``சொந்த வாழ்வை, குறிப்பிட்ட ஒரு காரியத்துக்கு என சமர்ப்பணம் செய்து வாழவேண்டியதுதான் எந்தத் தமிழனுடைய கடமையும் என நினைக்கிறேன். எதற்கேனும் சமர்ப்பணம் செய்யப்படாத வாழ்வு, உப்பில்லாத ஊறுகாய். குறிப்பாக, இன்றைய இலக்கிய ஆசிரியர்களுக்குச் சமர்ப்பணம் இன்றியமையாதது” என்று சொன்ன ந.பிச்சமூர்த்தி, தன் வாழ்நாள் முழுவதையும் இலக்கியத்துக்காகச் சமர்ப்பணம் செய்தார் எனச் சொல்ல முடியாது.1900 ஆகஸ்ட் 15-ம் தேதி பிறந்து, 1976 டிசம்பர் 4-ம் தேதி காலமானவர் ந.பி.
முதலில் ஆங்கிலத்தில் கதைகள் எழுதினார். 1933-ம் ஆண்டு கலைமகள் நடத்திய சிறுகதைப் போட்டியில் அவரது `முள்ளும் ராஜாவும்' கதை முதல் பரிசு பெற்றது. 1944-ம் ஆண்டில் அவரது முதல் சிறுகதைத் தொகுப்பு `பதினெட்டாம் பெருக்கு' வெளியானது. 1933-ம் ஆண்டு முதல் 1976-ம் ஆண்டு வரையிலான இலக்கிய வாழ்க்கை எனச் சொல்லிவிட முடியாமல், இடையில் 18 ஆண்டுகாலம் எதுவுமே எழுதாமலும் இருந்தார். மௌனிபோலவே இவருக்கும் பிறரால் கட்டமைக்கப்பட்ட பிம்பம் ஒன்று உண்டு. குறிப்பாக, நவீன இலக்கிய முன்னோடிகளில் பட்டியல் போடுவதில் உற்சாகம்மிக்க ஒருவரான க.நா.சு.இவரை ஒரு `வேதாந்தி' எனத் திரும்பத் திரும்பச் சொல்லி, அப்படி ஒரு தத்துவ முகத்தை இவருக்கு அளித்துவிட்டார் எனலாம்.
ரவீந்திரநாத் தாகூருடன் இவரை ஒப்பிட்டுப் பேசுவோரும் உண்டு. ஆனால், அந்தப் பிம்பத்தை பிச்சமூர்த்தி மறுக்கிறார். ``தாகூருக்கும் எனக்கும் எந்தவிதத்தில் சம்பந்தம் இருக்கிறது எனத் தெரியவில்லை. தாடியைத் தவிர. எல்லோரும் படித்த அளவுக்கோ, படிக்காத அளவுக்கோதான் நானும் தாகூரைப் படித்திருக்கிறேன் ஆங்கிலத்தில். ஆனால், காளிதாசனுக்குப் பிறகு நம் நாட்டில் தோன்றிய மகாகவி, தாகூர் ஒருவரே எனச் சொல்வேன்.”
1974-ம் ஆண்டில் என்னுடைய 20-வது வயதில் முதன்முதலாக ந.பிச்சமூர்த்தியின் `பதினெட்டாம் பெருக்கு’ சிறுகதையை வாசித்து, பெரும் மனக்கிளர்ச்சி அடைந்தேன். முழுகாமல் இருக்கும் மனைவி ஊருக்குப் போய்விட, தனியே வீட்டில் இருக்கும் இளைஞன் காவிரியின் ஆற்றுப்பெருக்கைப் பார்த்தபடி திண்ணையில் இருக்கிறான். அப்போது அவன் வீடு தேடி வரும் இளம் ஏழைப்பெண் மீது ஈர்ப்புக்கொண்டு அவளுக்கு அரிசியும் பணமும் கொடுத்து அனுப்புகிறான். போகும்போது அவள் ``வருகிறேன்” என்று சொன்னதை அவனையறியாமல் ``எப்போது?” என்ற கேள்வியால் எதிர்கொள்கிறான். அவள், அவன் கேட்டதன் உள்ளர்த்தம் புரிந்துகொண்டு, மாலை 5 நாழிகைக்கு வருவதாகச் சொல்லிப் பிரிகிறாள். அன்று பகல்பொழுது முழுவதும் காவிரியின் பதினெட்டாம் பெருக்குப்போல அவன் மனதில் பொங்கிப் பிரவகிக்கும் காமத்துக்கும், `ச்சீ..! அது தப்பு' என்னும் அறத்துக்கும் நடக்கும் மனப்போராட்டமாகக் கதை விரிகிறது. `அவள் வராமலே போகட்டும்!' என்று மனம் ஒருபுறம் பதைக்கிறது. இன்னொரு புறம் `வருவாளா... மாட்டாளா..?' என ஏங்குகிறது. கடைசியில் அவள் வருகிறாள். காலையில் அவன் பார்த்த கவர்ந்திழுக்கும் தோற்றப்பொலிவுடன் இப்போது அவள் இல்லை.
``அதற்குள் அவள் வந்துவிட்டாள். ஆனால், காலையில் தென்பட்ட அராபிக் குதிரை போன்ற தோற்றத்தைக் காணோம். ஒடுங்கிப் பயந்து இருளுடன் இருளாக முயலும் ஒரு நிழல்போலத் தென்பட்டாள். அவள் பதுங்கிய மாதிரி அவன் உள்ளத்தைப் பிளந்தது. பழைய விருத்திகள் இருந்த இடம் தெரியவில்லை.
மறுநொடிக்குள் வீட்டுக்குள் போய் வந்து ஒரு ரூபாயை அவள் கையில் கொடுத்துவிட்டான். அவள் மௌனமாகத் திரும்பினாள். அவளுக்குப் பின்னால் நீண்டு விழுந்த அவளுடைய நிழல், தெருவில் அசைந்துகொண்டிருந்தது. கண்ணுக்கு மறையும் மட்டும் அவள் உருவத்தையும் நிழலையும் மாடியிலிருந்து பார்த்து நின்றான். பிறகு, குறுக்கும் நெடுக்குமாக உலவ ஆரம்பித்தான்.
காவிரி மட்டும் யாதொரு சிந்தனையுமின்றி நுரைமலர் குலுங்க, காதலைத் தேடி கடல் நோக்கிச் சென்றுகொண்டிருந்தது என்று கதையை முடிப்பார். காமம் / ஒழுக்கம் சார்ந்த கதை என்பதால் மட்டும் அந்த வயதில் இந்தக் கதை என்னை ஈர்த்ததாகச் சொல்லிவிட முடியவில்லை. எதிரே விரியும் சாதாரணக் காட்சிகளை விவரிக்கும்போதும் அதில் ஒரு தத்துவ விசாரத்தை இயல்பாகப் பேசிவிடும் ந.பி-யின் பாணிதான் ஈர்ப்பின் அடிப்படை.
ஒருபுறம் காவிரிப்பெருக்கு.பெருக்கோடு அவன் மனமும் சென்றது. கடைசியில் கடலில் போய்க் கலந்தாக வேண்டும். ஏனோ... ஒன்று மற்றொன்றில் கலப்பதுதான் விதியா அல்லது இன்பத்தின் ரகசியமா? இருக்கலாம்… காவிரி, கடலை மணக்கப்போகிறாள். அதனால்தான் அவ்வளவு ஒய்யாரமாக நுரைமலர்களையும் கரையோர நாணல்களும் மரங்களும் தரும் வண்ண மலர்களையும் தாங்கிச் செல்கிறாள். ஆனால், `கடலில் கலக்கும் நாள் என்றோ?' என நினைத்தாள்.
இந்தக் கதையில் என்றில்லை, எந்தக் கதையிலும் இந்தத் தத்துவப் பூச்சுள்ள வரிகள் ஓடுகிற ஓட்டத்தில் வந்துகொண்டே இருக்கும். `ஒருநாள்' என்றொரு நீண்ட கதை. மத்தியதர வர்க்கத்து (ஆபீஸ் குமாஸ்தா) ஒருவரின் ஒருநாள் வாழ்க்கையைச் சித்திரிக்கும் கதை. ஆபீஸ் போக பஸ் ஏறுகிறார். பஸ்ஸிலோ அளவற்றக் கூட்டம். கண்டக்டர் கத்துகிறார்.
``அதென்னங்க, அத்தனை பேரும் ஏறிட்டிங்க? ஃபுட்போர்டு பிஞ்சுபோயிடப்போவுதுங்க. இறங்குங்க, இறங்குங்க,சொன்னாக் கேளுங்க தயவுசெய்து...”
``நான் இறங்கியிருக்கக் கூடாது. இறங்கினால்கூட அவங்க மாதிரி வண்டி புறப்பட்டவுடன் ஏறியிருக்க வேண்டும். இப்போதுதான் வாழ்விலே தோல்விக்குக் காரணம் தெரிகிறது. காரியத்தை எப்படியானாலும் சாதித்துக்கொள்கிறது என்ற நினைப்பு வேண்டும். சொல்லுக்கும் சத்தியத்துக்கும் பயந்தால், அடுத்த பஸ்தான் கிடைக்கும். வாழ்வில் முன்னேறுவதற்கு முட்டுக்கட்டை என்ன என்பது விளங்கிவிட்டது. எதற்கும் ஆசை வேண்டும். வெற்றி பெற்றே தீருவேன் என்ற தீவிரம்! உண்மையில் மனத்தை நான் பார்த்துக்கொண்டிருக்கிறேனே! உண்மையில் அதற்கு எதிலுமே பிடிப்பு இல்லை. காவிரியிலே மிதக்கிற ஒடிந்த கிளைபோல வாழ்விலே போய்க்கொண்டே இருக்கிறது. பிடிப்பில்லையே, கலங்காமலாவது இருக்க வேண்டாமா?”
காவிரியும் நீர்ப்பெருக்கும் அவர் மனதில் எப்போதும் ஓடிக்கொண்டிருந்ததாக அவரது கதைகளும் கவிதைகளும் சொல்கின்றன. சி.சு.செல்லப்பாவுடனான நேர்காணலில்கூட, காவேரி கரைபுரள்வதைக் காணலாம்.
ஞானிகளுடன் உங்களுக்கு ஏதேனும் பரிச்சயம் ஏற்பட்டதா?
ந.பிச்சமூர்த்தி : இன்றும் கோயிலுக்குப் போவதைவிட பெரியோர்களை அண்டுவதே மேல் என நான் நினைக்கிறேன். இளம் வயதிலிருந்தே துறவிகள், பைத்தியம், குழந்தைகள் என்றால் எனக்கு மிக விருப்பம். சொல்லப்போனால், என்னையும் மீறியே அவர்களுடன் கலந்துவிடுவேன்.
பேட்டியாளர் : இதனால்தான் அவர்கள் சம்பந்தப்பட்டதாக உங்கள் கதைகள் அதிகம் இருக்கின்றனவோ?
ந.பிச்சமூர்த்தி : இருக்கலாம். அதுவே காரணமாக இருக்கலாம். இந்தத் தொடர்புகளால் உள்ளொளியையும் நல்ல பயனையும் அடைந்திருக்கிறேன் என உறுதியாகச் சொல்வேன். அவர்கள் தொடர்பு இல்லாமல் இருந்திருந்தால், ஆற்றில் செல்லும் கிளைபோல குறிப்பின்றி புரண்டு போய்க்கொண்டே இருந்திருப்பேன்.
ந.பிச்சமூர்த்தி என்கிற கலைஞனை முழுமையாகப் புரிந்துகொள்ள, எழுத்தாளர் சுந்தர ராமசாமியின் இந்தக் கணிப்பு நமக்கு உதவக்கூடும்.
``பிச்சமூர்த்தி, தென்னிந்தியாவில் கலைகளின் உன்னத வெளிப்பாடுகள்கொண்ட மண்ணில் பிறந்தவர். அவருடைய தகப்பனார் ஹரிகதை, நாடகம், ஆயுர்வேதம், சாகித்யம், தாந்திரீகம் போன்ற பல துறைகளில் வல்லவர் என்பது தெரிகிறது. கலை, கல்வி, சமயம், தொண்டு ஆகியவற்றின் பாதிப்பிலிருந்து கிடைக்கும் ஓர் உன்னத மனநிலைக்கும் கலாசாரத்துக்கும் பிச்சமூர்த்தி வாரிசாக வந்திருக்கிறார். வாழ்க்கையின் மேலான குறிக்கோளில் கவனம்கொண்ட குடும்பத்தின் வாரிசு. லோகாயுதப் போட்டியில் முண்டியடிப்பதிலிருந்து முற்றாக விலகி, அறிவு, கலை, பண்பாடு ஆகியவற்றின் மேன்மைகளைத் தேர்வுசெய்த குடும்பத்தின் வாரிசு. ஒரு படைப்பாளியாகவும் இந்தக் குடும்பத்தின் வாரிசாகவும் பிச்சமூர்த்தி இருக்கிறார் என்பதை, அவருடைய ஆக்கங்கள் அனைத்துமே உறுதிப்படுத்துகின்றன.
ந.பிச்சமூர்த்தியின் படைப்புலகம், பண்பட்டவர்களின் செல்வாக்கு மிகுந்தது. தார்மிக நெறிகளில் அக்கறை; ஒழுக்கங்களைப் பேணுவதில் கவலை; தன்னைச் சுற்றி வாழ்ந்திருப்பவர்கள் மீதும், ஜீவராசிகள் மீதும், இயற்கை மீதும் நேசம்; மரபு வகுத்திருக்கும் நெறிகளைப் பேண முடியாமல்போகும்போது ஆழ்ந்த மனநெருக்கடி; பிறருடைய துன்பம் கண்டு நெகிழும் மன இயல்பு ஆகிய குணங்கள்கொண்ட கதை மாந்தர்கள்தாம் படைப்பாளியின் பார்வைக்கு உவப்பானவர்கள். பொதுவாக இவர்களுடைய உன்னதங்களை நிலைநாட்டவே எதிர்மறைகொண்ட வேறு கதாபாத்திரங்கள் இவர்களைச் சூழ்ந்துவருகிறார்கள்.
படைப்பில் ந.பிச்சமூர்த்தியின் பக்கம் மிகத் தெளிவானது. அதில் ஒளிவு-மறைவு எதுவும் இல்லை. தர்மத்தையோ, ஒழுக்க நெறிகளையோ அழுத்துவது அல்லது அழுத்தும்போது உளவியலை மறந்துபோவது கலை வெற்றிக்கு இட்டுச்செல்லாமல் இருக்கலாம். ஆனால், தர்மத்தையும் ஒழுக்கத்தையும் அழுத்துவதுதான் படைப்பாளியின் கடன் என அவர் நினைக்கிறார்.
பிச்சமூர்த்தி கூறுகிறார்... ``புலன் இன்பம் அல்லது கிளர்ச்சி என்ற குறுகிய எல்லைக்குள்ளேயே பெரும்பான்மையான கதைகள் சுழல்கின்றன. நல்லது பொல்லாதது என்ற பாகுபாட்டை சில கதைகள் பொய்யாக்கிவிடுகின்றன. பிரத்ஷயமான அறிவியலுக்கும் சமூக இயலுக்கும் மெய்யுணர்வுக்கும் முரண்பட்ட சிருஷ்டிகளால் கலை உலகில் சாதிக்கக்கூடியது என்ன என்பதை சிருஷ்டிகர்த்தாக்கள் சிந்தனை செய்துபார்க்க வேண்டும். எந்தக் காரணத்தைக்கொண்டும் இலக்கிய தர்மத்தை மறக்கலாகாது.” (வானதி பதிப்பகம் வெளியிட்ட `ந.பிச்சமூர்த்தியின் `கலைமரபும் மனிதநேயமும்’ புத்தகத்தில் இடம்பெற்றிருக்கும் கட்டுரையிலிருந்து...)
என்னுடைய வாசிப்பில் ந.பிச்சமூர்த்தியின் கதைகளில் எப்போதுமே எளிய உழைப்பாளி மக்களும் நடுத்தரவர்க்கத்துப் பாவப்பட்ட ஜனங்களுமே கதாபாத்திரங்களாக வருகிறார்கள். ஆனால், அவர்கள் புதுமைப்பித்தனின் கதைகளில் வருவதைப்போல சமகால இருப்பின் தன்னுணர்வோடு கதைக்குள் வாழாமல், ஒரு தத்துவநிலையில் வாழ்வை நோக்குகிறவர்களாக ஆகிவிடுகிறார்கள். அவருடைய குடும்பத்தில் ஒவ்வொரு தலைமுறையிலும் ஒருவர் சந்நியாசியாகப்போவது வழமையாக இருந்திருக்கிறது. இவரும்கூட 20 வயதில் ரமண மகரிஷியிடம் போய் `மீட்சி’க்கு வழி கோரியவர்தான். மகரிஷியோ ``கனி முதிர்ந்தால் அதுவாகவே உதிர்ந்துவிடும்” என்று சொல்லி அனுப்பிவிட்டார். பிச்சமூர்த்தி திருமணம் செய்துகொண்டு, அலமேலு, ராஜலட்சுமி, மீனாட்சி என்னும் மூன்று பெண் குழந்தைகளுக்குத் தகப்பனாக, 13 ஆண்டுகள் கீழ்கோர்ட்டுகளில் வக்கீலாகவும், 17 ஆண்டுகள் இந்து அறநிலையத் துறை அதிகாரியாகவும், `நவ இந்தியா' பத்திரிகை ஊழியராகவும் நடுத்தரவர்க்க வாழ்வின் சகல சங்கடங்களையும் அனுபவித்தவர்தான்.
பிற மணிக்கொடி எழுத்தாளர்களைப்போலவே அவர் எழுதிய காலத்தின் சமூகக் கொந்தளிப்புகளைத் தன் படைப்பில் காட்டாத ந.பிச்சமூர்த்தி, இலக்கியத்தின் நோக்கம் என்ன என்பதில் மிகத் தெளிவான பார்வைகொண்டவராக இருந்தார். ``இந்து நாகரிகம், இலக்கியத்துக்கு இரண்டாவது ஸ்தானம்தான் கொடுத்திருக்கிறது. முதல் ஸ்தானம் ஆன்ம வேட்கைக்கு. நான் ஓர் இந்து. இந்த அடிப்படை நோக்கில் ஏற்படும் விளைவுகள் எல்லாம் ஏற்படத்தான் செய்யும்.”
இன்றைய இந்துத்துவச் சூழலில் வைத்து அவர் சொல்லும் `இந்து' என்ற சொல்லை அர்த்தப்படுத்திக்கொள்ளக் கூடாது என்றே நினைக்கிறேன். கீழ்ச்சாதி மக்களைப் பற்றிய விவரணைகளில் ஒரு மேல்சாதிப் பார்வை அல்லது தொனி அவர் கதைகளில் உண்டு என்றபோதும், நேற்றைய மனிதர்களை நேற்றைய சூழலில் வைத்தே பார்க்க வேண்டுமல்லவா?
``சொல்லைக்கொண்டு சொல்லற்ற நிலையைக் காட்ட முயல்வதுதான் இலக்கியம். அந்த இடத்தில் இலக்கிய உலகின் சிகரமும் ஆன்மிக உலகின் சிகரமும் இணைகின்றன” என்பது அவர் தரும் கூடுதல் விளக்கம்.
அவர் கதைகளில் என்னை வெகுவாகக் கவர்ந்த இன்னொரு கதை `வானம்பாடி'. பறவைகள் பற்றி அவருடைய பல கதைகளும் புகழ்பெற்ற `காட்டு வாத்து' உள்ளிட்ட பல கவிதைகளும் பேசிக்கொண்டே இருக்கின்றன என்றபோது `வானம்பாடி' கதைக்கு ஒரு தனி இடம் தந்தாக வேண்டும்.
பறவைகளைப் பிடித்து வளர்த்து பயிற்சி அளிப்பதைத் தன் வாழ்வாகக்கொண்ட ஒரு முஸல்மான் பக்கிரி, தான் பாடப் பழக்கியிருக்கும் `இஸ்ராபேல்' என்னும் பெயர் சூட்டப்பட்ட வானம்பாடியின் சங்கீதத்தைக் கேட்டருள வேண்டும் என ஒரு ஜமீன்தார் முன்னால் நிற்கிறான். ஜமீன்தாரும் `சரி, பாடட்டும்' எனத் தலை அசைக்கிறான்.
பக்கிரி, ``இஸ்ராபேல்!” என்றொருமுறை அழைத்தான். அவ்வளவுதான்.
ஒருகணம் ஆற்றங்கரையோரத்தில் நட்சத்திரமும் நள்ளிரவும் சூழ்ந்த நேரத்தில், ஆகாயத்தை முத்தமிடும் மணிக்கூட்டினின்று சித்தாருடன் இரண்டறக் கலந்து உருகும் கோஷா ஸ்திரீயின் கனிந்த குரல் காதல் தீ மூளப் பாடுவதுபோல் இஸ்ராபேலின் இன்னிசை எழுந்தது. மறுகணம் அந்த மணிக்கூண்டின் அடியில், பெண்ணின் குரலோசைகொண்டு கற்பனைத் தூரியத்தால் பெண்ணையே ஊகித்து உருவாக்கும் பித்தர்களின் கட்சிப் பிரதிக்கட்சி ஒலித்தது, ஒருகணம் வெண்ணிலவில் பாசி சேர்ந்து பாழடைந்த பழம் மண்டபங்களினின்று கிளம்பும் நரிகளின் ஊளை போன்று ஆசை மண்ணான கதைப் பாட்டில் மிதந்தது. மறுகணம், கண்களில் தீப்பறக்க, கத்தியும் கேடயமும் மோத, குளிர் நிலாக்கதிர் கத்தியின் மீது விழுந்து துண்டாக, காதலிக்காகப் போர்புரியும் வீரர்களின் முழக்கம் பொங்கிற்று.
``இஸ்ராபேல்!” என்று குறுக்கிட்டான் பக்கிரி. ஒரு நிமிஷம் நிசப்தம்.
மறுநிமிஷம் இசைச் சித்திரம் மாறிவிட்டது. கருக்கலின் கனக ஒளியில், மோனக்கடல் மீது இன்னிசைத் தோணி ஒன்று மனிதரை நோக்கி மிதந்துவந்து, மக்கி மண்ணாகும் யாத்ரீகனைத் தட்டில் ஏற்றி அமரனாக்கும் பரிவும் போதமும் பூர்ணமாகத் தொனித்தன.
``இஸ்ராபேல், என் குருவே!” என்றான் பக்கிரி.
இன்னிசையின் தெய்வ உலகு மறைந்துவிட்டது. ஜமீன்தாருக்கு தன் நினைவுவர இரண்டு விநாடி சென்றது.
``பக்கிரி, இன்னும் கொஞ்சம்” என்றுவிட்டு, தன் வேலையாளியிடம் ஏதோ சொல்லி உள்ளே அனுப்பினார் ஜமீன்தார்.
``நல்லது… இஸ்ராபேல்!” என்றான் பக்கிரி.
சுருதி மாறிவிட்டது. இருபுறங்களும் செழித்தோங்கி வளரும் மரங்கள் நிறைந்த ரஸ்தாவில், செக்கச்செவேலென்ற உடலும், கலங்கிய கண்களும், கபந்தனைப்போல் விரிந்த கைகளும்கொண்ட ஒருவன் உட்கார்ந்து, எல்லாப் பொருள்களையும் எனதாக்குவேன் என்று பேரவாகொண்டு கொட்டாவிவிட்டு ஏங்கும் சத்தம் தொனித்தது.
``பக்கிரி, சபாஷ்! என் ஜன்மத்திலேயே இந்த மாதிரி அனுபவம் கிட்டியதில்லை.”
அந்த வானம்பாடியை என்ன விலை கொடுத்தும் வாங்கிவிட ஜமீன்தார், பக்கிரியிடம் பேரம் பேசுகிறான். பணத்தால் அடித்து வீழ்த்திவிடக்கூடிய ஆளாக பக்கிரி இல்லை. அதிகாரத்துக்கும் பணத்துக்கும் முன்னால் கலை, விலை போகாது எனக் கம்பீரமாக அவன் நிற்கிறான்.
இசை குறித்த மேற்கண்ட வாசகங்களை வாசித்தபோது எனக்கு மக்சீம் கார்க்கியின் `ஜிப்ஸி' கதை நினைவுக்குவந்தது. அந்தக் கதையில் `ஜொபார்' என்னும் குதிரைவீரனின் பிடில் வாசிப்புப் பற்றி கார்க்கி விவரிக்கும் இடம் மறக்க முடியாதது.
``பிடில் நரம்புகள்மேல் அவன் வில் போடுவதைக் கேட்டதும் நம் இதயம் திடுக்கிடும். இன்னோர் இழுப்பு இழுப்பான், கேட்டு நெஞ்சுத்துடிப்பு நின்றுவிடும். அவனோ, பிடில் வாசித்துக்கொண்டே புன்னகை செய்வான். அவன் வாசிப்பதைக் கேட்டு ஒரே நேரத்தில் அழவும் சிரிக்கவும் ஆசை உண்டாகும். ஒரு சமயம் யாரோ கசப்புடன் முனகுவதுபோலவும், உதவி கேட்பது போலவும் கத்தியால் அறுப்பது மாதிரி நெஞ்சை வகிர்வதுபோலவும் இருக்கும். மறுசமயம், ஸ்தெப்பி வெளி ஆகாயத்துக்குக் கதைகள் சொல்லும் துயரக்கதைகள். அருமைக் காதலனுக்கு விடைகொடுத்து அனுப்பும் பெண் அழுவாள்! அருமைக்காதலன் ஸ்தெப்பி வெளியில் காதலியைக் கூவி அழைப்பான். திடீரென உயிர்த்துடிப்புள்ள பாட்டு இடிபோல முழங்கும். இந்தப் பாட்டுக்கு இசைய வானத்திலே சூரியனே நடனம் ஆடுவதுபோல் இருக்கும்! அப்படி அவன் வாசிப்பான்.”
இசையில் வர்க்கபேதம் காண முடியுமா எனத் தெரியவில்லை. அதுபோலவே இசை பற்றி எழுதும்போது கார்க்கியானாலும் பிச்சமூர்த்தியானாலும் மௌனி (பிரபஞ்ச கானம்)யானாலும் உலகத்துப் படைப்பாளிகள் எல்லோருமே ஒன்றாகி ஒரே வரிசையில் நிற்கிறார்கள். அற்புதம்தான்.
அவர் கதைகளில் ஆன்மிகச் சிகரத்தைத் தொட முயன்றாலும் சமகால வாழ்வை அவதானித்தபடிதான் இருந்திருக்கிறார். அவருடைய `இரும்பும் புரட்சியும்' என்ற கதை இப்படித் தொடங்குகிறது:
`` எனக்கு ஜோசியம் தெரியாது. ஆனால், ஒவ்வொரு கோளுக்கும் ஒவ்வோர் உலோகம் உண்டு எனச் சொல்கிறார்களே, அது உண்மை என்றே தோன்றுகிறது. சனி பகவானுக்கு இரும்பு என்று சொல்கிறார்கள் . தத்துவரீதியாக இரும்புக்கும் புரட்சிக்கும் ஏதேனும் தொடர்பு இருக்குமா என்பதுதான் என் கேள்வி. இரும்பை ஆதிமனிதன் உபயோகிக்க அறிந்தபோது, நாகரிகத்திலே பெரிய மாறுதல் உண்டாயிற்று என்று, கொழுமுனையை உபயோகிக்க ஆரம்பித்த பிறகு உண்டான புரட்சிதான் விவசாயம் எனவும் அறிஞர்கள் சொல்கிறார்கள். 18-ம் நூற்றாண்டில் இயந்திரங்கள் தோன்றியபோதே புரட்சியும் தோன்றிவிட்டது என்று பொருளாதார நிபுணர்கள் எழுதுகிறார்கள்” இப்படித் தொடங்கும் கதை இரும்பில் தயாரித்து ஓடும் பஸ்ஸிலும் ரயிலிலும் எவ்வளவு புரட்சிகரமான கருத்துகளும் சம்பாஷணைகளும் வந்துவிழுகின்றன என்று பஸ் பயணத்துக்குள் தாவுகிறது.
பஸ்ஸுக்குள் பிச்சை கேட்கும் முடவர் ஒருவரின் கதையாகப் பின்னர் மாறுகிறது. பிச்சைக்காரர் முதலில் கெஞ்சியபடி பிச்சை கேட்கிறார். கொடுக்காத நபர்களிடம் இரண்டாவது மூன்றாவது முறை கேட்கும்போது ``அந்தப் பிச்சைக்காரனது முகமும் குரலும் பெரிய புதிராக விளங்கின. வார்த்தைகள் என்னவோ கருணையைத் தூண்டுவனவாகத்தான் இருந்தன. ஆனால், அவற்றில் ஏறி வந்த குரலோ உறுதியாக ஒலித்தது.`எனக்கு பிச்சை போடுவது உங்கள் கடமை' எனத் தெளிவாகச் சொல்வது போன்று ஒலித்தது. அவனுடைய முகத்தைப் பார்த்தேன். அதில் ஒரு கொடுமை. கண்களோ, கண்களா, பிச்சுவாக்களா!’ என்ற சந்தேகத்தை எழுப்பியது.”
அதை அந்தப் பிச்சைக்காரரிடமே கேட்கும்போது அவர் சொல்கிறார் ``வேற வழி இல்லீங்க, நியாயத்துக்கு மசிகிர உலகமா இது? அநியாயத்துக்குத்தான் இங்கே ஆட்சி. அழுத பிள்ளைதான் பால் குடிக்குமாம். இந்தக் கை-கால் இருந்தால் நான் பிச்சையா கேட்பேன்?”
பிச்சைக்காரர் நகர்ந்த பிறகும் பயணிகளின் சம்பாஷணை தொடர்கிறது. கதை சொல்லி இப்படி முடிக்கிறார்... ``நீங்க சொல்றது சரிதான். அநியாயம் செஞ்சாத்தான் நியாயம் நிலைக்கிறது. கேட்ட உடனே நாமாகக் காலணா ஏன் போடவில்லை,சொல்லுங்கோ? இதுதான் இந்த கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஆதாரம்.”
கம்யூனிஸ்ட் கட்சியைப் பற்றி அவர் என்ன புரிதல் வைத்திருந்தார் என்பதைப் பார்க்கிறோம் இங்கே. சாட்டை அடிக்கும் சாணிப் பாலுக்கும் எதிராக அரைப்படி நெல் கூலி உயர்வுக்காக தஞ்சைத் தரணியில் செங்கொடியின் கீழ் போராட்டங்கள் நடந்துகொண்டிருந்த காலத்தில் `மணிக்கொடி' இதழில் ந.பி. தொடர்ந்து எழுதிவந்த `தஞ்சைப் பண்ணையார்களும் மிராசுகளும்' அதிகக் கூலி கொடுத்தும் அதிக வரி கொடுத்தும் கஷ்டப்படும் துயரம் பற்றித்தான் பல கட்டுரைகளும் தலையங்கங்களும் வந்துகொண்டிருந்தன என்பதை இங்கே இணைத்துப்பார்க்க வேண்டும்.
``சுமார் நாற்பது வருஷக்கால இலக்கிய இயக்கம் ந.பி-யினுடையது. இந்த நாற்பது வருஷங்களில் அவர் , பாரதியின் விடுதலை மூச்சால் பாதிக்கப்பட்ட ஒரு காலகட்டம். அடுத்து தொடர்ந்த சுதந்திர இந்தியாவின் ஆரம்பகாலம், இன்றைய நிலை போன்ற யாவற்றினூடும், அவ்வளவாகப் பாதுகாப்பானது எனச் சொல்ல முடியாத பொருளாதார நிலையில் உழன்று எழுதிவருபவர்” என்று தருமு சிவராம் வரையும் சித்திரிப்பு உண்மையானது. (வானமற்ற வெளி- பிரமிள் கட்டுரைத் தொகுப்பிலிருந்து...)
சென்னையில் நடுத்தரவர்க்கத்தினர் வாழும் ஆழ்வார்பேட்டையில் வாழ்ந்துகொண்டிருந்த அவர், பிற்காலத்தில் கூவம் நதிக்கரைக்கு இடம்பெயர்ந்ததே அதற்குச் சான்றாக அமையும். எழுத்தாளர் தஞ்சை ப்ரகாஷ் விவரிக்கும் ஒரு காட்சி இது. ``1950-களில் திருவல்லிக்கேணி கூவம் நதிக்கரையில் ஓர் ஒண்டுக்குடித்தனத்தில் வாழ்ந்தபோது நீண்ட காலத்துக்குப் பிறகு அவரைப் பார்த்த எனக்கு மிகவும் வருத்தமாக இருந்தது. திருவல்லிக்கேணிச் சாக்கடையோரம் வெற்றுடம்புடன் வானத்தைப் பார்த்துக்கொண்டிருந்த பிச்சமூர்த்தியின் கவிதை உருவம், என்னை அச்சுறுத்தாமல் என்ன செய்யும்? அப்போதெல்லாம் அவருக்கு இருந்த ஒரே துணை சி.சு.செல்லப்பாதான். அப்போது மணிக்கொடி வீரர்கள் எல்லோரும் முடமாக்கப்பட்டு, சென்னை வீதிகளில் சோற்றுக்கு அந்தர வித்தைகள் செய்துகொண்டிருந்த காலம். இவர்களிடையே பிச்சமூர்த்தி பந்தயத்தில் இறங்கவில்லை. எதிரே கூவம்கூட சிறுத்துப்போய் நாறியபடி இறுகியிருந்தாலும் அதன் கரையில் பிச்சமூர்த்தி தன் பஞ்சடைந்த கண்களோடும் வானத்தில் அங்கும் இங்குமாகப் பறந்த கரிச்சான்களையும் தட்டான்களையும் பார்த்து வியந்துகொண்டுதான் இருந்தார்.”
இதைப் பற்றிக் குறிப்பிடும் வெங்கட் சாமிநாதன் `விருக்ஷங்களையும் நதிகளையும் மலைகளையும் பறவைகளையும் பாடிய ரிக் வேத ரிஷிகள், இப்படித்தான் வாழ்ந்திருப்பார்கள் என நினைக்கிறேன்' என்று எழுதிச் செல்கிறார். கநாசு தொடங்கி வெங்கட் சாமிநாதன் வரை அவரை `வேதாந்தி' என்றும், `ரிஷிபுருஷர்' என்றும் சொல்லிச் சொல்லி அடித்தாலும் என்னுடைய வாசிப்பில் அவருடைய கதைகள் மனிதனைப் பேசுவதாகவே உணர்கிறேன். தத்துவப்பார்வை என ஒன்று அவருக்கு இருந்தது. எழுத்தாளர் சுந்தர ராமசாமியின் கணிப்போடு நான் உடன்படுகிறேன்.
``பிச்சமூர்த்தியின் ஆத்மிகம் என்ன என்பதை திட்டவட்டமாக நாம் வரையறுத்துக்கொள்ள வேண்டும். அது கடவுளைத் தேடும் விஷயமல்ல; கடவுள் நம்பிக்கை, மனித வாழ்வுக்கு ஜீவாதாரமானது என்ற முடிவு அவருக்கு இருக்கலாம். வாழ்க்கையின் நெருக்கடிகளில் நம்பிக்கையைத் தக்கவைத்துக்கொள்ள அது தேவை என்ற முடிவும் அவருக்கு இருந்திருக்கலாம். உணர்ச்சிகளில் அலைபடும்போது சமன்நிலை காத்துக்கொள்ள தனக்கு அப்பாற்பட்ட சக்தியின் மீது கொள்ளும் நம்பிக்கை அவசியமானது என அவர் கருதியிருக்கலாம். ஆனால், இவற்றை வற்புறுத்தும் மனோபாவம், அவர் படைப்பில் இல்லை. வாழ்க்கை மீது நம்பிக்கை, சகமனிதன் மீது நேசம், இயற்கையின் மீது ஜீவ உறவு, மதிப்பீடுகள் சார்ந்து வாழ்வதில் உறுதி... இவைதாம் பிச்சமூர்த்திக்கு முக்கியமானவை. இந்தக் குணங்கள்கொண்டவன் அவரைப் பொறுத்தவரையில் ஓர் ஆத்மிகவாதி. நாஸ்திகன் என்று அவன் தன்னைக் கூறிக்கொள்ளும் நேரத்திலும் பிச்சமூர்த்திக்கு அவன் ஆஸ்திகன்தான்.”
பண்டிதர்கள், விஞ்ஞானிகள், அறிவுஜீவிகள் மீது நம்பிக்கை அற்றவராக பிச்சமூர்த்தி இருந்திருக்கிறார். அவரது `விஞ்ஞானத்துக்குப் பலி' என்ற ரோபோ கதை ஒரு சான்று. ``கலைஞன் என்பவன், தனி சிருஷ்டி அல்ல. அவனும் மனிதன்தான். மனிதன்தான் இப்படிப்பட்ட சிருஷ்டிகளைச் செய்தான். வேறு எந்தப் பிராணியும் செய்யாத இந்தச் செயலை மனிதன் மனிதனுக்காகத்தான் செய்கிறான். ஏனெனில், வேறு எந்தப் பிராணிக்கும் அனுபவிக்கத் தெரியாது. மனிதனுக்குள்ளே கலைஞனும் கலைஞனுக்குள்ளே மனிதனும் இருப்பதால்தான் கலைப்படைப்புகளை உருவாக்க முடிகிறது’’ என்பதே அவரது கலைக்கொள்கையாக இருந்திருக்கிறது.
தமிழில் புதுக்கவிதையின் முன்னோடி என அவர் மதிக்கப்படுகிறார். ``சிறுகதைகளையும் புதுக்கவிதைகளையும் சம கவனத்துடன் அணுகியவர் அவர்'' என்கிற அசோகமித்திரனின் கூற்று, மிகச் சரியானது. 127 சிறுகதைகளும், 83 கவிதைகளும், 11 ஓரங்க நாடகங்களும், பல கட்டுரைகளும் எழுதியுள்ள இவர், வ.ரா இயக்கிய `ஸ்ரீராமானுஜர்' என்ற திரைப்படத்தில் நடித்திருக்கிறார். மேடைகளில் பாரதியின் பாடல்களைப் பாடியுமிருக்கிறார்.
``இலக்கியம், வாழ்வின் ஒரு துறையிலான இயக்கமானதால், இலக்கியம் பாதிக்கப்பட்டேதான் தீர வேண்டும். வாழ்வுக்கும் இலக்கியத்துக்கும் சம்பந்தம் இல்லாததுபோல் பேசுவதை நான் ஏற்க மாட்டேன். வாழும் வகை காணும் முயற்சியைவிட, இலக்கிய முயற்சி சிறந்தது என ஒப்புக்கொள்ள மாட்டேன். சொல் ஓய்ந்து மௌனம் வருமானால், மகிழ்ச்சியுடன் ஏற்பேன். உருவத்தில் நின்று உருவமற்றதைக் காண்பதே இன்பம். மேதை இருந்து அந்த இன்பத்தை உலகுடன் பகிர்ந்துகொள்ள முடியுமானால், அதுவும் நல்லதுதான். முடியாவிட்டாலும் அதற்காக வருந்தவேண்டியதில்லை” - ந.பிச்சமூர்த்தி.