
ஹெலினாவைப்போல் எங்கெங்கிருந்தோ ஆயிரமாயிரம் பேர் கடவுளைத் தேடி அலைகிறார்கள்
செல்வியின் வீடு முழுக்க கடவுள் படங்களால் நிறைந்துகிடந்தது!
ஏழெட்டு வருடங்கள் இருக்கும் செல்வியைப் பார்த்து. அவ்வப்போது சினிமாவில் அட்மாஸ்பியருக்கு அழைத்து வரப்படுபவர். அவரைப் பார்க்கும்போது, அசோகமித்திரனின் 'மானசரோவர்’ நாவலில் வரும் சியாமளா தான் ஞாபகத்துக்கு வருவார். எப்போது பார்த்தாலும் பெரும் குரலெடுத்துச் சிரிப்பதோ, யாரேனும் திட்டி விசும்பலாக அழுவ தோவான செல்வி. வறுமையும் காலமும் தின்றுவிட்ட செல்வியின் உடலில் இன்னும் கொஞ்சம் வனப்பு இருப்பது, நாடகத்தின் எஞ்சிய காட்சிகளுக்கோ எனத் தோன்றும்.
ஒரு முறை ஹேண்ட்பேக்கில் இருந்து மடித்து மக்கிய பழுப்புத் தாள் ஒன்றை எடுத்துக் காட்டினார். 20 வருடங்களுக்கு முன்பு ஏதோ ஒரு பத்திரிகையில் பாஸ்போர்ட் சைஸ் கறுப்பு-வெள்ளை போட்டோ வுடன் செல்வியைப்பற்றி பெட்டிச் செய்தி வந்திருந்த பக்கம் அது. 'தூண்டில் சிரிப்பி லேயே இழுக்கும்

இவர், கோடம்பாக்கத்தில் நாயகியாக ஒரு சூப்பர் ரவுண்ட் வருவார் என்பதில் ஐயம் இல்லை’ என்றது அந்தத் துணுக்கு. ''என் குடும்பத்தைக் கரை சேக்கறதுக்குள்ளயே ரவுண்ட் ரவுண்டா முடிஞ்சுருச்சு முருகா...'' என அதிர அதிரச் சிரித்தார்.
ஒரு முறை சூளைமேட்டில் கை தட்டிக் கூப்பிட்டார். ''பக்கத்துலதான் வீடு... வரலைன்னா, சாலை மறியல்ல உட்கார்ந்துரு வேன்...'' என்றபடி இன்னும் பெரிதாகச் சிரித்தார்.
அவரது வீட்டுக்குப் போனபோதுதான் பார்த்தேன்... வாசலில் தொடங்கி சமையல் அறை வரை எங்கெங்கும் கடவுள் படங்கள். வாசல் மாடத்தில் அன்னை மேரி குழந்தை இயேசுவோடு நிற்கிற சிலை. சுவர் முழுக்க குரூப் போட்டோவுக்கு போஸ் கொடுத்த மாதிரி அத்தனை சாமிகளும் அலங்காரத்தில். கூடத்தில் சிவன், பிள்ளையார், ஷீர்டி சாய்பாபா. சமையலறை செல்ஃபிலும் மலைப் பிரசங்க இயேசு. ரூமில் பெரிதாக வெங்கடாஜலபதி. ''என்னங்க இது... வீட்ல ஒரு இடம் விடாம சாமி படமா மாட்டிவெச்சிருக்கீங்க?''
''படைச்சு அனுப்பிட்டா மட்டும் போதுமா முருகா? என்னை எப்பிடி வெச்சிருக்காங்கனு அவங்களுக்கு உறைக்க வேணாமா..? அதான் எல்லாரையும் கொண்டுவந்து உக்காரவெச்சிருக்கேன்.''
செல்வி சொன்ன இந்த வார்த்தைகள், மனித இனத்தின் மனக் குரல் என இப்போது தோன்றுகிறது. கடவுளுக்கும் மனிதனுக்குமான தீராத உரையாடலின் முடிவற்ற சொற்கள் அவை. இருக்கிறார் என்றோ, இல்லை என்றோ கடவுள் ஒவ்வொரு பொழுதும் நம்மோடு இருக்கிறார்.
சில வருடங்களுக்கு முன்பு எட்டயபுரம் போயிருந்தபோது, பூட்டப்பட்ட பாரதி யாரின் வீட்டுக்கு வெளியே சட்டம் இடப் பட்ட கம்பிகளைப் பிடித்துக்கொண்டு அந்த இரவில் நின்றேன். வீட்டுக்குள் யாரோ ஏற்றி விட்டுப் போன அகல் அசைந்துகொண்டு இருந்தது. சட்டென்று,
'காலை இளவெயிலின் காட்சி-அவள் கண்ணொளி காட்டுகின்ற மாட்சி நீல விசும்பினிடை இரவில் சுடர் நேமி யனைத்துமவள் ஆட்சி’ - என்ற பாரதியின் வரிகள் அசரீரியாக ஒலிப்பது போல் ஒரு பிரமை தோன்றியது.
அங்கே இருந்து திருநெல்வேலி போகிற பஸ்ஸில் ஏறியபோது, கூடை நிறையக் கொய்யாப் பழங்களோடு ஒரு சிறுமி உட்கார்ந்து இருந்தாள். கண்டக்டர் டிக்கெட் கேட்டபோது கொஞ்சம் பழங் களை எடுத்து நீட்டினாள் அந்தச் சிறுமி. கடுகடுத்து, நீண்ட விசில் அடித்த கண்டக்டர், ''இதுகளுக்கு இதே வேலையாப்போச்சு... எறங்கும்மா...'' என மின்னல் நொடியில் அவளை நடு வழியில் இறக்கிவிட்டு, பஸ்ஸைக் கிளப்பவைத்தார். நடுவழி இருட்டில் அந்தச் சிறுமி கரைந்து மறைந்தாள்.

சத்தியமாக இரண்டு வாரங்களுக்கு முன்பு அவளை நான் பார்த்தேன். ஜெமினி பாலத்துக்குப் பக்கத்தில் இருக்கும் ஒரு பள்ளிக்குப் போயிருந்தேன்.
நண்பர் ஒருவ ரின் குறும்படத்தில் நடிக்க ஒரு சிறுமியைத் தேடிப் போயிருந்தோம். ஷோபனா என்ற சிறுமியை அறிமுகப்படுத்தினார்கள். ''நீங்க கேட்கற மாதிரி இவ கரெக்டா இருப்பா...ரொம்ப க்யூட் சார். பாரதியார் பாட்டெல்லாம் பிரமாதமாப் பாடுவா. ஷோபனா ஒரு பாட்டுப் பாடு...'' என்றார் பார்வையற்ற ஒரு டீச்சர். சில விநாடிகள் மௌனித்து சட்டென,
'காலை இள வெயிலின் காட்சி - அவள் கண்ணொளி காட்டுகின்ற மாட்சி’ எனப் பாட ஆரம்பித் தாள் ஷோபனா. உண்மையில் இன்னொரு ஜென்மத்தில் நுழைவதைப்போல இருந்தது எனக்கு. பாடிக்கொண்டு இருக்கும்போதே அவள் உணர்ச்சிவசப்பட்டு காலை எடுத்துவைக்க, 'தட்ட்ட்’டெனச் சத்தம் வந்தது. அப்போதுதான் அவளுக்கு ஒரு பக்கம் மரக் கால் என்பதைக் கவனித்தேன். சொல்ல முடியாத உணர்வு நிலை கிளர்ந்தது. அன்று நடுவழியில் இறக்கிவிடப்பட்ட சிறுமியும் ஷோபனாவும் ஒன்றேதான் எனத் தோன்றியது. நடுவழியில் இறக்கிவிடப்பட்ட சிறுமியைக் கடவுள் திருநெல்வேலிக்குக் கொண்டுபோய்ச் சேர்த்திருப்பாரா? பதில்களைக் கண்டடைய முடியாத ஒற்றைக் கேள்விக்குப் பெயர்தான் கடவுளா?
இப்போது திருவண்ணாமலையில் இருக் கிறேன். வெளிச்சம் விளையாடும் யோகி ராம்சுரத்குமாரின் தியான மண்டபத்தில் உட்கார்ந்து இருக்கும்போது பார்க்கிற வெள்ளைக்காரர்கள் எல்லாம் எனக்கு ஹெலினாவை நினைவுபடுத்துகிறார்கள். ஹெலினாவைப் பார்த்தது, ஏழெட்டு வருடங்களுக்கு முன்பு ஒரு பௌர்ணமி நாளில். விகடன் கட்டுரை ஒன்றுக்காக திருவண்ணாமலைக்கு வந்தபோது, பௌர்ணமி இரவில் கிரிவலப் பாதையில் இருக்கும் ஒரு மண்டபத்தில் கண்களில் நீர் வழிய உட்கார்ந் திருந்தாள். ஆங்கில மொழிபெயர்ப்புக்காக நண்பர் குமாரபாலனை அழைத்துப் போயிருந்தேன். வெகு நேர தியானத்துக்குப் பிறகு எழுந்த ஹெலினாவைப் பேட்டி என அணுகியபோது, கடுமையாக மறுத்துவிட்டாள். தொடர்ந்து சென்று குமாரபாலன் ரமணரைப்பற்றிப் பேச ஆரம்பிக்க, கொஞ்சம் கொஞ்சமாக எங்களுடன் பேச ஆரம்பித்தாள் ஹெலினா.
மறு நாள் ரமணாஸ்ரமத்துக்கு வெளியே உட்கார்ந்து இரவெல்லாம் பேசிக்கொண்டு இருந்தோம். டென்மார்க்கில் இருந்து பிடுங்கிக்கொண்டு இந்தியாவுக்கு ஓடி வந்தவள். அம்மா இரண்டாவது கல்யாணம் பண்ணிக் கொண்டு வர, காதலித்துக் கல்யாணம் பண்ணிக்கொண்டவன் திடுதிப்பென்று டைவர்ஸ் கேட்க... எல்லாவற்றையும் தூக்கி வீசிவிட்டு, இந்தியாவுக்கு ஓடி வந்திருக்கிறாள். இரண்டு வருடங்களாக இந்தியா முழுக்கச் சுற்றிவிட்டு, இப்போது திருவண்ணாமலைக்கு வந்திருப்பதாகக் கூறினாள். அந்த பாராவின் முடிவில், பெருமூச்சோடு வானத்தைப் பார்த்தபடி, 'உலகின் பெரும் பிணி... உறவுகளும் பற்றுகளும்தான்’ என்றாள். 'எந்தச் சூழ்நிலையில் உன்னை வைத்திருந்தாலும் மனம் உடைந்துபோகாமல், அதற்காக கடவுளுக்கு நன்றியுடன் இரு. நடப்பவை எல்லாம் அவரின் ஆசீர்வாதம்’ என்ற வாசகத்தை புன்னகை ததும்பச் சொன்னாள். விடியலில் அவள் ஒரு வெண் புறாவைப்போல் ஆஸ்ரமத்துக்குள் சென்றது இப்போது ஹாசிப்கானின் ஓவியம்போல் மனதில் வழிகிறது.
ஹெலினாவைப்போல் எங்கெங்கிருந்தோ ஆயிரமாயிரம் பேர் கடவுளைத் தேடி அலைகிறார்கள்
ஏதேதோ தேசங்களில் இருந்து எவ்வளவோ காயங்களைச் சுமந்துகொண்டு கருணையின் பாதம் தேடி மூச்சிரைக்க ஓடி வருகிறார்கள்.
திருவண்ணாமலையில் எழுத்தாளர் பவா.செல்லதுரை சார் வீட்டுக்குப் போயிருந்தேன். அவர் மனைவி ஷைலஜா அக்கா பிரமாதமான மொழிபெயர்ப்பாளர். அவர்களின் பிள்ளைகள், ஏழாவது படிக்கிற வம்சியும் நாலாவது படிக்கிற மானசியும் கவிஞர் பரிணாமன் பாடல்களைப் பாடிய தைப் பார்க்க ஆச்சர்யமாக இருந்தது.
பவாவிடம், ''உங்களுக்குக் கடவுள் நம்பிக்கை உண்டா...?'' எனக் கேட்டேன்.
''இல்லை...'' என்றார்.
''எப்பவுமே இல்லையா..?''
''மார்க்சிய சிந்தனைகளைப் படிச்சுத் தேறின பின்னாடி, இயற்கைதான் உலகம். கடவுள்னு ஒரு விஷயம் கிடையாதுனு உறுதியா நம்ப ஆரம்பிச்சுட்டேன் முருகன். நானும் ஷைலஜாவும் இப்பவும் அப்படித்தான் இருக்கோம். ஆனா, நடுவுல என் மூத்த பையன் சிபி ஒரு ஆக்ஸிடென்ட்ல இறந்து போனப்போ, ரெண்டு பேரும் உடைஞ்சு போயிட்டோம். முழுக்க ஒரு சூன்யத்துல போய் அடைஞ்சுட்ட மாதிரி ஆகிருச்சு. ரெண்டு பேருக்குமே ஏதோ ஒரு ஆறுதல் தேவைப்பட்டுச்சு... அது கடவுளா இருந்தாக் கூடப் பரவாயில்லைனு தோணுச்சு'' என்றவர் மனைவியைப் பார்த்துப் புன்னகைத்து விட்டுச் சொன்னார்.
''சிபி இனிமே கிடைக்க மாட்டான்னு தெரிஞ்சும் அவனை எங்கெங்கேயோ தேடினோம். ஒரு நாள் விசிறி சாமியார் யோகி ராம்சுரத்குமாரைப் பார்க்கணும்னு தோணுச்சு. ஏதோ ஆறுதல் கிடைக்கும்னு போனோம். ஆஸ்ரம வாசல்ல பெரிய கூட்டம். எல்லார்கிட்டயும் சீட்டு எழுதி வாங்கினாங்க. நான் 'என் மகனைக் கண்டுபிடிக்க வேண்டும்’னு எழுதி அனுப்பினேன். சில நொடிகள்ல சுரத்குமார் வந்தார். ஷைலஜாட்ட, 'என்னம்மா வேணும் உனக்கு?’னு கேட்டார். 'என்னை அம்மானு கூப்பிட யாரும் இல்ல. எம் பையன் வேணும் சாமி’னு சொன்னாங்க. உடனே அவர், 'உன் பையன் எங்கேயும் போகலையே... எ சன் வில் கம் டு கால் யு அம்மா. டோன்ட் வொர்ரி’னு சொல்லிட்டு எழுந்தார். ஒரு நிமிஷம் அந்த மண்டபத்துலேருந்து, 'பவாப்பா... ஷைலம்மா’னு சிபி ஓடி வருவானோனு மனசு பதறுச்சு முருகன்.
அங்கேயிருந்து வெளியே வந்தப்போ ஒரு மணி நேரத்துக்கு முன்னாடி இருந்த அதே மனநிலைதான் இருந்துச்சு. ஷைலஜாட்ட, 'உனக்கு சாமியாரைச் சந்திச்சது ஆறுதலா இருந்துச்சா?’னு கேட்டேன். 'இல்ல பவா... சிபி திரும்ப வர்ற வரைக்கும் எதுவுமே எனக்கு ஆறுதல் தர முடியாதுனு தெரிஞ்சது’னு சொன்னாங்க. இதோ இந்த நிமிஷம் வரை காலமும் மனுஷங்களும்தான் எங்களை ஆறுதல்படுத்தி அடுத்தகட்டத்துக்கு அழைச்சுட்டு வந்திருக்காங்க. இங்கே கடவுளை முன்வைக்கிற எல்லாமே அபத்தமா இருக்கு. நாமதான் நம்மளை வழிநடத்தணும்.''
அங்கிருந்து வரும்போது, வாசலில் வம்சி யும் மானசியும் வீட்டை நிறைத்து விளையாடிக்கொண்டு இருந்தனர். சிபி எடுத்துப் போன சந்தோஷத்தையும் ஆறுதலையும் இவர்களிடம் கொடுத்து அனுப்பியது யார் என்ற கேள்வி என்னைப் பின்தொடர் கிறது!
என் அப்பா 20 வருடங்களுக்கும் மேலாக பழநிக்கு மாலை போட்டவர். இப்போது நானும் சபரிமலைக்குப் போய் வருகிறேன். நிஜமாகவே காரண காரியங்கள் இல்லை. அதிகாலையில் எழுவதும், குடிக்காமல் இருப்பதும், சுத்தமாகப் புழங்குவதுமாக அந்த 48 நாட்கள்... ஓர் அனுபவம். பயணமோ அதி அலாதி அனுபவம். ரயில் ஏறிப் போய் அதிகாலை செங்கனூர் ஸ்டேஷனில் இறங்கினால், குளிர் காதடைக்கும். தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடகா சாமிகள் கூட்டம் கூட்டமாக பம்பை பஸ்ஸில் வாசமடிப்பார்கள். 'சாமியே சரணம் ஐயப்பா’ எனமலை முழுக்கக் கும்மியடிப்பார்கள். பம்பையில் குளித்துவிட்டு நடக்க ஆரம்பித்தால், யார் யாரோ குளுக்கோஸ் கொடுப்பார்கள். விசிறிவிடுவார்கள். சின்னப் பாதையிலும் பெரிய பாதையிலுமாக மூச்சு முட்ட முட்ட எத்தனை சைஸில், எத்தனை தினுசில், எத்தனை பேர்..? நடக்க முடியாமல் 'டோலி’யில் போகிறவர்கள்... ஒவ்வொருவர் கண்களிலும் எவ்வளவு பிரார்த்தனைகள். சரங்கொத்தி யில் இருந்து பிதுங்கி, நகர்ந்து, பதினெட்டுப் படிகளில் திமிறி ஏறி, கர்ப்பக்கிரகத்தில் ஐயப்பனைப் பார்ப்பது ஒரு சிறு மின்னல் நொடிதான்.
'ஒரு கணம் கண் மூடினால் ஒரு கோடி மின்னல் மின்ன வேண்டும்’ என்கிற பாரதி வரி மாதிரி, அந்த ஒரு நொடியில் மனம் துள்ளி அடங்கும். லட்சோப லட்ச அழுக்குகளைச் சுமந்தோடும் பம்பையை மறுபடி கடக்கும்போது மனம் பேரமைதியில் இருப் பது உண்மையா, பிரமையா என சத்தியமாக இப்போதும் தெரிய வில்லை. ஆனால், ஒவ்வொரு முறையும் மலைக்குப் போய் வந்த இரண்டொரு நாட்களில் குடி, ஒழுங்கின்மை, அசுத்தம் எனக் கலைத்துப்போட்ட பழைய வாழ்க்கை ஆரம்பித்துவிடும் எனக்கு!
தஞ்சாவூர் பெரிய கோயிலில் இருந்து ஸ்ரீபெரும்புதூர் ராமானுஜர் வரைக்கும் தமிழ்நாட்டில் ஏராளமான கோயில்களைச் சுற்றிவிட்டேன். சாமிகளின் முகங்கள் அன்றி, மனித மனம்போல் கனத்து இருண்டு இருக்கும் கர்ப்பக்கிரகங்களில், பேரெழிலாய் எரியும் தீபங்களையே நெஞ்சில் சுமந்து வந்திருக்கிறேன். தீமைகளை எரிக்கும் தீபங்கள் நிரந்தரமாவதே எப்போதைக்குமான பிரார்த்தனை.
வாழ்வின் மாயங்களைப் பொறுக்க முடியாமல், வருடம் முழுவதும் கோயில் கோயிலாகத் திரியும் நிறைய அன்பர்களை நான் அறிவேன். அமைதி இன்மையையும் நோய்களையும் சுமந்துகொண்டு எவ்வளவு பேர் கடவுளைத் தேடுகிறார்கள்..? 'விடுபடுதல் வேண்டி/ விரதம் இருந்து இருமுடி கட்டி/ மலையேறி மணிகண்டனைத் தேடிப்போனால்/ அவன் கேட்கிறான் ஏன் இங்கு வந்தாய்?/ என்னிடம் பதிலில்லை’ - என்பது பூமா.ஈஸ்வரமூர்த்தியின் கவிதை. என்னிடமும் பதில் இல்லை!

தொ.பரமசிவம் அய்யாவின் 'பண்பாட்டு அசைவுகள்’ படித்த பிறகுதான், செல்லூரில் வனாந்தரத்தில் கிடக்கும் குலசாமி மகமாயி மேல் எனக்குப் பரிவு வந்தது. அறிவுமதி அண்ணனோடு அவரது ஊர் சு.கீணணூரில் வீர அய்யனாரைப் பார்க்கப் போனபோது நடந்த உரையாடல்களில் அது இன்னும் அதிகமானது. மகமாயி, ஏழைகளின் சாமி. கோழிக் கறி வாசமும் பொங்கச் சோறுமாக 'ஆத்தாவைக் கும்பிட்டுக்கடா...’ என்பார் அப்பா. கன்னிமார் சூழ, ஊரடிக்க வந்தவனைக் காலில் போட்டு மிதித்துக் குடலை உருவும் மகமாயி. அறுப்பறுக்கும் முன்பு மொதக் கொத்து நெல்லை மகமாயிக் குத்தான் வைக்கிறார்கள் இப்போதும். குழந்தை பிறந்தால் தேடி வந்து அவள் காலடியில் போட்டு, 'ஊன் உசுரைக் காப்பாத்துப்பா...’ எனக் கும்பிடுகிறார்கள். இந்த மண்ணில் வாழ்ந்து, மக்களுக்காக வாழ்ந்து நடுகல் எய்திய முப்பாட்டன்களை, பாட்டிகளைக் கும்பிடும் இயற்கை வாழ்வை செல்லூருக்குப் போகும்போதுதான் மீட்டெடுக்க முடிகிறது.
எப்போது போனாலும் கோயில் வாசலில் உட்கார்ந்து 'வாங்கப்பா’ எனச் சாந்தமாக அழைக்கும் வேணு பூசாரி, கொடை கொடுக்கும் நள்ளிரவுகளில் ரௌத்ரமாக இருப்பார். நாக்கைத் துருத்தி பூச்சட்டி ஏந்தி விபூதியை வீசி... 'மட்டேர் மட்டேர்’ எனச் சிக்குபவர்களை அடி பின்னுவார். அவர் குறி சொல்ல, அத்தனை பேரும் பம்மி நிற்பார்கள். சமீபத்தில் ஊருக்குப் போன போது வேணு பூசாரியைத் தேடினேன். ''அவரு செத்துட்டார்டா... போன மாசம் தான்'' என்றான் அண்ணன். அவர் இல்லாத மகமாயி கோயிலில் மண்ணில் விழுந்து எழுந்தேன்... வேணு பூசாரி சிறு தெய்வமாகி விட்டார்!
உண்மையில் எனக்கு மரணங்கள்தான் கடவுளை நெருக்கமாக்கியது. பல பேர் விடை அறிய முடியாத நோய்களின் குரூரங் களில்தான் கடவுளைத் தேடுகிறார்கள். கனவு, உணவு என எல்லோருக்கும் அவரவர் உடலும் மனமும்தான் முதல் சுமை.
எது கடவுள்? இந்தத் தர்க்கத்தில் இருந்து நான் விடுபட்டுவிட்டேன். அது அவரவர்க்கான விருப்பம், தேடல். வாழ்நாள் முழுக்கத் தீவிரமான கடவுள் மறுப்பாளராக இருந்த பெரியார் ஓர் இடத்தில், ''நாத்திகன் என்று சொன்னால், கடவுள் இல்லை என்று சொல்கிறவன் இல்லை. நான் கடவுள் இல்லை என்று சொல்கிறவன் இல்லை, இருக்கிறது என்று ஒப்புக்கொள்ளவும் இல்லை. புராண, இதிகாச, வேத சாஸ்திரங்களை ஒப்புக்கொள்ளாதவர்களையே பார்ப்பனர்கள் நாத்திகன் என்று குறிப்பிடுகின்றனர்'' என்கிறார்.
''சாதி உள்ளிட்ட குரூரங்களையும் மூட நம்பிக்கைகளையும் மத துவேஷங்களையும் கடப்பதுதான் இறை வழியின் முதல் படி'' என்கிறார் பரமஹம்சர். கடவுளைப்பற்றிய உரையாடல்கள் எப்போதைக்கும் முடியப் போவது இல்லை என்பதுதான் நிதர்சனம்.
ஜே.கிருஷ்ணமூர்த்தி, கடவுளைப்பற்றி எப்போதும் பேசவில்லை. அதைப்பற்றியான கேள்விகள் வரும்போதெல்லாம், 'இங்கே இப்போது இருக்கிற உன்னைப்பற்றி பேசுவோம்’ என்பதுதான் பதில்.
'முழுமையின் உள்பக்கம்தான் கடவுள் என்பது. ஆனால், ஒருவர் தன்னுள் இருக்கும் நுழைவாயில் வழியாகத்தான் அதனுள் நுழைய முடியும்’ என்கிறார் ஓஷோ. 'அஹம் பிரம்மாஸ்மி’ என்பதும் 'அன்பே சிவம்’ என்பதும் கருணை என்ற சொல்லின் எச்சம். கடவுள் என்பது கருணை என்ற சொல்லின் உச்சம்!
(போட்டு வாங்குவோம்)
#VikatanGoodReadsChallenge

தொடர் படிச்சீங்களா... சுவாரஸ்யமாக இருந்ததா? சரி, இப்போ உங்களுக்கு அடுத்த சவால். இந்த தொடர் சம்பந்தமான #VikatanGoodReadsChallenge Quiz-ல கலந்துகிட்டு, சரியான பதில்களை சொல்லுங்க. சர்ப்ரைஸ் வெயிட்டிங்..!
Quiz-ல் கலந்துகொள்ள: http://bit.ly/homestaywithvikatan