எண்ணம் வண்ணம்: சந்தோஷ் நாராயணன்

அந்த ரெஜிஸ்டர் தபாலை, கையெழுத்துப் போட்டு வாங்கினார் கடவுள். இப்போதெல்லாம் பிரார்த்தனைகளை கூரியரில் அனுப்பிவிடுகிறார்கள். ஆர்வத்துடன் கடிதத்தைப் பிரித்துப் படித்தார்.
'வணக்கம் கடவுள் சார்...’ என ஆரம்பித்தது கடிதம்.
'உங்கள் பெருங்கருணையால் நாங்கள் பெற்றோர் ஆகப்போகிறோம். அதற்கு மிக்க நன்றி...’ எனக் கடிதம் தொடர்ந்தது.
'எங்களுக்குப் பிறக்கப்போகும் குழந்தையை நினைத்து நாங்கள் மிகுந்த எதிர்பார்ப்போடு காத்திருக்கிறோம். அந்தக் குழந்தை எப்படி வளரப்போகிறது, என்னவாகப்போகிறது, அதன் எதிர்காலம் எப்படி இருக்கும், நன்றாகப் படிக்குமா... என தினமும் யோசிப்பதே எங்களுக்கு வேலையாகிவிட்டது’ - கடவுள் பெருமூச்சு விட்டபடி மேலும் தொடர்ந்து படித்தார்.
'அந்தக் குழந்தையின் எதிர்கால வாழ்க்கை பற்றிய
முழு விவரங்களும் உங்களுக்குத் தெரியும் என்பதை நாங்கள் அறிவோம். நீங்கள் ஒரு விஷயம் பண்ண முடியுமா?’ - கடவுள் புருவத்தை உயர்த்தியபடி அடுத்த வரியைப் படித்தார்.
'வி கான்ட் வெயிட். குழந்தையின் வாழ்க்கையை ஒரு டீஸர் கட் செய்து எங்களுக்கு அனுப்ப முடியுமா... ப்ளீஸ்!’
விஷுவல் கார்னர்
சினிமா போஸ்டர்கள்
'ஜுராஸிக் பார்க்’ போஸ்டர்கள் உங்களுக்கு ஞாபகம் இருக்கும். அதை வடிவமைத்தவர் ஜான் ஆல்வின். ஹாலிவுட் சினிமாக்களின் சில முக்கிய போஸ்டர்களுக்கு வடிவம்கொடுத்தவர். எனக்கு மிகப் பிடித்த டிசைனர்களில் ஒருவர். 'பிளேடு ரன்னர்’, 'ஈ.டி’, 'தி லயன் கிங்’ போன்ற பல படங்களின் போஸ்டர்கள் உதாரணம்.


ஜான் அடிப்படையில் ஓவியர். அந்தக் கால போஸ்டர் டிசைனர்கள், ஓவியர்களாகவும் இருந்தாக

வேண்டும். பெரும்பாலும் போஸ்டருக்கு, கலர்களால் வரையப்படும் ஓவியங்கள்தான் டிசைனாக மாற்றப்படும். அது கணினி இல்லாத காலம். 1948-ம் ஆண்டில் பிறந்த ஜான், 2008-ம் ஆண்டில் தன் 59-ம் வயதில் இறந்தார். தன் 24-வது வயதில் 'பிளேசிங் சாடில்ஸ்’ என்னும் சினிமாவுக்கு முதல் போஸ்டர் வரைந்தவர், தன் வாழ்வின் மூன்றில் இரண்டு பங்கை சினிமா போஸ்டர்கள் டிசைன் செய்வதிலேயே கழித்தார். அவருடைய படைப்புகள் ‘The Art of John Alvin’ என்ற பெயரில் புத்தகமாக வெளிவந்திருக்கிறது.
நம் ஊரிலும் அன்றைய ஓவியர் மாதவன் முதல் இன்றைய இளம் டிசைனர்கள் டூனிஜான், வின்சி ராஜ் என சினிமா போஸ்டர் வடிவமைக்கும் கலைஞர்கள் பற்றி எழுதினால், ஒரு புத்தகம் தேறும். அது தமிழ் சினிமா வரலாற்றின் கலர்ஃபுல் பக்கங்களாகவும் இருக்கும்!

ஆஸ்கர் சிலை
ஆஸ்கர் விருது என்பது சினிமாக்காரர்களின் வாழ்நாள் கனவு. அந்த விருதுச் சிலை பற்றிய சில விஷ§வல் தகவல்கள் இங்கே...
13.5 இன்ச் உயரம்கொண்ட அந்தச் சிலை, நீங்கள் யூகிப்பதைவிட கனமானது. கிட்டத்தட்ட 3 கிலோ 800 கிராம் எடை. முன்னர் எல்லாம் அந்தச் சிலையை தங்க முலாம் பூசிய வெண்கலத்தில் செய்தார்கள். பிறகு பிரிட்டானியா மெட்டல் என்கிற புது உலோகத்தின் மீது தகுதிவாரியாக தாமிரம், நிக்கல், வெள்ளி, தங்கம் எனப் பூசுகிறார்கள்.
ஃபிலிம் ரீலைப் பீடமாகக்கொண்டும், கைகளில் வாளைத் தலைகீழாக ஏந்தியபடியும் நிற்கும் இந்தச் சிலையை வரைந்தவர், எம்.ஜி.எம் ஸ்டுடியோவில் கலை இயக்குநராக இருந்த செட்ரிக் கிப்பான்ஸ் (Cedric Gibbons). சிலையாக வடித்தவர் லாஸ் ஏஞ்ஜலஸைச் சேர்ந்த ஜார்ஜ் ஸ்டேன்லி (George Stanley) என்கிற சிற்பி. இந்தச் சிலைக்காக நிர்வாண போஸ் கொடுத்தவர் மெக்ஸிகன் இயக்குநரும் நடிகருமான எமிலியோ ஃபெர்னாண்டஸ் (Emilio Fernandez) என்கிறார்கள். ஆனால், அவர் தோற்றத்தை இந்தச் சிலையோடு ஒப்பிட்டால், 'சிற்பி தன் கண்களை மூடிக்கொண்டுதான் இந்தச் சிலையைச் செதுக்கியிருப்பாரோ’ என சந்தேகம் வருகிறது. அவ்வளவு தோற்றப்பிழை.
ஜனவரி மாதம்தோறும், ஆர்.எஸ் ஓவன்ஸ் என்கிற சிக்காக்கோவைச் சேர்ந்த கம்பெனிதான் உலோகங்களை உருக்கி, வார்த்து, உலகமே உற்றுப்பார்க்கும் இந்தச் சிலைகளை வடிவமைக்கிறது. இரண்டாம் உலகப்போர் காலத்தில் ஏற்பட்ட உலோகங்களின் பற்றாக்குறை காரணமாக, பிளாஸ்டர் ஆஃப் பாரிஸில் செய்து, தங்க வண்ணம் பூசிய சிலைகளையே, விருதுகளாகக் கொடுத்திருக்கிறார்கள்.

இந்த விருதுச் சிலையை முதலில் பெற்று வரலாற்றில் இடம்பிடித்தவர், சிறந்த நடிகர் விருதுபெற்ற எமில் ஜன்னிங்ஸ் என்கிற நடிகர். வெள்ளையர்களுக்கு எதிராக ஆடையை ஆயுதம் ஆக்கினார் காந்தி. அவரைப் பற்றிய ரிச்சர்டு அட்டன்பரோவின் படத்துக்கு ஆடைகளை வடிவமைத்து, அதே வெள்ளைக்காரர்களிடம் ஆஸ்கர் விருதுபெற்ற முதல் இந்தியர் பானு அத்தையா. பிறகு சத்யஜித் ரேவுக்கு வாழ்நாள் விருது, சமீபத்தில் ஏ.ஆர்.ரஹ்மான், ரசூல் பூக்குட்டி ஆகியோர் மூலமும், இந்தச் சிலைகளில் சில இந்தியாவிலும் இருக்கின்றன. அதிலும் கைகளுக்கு ஒன்று என, நமது இசைப்புயல் ஏந்தி நின்ற இரண்டு ஆஸ்கர் சிலைகளை மறக்க முடியுமா?! எடை கிட்டத்தட்ட ஏழு கிலோவுக்கு மேல். ரஹ்மான் என்றால் வெயிட்தானே!
கேசட்
15 வருடங்கள் முன்பு வரை புழக்கத்தில் இருந்த பாடல் கேசட்டுகள், அதன் காந்த நாடாபோல நமது ஞாபகங்களில் சுருண்டு கிடக்கின்றன. தோசைக்கல் போன்ற இசைத் தட்டுகள் வழக்கொழிந்து, இந்த கேசட்கள் நம் ஊர் மியூசிக்கல்ஸ் கடைகளுக்கு வர ஆரம்பித்தது 80-களில் என நினைக்கிறேன்.

இளையராஜா ரசிகர்களின் நாஸ்டால்ஜியா நோட்களில் இதற்குப் பிரத்யேக இடம் உண்டு. எலெக்ட்ரானிக் யுகம் எங்கள் கிராமங்களையும் தீண்டிய 80-களில், மைனர் செயின் அணிந்து அரேபியன் ஸ்பிரே மணக்க, 'கல்ஃப்’ ரிட்டர்ன் ஆசாமிகளுடன் டேப்ரிக்கார்டரும் கேசட்களும் அம்பாஸிடர் காரில் வந்து இறங்கின. என் போன்ற சிறுவர்களுக்கு அது ஒரு மேஜிக் வஸ்து. பழசாகிவிட்ட சில கேசட்களை உடைத்து, அதன் கறுப்புக் காந்த நாடாக்களை காற்றில் பறக்கவிடுவது பொழுதுபோக்கு. 'அந்த இத்துனூண்டு நாடாக்களுக்குள்ளே எப்படி எஸ்.பி.பி-யும் சித்ராவும் குரல்களாகக் குடிகொண்டிருக்கிறார்கள்?’ என்பது புரியாத புதிராக இருந்தது.
வெவ்வேறு படங்களின் பாடல்களை டிக் அடித்து, கடைக்காரரிடம் புதிய கேசட்களில் பதிவுசெய்து வாங்குவது என பைரசியைப் பழகிக்கொண்டது அப்படித் தான். இனி வேலைக்கு ஆகாது எனக் கடைக்காரர் கதறுவது வரை, ஒரே கேசட்டில் திரும்பத் திரும்பப் பாடல்கள் பதிவுசெய்ததும் ஞாபகம் வருகிறது. கேசட்கள் போட்டு பாடல் கேட்கும் வாக்மேன்களை, காதில் மாட்டிக்கொண்டு மாடர்ன் லுக் காட்டிய அந்தக் கால இளைஞர்கள், இன்று தங்கள் பிள்ளைகளிடம் ஐ-பாட் ஆபரேட் பண்ணுவது எப்படி என அப்பாவியாகக் கேட்டுக்கொண்டிருப்பதைப் பார்க்கிறேன்.
இவ்வளவு ஃபார்வேர்டாக டெக்னாலஜி வளர்ந்துவிட்ட நிலையில் நம் நினைவுகளின் 'பாஸ்’ பட்டனைக் கொஞ்சம் அழுத்தி, பழசை நினைத்துப்பார்க்க மட்டுமே முடிகிறது. காலத்துக்கு ஏது ரீவைண்ட்?!

கிளாப் போர்டு
கிளாப் போர்டு தெரியும்தானே? நேரில் பார்த்திராதவர்கள் 'கல்லுக்குள் ஈரம்’ முதல் 'ஜிகர்தண்டா’ வரை சினிமா பற்றிய சினிமாக்களில் அதை நிச்சயம் பார்த்திருப்போம்.
இந்தக் கிளாப் போர்டுக்கு... 'கிளாப்பர், சிலாப்பர் போர்டு, சிங்க் சிலேட்’... என ஊருக்கு ஒரு பெயர் இருக்கிறது. ஆனால், பெரும்பாலும் 'கிளாப் போர்டு’ என்றே சொல்கிறார்கள். 1920-களில் இதை உருவாக்கியவர் எஃப்.டபிள்யூ.த்ரிங் (F.W.Thring) என்கிற ஆஸ்திரேலிய இயக்குநர் என்கிறார்கள். காரணம், சினிமா பேச ஆரம்பித்ததுதான். சினிமா எடுக்கும்போது படம் கேமரா ஃபிலிமிலும், பேச்சும் சத்தங்களும் அனலாக் மேக்னெட்டிக் டேப்பிலும் தனித்தனியாகப் பதிவுசெய்யப்படும். எடிட்டிங்கில் இவை இரண்டையும் சரியான கணத்தில் இணைக்க, ஷூட்டிங்போதே ஏதாவது செய்தாகவேண்டிய கட்டாயம். அதுதான் கிளாப் போர்டுக்கான தேவையை சினிமாவில் கொண்டுவந்தது.
கிளாப் போர்டின் அடிக்கக்கூடிய மேற்பகுதியை 'கிளாப்பர்’ என்றும், டேக்குகளை சாக்பீஸால் குறிக்கும் பகுதியை 'சிலேட்’ என்றும் சொல்வார்கள். சீன் நம்பர், டேக் போன்ற இன்னபிற தகவல்களை அதில் எழுதிக்கொள்வார்கள். ஒரு காட்சியை எடுக்க ஆரம்பிக்கும்போது கேமராவின் முன்பு, அந்தத் தகவல்களைச் சொல்லியபடி அடிக்கவும், அதன் சத்தம் அனலாக் டேப்பிலும், எழுதிய தகவல்கள் கேமராவிலும் பதிவாகும். எடிட்டிங்கில் தேவைப்பட்ட ஷாட்டுகளைக் கோக்க அது உதவும்.
இன்று டிஜிட்டல் சினிமாவில் கிளாப்பர்களும் டிஜிட்டல் ஆகிவிட்டது. இந்த டிஜிட்டல் கிளாப் போர்டைக் கண்டுபிடித்தவர் மேத்யூ டேவிஸ். இந்த ஸ்மார்ட் சிலேட்டுகளில் தகவல்கள் எல்.இ.டி-யாக ஒளிர்ந்து, டைம் கோடுகளாகப் பதிவாகின்றன. இப்படி கேமரா முன்பாக கிளாப் அடித்துக்கொள்வது முதல் நடிகர்களுக்காக ரசிகர்கள் ஃபேஸ்புக்கில் அடித்துக்கொள்வது வரை இன்று டிஜிட்டல்மயம் ஆகிப்போனது சினிமா!