத்தகங்கள். 'இவை இரண்டையும் கலந்து ஏதாவது எழுதினால் என்ன?’ என யோசித்தால், ஏற்கெனவே ஆங்கிலக் கோமான்கள் அதையும் முயற்சிசெய்துவிட்டார்கள்போல. 'சிக்கன் சூப் ஃபார் சோல்’ ('ஆத்மாவுக்கான கோழி ரசம்’ என மொழிபெயர்த்தால் அடிக்க வருவார்கள்) வரிசைப் புத்தகங்கள், ஒரு வகையில் தன்னம்பிக்கைப் புத்தகங்கள்தான். இது எளியவர்கள் ஜெயித்த கதைகளின் வரிசை. விசாரித்துப்பார்த்தால் சமையலுக்கும் அதற்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. போகட்டும் என நமது பங்குக்கு, சில தன்னம்பிக்கை சமையல் சூத்திரங்களைக் கிண்டிப்பார்த்தேன்.

'ஒரு குக்கரைப்போல இருங்கள்... பிரஷர் அதிகமாகும்போது விசிலடித்துக் கொண்டாடுங்கள்.’

'தோல்வி என்பது பெருங்காயம்போல... தனியாகச் சாப்பிட்டால் கசக்கும்; வெற்றி என்னும் சாம்பாரில் கரைந்துவிட்டால் மணக்கும்.’

'உழைப்பை உப்பைப்போல பயன்படுத்துங்கள். அதிகமானால் உட்கார்ந்து சாப்பிட முடியாது.’

'பொய், நூடுல்ஸ் போல தற்காலிகமானது; உண்மை இட்லி போல நிரந்தரமானது.’

கலைடாஸ்கோப் - 13

'தலைக்கனம் என்பது வெந்நீர் போன்றது... அதை அடுத்தவர் மீது கொட்டாதீர்கள்.’

'வாழ்க்கை, சிக்கலான இடியாப்பம்தான். அதில் அன்பு என்னும் தேங்காய்ப்பாலைக் கலந்தால் இனிக்கும்.’

'சோம்பேறித்தனம் என்பது மிளகாய்க் காம்புபோல... கிள்ளி எறிந்துவிட வேண்டும்.’

'லட்சியமும் முட்டையும் ஒன்று... தவறவிட்டால் உடைந்துவிடும்.’

'தாமதமான வெற்றி என்பது, பல் இழந்த பிறகு கிடைக்கும் நல்லி எலும்புபோல... அனுபவிக்க முடியாது.’

'தன்னம்பிக்கைச் சூத்திரங்கள் என்பவை சமையல் ரெசிப்பிபோல... சமைப்பது உங்கள் கையில்தான்.’

இன்னும் இருநூறு பக்கங்களுக்கு எழுதிவைத்திருக்கிறேன். ஆனால், அதை புத்தகமாகப் போடும் அளவுக்கு, தன்னம்பிக்கை இன்னும் எனக்கு வரவில்லை!