Published:Updated:

நீர் அடித்து நீர் விலகியதா?

நீர் அடித்து நீர் விலகியதா?

நீர் அடித்து நீர் விலகியதா?

வீடுகளில், வீதிகளில், எங்கெங்கும் மழை வெள்ளம். குடியிருப்புகளில் நீர் புகுந்துவிட்டது. சாலைகளில் இடுப்பளவு தண்ணீர் தேங்கி நிற்கிறது. தலைநகரம் சென்னை தன் வரலாறு காணாத வெள்ளத்தில் மூழ்க, தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இன்னும் பெருமழை ஓயவில்லை. ஆனால், கண்ணுக்கு எட்டிய தூரம் வரை நீரால் சூழப்பட்டிருக்கும் இந்த நேரத்தில்தான் மக்கள் குடிநீருக்காகவும் பரிதவித்து வருகின்றனர். மழை வெள்ளத்தால் வீடுகளுக்குள் சிக்கிக்கொண்டோர் குடிக்கத் தண்ணீர் கிடைக்காமல் தத்தளிக்கின்றனர். சுற்றி தண்ணீர் தேங்கி நின்றாலும், தவித்த வாய்க்கு நல்ல குடிநீர் கிடைக்காமல்போனது ஏன்? 

நகரங்களில் பெரும்பான்மை மக்களின் குடிநீர் ஆதாரம் கேன் தண்ணீர் மட்டுமே. காரணம், மெட்ரோ தண்ணீர் சரிவர வருவதே இல்லை. போர்வெல் தண்ணீரோ, குடிப்பதற்கு ஏற்றதாகவும் இல்லை. கேன் தண்ணீரையே நம்பியிருக்கும் நிலையில், திடீர் மழை வெள்ளத்தால் அது கிடைக்காமல்போக, மக்களால் அந்தச் சூழலை எதிர்கொள்ள முடியவில்லை. இன்னொரு பக்கம், சென்னைக் கடற்கரையை ஒட்டி இருக்கும் பல்லாயிரக்கணக்கான வீடுகளில், நிலத்தடி நீரின் உப்புத்தன்மை காரணமாக, அனைத்துத் தேவைகளுக்கும் லாரி தண்ணீரைத்தான் பயன்படுத்துகின்றனர். அப்படி தண்ணீரைச் சேகரித்துவைக்கும் தொட்டிகளில் சேறும் சாக்கடையுமான மழை வெள்ளம் புகுந்துவிட்டது. மெட்ரோ தண்ணீர் குழாய்கள் மூலம் நீர் விநியோகம் நடைபெறும் பகுதிகளிலும், இதே பிரச்னை. குடிநீரில் கழிவு நீர் கலந்துவிட்டது. இப்படி நமது குடிநீர் ஆதாரங்கள் மோசமாகப் பாதிக்கப்பட்டதற்குக் காரணம் மழையா?

நீர் அடித்து நீர் விலகியதா என்ன?

நிச்சயம் இல்லை. மழை நீர் என்பது பூமியை உயிர்ப்பிக்கும் இயற்கையின் தாய்ப்பால். அந்த நீரைச் சேகரித்துவைக்கும் நீர்நிலைகளையும், அவற்றுக்கு நீரைக் கொண்டுவந்து சேர்க்கும் வாய்க்கால்களையும் வன்முறையாக ஆக்கிரமித்து, இரக்கமின்றி அழித்து ஒழித்துவிட்டோம்.  அரசும் தனியாரும் போட்டிபோட்டுக்கொண்டு நமது நீர்நிலைகளை ஆக்கிரமித்திருக்கின்றன. செம்பரம்பாக்கம் ஏரி நிரம்பிவிட்டதால், திறக்கப்பட்டதாகச் சொல்கிறார்கள். இந்த ஏரியின் மொத்தக் கொள்ளளவு 3,645 மில்லியன் கன அடி. ஆனால், இது உண்மையான கொள்ளளவு அல்ல. ஏரியின் பரப்பளவு ஆக்கிரமிக்கப்பட்டு பல ஏக்கர் சுருங்கிவிட்டது. பல ஆண்டுகள் தூர்வாரப்படாமல் அதன் ஆழம் குறைந்துவிட்டது. ஆக்கிரமிப்பினால் அதன் கரைகள் சேதப்படுத்தப்பட்டன. இவற்றை இணைத்துக் கணக்கிட்டால், ஏரி நிரம்பியதாகச் சொல்வதே ஒரு வகையில் பொய்க்கணக்கு. இது ஓர் உதாரணம். மாநிலம் எங்கும் இருக்கும் அத்தனை நீர்நிலைகளுக்கும் இது பொருந்தும்.

இத்தகைய அநீதியான ஆக்கிரமிப்புகளின் விளைவு என்ன என்பதை இப்போது கண்கூடாகப் பார்க்கிறோம். இனிமேலும் இந்த அவலத்தை அனுமதிக்கக் கூடாது; முடியாது. ஆனால் அரசே ஆக்கிரமிப்பாளராக இருக்கும்போது, யாரிடம் முறையிட முடியும்? மக்கள் விழிப்புஉணர்வு மட்டுமே இதற்கான ஒரே தீர்வு. நம் நல வாழ்வுக்கு, நம் எதிர்கால சந்ததியினரை வாழவைக்க, நம் நதிகளை, ஏரிகளை, குளங்களை, கண்மாய்களை, நீர்த் தடங்களை எவர் ஆக்கிரமிக்கவும் அனுமதிக்காதீர்கள். ஏற்கெனவே ஆக்கிரமித்திருந்தால், இனியும் விட்டுவைக்காதீர்கள். நீர்நிலைகளைக் காப்பாற்றுவது மட்டுமே, நம் எதிர்காலத்தைக் காப்பாற்றிக்கொள்வதற்கு எஞ்சியிருக்கும் ஒரே வழி.

போராடுவோம். விடிவு கிடைக்கும் வரை விடக் கூடாது. ஏனெனில், நீரின்றி அமையாது உலகு!