
நம்பர் 1 அமீர் கான் - 33
'பாப்பா கெஹ்தே ஹெய்ன் படா நாம் கரேஹா...
பேட்டா ஹமாரா அய்சா காம் கரேஹா...’
அந்தப் புது ஹீரோ கிடார் இசைத்தபடி, துள்ளலுடன் திரையில் வந்தபோது, ரசிகர்களும் குதூகலக் கொண்டாட்டத்துடன் சேர்ந்து பாடினார்கள். இந்தி தெரியாத தென்இந்திய மாநிலங்களிலும் அந்தப் பாடல் 'நேயர் விருப்பம்’ ஆனது. 1988-ம் ஆண்டில் வெளிவந்த 'கயாமத் சே கயாமத் தக்’ என்ற படத்தில் இடம்பெற்றது அந்தப் பாடல். புதிய பாலிவுட் 'ரோமியோ’வாக அமீர் கானும் 'ஜூலியட்’டாக ஜூஹி சாவ்லாவும் திரையில் சிந்திய காதலில் இந்தியாவே சிலிர்த்தது. இணைபிரியாக் காதலர்களாக க்ளைமாக்ஸில் அவர்கள் உயிர் துறக்க, ரசிகர்களின் கைக்குட்டைகள் நனைந்தன.
சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சனுக்குச் சற்றே இறங்குமுகமான காலகட்டம். அனில் கபூர், சஞ்சய் தத், சன்னி தியோல் என வாரிசுகள் களத்தில் இறங்கி, சூப்பர் ஸ்டார் கனவுடன் வலம்வந்துகொண்டிருந்தார்கள். அப்போது அறிமுகமான அமீர் கான் மீது, முதல் படத்திலேயே பாலிவுட்டின் புதிய நம்பிக்கை நட்சத்திர ஒளி பாய்ந்தது. ஒரு படத்தின் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட ஈரம் காய்வதற்கு முன்பே, அடுத்தடுத்த ஒப்பந்தத்திலும் கையெழுத்திடும் அளவுக்கு குவிந்தன வாய்ப்புகள். ஆனால், 1989-90ம் ஆண்டுகளில் அமீர் கான் நடித்து வரிசையாக வெளியான படங்களில் அனைத்தும் புறமுதுகு காட்டின.
அமீர், சோர்ந்து வீழ்ந்தார். 'குறைந்தபட்சம் ஐந்து வருடங்களாவது தாக்குப்பிடிக்க நினைத்திருந்தேன். மூன்றாவது வருடத்திலேயே என் சினிமா வாழ்க்கை முடிந்துவிட்டதா? உயரம் குறைவு, புள்ளிகள் நிறைந்த தோல், ஜாடியில் உள்ளது போன்ற காதுகள்... என்னை ரசிகர்களுக்குப் பிடிக்கவில்லையோ? 'ஒன் டைம் வொண்டர்’ என திரையுலகம் என்னை ஒதுக்கிவிடுமா?’ - நிலைகுலைந்தார் அமீர்.

திரையுலகில் சரிவு என்பது எவ்வளவு வலி மிகுந்தது என்பதை அமீர் கான் நன்கு அறிந்தவர். காரணம், அவரது தந்தை தாஹிர் ஹுசைன் திரைப்படத் தயாரிப்பாளர். 1965-ம் ஆண்டு மார்ச் 14-ம் தேதி, தாஹிருக்கும் ஸீனத்துக்கும் மகனாகப் பிறந்த அமீர், பாலிவுட்டின் இதயமான பாந்த்ராவில் பால்ய காலத்தைக் கடந்தவர். மெஹ்பூப் ஸ்டுடியோ, அவர் வயது சிறுவர்களின் விளையாட்டு மைதானம். உறவினர் நாசிர் ஹுசைன் இயக்கிய வெற்றிப் படம் 'யாதோன் கி பாரத்’தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான அமீருக்கு, படிப்பில் ஆர்வம் இல்லை. ஆனால், மாநில அளவில் விளையாடி கோப்பைகளை வெல்லும் அளவுக்கு டென்னிஸில் திடமான திறமை. தந்தை தயாரித்த படங்களின் தோல்வியால், வீட்டில் போன் அலறிக்கொண்டே இருந்த நாட்களே அநேகம். கடன் கொடுத்தவர்களின் கதறல். பல சமயங்களில் பள்ளிக் கட்டணம்கூட கட்ட முடியாத நிலை. 'எப்போது பள்ளியில் இருந்து விரட்டிவிடுவார்களோ...’ என்ற பயத்துடனேயே சென்று வந்தார் அமீர்.
1983-ம் ஆண்டு. அமீரின் பள்ளி நண்பர் ஆதித்ய பட்டாச்சாரியா, சில ஆயிரம் ரூபாய் செலவில் 40 நிமிடங்கள் ஓடக்கூடிய மௌனப்படம் ஒன்றை (Paranoia) உருவாக்கினார். அதில் ஒரு பாத்திரத்தை ஏற்று நடித்த அமீர், உதவி இயக்குநராகவும் பணிபுரிந்தார். பிறகு,‘Avantar’ என்ற தியேட்டர் குரூப்பில் இணைந்து நடித்தபடியே இன்ன பிற வேலைகளையும் கற்றுக்கொண்டார். புனே ஃபிலிம் இன்ஸ்டிட்யூட்டில் இணைய விரும்பிய அமீரை, தந்தை தாஹிர் தடுத்தார். 'திரைத் துறையில்தான் சாதிக்க விருப்பம் எனில், நாசிர் ஹுசைனிடம் சென்று வேலை பார்’ என்றார். நாசிர் ஹுசைனிடம் உதவி இயக்குநராகச் சேர்ந்தார் அமீர். எடுபிடி வேலைகள் முதல் எப்படி வேலை வாங்குவது என்பது வரை கற்றுக்கொண்டார்.
இன்னொரு பக்கம் அமீரின் நடிப்பு ஆசையும் வளர்ந்துகொண்டிருந்தது. புனே ஃபிலிம் இன்ஸ்டிட்யூட் மாணவர்கள் எடுத்த ஆவணப்படங்களில் தலைகாட்டினார். அதைக் கண்ட இயக்குநர் கேதன் மெஹ்தா, தான் இயக்கிய சிறு பட்ஜெட் படம் 'ஹோலி’யில் அமீருக்கு வாய்ப்பு கொடுத்தார். இளைஞனாக முதல் பாலிவுட் வாய்ப்பு. அப்போது நாசிர் இயக்கிய 'மன்ஸில் மன்ஸில்’, 'ஸபர்தஸ்த்’ என்ற இரு படங்களுமே தோல்வியடைய, அவரது மகன் மன்சூர் இயக்குநராகக் களமிறங்கினார். அமீர் தான் ஹீரோ. அந்தப் படம்தான், 'கயாமத் சே கயாமத் தக்’.

அதற்கு முன்னரே ஒப்பந்தமாகி அமீர் நடித்துக்கொடுத்த 'ராக்’ இரண்டாவது படமாக வெளியானது. ரேப், ரிவெஞ்ச், திரில்லர் சினிமா. முதல் படத்தில் அமுல் பேபி முகத்துடன் இதயம் கவர்ந்த அமீரை, தாடிவைத்த சோக முகத்தில் பார்க்க யாருக்கும் பிடிக்கவில்லைபோல. விமர்சனங்கள் பாசிட்டிவாக வந்தாலும் படம் பிழைக்கவில்லை. 1990-ம் ஆண்டில் வெளியான நான்கு படங்களும் படுதோல்வி. அந்தச் சமயத்தில் சூப்பர் ஹிட் இயக்குநர் மகேஷ் பட், அமீர் கானிடம் கதை ஒன்றைச் சொன்னார். சரிவில் இருந்த அமீருக்கு, மகேஷ் பட் போன்ற டாப் இயக்குநர் படத்தில் கிடைக்கும் வாய்ப்பு மிக முக்கியமானது. ஆனால், அமீருக்கு கதை பிடிக்கவில்லை. 'எனக்கு இந்தக் கதை சரிவராது’ என்றார் தயக்கத்துடன். மகேஷ், 'நல்லது... பிடிக்கலைன்னா பண்ணவே கூடாது’ என்றார் பெருந்தன்மையாக. தனக்குக் கிடைத்த தோல்விகளினால் அமீரும் உறுதியாக ஓர் முடிவெடுத்திருந்தார். பணம் கிடைக்கிறது என்றோ, பெரிய பேனர் என்றோ, சூப்பர் இயக்குநர் என்றோ, வாய்ப்புகளை வாரிப் போட்டுக்கொள்ளக் கூடாது. திரைக்கதை பிடித்திருந்தால் மட்டுமே ஒப்புக்கொள்ள வேண்டும்.
1990-ம் ஆண்டில் வெளியான 'தில்’ மட்டும் அமீருக்கு மறுவாழ்வு அளித்தது. மாதுரி தீட்ஷித்துடன் 'ஓ ப்ரியா... ப்ரியா...’ என அமீர் காதல் பிரிவில் உருக, ரசிகர்களும் உருகினார்கள். ரசிகைகள் அமீரைத் தங்கள் காதலனாக உருவகப்படுத்திக் கிறங்கினார்கள். ஜூஹியுடன் கிசுகிசு, மாதுரியுடன் பக்கா கெமிஸ்ட்ரி, பூஜா பட்டுடன் டேட்டிங் என அமீரைச் சுற்றி கிசுகிசுக்கள் பறக்க, அவரது இதயத்திலோ ரீனா தத்தா என்கிற பெண் குடியிருந்தார். பல வருடக் காதல். இந்து-முஸ்லிம் என இருவீட்டார் எதிர்ப்பு. எல்லாவற்றையும் மீறி, 1986-ம் ஆண்டிலேயே அமீரும் ரீனாவும் ரகசியத் திருமணம் செய்திருந்தார்கள். ஆனால், அமீர் அதை வெளிப்படையாகச் சொல்லவில்லை. பாலிவுட்டில் தனது 'லவ்வர் பாய் இமேஜ்’ சிதைந்துவிடக் கூடாது என்பதற்காக ரகசியம் காத்தார்.
தன் முயற்சியில் மனம் தளராத மகேஷ் பட், 1991-ம் ஆண்டில் அமீரிடம் மீண்டும் சென்றார். அமீர், கதையைக் கேட்டு ஒப்புக்கொண்டார். பத்திரிகையாளராக அமீரும், ஜோடியாக பூஜா பட்டும் நடித்த 'தில் ஹை கே மன்டா நஹி’ என்ற அந்தப் படம் ஹிட். 1992-ம் ஆண்டில் 'ஜோ ஜீத்தா வோஹி சிக்கந்தர்’ என்ற படம் அமீருக்கு கமர்ஷியல் வெற்றியைக் கொடுத்தது (இதுவே பின்பு தமிழில் 'பத்ரி’ ஆனது). இன்னொரு பக்கம் சல்மான் கானும் அறிமுகமாகி ஒரு நட்சத்திரமாக வளர்ந்துகொண்டிருந்தார். 1993-ம் ஆண்டில் யாஷ் சோப்ரா ஒரு நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடிக்கச் சொல்லி அமீரிடம் கேட்டார். அமீர் மறுத்துவிட, யாஷுக்குக் கோபம். 'தர்’ என்ற அந்தப் படத்தில் அமீர் மறுத்த பாத்திரத்தில் நடித்து கவனம் பெற்றார் ஷாரூக் கான் (1993). பாலிவுட்டில் அமீர் கான், சல்மான் கான், ஷாரூக் கான் என்ற கான்களுக்கான கடும் போட்டி ஆரம்பமானது அப்போதுதான்.

அமீர், தேர்ந்தெடுத்து நடிக்க ஆரம்பித்தார். 'என் கடமை நடிப்பது மட்டுமே’ என ஒதுங்காமல், தனது படம் மேலும் சிறப்பாக வர, வேறு விஷயங்களிலும் தன் பங்களிப்பைச் செலுத்தினார். 1993-ம் ஆண்டில் வெளியான மகேஷ் பட்டின் 'ஹம் ஹெய்ன் ரஹே பியார் ஹே’ படத்தில் அமீர் கான் திரைக்கதையில் பணியாற்றினார். படத்தை இயக்கியதே அமீர்தான் என்றும் கிசுகிசுத்தார்கள். வருடத்துக்கு நான்கைந்து படங்கள். அவற்றில் குறைந்தது ஒன்றாவது சூப்பர் ஹிட் என அமீரின் வளர்ச்சி தொய்வின்றி இருந்தது. 1995-ம் ஆண்டில் வெளியான ஐந்து படங்களில் ஏ.ஆர்.ரஹ்மானின் இசையில், ஊர்மிளாவின் கவர்ச்சியில் 'ரங்கீலா’, ரசிகர்களின் ரங்கோலி கொண்டாட்டமாக வென்றது. மற்றவை சொல்லிக்கொள்ளும்படி இல்லை.
அந்த நிலையில் அமீர் திடமாக முடிவெடுத்தார். படங்களின் எண்ணிக்கை முக்கியமே அல்ல. ஒரு வருடத்துக்கு ஒன்று அல்லது இரண்டு படங்கள் போதும். நடிக்கும் கதாபாத்திரங்களில் அமீர் கான் தெரியவே கூடாது. அந்தக் கதாபாத்திரமே ரசிகனின் நெஞ்சில் நிலைத்து நிற்கவேண்டும். வித்தியாசமான படமோ, கமர்ஷியல் படமோ திரைக்கதையில் திருப்தி என்றால் மட்டுமே கால்ஷீட். அமீர் கான் படம் வருகிறது என்றாலே, ஆகப்பெரிய எதிர்பார்ப்பு உருவாகும்படி சந்தையைக் கைப்பற்ற வேண்டும். 1994-ம் ஆண்டில் 'ஹம் ஆப் கே ஹெய்ன் கோன்’ என சல்மானும், 1995-ம் ஆண்டில் 'தில்வாலே துல்ஹனியா லே ஜாயெங்கே’ என ஷாரூக்கும் நாடே கொண்டாடும் பிளாக் பஸ்டர் வழங்கியிருந்தார்கள். 1996-ம் ஆண்டில் அமீர், அவற்றுக்கு இணையாக கரிஷ்மா கபூருடன் இணைந்து 'ராஜா இந்துஸ்தானி’ என்ற பிளாக் பஸ்ட்டரைக் கொடுத்தார். 'பர்தேசி பர்தேசி ஜானா நஹி...’ என இந்தியா எங்கும் அந்தப் படத்தின் பாடல்கள் ஒலித்தன. அமீரின் மார்க்கெட் உச்சத்தில். இருந்தாலும் அமீர், மனதுக்குப் பிடித்த ஸ்கிரிப்ட்டைத் தேர்ந்தெடுத்து நடிப்பதில் மட்டுமே கவனம் செலுத்தினார்.
'வேண்டாம்... படுபாதாளத்தில் விழுந்துவிடாதே. காற்றுள்ளபோதே கரன்சியை அள்ளிக்கொள்’ என சீனியர் நலம்விரும்பிகள் எச்சரித்தார்கள். அமீர் தன் முடிவில் உறுதியாக இருந்தார். பாலிவுட் மசாலா குப்பைகளில் இருந்து விலகி புதிய முயற்சிகளில் தடம் பதிக்க விரும்பினார். அதன் தொடக்கப் புள்ளியாக, இந்தியப் பிரிவினையை மையமாகக்கொண்டு உருவான தீபா மேத்தாவின் '1947: எர்த்’, அமீருக்கு நல்ல களம் அமைத்துக் கொடுத்தது. சக்தி வாய்ந்த ஹீரோவாக எழுந்து நின்ற அமீர், எடுத்துவைத்த அடுத்த அடி, அதிக ஆபத்துகள் நிறைந்தது.


அமீரின் நண்பர் அஷ§தோஷ் கோவாரிகெர் சொன்ன கதையின் கரு அவருக்குப் பிடித்திருந்தது. நண்பரை மீண்டும் மீண்டும் மெருகேற்றச் சொன்ன அமீர், பக்கா திரைக்கதை உருவான பிறகு, புதிய பட அறிவிப்பை வெளியிட்டார். அமீர் கான் புரொடெக்ஷன்ஸ் வழங்கும் 'லகான்’. 1893-ம் ஆண்டில் குஜராத்தின் கிராமம் ஒன்றில் நடக்கும் கதை. ஆங்கிலேயர் வரியை இரு மடங்காக விதிக்க, அது நீங்க வேண்டும் என்றால் கிரிக்கெட் குறித்து ஏதுமறியா ஊர் மக்கள், ஆங்கிலேயரை எதிர்த்து கிரிக்கெட் ஆடி ஜெயிக்க வேண்டும் என்பதே சவால். கிராமத்து இளைஞன் புவன், எப்படி தன் ஊர் ஆட்களைக்கொண்டு ஆங்கிலேயர்களை கிரிக்கெட்டால் வெல்கிறான் என்பதே 'லகான்’. 3 மணி நேரம் 40 நிமிடம். ஒவ்வொரு ரசிகனையும் தியேட்டரில் திரைக்கதையின் விறுவிறுப்பால் கட்டிப்போட்டு, கெட்டியாக ஜெயித்தார் அமீர் கான். தேசிய விருதுகள் 8, ஃபிலிம்ஃபேர் விருதுகள் 8 என வாரிக் குவித்தது. 'நான் ஹீரோயிஸம் காட்டும் வழக்கமான 'சூப்பர் ஸ்டார்’ அல்ல; முற்றிலும் மாறுபட்டவன்’ என அமீர் கான் அழுத்தமாக நிரூபித்தார்.
லகானுக்குப் பிறகு வெளியான ஃபர்ஹான் அக்தரின் 'தில் சாத்தா ஹை’யும் கௌரவமான ஹிட்தான். இந்திய சினிமாவின் அழிக்க முடியாத அடையாளமாக அமீர் நிமிர்ந்து நின்ற தருணத்தில், அவரது சொந்த வாழ்க்கையில் அமைதி, மகிழ்ச்சி இரண்டுமே முற்றிலும் தகர்ந்துபோயிருந்தன. ரீனாவுடன் மன முறிவு... மண முறிவுக்கும் விண்ணப்பித்து நீதிமன்றத்தை இருவருமே நாடியிருந்தனர். மகன் ஜுனைத், மகள் இரா இருவருமே அம்மாவுடன் சென்றிருந்தார்கள். 'வாரம் இரு முறை அமீர் அவர்களைச் சந்திக்கலாம். மற்றபடி, கோடை விடுமுறை, கிறிஸ்துமஸ் விடுமுறை நாட்களில் சேர்ந்து இருக்கலாம்’ என உடன்பாடு. மற்ற நாட்கள் எல்லாம் அமீரை சோகமும் விரக்தியும் விழுங்க, அவர் 'பகார்டி ரம்’மை விழுங்கிக்கொண்டிருந்தார். சினிமா உலகில் இருந்து, தன்னை முற்றிலும் விடுவித்துக்கொண்டிருந்தார். 2002-03ம் ஆண்டுகளில் அவர் நடித்து ஒரு படம்கூட வெளியாகவில்லை.

'அமீர் கான் என்ற ஒரு நடிகர் இருந்தார்’ என இறந்த காலத்தில் மீடியா பேசத் தொடங்கின... கூடவே புதிய ஒரு கிசுகிசுவும். 'ஜெஸிகா என்கிற பிரிட்டிஷ் பெண் நிருபருடன் அமீருக்குக் காதல். ஜெஸிகா கர்ப்பமாக, விஷயம் அறிந்து ரீனா, அமீரைப் பிரிந்துவிட்டார். அமீர்-ஜெஸிகாவுக்குப் பிறந்த மகன் இப்போது லண்டனில் வளர்கிறான்’... இப்படி தினுசுதினுசாகச் செய்திகள் கிளம்ப, விரக்தியில் இருந்த அமீர், மீடியாவைக் கண்டாலே கொந்தளிக்க ஆரம்பித்தார். பழைய அமீர் கானாக அவர் மீண்டு வர சில காலம் பிடித்தது.
2004-ம் ஆண்டில் ‘Madness in the Desert’ என்ற டாக்குமென்ட்ரியைத் தயாரித்து, நடித்து அதன் மூலம் 'மீண்டு வருகிறேன்’ என அறிவித்தார் அமீர். 2005-ம் ஆண்டில் 'மங்கள் பாண்டே’ வெளியானது. கிழக்கு இந்திய கம்பெனிக்காகச் சேவகம் செய்யும் ஒரு சிப்பாய், 1857-ம் ஆண்டு சிப்பாய் புரட்சிக்கு வித்திட்ட வரலாற்றுக் கதை. விமர்சகர்களால் கிழிக்கப்பட்டாலும், படம் அமீரால் பாக்ஸ் ஆபீஸில் பிழைத்தது. மறுபிரவேசம் செய்திருந்த அமீர், மறுமணமும் செய்திருந்தார். கிரண் ராவ். 'லகான்’ படத்தில் உதவி இயக்குநராக வேலைசெய்த பெண். அமீரை ஒரு ரசிகை என்ற அளவில் ஒருதலையாகக் காதலித்தார். அப்போது அமீருக்கு கிரண் மீது ஈர்ப்பு எதுவும் இல்லை. 2005-ம் ஆண்டில் கோக் விளம்பரப் படப்பிடிப்பில் இருவரும் மீண்டும் சந்தித்தனர். கிரணுடன் நட்புகொண்டார் அமீர். பிரிவின் வேதனைக்கு கிரணின் உறவு இதம் அளித்தது. ஒன்றாக சில காலம் வாழ்ந்தார்கள். பின் எந்தவித ஆடம்பரம் இல்லாமல் திருமணம் செய்துகொண்டார்கள். (2011-ம் ஆண்டில் அமீரும் கிரணும் வாடகைத் தாய் மூலமாக ஒரு மகனைப் பெற்றெடுத்துக்கொண்டனர்).
2006-ம் ஆண்டில் 'ரங் தே பசந்தி’ மூலம் 'தான் அசைக்க முடியாதவன்’ என மீண்டும் நிரூபித்தார் அமீர். 250 மில்லியன் ரூபாய் செலவில் தயாரான இந்தப் படம், சர்வதேச அளவில் 920 மில்லியன் ரூபாய் வசூலித்து, இந்தியத் திரையுலகை நிமிரவைத்தது. ஆஸ்கருக்கும் அனுப்பப்பட்டது. 1993-ம் ஆண்டில் கோபித்துக்கொண்டு சென்ற யாஷ் சோப்ராவுடன் 2006-ம் ஆண்டில் ‘Fanaa’ என்ற படம் மூலம் இணைந்தார் அமீர். நேர்த்தியான திரைக்கதையாலும், அமீர்-கஜோலின் கெமிஸ்ட்ரியாலும், படம் ஓகோ. 'பாலிவுட்டின் அதிக பொருட்செலவில் தயாரான படம்’ (ரூபாய் 500 மில்லியன்) எனப் பேசப்பட்ட இந்தப் படத்தின் வசூல் 2.04 பில்லியன் ரூபாய்.
அமோல் குப்தே, 'அக்ஷய் கன்னாவுக்கு ஒரு கதை இருக்கிறது. நீங்கள் சிபாரிசு செய்யுங்கள்’ என அமீரைத் தேடிவந்தார். அமீர் கதை கேட்டார். உருகி நின்றார். 'இதை ஏன் நீங்கள் எனக்காகச் சொல்லவில்லை?’ என்றார் அமோலிடம். அதுதான் 'தாரே ஜமீன் பர்’. ராம் சங்கர் நிகும்ப் என்ற ஆசிரியர் கதாபாத்திரத்தில் எந்தவித மிகையுணர்வும் இன்றி வாழ்ந்திருந்த அமீர், சர்வதேச அளவிலும் பலரது மனங்களைக் கொள்ளைகொண்டார். பாக்ஸ் ஆபீஸ் அதிரும் வசூலுடன், பல விருதுகளை வென்ற 'தாரே ஜமீன் பர்’, ஆஸ்கருக்கும் இந்தியாவின் சார்பாக அனுப்பப்பட்டது.
'தாரே ஜமீன் பர்’ என்ற உணர்வுபூர்வ காவியத்துக்குப் பிறகு, 'கஜினி’ (2008) போன்ற பக்கா மாஸ் படத்திலும் தன்னை நேர்த்தியாகப் பொருத்திக்கொண்டு வசூலை அள்ள முடியும் எனச் சொல்லி அடித்தார் அமீர். சிக்ஸ்பேக் உடலும், ஒட்ட வெட்டிய முடியும், அமீரின் அதிரடிக்கும் ஆக்ஷனும், ஏ.ஆர்.முருகதாஸின் இந்தி கஜினியை 'இந்தியாவின் அதிக வசூல் செய்த படம்’ என உயரத்தில் வைத்தது. 2009-ம் ஆண்டில் சேத்தன் பகத்தின் நாவலை அடிப்படையாகக்கொண்டு தயாரிக்கப்பட்டு, அமீர் கான் நடிப்பில் வெளியான
'3 இடியட்ஸ்’ திரைப்படம், அந்த வசூல் சாதனையை முறியடித்தது. இந்தியக் கல்வி முறையைச் சாடும் இந்தப் படத்தில் 44 வயது அமீர் கானுக்கு விடப்பட்ட சவால், கல்லூரி மாணவனாக மாற வேண்டும். உடல் எடையைக் குறைத்து, நடை, உடை, பாவனைகளை ட்ரெண்டுக்கு ஏற்ப மாற்றி, இளம் தலைமுறையினரே பொறாமைப்படும் ஸ்மார்ட் மாணவனாக அநாயாசமாகக் கலக்கினார் அமீர்.
அடுத்து இதைத்தான் அமீர் கான் செய்வார் என யாராலுமே கணிக்க முடியாததாக அவரது ஒவ்வொரு திரைப்படமும் இருப்பது அவரது ப்ளஸ். தண்டவாளம் ஒன்றில் டேப் ரிக்கார்டரால் அங்கத்தை மறைத்தபடி, அமீர் கான் நிற்பதாக ‘PK’-வின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளிவந்தபோதே பரபரப்பு பற்றிக்கொண்டது. வேற்றுக்கிரகத்தில் இருந்து தவறி, பூமியில் வந்து விழுந்த ஏலியனாக அமீரின் 'கண் இமைக்காத’ நடிப்பு, வைத்த கண் வாங்காமல் ரசிகர்களை ரசிக்கச் செய்தது. ‘PK’ (2014) இந்தியாவின் அதிக வசூல் செய்த படமாகச் சாதனை செய்தது. அடுத்து 'டங்கல்’ என்ற படத்தில் மல்யுத்த வீரராக, இரண்டு பெண்களின் தந்தையாக, நரைத்த தலையுடன், அதிகரித்த உடல் எடையுடன் நடித்துக்கொண்டிருக்கிறார் அமீர்.
'எனக்கு எந்தக் கவலையும் இல்லை என மற்றவர்களுக்குத் தோன்றும். ஆனால், நான் ஒவ்வொரு படத்திலும் அதிகபட்ச ரிஸ்க் எடுத்துக்கொண்டிருக்கிறேன். இந்தப் படம் படுதோல்வி அடைந்துவிடுமோ என்ற பாதுகாப்பற்ற உணர்வுடன்தான் எப்போதும் இயங்குகிறேன். நரைத்த தலையுடன், பருத்த உடலுடன் இப்போது என்னைக் கண்ணாடியில் பார்க்கும்போது, மக்கள் என்னை ரசிக்க மாட்டார்களோ என்ற பயம் சூழ்கிறது. இருந்தாலும் அந்தந்தக் கதாபாத்திரங்களுக்கு உரிய நியாயத்தை நான் செய்தே ஆக வேண்டும். வெற்றிக்கான ஃபார்முலா என என்னிடம் எதுவும் இல்லை. வித்தியாசமான முயற்சிகளும், என்னைப் புதுப்பித்துக்கொண்டே இருத்தலும் என் தொழிலுக்கு அவசியம். அதைத்தான் எப்போதும் செய்துகொண்டிருக்கிறேன்’ என்கிறார் அமீர்
ஆம், அந்த அர்ப்பணிப்புதான் அமீர் கானைத் தனித்துவமிக்க சூப்பர் ஸ்டாராக, திரையுலகில் ரசிகர்களின் மனதில் வாழ வைத்துக்கொண்டிருக்கிறது!
சத்யமேவ ஜெயதே!

ஸ்டார் நிறுவனம் தயாரித்த ரியாலிட்டி ஷோ. அமீர் கான் தொகுத்து வழங்கிய முதல் டி.வி நிகழ்ச்சி. மருத்துவ முறைகேடுகள், பாலியல் அச்சுறுத்தல்கள், வரதட்சணைக் கொடுமை... எனச் சமூகத்தின் பல்வேறு அவலங்களை அலசி ஆராய்ந்து, புள்ளிவிவரங்களை அள்ளித்தெளித்து, விழிப்புஉணர்வை ஏற்படுத்தும் ஷோ. மொழிமாற்றம் செய்யப்பட்டு பல்வேறு மொழிகளில் ஒளிபரப்பாகி, அமீர் கானை இந்தியா எங்கும் கொண்டுசென்ற மெகா ஹிட் நிகழ்ச்சியும்கூட. 2014-ம் ஆண்டில் மூன்றாவது சீஸன் ஒளிபரப்பானது. ' 'சத்யமேவ ஜயதே’வில் பங்கேற்று நடத்தியதே என் வாழ்வின் திருப்திகரச் செயல்’ என்பது அமீரின் ஸ்டேட்மென்ட். 'இதெல்லாம் டி.ஆர்.பி-க்காக கார்ப்பரேட் நிறுவனங்களுடன் கைகோத்து அமீர் நடத்திய நாடகம்’ என்ற சர்ச்சைகளுக்கும் குறைவில்லை!
'விருதுகள் வேஸ்ட்!’
** பத்மஸ்ரீ, பத்ம பூஷண், நான்கு தேசிய விருதுகள், ஏழு ஃபிலிம்ஃபேர் விருதுகள்... என பல விருதுகளை வென்றுள்ள அமீர் கான், பல வருடங்களாகவே எந்தப் பட விருது வழங்கும் விழாக்களிலும், பிற பொதுநிகழ்ச்சிகளிலும் கலந்துகொள்வது இல்லை. 'இந்தியப் பட விருதுகள் அதன் நம்பகத்தன்மையை இழந்துவிட்டன’ என்பதே அமீரின் அழுத்தமான கருத்து.
** நர்மதை அணை பிரச்னையில் மேதா பட்கருக்கு ஆதரவாக அமீர் கானும் குரல் எழுப்பினார். ஆகவே, பா.ஜ.க-வுடன் அமீருக்கு உரசல். குஜராத்தில் அவரது படமான ‘Fanaa’ வை சில திரையரங்க உரிமையாளர்கள் வெளியிடாமல் புறக்கணித்தனர்.

** காந்தியக் கொள்கையில் அமீருக்கு ஈடுபாடு உண்டு. ஜன் லோக்பாலை நிறைவேற்ற வேண்டும் எனக் குரல்கொடுத்த பிரபலங்களில் அமீர் கானும் ஒருவர்.
** அமீர் கான் தயாரிப்பில் வெளியான இந்திய விவசாயிகளின் தற்கொலை பற்றிப் பேசிய ‘Peepli Live’ முக்கியமானது.
** லண்டன் மெழுகுச்சிலை அருங்காட்சியகத்தில் அமீருக்கும் சிலை வைக்கப்பட்டிருக்கிறது. அதைக் காண அழைப்பு வந்தபோது 'எனக்கு முக்கியம் இல்லாத விஷயம் அது’ என மறுத்துவிட்டார்.