மற்ற எபிசோடுகள்
Published:Updated:

ஹாய் மதன் கேள்வி - பதில்

எதிரியின் அடையாளம் என்ன?

மு.தமிழ்ப்பாண்டியன், சென்னை-49.

ஹாய் மதன் கேள்வி - பதில்

உச்சந்தலை வழுக்கையை மறைக்க ஜவஹர்லால் நேரு பின்பற்றிய 'குல்லா’ வழிமுறையைத்தான் எம்.ஜி.ஆரும் பின்பற்றினார் என்பது உண்மையா?

அப்படியே இருந்தாலும் அதில் என்ன தவறு?! ஆனால், நேருவின் குல்லாவை எம்.ஜி.ஆர். பின்பற்றி இருக்க சான்ஸ் இல்லை. அது வேறு டைப். எம்.ஜி.ஆர் தொப்பி காஷ்மீர், ஆஃப்கன், ரஷ்ய ஸ்டைல்!

சற்று புஸுபுஸுவென்று, கிராப் மாதிரி இருப்பதால் எம்.ஜி.ஆர். புத்திசாலித்தனத்தோடு அதைத் தேர்ந்தெடுத்து இருக்க வேண்டும். நேரு குல்லா அணிந்த எம்.ஜி.ஆரை உங்களால் கற்பனை செய்ய முடிகிறதா?! ஒரு வித்தியாசம் - நேரு குல்லாவைப் பல காங்கிரஸ் தலைவர்கள் அணிந்தார்கள். எம்.ஜி.ஆர் குல்லாவை அவர் மட்டுமே அணிந்தார்!

அ.யாழினி பர்வதம், சென்னை-78.

குளிர்ப் பிரதேசத்தில் விளைகிற எலுமிச்சையை லெமன் (lemon) என்றும், வெப்ப மண்டலத்தில் விளைவதை லைம் (lime) என்றும் சொல்ல வேண்டுமாமே, அப்படியா?

ஹாய் மதன் கேள்வி - பதில்

அப்படி எல்லாம் இல்லை. இரண்டும் ஒன்றே! லைம் (lime) அடிப்படையில் பிரெஞ்சு வார்த்தை. லைம் என்பதற்கு சுண்ணாம்பு என்கிற அர்த்தமும் உண்டு \ கால்ஷியம் கார்போனேட். பப்ளிசிட்டியின் மையத்தில் இருப்பவரை Lime Light-ல் இருப்பதாகச் சொல்கிறோம். Lemon Light என்றுசொல்வது இல்லை! ஆசியாவில் இருந்து (குறிப்பாக இந்தியாவில் இருந்து) மேலைநாடு களுக்குப் போன செடி எலுமிச்சைச் செடி. உண்மையில் ரொம்பக் குளிர் எலுமிச்சைக்கு ஏற்றது அல்ல. (ஆகவேதான் யு.எஸ்-ஸில் ஃப்ளோரிடாவில் எலுமிச்சைச் செடி வளர்ச்சி அதிகம்). இங்கே வெங்காயம் மாதிரி எலுமிச்சை விலை எகிறாமல் இருக்க வேண்டும். புத்தாண்டில் அது நமக்கு நிறையத் தேவைப்படும் - நடக்கிற ஊழல்களைப் பார்த்து, இந்திய மக்கள் தங்கள் தலையில் தேய்த்துக்கொள்ள!

ரேவதிப்ரியன், ஈரோடு.

ஹாய் மதன் கேள்வி - பதில்

ஒட்டகச் சிவிங்கி போன்ற பிராணிகள் முட்கள் நிறைந்த கற்றா ழைச் செடிகளைச் சாப்பிடுவதுபோல... தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகிறதே, அவற்றுக்கு நாக்கில் முட்கள் குத்தாதா?

முறுக்கு, ஓமப்பொடி சாப்பிடும்போது உங்கள் நாக்கில் குத்துகிறதா? ஒட்டகச் சிவிங்கிக்கு முட்கள் ஓமப்பொடிபோல! அவ்வளவு தடிமனான, கடினமான நாக்கு! அதன் நாக்கால் நம் கன்னத்தில் அறைந்தால் தோல் பிய்த்துக்கொண்டு ரத்தக் காயத்துடன் கீழே விழுந்துவிடுவோம்!

ஆர்.அரவிந்த், சென்னை-18.

டி.வி சீரியல்கள் வந்த பிறகு, மக்களின் படிக்கும் திறன் குறைந்துவிட்டதா?

என்னைப் பொறுத்தவரையில் அதிகமாகி இருக்கிறது! வீட்டில் சீரியலை ஆன் செய்தால், உடனே நான் என் அறைக்குள் சென்று, நிம்மதியாகப் புத்தகம் படிக்க ஆரம்பித்துவிடுகிறேன். ஆகவே, டி.வி சீரியல்களால் படிக்கும் திறன் அதிகமாகி இருக்கிறது என்றுதானே அர்த்தம்?!

கே.குலசேகரன், திண்டுக்கல்.

##~##

அண்மையில் நீங்கள் பார்த்த, அல்லது உங்களுக்கு நேர்ந்த ஆச்சர்யமான நிகழ்ச்சி ஏதேனும் உண்டா?

போன வாரம் யதேச்சையாக சமையல் அறைக்குள் எட்டிப்பார்த்தேன். அங்கே ஒரு தட்டில், நான்கு வெங்காயங்கள் இருந்தன!

எம்.மிக்கேல்ராஜ், சாத்தூர்.

நண்பனை அடையாளம் கண்டுபிடித்துவிடலாம். எதிரியை எப்படி சார் அடையாளம் கண்டுபிடிப்பது?

நீங்கள் இன்னும் அடையாளம் கண்டுபிடித்துவிடாத நண்பர்கள், எதிரிகளாக இருக்கக்கூடும். உஷார்!

ஹாய் மதன் கேள்வி - பதில்

ஆர்.பிரசன்னா, மதுரை-11.

கடவுளை 'வா, போ’ என்று ஏக வசனத்தில் அழைப்பது உரிமை என்றால், பெற்றோரை 'வா, போ’ என அழைப்பது மட்டும் எப்படித் தவறாகும்?

பக்தியின் உச்சத்தில் உணர்ச்சிவயப்படும்போதுதான் கடவுளை 'வா, போ’ என்கிறோம். அதே உணர்ச்சிப் பெருக்கு பெற்றோரிடமும் ஏற்படும்போது தாராளமாக 'வா, போ’ என்று அழைக்கலாம். உதாரணமாக, அன்றாடம் அம்மாவை 'நீங்க, வாங்க’ என்று அழைப்பவர், அம்மா இறந்தவுடன் 'ஐயோ, போயிட்டியே!’ என்று ஏக வசனத்தில் கதறுவதை நீங்கள் கவனித்து இருக்கலாம்!