மற்ற எபிசோடுகள்
Published:Updated:

மந்திரி தந்திரி - 29!

மந்திரி தந்திரி
பிரீமியம் ஸ்டோரி
News
மந்திரி தந்திரி ( விகடன் டீம் )

விகடன் டீம், ஓவியம்: ஹாசிப்கான், படங்கள்: கே.கார்த்திகேயன், வி.சதீஷ்குமார்

'நாளை நமதே... நாற்பதும் நமதே’ என 2014-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலை எதிர்கொண்ட அ.தி.மு.க., இறுதியில் 37 தொகுதிகளைக் கைப்பற்றியது. அதுவே மிகப் பிரமாண்ட வெற்றிதான். இருந்தாலும் 'மூன்று தொகுதிகளில் மட்டும் ஏன் தோல்வி?’ என விசாரணைக் கணைகள் பாய்ந்தன. கன்னியாகுமரியைப் பறிகொடுத்ததால் அமைச்சர் பச்சைமால் தலை உருண்டது. திருவள்ளூர், கிருஷ்ணகிரி தொகுதிகளில் அ.தி.மு.க வென்றபோதும் அங்கே அமைச்சர்களாக இருந்த ரமணாவும் கே.பி.முனுசாமியும், கேபினெட்டில் இருந்து தூக்கி எறியப்பட்டனர். ஆனால், அன்புமணி வென்ற தருமபுரி தொகுதியின் பொறுப்பாளராக இருந்த அமைச்சர் பழனியப்பனின் பதவிக்குப் பங்கம் வரவில்லை. அதுதான் உயர்கல்வித் துறை அமைச்சர் பி.பழனியப்பனின் சாதுர்யம்!  

ஆசிரியர் டு அரசியல்வாதி!

தருமபுரி பாப்பிரெட்டிப்பட்டி தாலுக்கா, மோளையானூர் பெருமாள் கவுண்டரின் நான்காவது பிள்ளைதான் பழனியப்பன். வறுமையின் காரணமாக, முதல் மூன்று பிள்ளைகளைப் படிக்கவைக்காத பெருமாள் கவுண்டர், படிப்பில் சுட்டியான கடைக்குட்டி பழனியப்பனை மட்டும் தொடர்ந்து படிக்கவைத்தார். மோளையானூர் மற்றும் வெங்கடசமுத்திரம் பள்ளிகளில் பள்ளிப்படிப்பை முடித்துவிட்டு, சேலம் அரசுக் கலைக் கல்லூரியில் இளங்கலைப் படிப்பையும், சென்னை பச்சையப்பன் கல்லூரியில் முதுகலைப் படிப்பையும் முடித்தார்.

எம்.எஸ்ஸி முடித்துவிட்டு ஊருக்கு வந்த பழனியப்பன், பாப்பிரெட்டிப் பட்டியில் உள்ள  தனியார் பள்ளியில் ஆசிரியராக வேலைக்குச் சேர்ந்தார். அங்கே ஒரு விவகாரத்தில் சிக்கி வேலையை இழந்தார்.

மந்திரி தந்திரி - 29!

'கல்வித் துறையில் பணியாற்று வதற்கே அருகதையற்றவர். உங்களின் ஒழுக்கமற்ற செயலால் மாணவர்களின் வாழ்க்கையே சீரழிந்துவிடும்’ என  ஆசிரியர் வேலையைவிட்டு அன்றைக்கு அனுப்பப்பட்ட பழனியப்பன்தான், இன்றைக்கு உயர்கல்வித் துறைக்கு அமைச்சர். ஆசிரியர் வேலையை இழந்த பழனியப்பன், நெருங்கிய நண்பர் கருணாகரன் உள்ளிட்டவர்களுடன் சேர்ந்து வெங்கடசமுத்திரம் நான்கு ரோட்டில் 'சில்வர் சைன் மெட்ரிக்’ என்ற பெயரில் பள்ளி ஒன்றைத் தொடங்கினார். இதற்கு இடையே அக்காள் மகள் ரோஜாவைக் காதலித்துக் கைப்பிடித்தார். இரண்டு பிள்ளைகளுக்குத் தந்தையும் ஆனார். வேலை இல்லாமல் இருந்த காலத்தில், பாப்பிரெட்டிப்பட்டி அ.தி.மு.க நகரச் செயலாளராக இருந்த மனோகரனின் நட்பு கிடைத்தது. காலையில் எழுந்து குளித்து முடித்த கையோடு, மோளையானூர் வந்துவிடுவார். அங்கு இருந்து பாப்பிரெட்டிப்பட்டி மனோகரன் வீட்டுக்குப் போய் அட்டெண்டன்ஸ் போடுவார்.  இப்படித்தான் பழனியப்பனின் அன்றாட வாழ்க்கை போய்க் கொண்டிருந்தது.

மனோகரனுக்கும் நன்கு படித்த ஒருவர் தேவைப்பட்டார். எந்த வேலையாக இருந்தாலும் கூச்சப்படாமல் செய்ததால், மனோகரனுக்கும் பழனியப்பனைப் பிடித்துவிட்டது. மனோகரனிடம் கொஞ்சம் கொஞ்சமாக அரசியல் அரிச்சுவடி கற்றார். பழனியப்பனின் மனைவி ரோஜாவுக்கு பாப்பிரெட்டிப்பட்டி வேளாண்மைக் கூட்டுறவு சங்கத்தில், எழுத்தர் வேலையும் வாங்கிக் கொடுத்தார் மனோகரன். ஒருகட்டத்தில் அரசு வேலை தொடர்பான விவகாரத்தில் பழனியப்பன் சிக்க, அவரைத் துரத்திவிட்டார் மனோகரன். உடனே அப்போது எம்.எல்.ஏ-வாக இருந்த சிங்காரத்திடம், தன் ஜாகையை மாற்றிக்கொண்டார் பழனியப்பன். மனோகரனிடம் காட்டியதைவிடக் கூடுதல் பணிவைக் கொட்டினார்.

உட்டாலக்கடி உள்ளடி வேலைகள்!

அந்தக் காலகட்டத்தில் ஒருங்கிணைந்த தருமபுரி மாவட்டச் செயலாளராக இருந்தவர் கே.பி.முனுசாமி. அவரும் சிங்காரமும் எதிரெதிர் துருவங்கள். கே.பி.முனுசாமிக்கு ஆதரவு வட்டம் அதிகம் இருப்பதைக் கணக்குப்போட்டு சிங்காரத்திடம் இருந்து முனுசாமியிடம் தஞ்சம் புகுந்தார் பழனியப்பன். அவர் காட்டிய பவ்யத்தில் கவிழ்ந்த முனுசாமி, பாப்பிரெட்டிப்பட்டியில் பழனியப்பனை தனது ஆதரவாளராக வளர்த்தெடுக்க ஆரம்பித்தார். 1995-ம் ஆண்டில் பாப்பிரெட்டிப்பட்டி ஒன்றியத் தேர்தலில் முனுசாமி சார்பாக பழனியப்பனும், சிங்காரம் சார்பாக விஸ்வநாதனும் களத்தில் இறக்கப்பட்டார்கள். பழனியப்பன் தோற்றுப்போனார். ஆனாலும் அரசியலைவிட்டு விலகவில்லை.

மந்திரி தந்திரி - 29!

1996-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் ஸீட் கேட்டார்... கிடைக்கவில்லை. சில மாதங்களிலேயே உள்ளாட்சித் தேர்தல் வந்தது. பையர்நத்தம் பஞ்சாயத்தில் ஸீட் கேட்டார். ஏற்கெனவே கட்சியின் ஒன்றியத் தேர்தலில் தோற்றுப்போனதால், இந்த முறை பழனியப்பனுக்கு முனுசாமி உதவவில்லை. வேறு வழி இல்லாமல், இன்னொரு ரூட்டில் பையர்நத்தம் பஞ்சாயத்து கவுன்சிலர் ஸீட்டை வாங்கி ஒருவழியாக ஜெயித்தார். 2000-ம் ஆண்டு கட்சியின் உள்கட்சித் தேர்தல் நடைபெற்றது. பாப்பிரெட்டிப்பட்டி ஒன்றியச் செயலாளர் பதவிக்கு பழனியப்பனும் விஸ்வநாதனும் மோதினர். அங்கே, பழனியப்பனைவிட விஸ்வநாதனுக்குத்தான் செல்வாக்கு அதிகம். இதனால் அரசியல் சதுரங்கம் ஒன்றை ஆடினார் பழனியப்பன். திட்டம் இதுதான். 'தலைவியின் படத்தை அச்சிடாமல், விஸ்வநாதன் நோட்டீஸ் போட்டிருக்கிறார். தலைமைக்குத் துரோகம் இழைக்கிறார்’ என கே.பி.முனுசாமியிடம் போய் முறையிட்டார். அந்தப் புகார், வேலை செய்தது. விஸ்வநாதனை தேர்தலில் இருந்து நீக்கி, போட்டி இல்லாமல் பழனியப்பனை வெற்றிபெற வைத்தார்கள். பிறகு, 2001-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் ஸீட் வாங்கி, மொரப்பூர் தொகுதியில்

போட்டியிட்டார். முதன்முறையாக 'மக்கள் பிரதிநிதி’ ஆனார். ஒரு தீக்குளிப்பு விவகாரத்தில் பழனியப்பனின் தலை உருண்டது. இதனால் 2006-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் பழனியப்பனுக்கு ஸீட் கிடைக்கவில்லை. ஐந்து ஆண்டுகள் பொறுமை காத்தார். தம்பிதுரையை நெருங்கி, 2011-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் ஸீட் வாங்கி ஜெயித்தார். உயர்கல்வித் துறைக்கு அமைச்சரும் ஆனார்.

துறையில் சாதித்தது என்ன?

உள்ளடி வேலைகள் எல்லாம் செய்து 'மாண்புமிகு’வாகிய பழனியப்பன் துறையில் சாதித்தது என்ன? தமிழ்நாட்டில் உயர்கல்வித் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் 13 பல்கலைக் கழகங்கள், 76 அரசுக் கலைக் கல்லூரிகள், 139 அரசு நிதியுதவி பெறும் கலைக் கல்லூரிகள், 448 சுயநிதி கலைக் கல்லூரிகள், 672 கல்வியியல் கல்லூரிகள் இருக்கின்றன. அ.தி.மு.க ஆட்சியில் இருக்கும் இந்த நான்கரை ஆண்டு காலத்தில், 14 அரசுக் கலைக் கல்லூரிகளும் 24 பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிகளும் 11 தொழில்நுட்பக் கல்லூரிகளும் நான்கு அரசு பொறியியல் கல்லூரிகளும் மட்டும்தான் உருவாக்கப்பட்டிருக்கின்றன. ஸ்ரீரங்கம் தொகுதியில் வென்றதற்காக, இந்தியத் தகவல்தொழில்நுட்பப் பயிலகத்தைத் தொடங்கிவைத்தார்கள். ஆர்.கே.நகருக்கு இடம்பெயர்ந்தபோது அங்கே இப்போது அரசுக் கலைக் கல்லூரியைத் தொடங்கி வைத்திருக்கிறார்கள். ஒரு செமஸ்டர் முடிந்துவிட்ட நிலையில் அக்டோபர் மாத இறுதியில், கல்லூரியை எப்படித் தொடங்கினார்கள் என்பது பழனியப்பனுக்குத்தான் வெளிச்சம். ஆறு மாதங்கள் கடந்துவிட்ட பிறகு மாணவர்களுக்கு எப்படிப் பாடம் நடத்தப்போகிறார்கள் எனத் தெரியவில்லை. ஏற்கெனவே வேறு எங்கேயாவது படித்த மாணவர்களை, இங்கே கொண்டுவந்து சேர்த்துவிட்டார்களா என்ற சந்தேகங்களும் கிளப்பப்படுகின்றன.

சத்தம் இல்லா வசூல்வேட்டை!

நூற்றுக்கணக்கில் இருக்கும் தனியார் கல்வியியல் கல்லூரிகள், உயர்கல்வித் துறை அதிகாரிகளுக்கு பணம் காய்ச்சி மரங்களாக இருக்கின்றன. புதிதாக யாராவது கல்லூரி தொடங்கினால், அதிகாரிகள் காட்டில் அடை மழைதான். புதிய பாடத் திட்டத்துக்குக்கூட தட்சணை தரவேண்டியிருக்கிறது. கல்லூரி அனுமதிக்கு இப்படி என்றால், விரிவுரையாளர்கள் பணி நியமனத்திலும் கரன்சி விளையாடுகிறது. துணைவேந்தர்கள், கல்லூரி முதல்வர்கள், பதிவாளர்கள், தேர்வுக் கட்டுப்பாட்டாளர்கள்... போன்ற முக்கியப் பதவிகளைப் பிடிப்பதில் போட்டாபோட்டியே நடக்கும். இந்தப் பதவிக்கு நடக்கும் 'டீலிங்’ பற்றி எதுவும் வெளியில் வராது. பல்கலைக்கழகங்களில் பணியாற்றும் தற்காலிக ஊழியர்களிடம் வேட்டை நடக்கிறது.

அறிவித்தது என்ன ஆயிற்று?

'அரசு உதவிபெறும் கல்லூரிகளுக்கு 3,120 உதவிப் பேராசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள்’ என 110 விதியின் கீழ் சட்டமன்றத்தில் 2011-ம் ஆண்டு அறிவித்தார் ஜெயலலிதா. 2012-ம் ஆண்டு மே மாதம் அதற்கான அரசு ஆணை பிறப்பிக்கப்பட்டது. ஆனால், இதுநாள் வரை அறிவித்த எண்ணிக்கையில் பாதிகூட நிரப்பப்படவில்லை எனப் புலம்பல்கள். மதுரை சரஸ்வதி நாராயணன் கல்லூரி, தஞ்சை கரந்தை தமிழ் கல்லூரிகளில் மாணவர்களும் பேராசிரியர்களும் அடிக்கடி போராட்டங்களில் இறங்கியபோதும், அமைச்சர் மறந்தும்கூட வாய் திறப்பது இல்லை. ஈரோடு சிக்கன்னநாயக்கர் கலைக் கல்லூரியை அரசு எடுத்து நடத்த வேண்டும் என மாணவர்கள், பேராசிரியர்கள், பொதுமக்கள் போராடிவருகின்றனர். நீதிமன்றங்களும் இந்தக் கல்லூரியை அரசு ஏற்று நடத்த வேண்டும் என பலமுறை அறிவுறுத்தியும் எந்தப் பலனும் இல்லை.

பல்கலைக்கழகங்களில் முறைகேடு!

கல்லூரி மாணவர்களை பணம் காய்க்கும் மரங்களாகத்தான் பல்கலைக்கழகங்கள் பார்க்கின்றன. பல்கலைக்கழகங்களில் ஆராய்ச்சிக்கான கட்டமைப்பை மேம்படுத்தி பயனுள்ள ஆய்வுகளை மேற்கொண்டால், பல்கலைக்கழக மானியக்குழு கோடிக்கணக்கில் நிதி உதவி வழங்கத் தயாராக இருக்கிறது. அப்படியான எந்தச் செயல்களையும் பழனியப்பன் செய்யவில்லை. இன்னொரு பக்கம் பல்கலைக்கழகங்களுக்குத் தேவையான பொருட்களைக் கொள்முதல் செய்வதில் முறைகேடுகள் நடந்துகொண்டிருக்கின்றன. இவற்றைச் சரிசெய்வதற்குப் பதிலாக, மாணவர்களிடம் இருந்து கூடுதலாக எந்த வகையில் கட்டணம் வசூலிக்கலாம் என்பதில் மட்டுமே குறியாக இருக்கின்றன பல்கலைக்கழகங்கள்.

துணைவேந்தர் நியமனக் குளறுபடிகள்!

மதுரை காமராஜர் பல்கலைக்கழகத் துணைவேந்தர் கல்யாணி மதிவாணன் நியமனம், ஆட்சியின் முகத்திரையைக் கிழித்துத் தொங்கவிட்டது. 'பல்கலைக்கழக மானியக் குழு விதிப்படி, பல்கலைக்கழகங்களில் துணைவேந்தராகப் பதவி வகிக்க குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் பேராசிரியராகப் பணியாற்றிய அனுபவம் இருக்க வேண்டும். கல்யாணி மதிவாணன், இணைப் பேராசிரியராக மட்டுமே பணியாற்றிய அனுபவம் உள்ளவர். அவரைத் துணைவேந்தராக நியமித்தது சரி அல்ல’ என உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டது. கல்யாணியைப் பதவிநீக்கம் செய்ய உத்தரவிட்டது உயர் நீதிமன்றம். உச்ச நீதிமன்ற மேல்முறையீட்டில் 'கல்யாணி மதிவாணனின் நியமனம் செல்லும்’ எனத் தீர்ப்பு வந்தது.

கல்யாணி, மறைந்த முன்னாள் அமைச்சர் நெடுஞ்செழியனின் உறவினர் என்பதற்காகவே அரசு வாய் மூடி நின்றது. தவறான தகவல்களைத் தந்து துணைவேந்தர் பதவிக்கு வந்ததாகச் சொல்லி, கல்யாணிக்கு எதிராகப் போர்க்கொடி தூக்கிய சீனிவாசன் மர்ம நபர்களால் தாக்கப்பட்டார். இப்படி துணைவேந்தர் பதவியைப் பிடிப்பதில் நடக்கும் போட்டி, நீதிமன்றம் வரை படியேறியது. உச்ச நீதிமன்ற தீர்ப்புக்குப் பிறகு, அதை அரசியல்வாதி ரேஞ்சுக்குக் கொண்டாடித் தீர்த்தனர் கல்யாணி மதிவாணனின் ஆதரவாளர்கள்.

அண்ணா பல்கலைக்கழகத் துணைவேந்தராக இருந்த மன்னர் ஜவஹர் மீது நிறையப் புகார்கள் கிளம்பின. முறைகேட்டில் ஈடுபட்டதாக முன்னாள் தேர்வுக் கட்டுப்பாட்டு அதிகாரி தமிழ்பொறை, சிவக்குமார், மணி ஆனந்த் ஆகியோருடன் மன்னர் ஜவஹரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். நிதி மோசடி செய்ததாக சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் ராமநாதன் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். 'பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர் இடங்களை நிரப்புவதில் மானியக் குழுவின் விதிகள் மீறப்படுகின்றன’ எனத் தொடர்ந்து புகார்கள் வருகின்றன. அதை எல்லாம் மீறி இந்தப் பதவிகளைப் பிடிக்க, திரைமறைவில் காய் நகர்த்தல்கள் நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கின்றன.

அமைச்சராக இருந்து பழனியப்பன் சாதித்தது எதுவுமே இல்லையா? ஏன் இல்லை. 'உலகமே ஒரு நூலகம். அதில் ஒவ்வொருவரும் ஒரு நூல்’ என்பார்கள். ஆனால் அம்மா நீங்களோ ஒரு நூலகம். உலகப் பொதுமறையாம் திருக்குறள் போல், இந்துக்களின் ஆன்மிக நூல் கீதையைப் போல, இஸ்லாமியர்களின் புனித நூல் திருக்குரானைப் போல, கிறிஸ்துவர்களின் வேத நூல் பைபிள் போல எப்போதும் இதயத்தில் நிறுத்தவேண்டிய புனித நூல் அம்மா நீங்கள். மற்ற தலைவர்கள் 'வெறும் மனிதராக’ இருக்கிறபோது நீங்கள் மட்டுமே 'புனிதராக’ இருக்கிறீர்கள். அம்மாதான் இந்தியாவுக்கு முன்னோடி. மற்றவர்கள் எல்லாம் உங்கள் பின்னாடி’ என, சட்டமன்றத்தில் தலைவி புகழ் பாடுகிறாரே... அது போதாதா?

அது அவருக்குப் போதும். மக்களுக்கு?

தீட்டிய மரத்தைத் தீர்த்துக்கட்டிய கதை!

தருமபுரியில் இருந்து கிருஷ்ணகிரி மாவட்டம் உருவானபோது அதன் மாவட்டச் செயலாளராக நியமிக்கப்பட்டார் கே.பி.முனுசாமி. 2011-ல் சட்டமன்றத் தேர்தலில் பழனியப்பனோடு முனுசாமியும் வென்று அமைச்சரானார். நால்வர் அணியிலும் இடம்பிடித்தார். இருந்தாலும் இருவருக்கும் இடையே உள்பகை ஓடிக்கொண்டே இருந்தது.

மந்திரி தந்திரி - 29!

2014-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் தருமபுரி தொகுதியில் தி.மு.க சார்பில் தாமரைச்செல்வனும், அ.தி.மு.க சார்பில் மோகனும், பா.ம.க சார்பில் அன்புமணியும் போட்டியிட்டனர். பா.ம.க-வுக்கும் அ.தி.மு.க-வுக்கும் இடையே கடும் போட்டி. அன்புமணி வென்றால் அமைச்சர் பதவி பறிபோய்விடும் என யூகித்த பழனியப்பன், 'தருமபுரி மாவட்டச் செயலாளர் அன்பழகனும் கிருஷ்ணகிரி மாவட்டச் செயலாளர் முனுசாமியும் வன்னியர்கள். சாதிப்பாசம் காரணமாக, பா.ம.க-வுக்கு எதிராக அவர்கள் சரியாக வேலை செய்யவில்லை’ என தலைமைக்கு புகார் தட்டிவிட்டார். பழனிப்பன் நினைத்ததுபோலவே அன்புமணி வென்றார். 37 தொகுதிகளைக் கைப்பற்றிய ஜெயலலிதாவால், தருமபுரி தோல்வியை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அன்பழகனுக்கும் முனுசாமிக்கும் பதவி பறிபோனது. இப்படி எதிரியை அழித்து தன் பதவிக்குப் பங்கம் வராமல் பார்த்துக்கொள்வதில் பழனியப்பன் கில்லி.

கோட்டையில் ஒரு தீக்குளிப்பு முயற்சி!

பழனியப்பனின் சொந்த ஊரான மோளையானூர் கிராமத்தின் பஞ்சாயத்துத் தலைவர் கிருஷ்ணமூர்த்தி. அவர்மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவரப்பட்டு, தலைவர் பதவியில் இருந்தும் கட்சியில் இருந்தும் நீக்கப்பட்டிருக்கிறார். ''என்னை நீக்கியதற்குக் காரணம் பழனியப்பன்தான்'' என அவர் மீது புகார்களை அடுக்குகிறார் கிருஷ்ணமூர்த்தி.

மந்திரி தந்திரி - 29!

''பழங்குடி இனத்தைச் சேர்ந்த நான், இன்ஜினீயரிங் முடித்திருக்கிறேன். 25 வருடங்களாக, கட்சிப் பணி செய்துகொண்டிருக்கிறேன். 2011-ம் ஆண்டு உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட்டுத் தலைவரானேன். அமைச்சரின் சொந்த கிராமம் என்பதால், அவருடைய நண்பர் ராமலிங்கத்தைத் தலைவராகக் கொண்டுவர முயற்சித்தார். அது நிறைவேறவில்லை. இதனால் கோபம் அடைந்த அமைச்சர், தொடர்ந்து எனக்குத் தொந்தரவுகள் கொடுத்துவந்தார். பஞ்சாயத்தில் சாலைகள் போட நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்த டெண்டரை அமைச்சரின் அண்ணன் வெள்ளியங்கிரி எடுத்திருந்தார். தரமற்ற சாலைகளை அவர் போட்டார். இதைத் தட்டிக்கேட்டதற்கு என்னை மிரட்டினார்கள். உயர் நீதிமன்றத்தில் வழக்கு போட்டேன். இதனால் கொதித்துப்போன அமைச்சர், வார்டு உறுப்பினர்களை தன் பக்கம் திருப்பி, நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவந்து என்னை நீக்கிவிட்டார். இதுபற்றி அம்மாவின் கவனத்துக்குக் கொண்டுபோக முற்பட்டபோது அதையும் தடுத்து நிறுத்தினார்'' என்கிற கிருஷ்ணமூர்த்தி, இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, தலைமைச் செயலகத்தில் தீக்குளிப்புப் போராட்டம் நடத்த முயற்சித்தது ஏக பரபரப்பானது.  

கட்சியினர் மீதான புகார்களை விசாரிக்கும் ஐவர் அணியில் பழனியப்பனும் ஒருவர். அவர் மீதே புகார்கள் வந்தால் விசாரிப்பார்களா என்ன?

அமைச்சர் தொகுதி...

ஆளும் கட்சிக்கு இல்லை செல்வாக்கு!

பழனியப்பனின் சொந்தத் தொகுதியான பாப்பிரெட்டிப்பட்டியில் உள்ள மொரப்பூர் ஊராட்சி ஒன்றியத்தின் 16-வது வார்டுக்கு (கேத்துரெட்டிப்பட்டி) இடைத்தேர்தல் நடைபெற்றது. அ.தி.மு.க சார்பில் கோவிந்தம்மாளும் பா.ம.க ஆதரவுபெற்ற சுயேச்சை வேட்பாளர் ராதாவும் போட்டியிட்டனர். வெறும் 3,752 வாக்காளர்கள்கொண்ட இந்த வார்டில் அ.தி.மு.க தோற்றது. அதன் வேட்பாளரைவிட சுயேச்சை வேட்பாளர் 310 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி அடைந்தார்!

உறவுகள் தொடர்கதை!

மந்திரி தந்திரி - 29!

அமைச்சரின் அண்ணன் வெள்ளியங்கிரி, அண்ணன் தர்மலிங்கத்தின் மகன் ரமேஷ்,  மோளையானூர் பஞ்சாயத்துத் தலைவராக இருக்கும் அண்ணி சுந்தரம் தர்மலிங்கம், வெள்ளியங்கிரியின் மகன் வேலாயுதம், அமைச்சரின் பெரியப்பா மகன் தங்கராஜ், கட்டுமான நிறுவனர் ஒருவர், பி.பள்ளிப்பட்டி ஊராட்சி மன்றத் தலைவர் பொன்மணி, தனி உதவியாளர் தமிழ், வெங்கடசமுத்திரம் கருணாகரன், வடிவேலன், செல்வராஜ், கௌதமன் என உறவு வட்டமே அமைச்சரைச் சுற்றி நிற்கிறது. ''கட்சிக்காரர்கள் எந்த உதவி கேட்டாலும் இவர்களைத் தாண்டித்தான் போக முடியும்'' எனப் பொருமுகிறார்கள் ர.ரத்தங்கள்!