மற்ற எபிசோடுகள்
Published:Updated:

கலைடாஸ்கோப் - 15

எண்ணம், வண்ணம்: சந்தோஷ் நாராயணன்

'இந்த விதைக்குள்தான் சிவன் இருக்கிறான். அதாவது சீவம் அல்லது ஜீவன்' என்றார் டாக்டர் பசுபதி. பாட்டனியில் டாக்டரேட். அவர் உள்ளங்கையில் ஒரு சிவப்பு ஆலம்பழம் இருந்தது. காற்று லேசாக வீசிக்கொண்டிருந்தது. 

கலைடாஸ்கோப் - 15

அவரையும் தங்கள் தலைக்கு மேலாகப் படர்ந்து இருக்கும் ஆலமரத்தையும் மாறி மாறிப் பார்த்தார் ஸ்டூவர்டு.

''பொட்டானிக்கல் நேம் 'ஃபைக்கஸ் பெங்காலென்ஸிஸ்’, மொராசியே ஃபேமிலியைச் சேர்ந்த ஃபைக்கஸ் இனத் தாவரம். விதை என்பது 'எம்ப்ரியோ’தான். அதற்கு இரண்டு வகை வளர்ச்சி இருக்கிறது. ஒன்று ஸ்டெம்ஸ்... அதாவது, நாம் வெளியில் காணும் தாவரமாக வளரும் பகுதி; இன்னொன்று அதன் வேர்கள். தாவர செல், அதற்குள்ளே நியூக்ளியஸ், குளோரோபிளாஸ்ட், வாக்குவோல் இன்னும் என்னென்னமோ! இந்தச் செல்களின் பெருக்கம், அதன் காரணமான வளர்ச்சி. இந்த ஒருமித்த வளர்ச்சியை 'ஜெர்மினேஷன்’ எனச் சொல்கிறோம். இவை எல்லாம் ஒரு பாட்டனிஸ்ட்டாக  நமக்கு அத்துப்படி. இதில் எங்கே வந்தது சீவன்? நீங்கள் கிழக்கு இந்தியர்கள். எல்லாவற்றிலும் ஒரு ஸ்பிரிச்சுவல் அர்த்தத்தை ஏற்றிவிடுவீர்கள். அதை நாங்கள் 'சூடோசயின்ஸ்’ எனச் சொல்வோம்' என்றார் ஸ்டூவர்டு கிண்டலாக.

'ஹா... ஹா... ஹா... மனிதர்கள் பாட்டனி விதிகளை உருவாக்குவதற்கு பல்லாயிரம் வருடங்களுக்கு முன்னரே தாவரங்கள் உருவாகிவிட்டன என்பதை ஞாபகத்தில்கொள்ளுங்கள் மிஸ்டர் ஸ்டூவர்டு. காற்று பலமாக அடிக்கிறது... கிளம்பலாம்' என்றார் பசுபதி.

சற்று தொலைவில் இருந்த காருக்கு வந்து ஏறி உட்கார்ந்த ஸ்டூவர்டு, காரின் உள்ளே முன்பக்கத்தில் ஒட்டிவைத்திருந்த சிறு நடராஜர் சிலையைப் பார்த்தார். திசை எங்கும் பரவும் சடாமுடி நடனம்.

'இதுதான் நீங்கள் சொல்லும் சிவன். அப்படித்தானே?' என்றவர், திரும்பி தூரத்தில் தெரியும் ஆலமரத்தைப் பார்த்தார்.

கலைடாஸ்கோப் - 15

பலமான காற்றில் மரம் ஆடிக்கொண்டிருந்தது. விழுதுகள் சடைகளாகக் காற்றில் அலைவதைக் கவனித்து ஒரு கணம் திகைத்தார்!

கலைடாஸ்கோப் - 15

பூட்டுகள்

4,000 வருடங்களுக்கு முன்னர் பூட்டு கண்டுபிடிக்கப்பட்டதாகச் சொல்கிறார்கள். இங்க் பேப்பர் (பாபிரஸ்)போல இதுவும் எகிப்தியர்களின் கண்டுபிடிப்புதான். என்ன வடிவத்தில் இருந்தது என்ற தெளிவுதான் இல்லை. பிற்கால வரலாற்றில் கயிறுகளால் விதவிதமான முடிச்சுகள் போடுவது, மரத்துண்டுகளால் 'லாக்’ பண்ணுவது என வெவ்வேறு நுட்பங்களைக் கையாண்டு, பூட்டு என்னும் கான்செப்ட்டை வளர்த்து எடுத்திருக்கிறார்கள் மனிதர்கள்.

பழங்கால நகரங்களில் அரச குலங்களின் மதிப்புமிக்க வஸ்துகளைப் பாதுகாக்க, காவல் தேவதைகளுக்குப் பூஜை, வழிபாடுகள் நடத்தி அவர்களைப் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்துவார்களாம். 'புதையல் காத்த பூதம்’ என்று எல்லாம் கேள்விப்பட்டிருப்போம். பூட்டு மட்டும் அல்ல, பூதத்தையும் ஏ.டி.எம் காவலாளிபோல பாதுகாப்புக்காகப் பயன்படுத்தியிருக்கிறார்கள்.

போகட்டும்... நாம் இன்று உபயோகிக்கும் பூட்டுக்கான வடிவத்தை முதலில் வடிவமைக்க முயற்சிசெய்தவர் ராபர்ட் பாரோன் என்கிற பிரிட்டிஷ் கண்டுபிடிப்பாளராம். ஆண்டு 1778. பிறகு, சாவி இல்லாமல் எண்களைச் சுழற்றித் திறக்கும் பூட்டு முதல் ரிமோட் கன்ட்ரோல் பூட்டு வரை வந்துவிட்டோம்!

பூட்டு இல்லாத உலகம் சாத்தியமா? 'எல்லாமும் எல்லோருக்கும் பொது’ என்ற ஒரு சமூகம் வந்தால், திருடுவதற்கு தேவை இல்லாமல் போனால், ஒருவேளை சாத்தியம்!

கலைடாஸ்கோப் - 15

நுங்கு வண்டி

குமரி மாவட்டத்தில் இருக்கும் எனது சிற்றூரின் பெயர் 'பனங்கரை’. பனைகள் நிறைந்த கரை என்பது மருவி 'பனங்கரை’ ஆகியிருக்கலாம். 20 வருடங்களுக்கு முன்னர்கூட அங்கு பனை மரங்களைக் கண்டிருக்கிறேன். 'அக்கானி’ இறக்குவார்கள்; அக்கானி என்றால் பதநீர். பனையில் இருந்து இறக்கும்போது குழந்தைகள் யாராவது செம்புடன் நின்றால், அவர்களுக்கு இலவசமாகக்கூடக் கிடைக்கும். எனக்குக் கிடைத்திருக்கிறது. இன்று ஊர் பெயரில் மட்டும்தான் பனை இருக்கிறது.

பதநீர், கருப்பட்டி, நுங்கு, சுட்ட பனங்காய் என பனையுடன் தொடர்புடைய இனிய சொற்களைவிட அன்று எங்களுக்கு உவப்பானதாக இருந்த இன்னொரு விஷயம் நுங்கு வண்டி. இளம் நுங்கை நோண்டிக் குடித்துவிட்டு வீசும் நுங்கின் ஓடுதான் டயர். தேடிக் கண்டுபிடித்து, உடைத்து எடுத்துக்கொள்ளும் கவட்டை உள்ள கொம்புதான் ஸ்டீயரிங். லைசென்ஸ் இல்லாமல் ஓட்டிய முதல் டூ வீலர் அது. இரண்டு நுங்குகளின் நடுவில், ஓர் அடி குச்சியை (இன்னொரு ஸ்பேர் பார்ட்ஸ்) இணைத்து உருவாக்கும் வண்டியை, கவட்டைக் கொம்பு ஸ்டீயரிங்கால் தள்ளிக்கொண்டே ஓட்டலாம். காடு மேடு என்ற பேதங்கள் இல்லாமல் ரேஸ் வைக்கலாம்.

பெட்ரோல் விலை, மைலேஜ் பற்றிய கவலைகளுடன் அண்ணாசாலையில் வாகன ஓட்டிகள் விரைகிறார்கள். எல்லா வாகனங்களும் ஒரு கணம் நுங்கு வண்டிகளாக மாறி மீள்வதைக் கற்பனை செய்துபார்க்கிறேன்!

கலைடாஸ்கோப் - 15

அழிவின் கலை

வல்லரசு என்பது, பல நாடுகளின் அரசியல் கனவு. ஆனால், அதற்காகக் கொடுக்கும் விலை... 'வளர்ச்சி’ என்ற பெயரில் இயற்கை வளங்கள் அழிப்பு, மக்களின் உழைப்பை அதீதமாகச் சுரண்டுவது போன்றவை. இது எல்லா நாடுகளுக்கும் பொருந்தும். 'வல்லரசு’ என சீன் போடும் சீனாவின் சூழலியல் சீர்கேடுகள், இயற்கை ஆர்வலர்களைப் பதற்றம் அடையவைக்கும் ஒன்று.

சில வருடங்களுக்கு முன்னர் சீனாவின் ஷாங்காய் நகர ஆற்றில் ஆயிரக்கணக்கான பன்றிகள் செத்து மிதந்தது ஓர் உதாரணம். சூழலியல் பாதிப்புகளின் முதல் பலி, எந்த 'வல்லரசு’ கனவுகளும் இல்லாத விலங்குகள், பறவைகள் இன்னபிற புழு-பூச்சிகள்தான். இந்த நிகழ்வு தந்த தாக்கத்தில் சில படைப்புகளை உருவாக்கி, உலகம் முழுக்கக் கவனத்துக்குக் கொண்டுவந்தார் பிரபல கலைஞர் கை க்வோ-க்யங் (Cai Guo-Qiang).
 

கலைடாஸ்கோப் - 15

கை, சீனாவின் பிரபல ஓவியர்; சிற்பி. காலிக்ராபி ஓவியரான தன் தந்தையிடம் இருந்து ஓவியம், இலக்கியம் கற்ற கை, இயற்கை அழிப்புக்கு எதிரான பார்வையை தன் படைப்புகளில் தொடர்ந்து வெளிப்படுத்துகிறார்.

கலைடாஸ்கோப் - 15

கடந்த வருடம் ஷாங்காய் நகரில் நடந்த கண்காட்சியில் வைக்கப்பட்ட இவரின் இன்ஸ்டலேஷன் ஆர்ட்டை, சில நாட்களில் மட்டும் 20 ஆயிரம் பேர் பார்த்தனர். அந்த மியூசியத்தில் இதற்கு முன்னர் எந்தக் கண்காட்சிக்கும் இவ்வளவு  பார்வையாளர்கள் குவிந்ததே இல்லை.

கலைடாஸ்கோப் - 15

நோவாவின் கப்பல் கேள்விப்பட்டிருப்போம். உலகம் நீரால் அழியப்போகிறது என்பதால், ஒரு கப்பலைக் கட்டி பலதரப்பட்ட விலங்குகள், பறவைகளுடன் பாதுகாப்பான இடத்தை நோக்கி நகர்வார் நோவா. கை-யின் இந்த இன்ஸ்டலேஷன் ஆர்ட் அந்த நோவாவின் கப்பலை நினைவுபடுத்தக்கூடியது. ஆனால், கப்பல் முழுக்கச் செத்து விழுந்த மிருகங்கள், பார்ப்பவர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கிய இந்த இன்ஸ்டலேஷன் ஆர்ட், சூழலியல் அழிவின் கொடூரத்தைக் காட்சிப்படுத்தியது. காற்றில் எழுந்து, மோதி வீழும் ஓநாய்களின் வரிசை, பனிப்பாலையில் நீர் அருந்தும் வனவிலங்குகள், அம்புகளால் சூறையாடப்பட்ட புலிகள்... என ஆர்ட் அதிர்ச்சி வைத்தியம் கொடுக்கும் கை-யின் கை, இயற்கை ஆர்வலர்களின் நம்பிக்'கை!’

கலைடாஸ்கோப் - 15

லைப்ரரி தெரியும். இது என்ன ஆன்டி லைப்ரரி (Anti library)? ஒரு வசதிக்காக 'எதிர் நூலகம்’ என தமிழில் மொழிபெயர்க்கலாம். நசீம் நிக்கோலஸ் தலேப், (Nassim Nicholas Taleb)  மேற்கத்தியக் கட்டுரையாளர்; எழுத்தாளர். அவர் எழுதிய 'தி பிளாக் ஸ்வான்’ (The Black Swan)  என்ற புத்தகத்தில்தான் இந்த 'எதிர் நூலகம்’ என்னும் பதம் வருகிறது.

படிக்க முடியாவிட்டாலும், வாங்கிக் குவித்து வைத்திருக்கும் புத்தகங்கள், உங்களைப் பயமுறுத்துவதாக இருக்கலாம். உம்பர்தோ இகோ என்பவர், பிரபல இத்தாலிய எழுத்தாளர்; நாவலாசிரியர். அவருடைய நூலகத்தில் 30 ஆயிரம் புத்தகங்களுக்கு மேல் இருக்கின்றன. அங்கு வரும் பார்வையாளர்களில் ஒரு பகுதியினர் கேட்கும் கேள்விகளில் முக்கியமானது, 'இதில் எவ்வளவு புத்தகங்களை நீங்கள் படித்திருக்கிறீர்கள் உம்பர்தோ?’

'படித்த புத்தகங்களைவிட படிக்காத புத்தகங்கள் மேலும் மதிப்புமிக்கவை. அது உங்களுக்கான ஞானங்களை ஒளித்துவைத்து அமைதியாக இருப்பவை. ஆகவே, படிக்காவிட்டாலும் பரவாயில்லை... எவ்வளவு முடியுமோ அவ்வளவு புத்தகங்களை வாங்கிச் சேமிக்கலாம். அதை 'எதிர் நூலகம்’ எனச் சொல்வேன்’ என்கிறார் தலேப்.

ஒவ்வொரு கண்காட்சியிலும் வாங்கிய புத்தகங்கள் அலமாரிகளில் சோம்பலாகத் தூங்கிக்கொண்டு இருப்பதைப் பார்க்கும்போது, 'பேசாமல்... பாம்பே அப்பளம், லிச்சி ஜூஸ் வாங்கிச் சாப்பிட்டிருக்கலாமோ?’ என்ற குற்றவுணர்ச்சி தோன்றும். இனி அப்படி அல்ல... 'எதிர் நூலகம் வைத்திருக்கிறேன்’ எனக் கதைவிடலாம்!