விகடன் டீம் ,படங்கள்: சு.குமரேசன்ஓவியங்கள்: கார்த்திகேயன் மேடி, அ.நன்மாறன்
பெருமழை ஓயவில்லை. தலைநகர் சென்னையும் இதர மாவட்டங்களும் மழை வெள்ளத்தில் மிதக்கின்றன. இந்த வெள்ளப் பாதிப்பை, நாம் தொலைக் காட்சிகளில் காணும் வெள்ளக் காட்சிகளில் இருந்து மட்டும் மதிப்பிட்டுவிட முடியாது. வெள்ளத்தில் மனிதர்கள் அடித்துச் செல்லப்படுவது, குடியிருப்புகள் மூழ்கிக்கிடப்பது, சாலைகளில் படகுகள் செல்வது என்பதை எல்லாம் தாண்டி... இந்தப் பெருமழை ஒரு பிரமாண்டப் பேரழிவை ஏற்படுத்தியிருக்கிறது. இது நினைத்துப்பார்க்க முடியாத பேரழிவு.
மிதக்கும் சென்னை
சென்னையில் மழையில் மிதக்கும் முக்கியமான பகுதிகளில் வேளச்சேரி, பெரும்பாக்கம் ஏரியாக்களும் அடக்கம்.
''பெரும்பாக்கத்தில் ஒரு பிரமாண்ட அப்பார்ட்மென்டில் நான் ஒரு ஃபிளாட் வாங்கினேன். எங்களுடையது கிரவுண்ட் ஃப்ளோர் வீடு. முதலில் சாலையில் பெருக்கெடுத்து ஓடிய மழைநீர், அடுத்தடுத்த நாட்களில் மேலே ஏறி, எங்கள் வீட்டுக்குள் புகுந்துவிட்டது. பெரும்பாக்கம் ஏரி அருகில் 'இந்தியா புல்ஸ்’ என்ற பெரிய அப்பார்ட்மென்ட் இருக்கிறது. ஏரி நிரம்பினால் அந்த உபரி நீர் 'இந்தியா புல்ஸ்’ அப்பார்ட்மென்ட் வழியாகப் போய் பேக்வாட்டர் பகுதியில் கலந்து, பிறகு கடலுக்குள் செல்லும். அந்த அப்பார்ட்மென்ட் பில்டர் சுவர் எழுப்பியிருப்பதால் தண்ணீர் அந்தப் பக்கம் போக வழி இல்லை. இதனால் தண்ணீர் மெயின் ரோட்டுக்கு வந்து வீடுகளுக்குள் புகுந்துவிட்டது. அதேபோல் குளோபல் மருத்துவமனைக்குப் பின்புறம் 'எம்பஸி’ என்னும் 1,000 வீடுகள் கொண்ட பெரிய அப்பார்ட்மென்ட் இருக்கிறது. மழை வெள்ளம் சூழ்ந்தபோது இங்கு இருந்த மக்களை வெளியேற்றுவதற்கு போலீஸும் பஞ்சாயத்து நிர்வாகமும் முண்டியடித்ததே தவிர, தனி வீடுகளில் சிக்கிக்கொண்டவர்களைக் கண்டுகொள்ளவில்லை. நாங்களே ஒன்றுசேர்ந்து கோவளத்தில் இருந்து படகை வரவழைத்து வெளியில் வந்தோம். இந்தப் பகுதியில் ஐந்து நாட்களாக மின்சாரம் இல்லை. பால், காய்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை வாங்கக்கூட மக்கள் வெளியே வர முடியாத நிலை. சாலையில் தேங்கியிருக்கும் நீருக்குள் ஆபத்தான பாம்புகள் வருகின்றன. குப்பைகளின் துர்நாற்றம் சகிக்க முடியவில்லை. 50 லட்சம், 60 லட்சம் கொடுத்து வீடு வாங்கிவிட்டு இப்படி ஒரு நிலை ஏற்படும் என கனவிலும் எதிர்பார்க்கவில்லை.

'உங்க பிளாட், உங்க ஃபிளாட் ஏரிக்குப் பக்கத்துலேயே இருக்கு. தண்ணிப் பிரச்னையே இருக்காது’ எனச் சொல்லித்தான் எல்லா பிளாட்டுகளையும் விற்கிறார்கள். வீடு வாங்கும் இளைஞர்கள் யாரும், பிறந்ததில் இருந்து மழை வெள்ளத்தை கண்ணால் பார்க்காதவர்கள். அதனால் அவர்கள் பெரும் ஆசையுடன் 'லேக் வியூ ஏரியா’வில் வீடு வாங்கினார்கள். அதன் ஆபத்தை இப்போது எல்லோரும் அனுபவிக்கிறோம். ஆனால், இவ்வளவு மோசமான நிலையிலும் சோழிங்கநல்லூர் சுங்கச்சாவடியில் வாகனங்களுக்குத் தொடர்ந்து வரி வசூலிக்கப்படுகிறது'' என்கிறார் அரவிந்த் என்பவர்.
தாம்பரம், முடிச்சூர் பகுதிகளின் நிலைமை இன்னும் மோசம். இன்று வரை அங்கு வெள்ள நீர் வடியவில்லை. ஒரு பிரமாண்ட நீர்ப்பரப்புக்குள் வீடுகளின் தலைகள் மட்டும் எட்டிப்பார்க்கின்றன. சாலைகளில் கார்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்படுகின்றன. ஆடு, மாடு, நாய்கள் உள்ளிட்ட வளர்ப்புப் பிராணிகள் நீரில் செத்து மிதக்கின்றன.
நிர்மூலமான வாழ்க்கை
சென்னையின் மையப் பகுதியில் இருக்கும் ஜாஃபர்கான்பேட்டை பகுதி, அடையாற்றை ஒட்டி இருக்கிறது. செம்பரம்பாக்கம் ஏரி நிரம்பி திறக்கப்பட்ட தண்ணீர் அடையாற்றில் பெருவெள்ளமாகப் பாய்ந்துவந்து, அதன் கரையோரப் பகுதிகளை மூழ்கடித்தது. 'கூவம் எங்களை தாய்மடியாகத் தாலாட்டும்’ என 'காக்கா முட்டை’ படத்தில் காட்டிய திடீர் நகர்ப் பகுதி, சைதாப்பேட்டை பாலத்தின் கீழே இருக்கிறது. அந்தப் பகுதி எல்லாம் முழுமையாக மூழ்கிவிட்டது. இவர்களையாவது 'ஆக்கிரமிப்பு. அப்படித்தான் ஆகும்’ எனச் சொல்லி ஒதுக்கிவிடுவார்கள். ஆனால், ஜாஃபர்கான்பேட்டையில் வெள்ளநீர் புகுந்து ஏராளமான வீடுகளை நாசப்படுத்தியதை என்ன சொல்வது? வீட்டுக்குள் மழைநீர் புகுந்தது என்றால், அந்த வீட்டில் இருக்கும் டி.வி., ஃபிரிட்ஜ், கட்டில், சோபா, கம்ப்யூட்டர், பாய், தலையணை, துணிமணிகள், பாத்திரங்கள்... என அனைத்தும் காலி. மழைநீர் புகுந்த ஒவ்வொரு வீட்டுக்கும் சில லட்சங்கள் நஷ்டம். ஒரு வீட்டுக்கான அனைத்துப் பொருட்களையும் அவர்கள் மீண்டும் வாங்கியாக வேண்டும். இந்த இழப்புகளை மொத்தமாகக் கணக்கிட்டால், அதன் பொருளாதார மதிப்பு பிரமாண்டமாக இருக்கும். கடும் உழைப்பால் குருவி சேர்ப்பதுபோல் காலங்காலமாகச் சேர்த்துவைத்த பொருட்கள் எல்லாம் வீணாகப்போய்விட்டன என்றால், ஏழை மக்கள் என்னதான் செய்வார்கள்?

நின்றுபோன திருமணங்கள்
இந்த மழையால் ஏராளமான திருமணங்கள் நிறுத்தப்பட்டுவிட்டன. மண்டபத்தின் உள்ளேயும் வெளியேயும் வெள்ள நீர் சூழ்ந்திருக்கும்போது எப்படி திருமணம் செய்வது? மண்டபத்துக்குக் கொடுக்கப்பட்ட பணம், வாங்கிய சமையல் பொருட்கள், சமையல்காரர் முதல் ஐயர் வரையிலும் பலருக்கும் கொடுக்கப்பட்ட முன்பணம், இந்த எல்லா வேலைகளுக்காகவும், பத்திரிகை வைக்கவும் அலைந்த அலைச்சல்... எல்லாம் அடியோடு வீண். மறுபடியும் மொத்தத் திருமண வேலைகளையும் முதலில் இருந்து தொடங்க வேண்டும். ஆளுக்காள் சில பல லட்ச ரூபாய் பொருளாதார இழப்பு வேறு.
''கார்த்திகை தீபத்துக்கு முன்னாடியே கல்யாணம் பண்ணணும்னுதான் தேதி குறிச்சோம். ஆனா, கார்த்திகை ஆரம்பத்துல இருந்தே மழை பிடிச்சிருச்சு. சேலம் பக்கத்தில் உள்ள கல்யாண மண்டபத்தை புக் பண்ணியிருந்தோம். கல்யாணத்துக்கு ரெண்டு நாளைக்கு முன்னாடி மண்டபத்துக்குள்ள தண்ணீர் புகுந்துடுச்சு. சொன்ன தேதிக்கு, கல்யாணம் செய்யாமவிட்டா அபசகுனம் ஆகிருமோனு சொந்த பந்தம் யாரும் இல்லாம, ஒரு மேளவாத்தியம்கூட இல்லாம வீட்டுக்குள்ளயே கல்யாணத்தை முடிச்சுட்டோம்'' என்கிறார் சேலம் ரமேஷ். இது தவிர மாநிலம் முழுக்க தடைபட்ட திருமணங்கள் ஏராளம்.
திருமணம் மட்டும் அல்ல... மரணமும் இந்த மழையால் சிக்கலானது. நெருங்கிய உறவினர்களின் துக்கத்துக்குக்கூட யாரும் போக முடியவில்லை. இந்த மழைக்காலத்தில் மரணிப்பவர்களைப் புதைப்பதும் எரிப்பதுமே பெரிய பிரச்னை. நகரங்களில் இருக்கும் பல கல்லறைகளை மழைநீர் சூழ்ந்துகொண்டு விட்டது. குழி வெட்டக்கூட முடியாது. ஒப்பீட்டு அளவில் எரிப்பது பரவாயில்லை. மின் மயானத்தில் எரித்துவிடலாம். கிராமங்களைப் பொறுத்தவரை இடுகாடுகள் ஊருக்கு வெளியில்தான் இருக்கும். அவையும் மழைக்குள் மூழ்கிவிட்டன. சடலத்தை வைத்துக்கொண்டு எரிப்பதற்கு மேடான இடம் தேடி அலைந்த கதைகள் உண்டு.
தடைபட்ட கல்வி
மழை வெள்ளத்தால் பள்ளி மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டதால் மாணவர்களின் கல்விக்கு எந்த அளவுக்குப் பாதிப்பு? கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபுவிடம் பேசினோம்.
''பள்ளி, கல்லூரிகளுக்குப் பெரிதாக பொருளாதார இழப்பு எதுவும் இல்லை. ஆனால், மழை வெள்ளத்தால் தங்களது பாடப் புத்தகங்களையும் சீருடைகளையும் இழந்து நிற்கும் மாணவர்களின் நிலைதான் பரிதாபமானது. மறுபடியும் பள்ளி திறக்கும்போது, இவற்றை கட்டணம் இல்லாமல் உடனடியாக மாணவர்களுக்கு வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். விடுமுறையால் கல்வி பாதிக்கப்பட்டதாகக் கூறுகிறார்கள். அது ஒரு பிரச்னை இல்லை. இந்தக் கல்வி ஆண்டில் இதுவரை தோராயமாக 10 வேலை நாட்கள்தான் பாதிக்கப்பட்டிருக்கின்றன. இதை சனிக்கிழமைகளில் பாடம் நடத்தி ஈடுசெய்துகொள்ள முடியும். ஆனால், 'இந்த வேலை நாட்களை ஈடுகட்ட ஞாயிற்றுக்கிழமைகளில் பள்ளி நடத்தலாம்’ என திட்டம் வைத்திருந்தால் அது பெரும் தவறு. மாணவர்களுக்கு வாரத்தில் ஒரு நாளாவது கட்டாயம் ஓய்வு தேவை'' என்கிறார்.
சிதைந்த வணிகம்
தாம்பரம் ஜி.எஸ்.டி சாலையில் உள்ள ஒரு கார் சர்வீஸ் சென்டரில் வெள்ள நீர் புகுந்து, மொத்த சர்வீஸ் சென்டரும் நீருக்குள் போய்விட்டது. நிறுத்தப்பட்டிருக்கும் நூற்றுக்கணக்கான கார்களும் மோசமாகப் பழுதடைந்திருப்பது உறுதி. இப்படி மளிகைக் கடை முதல் ஹோட்டல் வரை ஏராளமான சிறு, குறு வியாபாரிகளின் வாழ்வாதாரமே நிர்மூலமாகிவிட்டது. தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவையின் மாநிலத் தலைவர் த.வெள்ளையனிடம் பேசியபோது, ''தமிழ்நாட்டில் மொத்தம் 30 லட்சத்துக்கும் அதிகமான வணிகர்கள் இருக்கிறார்கள். இதில் நடைபாதை வியாபாரிகளும் அடக்கம். பழங்கள், காய்கறிகள் போன்ற தினசரி விற்கவேண்டிய பொருட்களால் பெரும் நஷ்டம். அவர்களது கடைகளும் மழைநீரில் மூழ்கிவிட்டதால் முதலீட்டுக்கும் நஷ்டம். எங்கள் கணக்கின்படி இதுவரையிலான மழையில் மட்டும் மாநிலம் முழுவதும், சுமார் 2,000 கோடி ரூபாய்க்கு மேல் வணிகர்களுக்கு நஷ்டம் ஏற்பட்டிருக்கும். பழங்கள், காய்கறிகள் அழுகிப்போனதால் மட்டுமே சுமார் 1,000 கோடி ரூபாய்க்கு மேல் நஷ்டம் ஏற்பட்டிருக்கும்'' என்கிறார்.

தூய்மைப் பணியாளர்களின் தியாகம்
மழை உச்சத்தில் இருந்தபோதும் முடிந்தவரை தங்கள் பணியைச் சிறப்பாகச் செய்ததில் முக்கியமானவர்கள் தூய்மைப் பணியாளர்கள் என்கிற துப்புரவுப் பணியாளர்கள். சென்னை மாநகராட்சியின் செங்கொடி சங்கத்தின் பொதுச் செயலாளர் ஸ்ரீனிவாசலுவிடம் பேசியபோது, ''துப்புரவுப் பணியாளர்கள் 9,800 பேர், சாலையில் தேங்கும் குப்பைகளை அகற்றும் பணியில்
4,000 பேர் என, சென்னையில் மட்டும் சுமார் 14,000 பேர் வேலைசெய்கிறார்கள். சாதாரண நாட்களிலேயே குப்பைகளை அகற்றுவதும், மனிதக் கழிவுகளை அகற்றுவதும் மிகப் பெரிய சவால். ஒரு நாளைக்கு 5,000 டன்னுக்கு மேல் சென்னையில் குப்பை சேர்கிறது. தற்போது இதைவிட பல மடங்கு குப்பை சேர்ந்துவிட்டது. கொட்டித் தீர்க்கும் மழையிலும் இரவு பகலாக இந்தக் குப்பைகளை அகற்றிவருகிறோம். இதில் மிகத் துயரமானது என்னவென்றால், ஊர் எங்கும் குப்பைகளை அகற்றும் பணியில் ஈடுபடும் எங்கள் தொழிலாளர்கள் பெரும்பாலானோரின் வீடுகளும் மழை வெள்ளத்தில் மூழ்கிவிட்டன. வீடுகளையும் உடைமைகளையும் இழந்து தத்தளிக்கும் அவர்கள் அனைவரும், அந்தச் சோகத்திலும் ஒரு நாள்கூட விடுமுறை எடுக்காமல் குப்பை அகற்றும் வேலைக்கு வருகின்றனர்.
வெள்ளத்தில் துப்புரவுப் பணியில் ஈடுபட்டிருந்த சுந்தரம் என்கிற தொழிலாளியை வெள்ளம் அடித்துச் சென்றுவிட்டது. இதுவரை அவரது உடலைக்கூட கண்டுபிடிக்க முடியவில்லை. அதேபோல, மனிதக் கழிவுகளை அகற்றுவது பெரும் போராட்டமாக இருக்கிறது. சில இடங்களுக்கு அருகில் சென்றாலே துர்நாற்றம் தாங்க முடியவில்லை. இதை எல்லாம் சகித்துக்கொண்டுதான் சுத்தம் செய்கிறார்கள். நிறையப் பேருக்கு கால்களில் சேற்றுப்புண் வந்துவிட்டது. வெறும் மஞ்சளை காலில் பூசிக்கொண்டு தொடர்ந்து வேலைசெய்கிறார்கள். உணவோ, முறையான மருத்துவ வசதியோ... எதுவும் இல்லை. ஏன்... நாங்கள் சுத்தம் செய்வதற்குத் தேவையான பொருட்கள்கூட இல்லை. சம்பளம் குறைவுதான். ஒப்பந்தக் கூலி என்றால், ஒரு நாளைக்கு 210 ரூபாய். அதுவும் ஒரு மாதத்துக்கு 20 நாட்கள்தான் வேலை. இந்த நிரந்தரப் பிரச்னைகளை, இந்த இக்கட்டான நேரத்தில் முறையிட வேண்டாம் என நினைத்து, எங்கள் தொழிலாளர்கள் வேலை செய்துகொண்டிருக்கிறார்கள்'' என்கிறார்.
சென்னையில் மொத்தம் 36 ஏரிகள் இருந்தன. அவற்றில் பல ஏரிகள் இருந்த இடம் தெரியவில்லை. மீதம் இருக்கும் ஏரிகளில் சிலவற்றின் கொள்ளளவு மற்றும் ஆக்கிரமிப்புக் குறித்த விவரம்...
Click the image to enlarge

பெருமழை தொடர்கிறது. ஆனால், இதை பேரழிவு என ஒப்புக்கொள்ளக்கூட தயங்குகிறது அரசு. எல்லாவற்றையும் மூடி மறைப்பதைப்போல இதையும் மறைத்துவிட நினைக்கிறார்கள் ஆட்சியாளர்கள். ஆனால், லட்சக்கணக்கான மக்களின் வாழ்க்கை, மிக நேரடியாக நிர்மூலமாக்கப்பட்டிருக்கிறது. அதை எதைக்கொண்டு மறைப்பீர்கள்?
இது தவிர்க்க முடியாததா?
''மூன்று மாதங்களில் பெய்யவேண்டிய மழை ஒரு சில நாட்களிலேயே கொட்டித் தீர்த்திருப்பதால், சில இடங்களில் மழைநீர் தேங்குவதையும் சேதம் ஏற்படுவதையும் தவிர்க்க

இயலாது' - சென்னையில் வெள்ளப் பாதிப்பைப் பார்வையிட்ட தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதா மக்களுக்குச் சொன்ன ஆறுதல் இது. இதைவிடத் திமிராக யாராலும் ஆறுதல் சொல்ல முடியுமா? அது ஒரு பக்கம் இருக்க... ஜெயலலிதா சொல்வது உண்மையா... இந்தச் சேதம் தவிர்க்க முடியாததா? ''நிச்சயம் இல்லை'' என்கிறார், பொதுப்பணித் துறை முன்னாள் சிறப்புப் பொறியாளர் அ.வீரப்பன். அவர் பட்டியலிட்ட விஷயங்கள்...
''சென்னையில் மழை வெள்ளப் பாதிப்புக்கு முக்கியக் காரணம், அரசு தன் வேலையைச் செய்யாமல்விட்டது அல்லது அரைகுறையாகச் செய்ததுதான்.
1.மழைநீர் வடிகால்கள் தரக்குறைவாகக் கட்டப்பட்டதால், நீர் வடிதல் முறையாக நடைபெறாதது.
2. மழைநீர் வடிகால்கள், தானே ஓடக்கூடிய வாட்டத்துடன் (Flow by Gravity) கட்டப்படாதது.
3. மழை நீர் வடிகால்கள் அருகில் உள்ள கால்வாய்கள், கூவம், ஓட்டேரி போன்ற சிற்றாறுகளோடு இணைக்கப்படாதது.
4. அக்டோபர், நவம்பர், டிசம்பர் மாதங்கள் வடகிழக்குப் பருவ மழைக்காலம். இதில் அதிக மழை பெய்யும் எனத் தெரிந்தும் வடிகால்களில் குறைந்தபட்ச மராமத்து வேலைகளைக்கூடச் செய்யாமல்விட்டது.
5. சென்னை மாநகரப் பகுதிகளில் 25 ஆண்டுகளுக்கு முன்னர் இருந்த பள்ளமான பகுதிகளில் (Low Lying Areas) அறிவியல், பொறியியல் ஆய்வு எதையும் செய்யாமல் குடியிருப்புகள், புதிய நகர்கள், காலனிகளை லட்சக்கணக்கில் அனுமதித்தது.
6. இயற்கையாக அமைந்திருந்த வடிகால் வாய்க்கால்களை, நீர்வழிப் பாதைகளை சாலைகள் என்ற போர்வையில் மூடியது.
7. மாநகராட்சி, உள்ளாட்சி அமைப்புகள், தனியார் கட்டடக் கழிவுகளை பள்ளங்களில் கொட்டி நிரப்பியது.
- இவைதான் இந்த அளவு வெள்ள சேதத்துக்குக் காரணம்.''
சபாஷ் அரசு ஊழியர்கள்

கொட்டிய கனமழையால் மக்கள் பரிதவித்தது ஒருபுறம் என்றால், மக்களைக் காக்கும் பணியில் ஈடுபட்ட அரசு ஊழியர்களின் செயல்பாடுகளை யாராலும் மறக்க முடியாது. தனியார் டாக்ஸிகள் அனைத்தும் முடங்கிவிட்ட நிலையில் அரசுப் பேருந்துகள் மட்டுமே அனைத்து ஏரியாக்களுக்கும் தொடர்ந்து இயக்கப்பட்டன. அதேபோல மின்சார வாரிய ஊழியர்கள் உயிரைப் பணயம்வைத்து பணிபுரிந்தனர். இடுப்பளவுத் தண்ணீரில் நின்றபடி வாகனங்களைத் திருப்பிவிட்ட காவல் துறையினர், வெள்ளத்தில் நீந்திச் சென்று மக்களை மீட்டுவந்த தீயணைப்புத் துறையினர், ஏரிகள் உடைத்துக்கொள்ளாமல் இருக்க இடைவிடாது உழைத்த பொதுப்பணித் துறையினர்... என ஓர் இக்கட்டான நேரத்தில் அரசு ஊழியர்கள் சுணங்கிவிடாமல் பணிபுரிந்த விதம் பாராட்டுக்குரியது!
ரியல் எஸ்டேட் என்னவாகும்?
இந்த மழை வெள்ளத்தால் ரியல் எஸ்டேட் வீழ்ச்சி அடையுமா... வீடு விலை குறையுமா? சென்னை அடுக்குமாடி குடியிருப்புக் கட்டுவோர் சங்கத்தின் தலைவர் ஏ.ஆர்.ஆத்மாவிடம் பேசினோம்...

''நிச்சயம் ரியல் எஸ்டேட் பாதிக்கும். எந்தப் பகுதிகள் எல்லாம் வெள்ளத்தில் மூழ்கியிருக்கின்றனவோ அங்கு எல்லாம் வீடுகளின் விலை குறையும். இந்தப் பகுதிகளில் வீடு வாங்கிய பலர், 'விற்று விடலாமா..?’ என யோசிக்க ஆரம்பித்துள்ளனர். இந்த அச்சம் நீங்கவே இன்னும் ஆறு மாத காலம் ஆகும். என் கணிப்பில் வீட்டு மனையின் விலை 10 சதவிகிதமும் அடுக்குமாடிக் குடியிருப்பின் விலை 20 சதவிகிதமும் குறையும்'' என்கிறார்!
ஏரிப் புறம்போக்கா...
ஏரியே புறம்போக்கா?
தமிழ்நாட்டில் 39 ஆயிரத்து 202 ஏரிகள் இருந்தன. இதில் இப்போது 6,000 ஏரிகளைப் பற்றி எந்த விவரமும் அரசின் குறிப்புகளில் இல்லை. 'ஏரிப் புறம்போக்கு நிலம்’ என உண்மையைச் சொல்லியே பத்திரப்பதிவுகள் செய்யப்படுகின்றன. அதாவது, 'அரசு எப்போது கேட்டாலும் அதைத் திரும்ப ஒப்படைத்துவிடுவோம்’ என்ற ஒப்புதலுடன் இவை விற்கப்படுவதாக ஒரு விளக்கம் வேறு தருகிறார்கள். 800 ஏக்கர் பரப்பளவுகொண்ட சென்னை போரூர் ஏரி, 300 ஏக்கராக சுருங்கியதும் இப்படியான உத்தரவாத அடிப்படையில் விற்பனை செய்யப்பட்டதால்தான்!
ஏரிகளின் நிலை: ஒரு சான்று
சென்னை பூந்தமல்லி - நேமம் ஏரியானது, 1 டி.எம்.சி கொள்ளளவை எட்டும் அளவுக்கு 79.50 கோடி ரூபாய் செலவில் 2012-13 ஆண்டில் தமிழக அரசால் நீர்த்தேக்கமாக உருவாக்கப்பட்டது. இரண்டு ஆண்டுகள்கூட முழுமை அடையவில்லை. கடந்த 13 மற்றும் 14-ம் தேதிகளில் சென்னையில் கொட்டிய இரண்டு நாள் மழைக்கே இந்த நீர்த்தேக்கத்தில் விரிசல் ஏற்பட்டு கரைகள் உடையும் அபாயத்தை எட்டிவிட்டது. இதனால் பொதுப்பணித் துறையினர் எட்டு ஷட்டர்களை திறந்துவிட்டு தண்ணீரை வெளியேற்றினார்கள். அந்த நீர், பங்காரு கால்வாய் வழியாக செம்பரம்பாக்கம் ஏரிக்குத் திருப்பிவிடப்பட்டது. ஆமாம், செம்பரம்பாக்கம் ஏரி நீர் எங்கே போகிறது? கடலுக்குத்தான்.
ஏரிகளின் வாழ்விடம் எது?
முன்னொரு காலத்தில் ஆறு, ஏரிகளாக இருந்த இடங்கள்தான் இன்று வாக்கம், பாக்கம், சேரி, தேரி என்ற பெயர்களில் முடிகின்றன. பொத்தேரி, வேளச்சேரி, வளசரவாக்கம், வில்லிவாக்கம், மேடவாக்கம், அயனம்பாக்கம், மவுலிவாக்கம், ஓட்டேரி என நீர்நிலைகளின் வாழ்விடப் பட்டியல் மிக நீளம். சென்னை அம்பத்தூரில் குறைந்த வருவாய்ப் பிரிவினருக்கான 2,394 குடியிருப்புகளை 11.5 ஏக்கரில் கட்டும் திட்டத்தை தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் அறிவித்திருக்கிறது. அந்த இடம் முகப்பேரி. அதைத்தான் வசதியாக 'முகப்பேர்’ ஆக்கிவிட்டார்கள்.