அவள் 16
Published:Updated:

சக்சஸ் ஐ.ஏ.எஸ் தம்பதி!

வெற்றிப் பயணம்

டும் உழைப்புக்கும், காதலுக்கும் பரிசாக ஐ.ஏ.எஸ் தேர்வில் வெற்றி பெற்று, இப்போது கேரளாவின் அன்புக்குரிய ஐ.ஏ.எஸ். தம்பதியாக அசத்திக் கொண்டிருக்கிறார்கள், தமிழர்களான வாசுகி ஐ.ஏ.எஸ்., கார்த்திகேயன் ஐ.ஏ.எஸ் இளம்ஜோடி!

‘‘ரெண்டு பேருக்கும் 33 வயசு... ஆனா, எங்க ஸ்டோரி ரொம்பப் பெருசுங்க!’’

சக்சஸ் ஐ.ஏ.எஸ் தம்பதி!

- சுவாரஸ்யமாக ஆரம்பித்தார், வாசுகி...

‘‘2000 ஆண்டுக்கான மெடிக்கல் தரவரிசையில நான் தமிழகத்துலயே முதல் ரேங்கும், கார்த்திகேயன் மூன்றாவது ரேங்கும் பெற்று, சென்னை மருத்துவக் கல்லூரியில் சேர்ந்தோம். நான் சென்னைப் பொண்ணு. கார்த்தி, ஈரோட்டைச் சேர்ந்தவர். ஹாஸ்டலில் தங்கிப் படிச்சார். கார்த்தி, நான் உட்பட ஏழு பேர் கொண்ட எங்க ஃப்ரெண்ட்ஸ் டீமில், எங்க ரெண்டு பேருக்கும் சமூக சேவையில் அதிக விருப்பம். அதனால ரெண்டு பேரும் ஐ.ஏ.எஸ் எழுதலாம்னு முடிவு பண்ணினோம்’’...

- வாசுகி இடைவெளிவிட, ஆரம்பித்தார் கார்த்திகேயன்...

‘‘மருத்துவத் துறையே மக்களுக்கு சேவை செய்ற பீல்டுதான். ஆனாலும், இதில் நோய்களுக்கு மட்டும்தான் வைத்தியம் பார்க்க முடியும். அதுவே, அதிகாரம் கையில் இருந்தா இன்னும் விரிவா மக்களுக்கு நல்லது பண்ண முடியுமேனு ரெண்டு பேருமே யோசிச்சதுதான், இந்த முடிவுக்குக் காரணம். இறையன்பு, ராதாகிருஷ்ணன், உமாநாத், குட்சியா காந்தினு சீனியர் ஐ.ஏ.எஸ் ஆபீஸர்களை சந்திச்சு ஆலோசனை பெற்றோம். எல்லோருமே, ‘உங்களை மாதிரி துடிப்பான இளைஞர்கள் நிச்சயம் இந்தத் துறைக்கு வரணும்!’னு சொல்லி உற்சாகப்படுத்தினாங்க!’’ என்ற கார்த்திகேயன், மருத்துவம் முடித்த கையோடு தாங்கள் இருவரும் காதலை வெளிப்படுத்தியதையும் குறிப்பிட்டார்.

‘`ரெண்டு பேருமே ஐ.ஏ.எஸ். ஆகிட்டுதான் காதலைப் பத்தி வீட்டுல சொல்லணும்னு முடிவெடுத்தோம். இருந்தாலும் ரெண்டு பேர் வீட்டுலயும் ஃப்ரெண்ட்ஸ் என்ற முறையில் எங்களை பரஸ்பரம் தெரியும். தினமும் போன், இ-மெயிலில் நோட்ஸ் ஷேர் பண்றது, வாரத்துக்கு ஒரு தடவை கம்பைண்டு ஸ்டடினு பரபரப்பா இருப்போம். காதல் பண்றதுக்கு எல்லாம் நேரம் இல்ல!’’ என்று சிரிக்கும் வாசுகி, 2008-ம் ஆண்டு ஐ.ஏ.எஸ். தேர்வு முடிவில் இந்திய அளவில்97-வது ரேங்க் எடுத்ததுடன், தமிழ்நாட்டில் டாப் 10 ரேங்குக்குள் வர... கார்த்திகேயன் 117-வது ரேங்க் எடுத்து, தமிழ்நாட்டில் டாப் 20 ரேங்க்குக்குள் வந்திருந்தார்.

‘‘பணி ஒதுக்கீடில், எங்களுக்குப் பெரிய அதிர்ச்சி. எனக்கு ஐ.ஏ.எஸ். போஸ்ட்டிங் கிடைச்சது. கார்த்திக்கு ஐ.எஃப்.எஸ். போஸ்ட்டிங்தான் கிடைச்சது. ஐ.ஏ.எஸ். மற்றும் ஐ.எஃப்.எஸ். பதவி கிடைச்சவங்க, அந்தப் பதவியில் இருந்துட்டே மறுபடியும் சிவில் சர்வீஸ் தேர்வு எழுத முடியாது; ராஜினாமா செய்துட்டு மீண்டும் முதலில் இருந்து ஆரம்பிக்கணும். முழு நம்பிக்கையோட பதவியை ராஜினாமா பண்ணச் சொன்னேன். எனக்கு உத்ரகாண்ட் மாநிலம் மசூரியில டிரெயினிங் பீரியட் தொடங்கிய நேரத்துல, சென்னையில் நண்பர்களோட ரூம்ல இருந்து மறுபடியும் ஐ.ஏ.எஸ் படிக்க ஆரம்பிச்சார் கார்த்தி!’’

- வார்த்தைகள் படபடக்கின்றன வாசுகிக்கு.

‘‘வாசுகிக்கு காலையில 5 டு மாலை 5 வரை டிரெயினிங் முடிஞ்சு, கடைசியா கல்ச்சுரல் ஆக்டிவிட்டீஸ் நடக்கும் சமயத்துல, அதில் கலந்துக்காம, எனக்காக நோட்ஸ் எடுப்பாங்க. இதுக்காக கிட்டத்தட்ட நாலு, அஞ்சு மணி நேரம் மெனக்கெட்டு, இரவு 11 மணிக்கு எனக்கு அதை மெயில் அனுப்புவாங்க. எனக்காக அவங்க அவ்ளோ சிரமப்படுறதே, என்னை அதிக உந்துதலோட படிக்க வைத்தது!’’ எனும் கார்த்திகேயனுக்கு, 2009-ம் ஆண்டு தேர்வு முடிவிலும் ஐ.ஆர்.எஸ். பணியே கிடைத்திருக்கிறது. ஐ.ஆர்.எஸ். பணியில் சேர்ந்து, ‘எக்ஸ்ட்ராடினரி லீவை’ பயன்படுத்தி மீண்டும் மீண்டும் தேர்வெழுத,  2011-ம் ஆண்டு ஐ.ஏ.எஸ் கனவை நனவாக்கியிருக்கிறார்!

‘‘இதுக்கு இடையே எங்க ரெண்டு பேருக்கும் வயசு கூடிட்டே போகுதுனு வீட்டில் நச்சரிக்க, எங்க காதலைச் சொல்லி, சம்மதம் வாங்கி, திருமணம் முடிச்சோம். முதல் பொண்ணு ‘சையூரி’ பிறந்தா. வாசுகி மத்தியப்பிரதேச மாநில பேத்துல் நகரத்தில் சப்-கலெக்டரா இருந்தப்போ, எனக்குப் பயிற்சி முடிந்து கேரள மாநிலம் பாலக்காடு அசிஸ்டன்ட் கலெக்டரா பணி கிடச்சது. அந்த நேரம் வாசுகிக்கு கலெக்டரா பதவி உயர்வு கிடைக்க, கேரள மாநிலத்துக்கு ‘கேடர் சேஞ்ச்' (Cadre Change) எனப்படும் பணி மாறுதல் கேட்டார். மத்தியப்பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான், `நம்ம வீட்டுப் பொண்ணை நாம ஏன் அனுப்பணும்... அவர் கணவரை இங்கே டிரான்ஸ்ஃபர் வாங்கிட்டு வரச் சொல்லுங்க' என்று மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரியிடம் சொன்னார். ஆனா, எனக்காக போராடி இங்க வந்தாங்க வாசுகி!’’ என்ற கார்த்திகேயனின் குரலில் காதல் பெருமை!

‘‘தம்பதி ஆனதுக்கு அப்புறமும் பயிற்சி, போஸ்ட்டிங்னு பிரிவுகளை மட்டுமே பார்த்திருந்த நாங்க, ஒருவழியா கேரளாவில் ஒரே வீட்டில் சேர்ந்து வாழ ஆரம்பிச்சப்போ, சந்தோஷத்துக்கு அளவே இல்ல. அடுத்து பையன் சமரன் பிறந்தான். இப்போ நான், ‘சுசித்வா மிஷன்' (suchitwa mission) எனப்படும் ‘தூய்மை கேரளா’ துறையின் எக்ஸிக்யூட்டிவ் இயக்குநர்... கார்த்தி, திருவனந்தபுரம் சப்-கலெக்டர். இன்னும் ஆறு மாசத்துல மாவட்ட கலெக்டராகிடுவார்!’’

- அத்தனை மகிழ்ச்சி வாசுகி முகத்தில்!

‘‘ஆணும், பெண்ணும் சமம் என்பதில் நான் ரொம்ப உறுதியா, கண்டிப்பா இருப்பேன். எங்க வீட்டுல எல்லா வேலைகளையும், நானும் கார்த்தியும் ஷேர் பண்ணிதான் செய்வோம். தினமும் காலையில நான் சீக்கிரம் வேலைக்குப் போயிடுறதால, குழந்தைகளை குளிக்க வெச்சு சாப்பாடு ஊட்டுறதும், சையூரியை ஸ்கூலுக்கு அனுப்புறதும் கார்த்தி டியூட்டி. மாலையில் அவருக்கு முன்னாடி நான் வீட்டுக்கு வந்துடுவேன் என்பதால, பிள்ளைங்க தூங்குற வரைக்கும் என் பொறுப்பு. எங்க பொண்ணுக்கும், பையனுக்கும் வீட்டு வேலைகளைச் சொல்லிக்கொடுத்து வளர்க்குறோம்’’ என்று வாசுகி சொல்ல, தங்களின் ஐ.ஏ.எஸ் `அஜெண்டா'க்கள் சொன்னார் கார்த்திகேயன்...

சக்சஸ் ஐ.ஏ.எஸ் தம்பதி!

‘‘ரெண்டு பேரும் அவங்கவங்க துறையில பல திட்டங்களை வெற்றிகரமா செயல்படுத்திட்டு இருக்கோம். கிரீன் புரோட்டோகால், சபரிமலையை தூய்மையாக்குவது, கழிவு மேலாண்மைனு வாசுகி பாராட்டுகள் குவிக்கிறாங்க. ‘வேஸ்ட்?’ என்ற அவங்களோட புத்தகத்தை கேரள முதல்வர் உம்மன் சாண்டி வெளியிட்டது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் வெற்றிகரமா தேசிய போட்டிகளை நடத்தியது, ஆக்கிரமிப்பு நீரோடைகளை மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வந்தது, சப்-கலெக்டர் பதவியுடன், கூடுதலா ஊரக வளர்ச்சித் துறைமூலமா ஏழை மக்களுக்கு இலவச வீடுகளை கட்டிக் கொடுக்கும் திட்டம்னு நான் பிஸி’’ என்று கார்த்திகேயன் சொல்ல,

‘‘காதல் மணவாழ்க்கை, கரம்கோத்து மக்கள் பணினு இதுதான் நாங்க ஆசைப்பட்ட வாழ்க்கை. எங்க தளராத உழைப்புக்கும், அடர்த்தியான காதலுக்கும் கிடைச்ச பரிசு இது. ஒரே வருத்தம்... தமிழ்நாட்டை மிஸ் செய்றதுதான்!’’

- சேர்ந்து சொல்கிறார்கள் இருவரும்.

கலக்குங்க!

கு.ஆனந்தராஜ் படங்கள்:  எம்.உசேன்