மற்ற எபிசோடுகள்
Published:Updated:

அனுபவங்கள் பேசுகின்றன!

ஒவ்வொன்றுக்கும் பரிசு: ரூ.200

துயரத்தைப் பெருக்கிய ‘துக்கிரி’ பேச்சு!

அனுபவங்கள் பேசுகின்றன!

ன் நெருங்கிய உறவினர் இறந்த செய்தி கேட்டு அவரது வீட்டுக்குத் துக்கம் விசாரிக்கச் சென்றேன். அப்பா, அம்மா, உறவுகள் என கூட்டுக் குடும்பமாக வசித்தவர் அவர். துக்க வீட்டில் எங்கள் உறவுக்கார பெரியவர் ஒருவர், “நல்லாயிருந்தவர் பொட்டுனு போயிட்டார். கிழம் கட்டைகள் எல்லாம் கல்லுகுண்டு மாதிரி இருக்குதுங்க” என்று சொன்னார். ஏற்கெனவே மகன் இறந்த துக்கத்தில் இருந்த அந்த வீட்டுப் பெரியவர்கள், இந்த வார்த்தைகளைக் கேட்டு துக்கம் தாளாமல் கதறி அழுதனர்.

என் உறவினரின் மகன், அவர்களை ஆசுவாசப்படுத்தி, “அப்பா போயிட்டார், இனிமேல் எனக்கும் அம்மாவுக்கும் நீங்கதானே தாத்தா எல்லாமே..! நீங்களே இடிஞ்சு போயிட்டா எப்படி?” என்று கூறினார். துக்க வீட்டில் பேசக்கூடாத வார்த்தைகளைச் சொன்ன ஒரு கோர முகத்தையும், தந்தையை இழந்த நிலையிலும் தன் தாத்தா, பாட்டியை ஆறுதல்படுத்திய இன்னொரு நல்ல மனசையும் பார்க்க நேர்ந்தது.

இடம், பொருள் பார்க்காமல் மற்றவர்கள் மனம் புண்படும்படி பேசுகிறவர்கள் திருந்தினால் நல்லது!

- ஆர்.வசந்தி, போளூர்

உஷார் தோழி!

அனுபவங்கள் பேசுகின்றன!

நானும் என் தோழியும் டிரெய்ன் டிக்கெட் ரிசர்வ் செய்ய சென்றோம். ரிசர்வேஷன் ஃபார்மை நிரப்பும்போது டிரெய்ன் நம்பரை தவறாக எழுதியதால், நான் அந்த ஃபார்மை கீழேபோட்டு வேறு ஃபார்மில் சரியாக எழுதி ரிசர்வ் செய்தேன். பிறகு கிளம்பும்போது என் தோழி நான் தவறாக டிரெய்ன் நம்பர் எழுதி கீழே போட்ட ஃபார்மை எடுத்து பல துண்டுகளாகக் கிழித்து கவனமாக அவற்றை குப்பைத் தொட்டியில் போட்டாள். காரணம் கேட்டதற்கு, “ரிசர்வேஷன் ஃபார்மில் பெயர், வயது, முகவரி, மொபைல் நம்பர், பயண தேதி என சகலத்தையும் எழுதுகிறோம். இதை யாராவது விஷமிகள் பார்த்தால் தேவையில்லாமல் மெசேஜ், போன் செய்யலாம்... பயண தேதி அன்று வீட்டுப் பக்கம் வந்து பூட்டியுள்ளதா என நோட்டம் விடலாம். எனவேதான் அவற்றை கிழித்துப் போட்டேன்!” என்றாள். அவளை பாராட்டிய நான், இனிமேல் அது போல் செய்ய முடிவெடுத்தேன்.

- பி.ஆனந்தி, போரூர்

`மிஸ்டுகால்’... ஜாக்கிரதை!

அனுபவங்கள் பேசுகின்றன!

டந்த வாரம் எனது மொபைல் போனுக்கு ஒரு குறிப்பிட்ட எண்ணிலிருந்து மிஸ்டு கால் வந்தது. அது ஒரு பத்து இலக்க எண். முதல் நம்பர் இரண்டில் துவங்கியிருந்தது. இரண்டுக்கு முன் `+’ என்ற குறியீடு இருந்தது. புதிய நம்பராக இருந்ததால், பதிலுக்கு நானும் மிஸ்டு கால் கொடுத்தேன். அடுத்த நொடியே எனது மொபைல் அக்கவுன்ட்டில் இருந்து நாற்பது ரூபாய் போனதாக பேலன்ஸ் ரிப்போர்ட் வந்தது. உடனே கஸ்டமர் கேரை தொடர்புகொண்டு விவரத்தைக் கூறினேன். அதற்கு எனக்கு கிடைத்த பதில்... `+2’-விலோ, `+3’-யிலோ துவங்கும் எண்ணுக்கு மிஸ்டு கால் தந்தால்கூட பணம் போய்விடும்; இழந்த பணத்தைத் திரும்ப பெற முடியாது என்பதுதான். `அது ஒரு ஃப்ராடு கால். வெளிநாட்டிலிருந்து வருகிறது’ என பதில் கூறிய கஸ்டமர் கேர் நபர், `வேண்டுமானால் இந்த எண்ணில் புகார் தெரிவியுங்கள்’ என கூறி ஒரு எண்ணைத் தந்தார். அந்த எண்ணுக்கு பலமுறை தொடர்புகொண்ட போதும் இந்தியிலேயே பேசுகின்றனர். நான் பலமுறை எனக்கு இந்தி தெரியாது என ஆங்கிலத்தில் கூறியும் பலனில்லை. நொந்துபோய் விட்டுவிட்டேன்.

இதைப் படிக்கும் வாசகிகளே... எச்சரிக்கையாக இருங்கள்!

- கே.தீபிகா, சென்னை-116

காலத்தின் கட்டாயம்!

அனுபவங்கள் பேசுகின்றன!

மீபத்தில் நான் பேருந்தில் ஏறினேன். கூட்டம் அதிகம் இல்லை. அந்த சமயத்தில் ஒரு திருநங்கை ஒருவர் பேருந்தில் ஏறினார். அப்போது அங்கு அமர்ந்திருந்த ஒரு பெண்மணியிடம் அவருடைய பிள்ளை ``இது யாரும்மா?’’ என்று கேட்டான். அதற்கு அந்தப் பெண்மணி திருநங்கைகளைப் கொச்சையாக விளிக்கும் பதத்தைக் கூறினார். அது அந்த திருநங்கை காதில் விழுந்து, சண்டைக்குச் சென்றார். அந்த பெண்மணி அமைதியாக இருந்துவிட்டார்.

சிறிது நேரத்தில் பஸ்ஸில் கூட்டம் அதிகமானது. அந்த திருநங்கை பக்கத்தில் ஒருவரும் அமர முன்வரவில்லை. தெரியாமல் அமர்ந்தவர்களும் உடனே பதறி எழுந்துவிட்டனர். பின்பு அடுத்த ஸ்டாப்பில் ஒரு குழந்தையுடன் ஏறிய பெண்... அவர் பக்கத்தில் அமர்ந்தார். உடனே அந்த திருநங்கை முகத்தில் மகிழ்ச்சி! குழந்தையிடம் அன்பாக பேசினார். இறங்கும்போது `டாட்டா’ காட்டினார்.

பிள்ளைகளிடம் திருநங்கைகளைப் பற்றி யாரும் தவறாகக் கூறக்கூடாது.  அவர்களில் சிலர் தவறாக நடப்பதாலும், கோபம் கொள்வதாலும் அவர்களை நெருங்க சிலர் பயப்படுகிறார்கள். அதனால் அவர்களும் தங்கள் கண்ணியத்தைக் கட்டிக்காக்க வேண்டும். சமூகம் மாறிவருவதை உணர்ந்து, எல்லோரும் திருநங்கைகளை மரியாதையாக நடத்த வேண்டியது காலத்தின் கட்டாயம்!

- எஸ்.சுசிலா ராஜ், திருநெல்வேலி