
முகில்
1950-ம் ஆண்டு உலகில் இருந்த சிங்கங்களின் எண்ணிக்கை சுமார் நான்கு லட்சம்; 1990-ம் ஆண்டில் சுமார் ஒரு லட்சம்; இன்று 20 ஆயிரத்துக்கும் கீழ். 'காட்டு ராஜா’ என்பது சிங்கத்தின் முன்னாள் அடையாளம். 'ப்ளீஸ், யாராவது என்னைக் காப்பாத்துங்களேன்’ என சிங்கங்கள் மானசீகமாக, கொடூர மனிதர்களின் முன்பு மண்டியிட்டுக் கெஞ்சிக்கொண்டிருப்பதுதான் இன்றைய நிஜம். அந்த அப்பாவி ஆப்பிரிக்கச் சிங்கங்களின் ஆபத்பாந்தவர், சிங்கங்களுக்காகவே தன் வாழ்வை அர்ப்பணித்துக்கொண்டிருக்கும் ஜீவகாருண்யர், கெவின் ரிச்சர்ட்சன். இவர் சிங்கங்களின் மனிதர்; சிங்க மனிதர்!
1974-ம் ஆண்டு தென்ஆப்பிரிக்காவின் ஜோஹனஸ்பர்கில், ஒரு நடுத்தரக் குடும்பத்தில் பிறந்தவர் கெவின் ரிச்சர்ட்சன். அங்கே ஆரஞ்ச் குரோவ் என்ற பகுதியில் கெவினின் பால்யம் ஆரஞ்சு மரங்களுடன் கழிந்தது. தாய் பாட்ரீசியா வுக்கு, வங்கியில் பணி; தந்தை பீட்டருக்கு மருந்து தயாரிக்கும் நிறுவனத்தில் வேலை. ஓர் அண்ணன், இரு அக்காக்கள், நான்காவதாக கெவின். கிழிந்த சட்டையில் தையல்போல் சிறுவயதிலேயே கெவினின் உடம்பில் பல்வேறு இடங்களில் தையல்கள். அவ்வளவும் சேட்டை. ரிமோட் கார் வாங்க வேண்டும் என்பது கெவினின் சிறுவயது பெருங்கனவு. பலநாள் அவன் சேர்த்துவைத்த காசுக்கு காரும் ரிமோட்டும் வொயரால் இணைக்கப்பட்ட சுமார் பொம்மைதான் கிடைத்தது. ஏமாந்துபோனான். அப்போது, அவன் தந்தை, ஆதரவு இல்லாமல் தெருவில் திரிந்த பூனைக்குட்டி ஒன்றை வீட்டுக்கு எடுத்துவந்தார். ரிமோட் கட்டுப்படுத்தும் காரைவிட, சுதந்திரமாக அங்குமிங்கும் துள்ளித் திரியும் பூனைக்குட்டியை அவனுக்கு மிகவும் பிடித்துப்போனது. 'டைகர்’ எனப் பெயரிட்டான். அது அவனது முதல் செல்லப்பிராணி.

பீட்டரும் பாட்ரீசியாவும் குடும்பச் செலவுகளைச் சமாளிக்கவே திணறினர். குழந்தைகளுக்கு விதவிதமான விளையாட்டுச் சாமான்கள் வாங்கித் தரவோ, அவர்களை சுற்றுலாவுக்கு அழைத்துச்செல்லவோ இயலவில்லை. பீட்டர் மாற்று உபாயம் செய்தார். பூனைக்குட்டிகள், நாய்க்குட்டிகள், தொட்டி மீன்கள், வண்ணக்கிளிகள், கொஞ்சும் புறாக்கள், வளர்ப்புப் பாம்புகள், எழில்மிகு எலிகள், ஆதரவு தேடி வந்த பிற உயிரினங்கள் என 'செல்லங்களால்’ வீட்டைச் சிறு சரணாலயம் ஆக்கினார். அவற்றைக் கவனிப்பதிலேயே குழந்தைகள் நேரத்தைச் செலவிட்டனர். கெவினுக்குள் 'ப்ளூ கிராஸ் பிரியம்’ வளர்ந்தது இவ்விதமே. தன் குறும்புகளால் 'பேட் பாயாக’ திரிந்த கெவின், பறவைகள் மீதான காதலால் அந்தப் பகுதியின் 'பேர்டு பாயாக’ மாறினான். பல நாட்கள் கூண்டுகளுக்குள்ளேயே பறவைகளுடன் தங்கினான்; தூங்கினான். அவனது பன்னிரண்டாவது வயதில் ஒருநாள், பீட்டரின் உயிரற்றக் கூடு மட்டும் வீட்டுக்குக் கொண்டுவரப்பட்டது. அதிகக் குடி, அப்பாவின் உயிரைக் குடித்திருந்தது.
தந்தையின் இறப்புக்குப் பின்னர் குடும்பத்தின் பொருளாதாரத் தள்ளாட்டம் அதிகமானது. அரை மனதுடன் பறவைகளைத் திறந்துவிட்டான் கெவின். ஏதாவது ஒரு டிகிரி படித்து முடித்து வேலைக்குச் சென்றே ஆக வேண்டிய நிலை. கெவின், விலங்கியலைத் தேர்ந்தெடுத்தான். ஆனால், பாடத்திட்டம் பிடிக்காமல் மூன்றாம் வருடத்தில் அதைக் கைவிட்டான். பிறகு உடல் இயங்கியலையும் உடற்கூறியலையும் படித்த கெவின், பிசியோதெரபிஸ்ட் ஆனார். விலங்குகள் சார்ந்த ஒரு தொழிலில் ஈடுபட வேண்டும் என அவர் திட்டமிடவில்லை. ஆனால், அப்படி ஒரு வாய்ப்பு வந்தது. ஜோஹனஸ்பர்கின் புகழ்பெற்ற 'லயன் பார்க்’கில் சிங்கக்குட்டிகளைப் பராமரிக்கும் வேலை. விலங்கியலில் ஆர்வம்கொண்ட கெவின் மனம், அந்த வேலைக்கு ஒப்புக்கொண்டது.

'டாவோ’, 'நெப்போலியன்’ என்கிற ஆறு மாத சிங்கக்குட்டிகள் இரண்டு கெவின் பராமரிப்பில் வந்தன. அவற்றை முதன்முதலில் பார்த்த நொடியிலேயே கெவினுக்குள் அளவில்லாப் பாசம். அந்தச் சிங்கங்களின் ஸ்பரிசம், அன்பான பார்வை, செல்லக் கடி, கொஞ்சலான நா வருடல்... எல்லாம் கெவின், டாவோ, நெப்போலியன் மூவரையும் பிரிக்க முடியாத நண்பர்கள் ஆக்கின. அந்தச் சிங்கங்கள் வளர்ந்து பெரியதானாலும் கெவின், தன் பாதுகாப்புக்காக அவற்றிடம் இருந்து விலகிப் போகவில்லை. நெருக்கம் மேலும் அதிகமானது. வளர்ந்த சிங்கங்களைக் கட்டுப்படுத்தும் பயிற்சியாளர்கள், கையில் கம்பு, சாட்டை, பெப்பர் ஸ்பிரே என ஏதாவது ஓர் ஆயுதத்தைக் கையில் வைத்திருப்பார்கள். கெவின், ஆரம்பம் முதலே ஆயுதங்களை நாடவே இல்லை. 'பரிசுத்த அன்பே பலமான ஆயுதம்’ என மனதார நம்பினார். அப்படியே மேலும் சில சிங்கங்களுடனும் பழக ஆரம்பித்தார். சிங்கங்கள் மீது ஏறி அமர்வது, அவற்றின் பிடரியை, அடிவயிற்றைத் தடவிக்கொடுப்பது, முத்தம் கொடுத்துக் கொஞ்சுவது, அவற்றுடனேயே உறங்குவது, அவற்றுக்குப் புரியும்படியாக நட்புமொழி பேசுவது, அவற்றின் வாயில் கை நுழைத்து, பற்களைப் பிடித்து விளையாடுவது, கட்டிப்புரண்டு உருள்வது போன்ற உணர்வுபூர்வமான செயல்பாடுகளால், அவர் பழக்கிய சிங்கங்கள், கெவினைத் தங்களில் ஒருவராக மட்டுமே பார்த்தன. கோரைப்பற்கள், முக்கியமாக கூரிய நகங்கள்கொண்ட வலுவான பாதங்கள், ஒப்புக்கு அடித்தாலே ஒன்றரை டன் வெயிட்... ஓங்கி அடித்தால் கேட்கவே வேண்டாம். ஆனால், கெவின் எதற்கும் துளியும் பயப்படவில்லை. (சிங்கங்களுடன் கொஞ்சல் வீடியோ: https://www.youtube.com/watch?v=NXkzbavN6l8)
கெவினின் சிங்க விளையாட்டுக்களைக் காண்பதற்கு என்றே லயன்ஸ் பார்க்கில் கூட்டம் அதிகரித்தது. கெவின், நட்சத்திரமாக ஜொலித்தார். வாழ்க்கை சந்தோஷமாக நகர்ந்தது. ஆனால், வளர்க்கப்படும் சிங்கங்களின் வருங்காலம் குறித்த சில அப்பட்டமான உண்மைகள் தெரியவந்தபோது துடிதுடித்துப்போனார் கெவின். தன்னுயிர் டாவோவுக்கும் நெப்போலியனுக்கும்கூட
அதே கதிதான் ஏற்படும் என உணர்ந்தபோது உடைந்துபோனார். தகிக்கும் அந்த உண்மைகளை இங்கே நாமும் தெரிந்துகொள்வது வசதி.
உலகில் இந்தியாவிலும் ஆப்பிரிக்காவிலும் மட்டுமே சிங்கங்கள் உண்டு. அதிலும் ஆப்பிரிக்கக் கண்டம் சிங்கங்களின் சொர்க்கம். 'சிங்கங்களை நிஜ சொர்க்கத்துக்கே அனுப்பிவைக்கிறோம்’ என உலகம் முழுக்க இருந்து கிளம்பிவரும் வேட்டைக்காரர்களால், கடந்த நூற்றாண்டில் இருந்து ஆப்பிரிக்கா, சிங்கங்களின் நரகமாக மாறிவிட்டது; குறிப்பாக தென்ஆப்பிரிக்கா. உலகில் வளர்ப்புச் சிங்கப் பண்ணைகள்கொண்ட ஒரே நாடு அதுவே. தென்ஆப்பிரிக்காவில் மட்டும் 160-க்கும் மேற்பட்ட சிங்கப் பண்ணைகள் இருக்கின்றன. அந்தப் பண்ணைகளின் உயரிய நோக்கமாக விளம்பரப்படுத்தப்படுவது 'நாங்கள் சிங்கங்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவே இவற்றை நடத்துகிறோம்.’
ஒருவகையில் இது உண்மைதான். '2001-ம் ஆண்டு சமயத்தில் சுமார் 2,000 சிங்கங்கள் பண்ணைகளில் இருந்தன. இன்றைக்கு சுமார் 6,000 சிங்கங்கள் இருக்கின்றன’ என்கிறது ஒரு புள்ளிவிவரம். ஆனால், அந்தச் சிங்கங்கள் என்ன நோக்கத்துக்காக, எந்த விதத்தில் வளர்க்கப்படுகின்றன என்பதும் முக்கியமானது. பண்ணைகளில் வளர்ந்த பெண் சிங்கங்கள் வலுக்கட்டாயமாக அதிகமுறை கர்ப்பம்தரிக்க வைக்கப்படுகின்றன. குட்டிகள் ஈன்ற ஒரு மணி நேரத்துக்குள்ளாகவே, தாயிடம் இருந்து பிரித்துவிடுகிறார்கள். காரணம், குட்டிகளுடன் தாய் இருந்தால் அதற்கு மீண்டும் ஒரு முறை கர்ப்பம் தரிக்கும் மனநிலை வராது என்பதால். ஆக, பெண் சிங்கங்கள் குட்டிகள் ஈன்று கொடுக்கும் இயந்திரங்களாக மட்டுமே பார்க்கப்படுகின்றன.

தாயின் நேசம், தாய்ப்பால் வாசம்கூட அறியாத அந்தச் சிங்கக்குட்டிகள், சிங்கங்களுக்கு உரிய கம்பீரக் குணங்கள் எதுவும் இல்லாமல், மனிதர்களின் செல்லப்பிராணிகளாக கூண்டுகளில் வளர்க்கப்படுபவை. அந்தப் பண்ணைகளுக்கு வரும் சுற்றுலாப் பயணிகள், சிங்கக் குட்டிகளோடு கொஞ்சிக் குலாவலாம்; ஓடி விளையாடலாம்; அவற்றுக்குப் பாலூட்டித் தாலாட்டலாம்; கேட்கும் காசைக் கொடுத்துவிட்டு எல்லாம் செய்யலாம். அப்படி, சுற்றுலாப் பயணிகளால் சிங்கக்குட்டிகள் துன்புறுத்தப்படுவதே அநேகமாக நடக்கிறது. தாயின் அரவணைப்பு இல்லாமல், மன அழுத்தத்துடன், செயற்கையான சூழலில் போதிய பராமரிப்பு இல்லாமல் வளர்க்கப்படும் இந்தச் சிங்கக்குட்டிகள், பெரும்பாலும் தங்களது இரண்டு வயதுக்குள் இறந்துபோவதும் உண்மை.
அப்படித் தப்பிப்பிழைத்து பருவம் அடையும் சிங்கங்கள், அடுத்ததாக இன்னொரு பண்ணைக்கு இடம் மாற்றப்படுகின்றன, வேட்டையாடப்படுவதற்காக. ஒன்றும் வேண்டாம், கூகுளில் Hunting South Africa எனத் தட்டினால் போதும். 'நல்ல அழகான பிடரி உள்ள ஆண் சிங்கங்கள் நியாயமான கட்டணத்தில் வேட்டையாட ஏற்பாடு செய்துதரப்படும்’ என ஏகப்பட்ட தளங்கள் விரியும். ஆம்... தென்ஆப்பிரிக்காவில் 'சிங்க வேட்டை’ என்பது அரசால் சட்டபூர்வமாக அங்கீகரிக்கப்பட்ட ஒன்று. ஆகவே, சிங்கப் பண்ணைகள் செழித்துக்கிடக்கின்றன. சிங்கங்களை மூலதனமாகக்கொண்டு மில்லியன் டாலரில் வியாபாரம் ஆகா... ஓகோ.
உலகம் எங்கும் இருந்து சிங்க வேட்டைக்கு என சுற்றுலாப் பயணிகள் தென்ஆப்பிரிக்காவுக்கு விமானம் ஏறுகிறார்கள். அதில் பாதிக்கும் மேற்பட்டோர் அமெரிக்கர்கள். சுமார் 12,000 முதல் 58,000 டாலர் வரை சிங்கத்தின் அளவுக்கு ஏற்ப விலை மாறுபடும். பெண் சிங்கத்துக்குத்தான் இருப்பதிலேயே விலை குறைவு. பிடரி உள்ள ஆண் சிங்கம் என்றால், விலை ரொம்ப அதிகம். அதுவும் வெள்ளைச் சிங்க வேட்டை, செம காஸ்ட்லி. கருணை உள்ளம்கொண்ட(?) தென்ஆப்பிரிக்க அரசு சிங்க வேட்டைக்கு சில நிபந்தனைகளை மட்டும் விதித்துள்ளது. வேட்டையாடப்பட வேண்டிய சிங்கத்துக்கு மயக்க மருந்து கொடுக்கக் கூடாது. கூண்டுக்குள் அடைத்துவைத்தோ, பிற சிங்கங்களின் அருகில் வைத்தோ வேட்டையாடக் கூடாது... இப்படி இன்னும் சில நிபந்தனைகள். மற்றபடி, சிங்கத்தை, எவ்வளவு அசிங்கப்படுத்திக் கொன்றாலும் பிரச்னை இல்லை.
நடப்பதும் அதுவே. தேர்ந்தெடுக்கப்பட்ட சிங்கம், வேட்டைக்காகக் குறிப்பிடப்பட்ட சில நாட்களுக்கு முன்பாகத் திறந்துவிடப்படும். வேலிகளால் சூழப்பட்ட, புதர்கள் நிறைந்த சில ஹெக்டேர் பரப்பளவு உள்ள பகுதியில் உலவும். வேட்டை நாளில் மனிதர்கள், சிங்கத்தைத் தேடி அந்தப் பகுதிக்குள் துப்பாக்கிகளுடன் நுழைவார்கள் (காரில் அல்லது நடந்து). சிங்கத்தைக் கண்டுபிடித்து அதைக் கொஞ்சம் பின்தொடர்வார்கள். கூண்டுக்குள் ஏகப்பட்ட மனிதர்களைப் பார்த்துப் பழகிய பண்ணைச் சிங்கத்துக்கு, இந்த வேட்டைக்காரர்களைப் பார்த்தாலும் பாயவோ, பதறவோ தெரியாது. மனிதர்கள் தன்னை ஒன்றும் செய்ய மாட்டார்கள் என்றே நம்பி நிற்கும். துப்பாக்கி வெடிக்கும். பழகிய ஒரு சிலர் ஒழுங்காகச் சுட்டுவிடுவார்கள். ஒரே தோட்டாவில் உயிர் காலி. சிலர் சுடத் தெரியாமல் நான்கைந்து தோட்டாக்களைப் பயன்படுத்துவர். எங்கெங்கோ குண்டுகள் பாய்ந்து துடிதுடித்து, சில மணி நேரம் வதைப்பட்டு சிங்கம் இறக்கும். அதுவும் சிங்கத்தின் முகத்தில் சுட்டுவிடக் கூடாது என்பதிலும் கவனமாக இருப்பார்கள். காரணம், அந்தச் சிங்கத்தை 'பாடம்’ செய்து Trophy ஆக எடுத்துச் செல்ல வேண்டும் அல்லவா? முதல் தோட்டா பாய்ந்தவுடன் தப்பிச்செல்லும் சில சிங்கங்கள், சில நாட்கள் எங்கேயாவது மறைந்துகிடந்து, வலியாலும் காயத்தாலும் கொஞ்சம் கொஞ்சமாக வதைபட்டு இறந்துபோவதும் உண்டு. சிலர், அம்புகளால் சிங்கத்தை வதைத்துக் கொல்வதும் உண்டு. இந்த விதத்தில் தினமும் குறைந்தது இரண்டு சிங்கங்களாவது தென்ஆப்பிரிக்கப் பண்ணைகளில் வேட்டையாடப்படுகின்றன. (வேட்டை வீடியோ ஒன்று: https://www.youtube.com/watch?v=-eDDm_XKL2Y)
இப்படி 2001-11 காலகட்டத்தில் மட்டும் தென்ஆப்பிரிக்காவில் இருந்து ஏற்றுமதியான 'பாடம்’ செய்யப்பட்ட சிங்கங்களின் அதிகாரப்பூர்வ எண்ணிக்கை ஏறத்தாழ 5,892. வேட்டையாடப்பட்ட சிங்கத்தின் கறிக்கு
தனி சந்தை மதிப்பு உண்டு. சிங்கங்களின் எலும்புகள் ஆசியக் கண்டத்துக்கு (குறிப்பாக சீனாவுக்கு) அனுப்பிவைக்கப்படுகின்றன. அதில் இருந்து தயாரிக்கப்படும் மருந்து சீனாவில் பாரம்பர்யமானது. குறிப்பாக அந்தரங்க விஷயங்களுக்கு அலாதியானது. இதன் வியாபார மதிப்போ மில்லியன்களில்.
ஆக, சிங்கங்கள் தென்ஆப்பிரிக்காவின் பெருமைமிகு அடையாளம் எல்லாம் இல்லை. வணிக மதிப்பு உள்ள வெறும் வியாபாரப் பொருள் என கெவின் தெளிவாக உணர்ந்துகொண்ட சமயத்தில்தான் அந்த முடிவை எடுத்தார். தான் வளர்த்த டாவோ, நெப்போலியன் உள்ளிட்ட செல்லச் சிங்கங்கள் ஒவ்வொன்றையும், வேட்டையாடப்படுவதில் இருந்து பாதுகாக்க வேண்டும். அதற்கு ஒரே வழி, அந்தச் சிங்கங்களை எல்லாம் கெவின் விலைகொடுத்து வாங்க வேண்டும். பிறகு, காட்டிலும் விட முடியாது. வளர்ப்புச் சிங்கங்களுக்கு வன வாழ்க்கை சரிப்பட்டு வராது. ஆக, கெவினே தனியாக ஒரு சரணாலயம் அமைத்து, சிங்கங்களை வளர்க்க முடிவெடுத்தார். பணத்துக்கு, இடத்துக்கு எங்கே போவது? கெவின் விக்கித்து நின்ற வேளையில், ரோட்னி என்கிற நல்ல நண்பர் கைகொடுத்தார்.

ரோட்னியின் உதவியுடன் ஜோஹனஸ்பர்கில் இருந்து 35 மைல் தொலைவில் Broederstroom என்ற இடத்தில் 2,000 ஏக்கர் பரப்பளவில் சரணாலயம் (Kevin Richardson Wildlife Santuary) அமைத்தார் கெவின். புல்வெளியும் புதர்களும் மரங்களும் நிறைந்த பகுதி. டாவோ, நெப்போலியன் உள்ளிட்ட பல சிங்கங்கள், புதிய பாதுகாப்பான வீடு கிடைத்ததில் சந்தோஷமாகக் கர்ஜித்தன. எல்லாம் சரி... சிங்கங்களுக்கான உணவு, பராமரிப்பு, பணியாட்களுக்கான சம்பளம் உள்ளிட்ட பல விஷயங்களுக்கும் சேர்த்து மாதச் செலவு சுமார் 50,000 டாலர் தேவை. அதற்கு என்ன செய்வது?
கெவின், தடுமாறத்தான் செய்தார். பின் சிங்கங்களை எந்தவிதத்திலும் துன்புறுத்தாமல், அவற்றைக்கொண்டே சம்பாதிக்கும் வழிமுறைகளை யோசிக்க ஆரம்பித்தார். சிங்கங்கள்கொண்டு டாக்குமென்ட்ரி தயாரிக்கும் நிறுவனங்களை வரவேற்றார். சிங்கங்களோடு தான் ஒட்டி உறவாடிப் பழகுவதைக் காண, பொதுமக்களும் பார்க்க வசதிகளை ஏற்படுத்திக்கொடுத்தார். அடுத்த கட்டமாகத் தான் வளர்த்துவந்த 'தோர்’ என்ற வெள்ளை ஆண் சிங்கத்தை நாயகனாகக்கொண்டு ‘White Lion’ என்ற படத்தையும் தயாரித்தார். தனித்துவிடப்படும் ஒரு வெள்ளைச் சிங்கக்குட்டி, தன் பலம் உணர்ந்து கம்பீரத்துடன் காட்டுராஜாவாகத் தலை நிமிரும் கதை. சுமார் ஐந்து வருடங்கள், தோர் வளர வளர அதன் போக்கிலேயே நிதானமாக, பொறுமையாக எடுக்கப்பட்ட அந்தப் படம், 2010-ம் ஆண்டில் வெளியாகி, பரவலான வரவேற்பைப் பெற்றது. (டிரெய்லர்: https://www.youtube.com/watch?v=QG7EQz9ooSI)
ஓர் ஆண் சிங்கம், சில பெண் சிங்கங்கள், குட்டிகள் என குழுவாக வாழ்வது சிங்கங்களின் இயல்பு. குழுவுக்குள் அந்நிய சிங்கம் ஒன்று நுழைய முடியாது. ஆனால், வெவ்வெறு இடங்களில் இருந்து வந்த சிங்கங்களை ஒரே குழுவாகப் பழகச்செய்து, நட்பு பாராட்ட வைக்கும் அளவுக்கு கெவின் திறமையானவர். இப்படி அவர் தனது சரணாலயத்தில் 35-க்கும் மேற்பட்ட சிங்கங்களைப் பராமரித்துவருகிறார். தவிர சிறுத்தை, கருஞ்சிறுத்தை, கழுதைப்புலி போன்ற வேறு சில உயிரினங்களையும் வளர்க்கிறார். (சிங்கங்களுடன் கால்பந்து: https://www.youtube.com/watch?v=JpyR-Ym7Hck)
தென்ஆப்பிரிக்காவின் சிங்கப் பண்ணைகள், சிங்க வேட்டை குறித்து எடுத்துவைக்கும் பல்வேறு உண்மைகள் கசப்பானவை. 'சிங்கப் பண்ணைகளில் குட்டிகள் வளர்ந்த பின், நல்ல வசதி உள்ள பிற பண்ணைகளுக்கு அனுப்பிவைக்கிறோம் என பண்ணையாளர்கள் சொல்கிறார்கள். அப்படி ஒரு நல்ல பண்ணை இங்கு கிடையவே கிடையாது. வளர்ந்த சிங்கங்களைப் பராமரிக்க செலவு அதிகம். அவை வேட்டைக்காரர்களுக்கு விருந்து படைக்க மட்டுமே வளர்க்கப்படுகின்றன. 'காட்டில் வாழும் சிங்கங்களைப் பாதுகாக்கவே பண்ணைச் சிங்கங்களை வேட்டையாடுகிறோம்’ என வேட்டைக்காரர்கள் சொல்கிறார்கள். ஆனால், கடந்த 20 வருடங்களில் காட்டுச் சிங்கங்கள் 80 சதவிகிதம் அழிக்கப்பட்டுவிட்டன. காட்டுச் சிங்கங்களை வேட்டையாடுவதும் தொடர்கிறது. சீனாவில் பண்ணைச் சிங்கங்களின் எலும்புகளைவிட, காட்டுச் சிங்கங்களின் எலும்புகளுக்குத்தான் அதிக மதிப்பு. அதற்காகவும் அவை வேட்டையாடப்படுகின்றன.’
'தென்ஆப்பிரிக்காவின் சிங்கப் பண்ணைகளை மூட வேண்டும். பண்ணை வேட்டையைத் தடை செய்ய வேண்டும். பாடம் செய்யப்பட்ட விலங்குகள் தங்கள் நாட்டுக்குள் இறக்குமதியாவதைப் பிற நாடுகள் அனுமதிக்கக் கூடாது’ என்ற கோரிக்கைகளுடன் அரசு சாரா பல்வேறு அமைப்புகள் போராடிவருகின்றன. இதற்காக சர்வதேச அளவில் விலங்கு ஆர்வலர்கள் குரல் எழுப்பிவருகிறார்கள். கெவினும் அதில் முக்கியமானவர். தன் அன்பான நடவடிக்கைகள் மூலம் சிங்கத்தை மனிதர்கள் நேசிக்க வேண்டும், கொல்லக் கூடாது என வலியுறுத்தும் கெவின், அதற்காகப் பலவேறு இடங்களுக்குச் சென்று குரல்கொடுத்தும் வருகிறார். சிங்க வேட்டைக்கு எதிரான போராட்டங்களுக்கு தென்ஆப்பிரிக்க அரசு செவிசாய்ப்பது இல்லை. இந்த வேட்டை வெறி தொடர்ந்தால், அடுத்த 10 ஆண்டுகளுக்குள்ளாக ஆப்பிரிக்கக் கண்டத்தில் எங்குமே சிங்கம் இருக்காது. அப்போதும்கூட கெவினின் பண்ணையில் மட்டும் ஆப்பிரிக்காவின் கடைசி தலைமுறை சிங்கங்கள் கர்ஜித்துக்கொண்டிருக்கும்!
காட்டு ராஜா பதிவுகள்

கெவின், சிங்கங்களுடனான தனது உறவை விளக்கும், ‘Part of the Pride: My Life Among the Big Cats of Africa’ புத்தகம் ஒன்றை எழுதியுள்ளார்.‘Dangerous Companions’, ‘In Search of a Legend’, ‘The Lion Ranger Series’ உள்ளிட்ட பல டாக்குமென்ட்ரிகள் கெவின் பண்ணைச் சிங்கங்கள் கொண்டு எடுக்கப்பட்டிருக்கின்றன. ‘African Safari 3D’என்ற படத்தில், காட்டில் விலங்குகளைச் சுற்றிக்காட்டும் கைடாக நடித்திருக்கிறார் கெவின். (ஆவணப்படம் ஒன்று: https://www.youtube.com/watch?v=Fh3N7FCEvcg)
'சிங்கங்கள் ஆபத்தானவையே!’
'கெவின், சிங்கங்களுடன் பழகுவது எந்த நொடியும் அவரது உயிருக்கு ஆபத்தானதே. அந்தப் பெரிய மிருகத்தின் செல்லக்கடியும் அன்பான அரவணைப்புமேகூட கெவினை அபாயத்தில் தள்ளலாம்’ என்ற விமர்சனம் எழுவது உண்டு. அதற்கு கெவினின் பதில் இதுதான்...

'இதில் உள்ள அபாயங்களை முற்றிலும் உணர்ந்தவன் நான். ஒரு வயதுக்குக் குறைவாக, குட்டியாக இருக்கும்போதே சிங்கங்களுடன் நான் பழக ஆரம்பித்துவிடுகிறேன். அப்படி நான் பழகாத வேறு சிங்கங்களை நெருங்க மாட்டேன். தவிர, நினைத்த நேரத்தில் எல்லாம் என் சிங்கங்களை நான் கொஞ்சுவது இல்லை. அவை நல்ல மனநிலையில் இருக்கின்றன எனத் தெரிந்தால் மட்டுமே நெருங்குவேன். நான் வளர்க்கும் சிங்கங்கள் குறித்த, ஒவ்வொரு விஷயமும் எனக்கு அத்துப்படி. அவற்றைக் கோபப்படுத்தும் எரிச்சலூட்டும் எந்த ஒரு விஷயத்தையும் செய்யாமல் கவனமாகவே பழகுகிறேன். என் பிரிய சிங்கங்கள்தாம் என்றாலும், அவை அதிஆபத்தானவை என்பது எனக்குத் தெரியும். தயவுசெய்து என்னைப்போல் யாரும் முயற்சி செய்ய வேண்டாம் என்பதே என் வேண்டுகோள்!’
சிங்கத்தைக் கையில் ஏந்தி...

கெவினின் மனைவி மாண்டி, சரணாலயத்தை நிர்வகித்துவருகிறார். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள். தனக்குப் பிறந்த குழந்தைகளை முதன்முதலில் கையில் ஏந்திய தருணத்துக்கு இணையாக இன்னொரு தருணமும் கெவினுக்கு வாய்த்திருக்கிறது. அவர் வளர்க்கும் பெண் சிங்கம் ஒன்று குட்டிகள் ஈன்றிருந்தது. கெவின் அவற்றைப் பார்க்கச் சென்றார். அந்தத் தாய்ச் சிங்கம், தன் குட்டி ஒன்றை கெவினிடம் அன்பாகத் தூக்கிக்கொடுத்த கணத்தில் நெகிழ்ந்து மகிழ்ந்தார் கெவின்! (வீடியோ: https://www.youtube.com/watch?v=oHk43wyk9cM)