மற்ற எபிசோடுகள்
Published:Updated:

கலைடாஸ்கோப் - 16

எண்ணம், வண்ணம்: சந்தோஷ் நாராயணன்

கலைடாஸ்கோப் - 16

குமார் சாப்பிட்டுக்கொண்டிருந்தபோது அவர்களைக் கவனித்தான். அந்த நான்கு பேர் அவனையே பார்த்துக்கொண்டிருந்தார்கள். நேற்றில் இருந்து அவன்கூடவே வருகிறார்கள்; ஆவேசமாகப் பேசிக்கொள்கிறார்கள். அடிக்கடி தங்களுக்குள் முஷ்டி முறுக்கிக்கொள்கிறார்கள். 

நேற்று படுக்கும்போது தன் தலைமாட்டில் அவர்களைக் கண்டான். கொசுக்கடியில் தூக்கம் வராமல் விழித்து, தண்ணீர் குடிக்கப்போகும்போதும் ஹாலில் அவர்களைப் பார்த்தான். 'தூக்கம் இல்லையா இவர்களுக்கு?’ என நினைத்துக்கொண்டு தண்ணீரை விழுங்கினான்.

ஒரு விஷயம் சட்டென உறுத்தியது. அவர்கள் முகம் மாறிக்கொண்டே இருக்கிறது. ஆனால், நான்கு பேர்தான். எண்ணிக்கை மாறுவது இல்லை என்பது அவனுக்கு வியப்பாக இருந்தது.

காலையில் குளித்துக்கொண்டிருக்கும்போது கதவு இடுக்கின் வழியாக எட்டிப்பார்த்தான்... அந்த நான்கு பேர்தான். இப்போதுதான் ஒன்றைக் கவனித்தான்.

அந்த நான்கு பேரும் பாஸ்போர்ட் சைஸ் புகைப்படத்தில் வருவதுபோல ஒவ்வொரு சதுரத்துக்குள் அந்தரத்தில் மிதந்தார்கள். 'ஏதாவது சயின்ஸ்ஃபிக்‌ஷன் படமோ?’ என ஒரு கணம் குழம்பியவன், நான்கில் ஒன்று பார்த்துவிடும் முடிவோடு அவர்களை நெருங்கினான்.

கலைடாஸ்கோப் - 16

நெருங்கியவன், அந்த நான்கு சதுரங்களில் அசுர வேகத்தில் முகங்கள் மட்டும் மாறிக்கொண்டே இருப்பதைக் கண்டு, வீறிட்டு அலறி, மயங்கிச் சரிந்தான்.

விழித்தபோது மனைவி, முகத்தில் கவலையும் கையில் ஃப்ளாஸ்க்குமாகப் பார்த்தாள். அருகில் வெண்மையாகப் புன்னகைப்பது டாக்டர் என்பதை அறிந்து 'டாக்டர் அந்த நாலு பேர்...' என்றான்

புன்னகையின் இடைவெளியில் டாக்டர் சொன்னார்... ''நத்திங் டு வொர்ரி குமார். அளவுக்கு அதிகமா டி.வி-யில் ஈவினிங் விவாதங்கள் பார்க்கிறதைக் குறைங்க!'

கலைடாஸ்கோப் - 16

நிலத்தில் யார்க்கும்...

லாஸ் ஏஞ்சலஸைச் சேர்ந்த கெல்லி ரீம்ஸ்டனின் ஆயில் பெயின்டிங்குகளில் ஸ்கர்ட் அணிந்த பெண்கள் கோடரி, ரம்பம், சுத்தியல்... போன்ற கடினமான ஆயுதங்களுடன் போஸ்கொடுக்கிறார்கள். 'அழகிய முரண்’ எனச் சொல்லலாம். 'பளிச் பாப் வண்ணத்தில், மினுங்கும் உடைகளில் கேட்வாக்கிங் பண்ணாமல் இந்த ஆயுதங்களுடன் ஏன் மல்லுக்கட்டுகிறார்கள்?’ எனத் தேடினால், தன் ஓவியங்கள் பேசும் 'பெண்ணியம்’ பற்றி ஒரு நேர்காணலில் சொல்கிறார் கெல்லி...  

' 'பெண்களால் புல்வெளிக்குத் தண்ணீர் ஊற்ற முடியுமா?’ என்ற (மேல்தட்டு) பெண்களைச் சீண்டும் ஒரு விளம்பரம், 1950-களில் வந்திருக்கிறதாம். பல வருடங்களுக்குப் பிறகு அதற்குப் பதில் சொல்வதுபோல இருக்கின்றன எனது இந்த ஓவியங்கள். இது பெண்களை அழகுப் பதுமைகளாக மட்டுமே கையாள நினைக்கும் ஆணாதிக்க மனோபாவத்துக்கு எதிரான பதிவுகள்’ என்கிறார். பெண்களின் முகத்தை அவர் வரைவது இல்லை. பார்க்கும் பெண்கள் தங்களை அதில் அடையாள‌ம் காண வேண்டும் என்பது அவர் நோக்கம்போலும்.  

கலைடாஸ்கோப் - 16

'இந்த ஓவியங்களில் பெண்கள் கையில் வைத்திருக்கும் பொருட்களை ஆயுதமாகப் பார்ப்பதா அல்லது வெறும் கருவிகளாக மட்டும்தானா... ஒரு மெல்லிய வன்முறை இருப்பதுபோல தெரிகிறதே?’ என ஒரு கேள்வி வந்தபோது 'இது கடின உழைப்பின் குறியீடு மட்டும்தான். பெண்களாலும் எந்த வேலையையும் செய்ய முடியும் என்பதை அது குறிக்கிறது’ என்றார்.

'பகலில் வேலைசெய்வது இல்லை. இரவில் ஏழு மணிக்கு ஆரம்பித்தால் விடியற்காலை நான்கு மணி வரை வரைவது எனக்குப் பிடிக்கும்’ என, தன் வொர்க்கிங் சீக்ரெட்ஸ் சொல்கிறார் கெல்லி. ஆர்ட் உலகின்

ஏ.ஆர்.ரஹ்மான் போல!

கலைடாஸ்கோப் - 16

துடைப்பம்

'ஆயிரம் பிள்ளைகளுக்கு ஓர் அரைஞாண் கயிறு, அது என்ன?’ என பாட்டிகள் விடுகதை போடுவார்கள். விடை அறிந்தவர்கள் 'துடைப்பம்’ என முந்திக்கொண்டு சொல்வோம். தமிழ்நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் 'வாரியல்’, 'விளக்குமாறு’... எனப் பல பெயர்கள். இந்தத் துடைப்பத்தின் வரலாற்றைக் கொஞ்சம் தூசு தட்டிப் பார்க்கலாம்.

மனிதர்கள் குகைகளில் வாழ்ந்த காலத்திலேயே குப்பைகளையும் நெருப்பு மூட்டிய சாம்பலையும் சுத்தம்செய்ய துடைப்பத்தைப் பயன்படுத்தியிருக்கிறார்கள். ஒருவகை நாணல் மற்றும் கோரைப்புற்களால் துடைப்பங்கள் செய்திருக்கிறார்கள். இன்று வரை கிட்டத்தட்ட பெரிதாக மாற்றம் இல்லை.

நம் ஊர் மட்டும் அல்ல; பெரும்பாலான கிழக்கு ஆசிய நாடுகளில் தென்னையின் ஈர்க்குச்சிகளை ஒன்று சேர்த்து, ஒரு பெல்ட் போட்டு, உருளை வடிவத் துடைப்பமாகப் பயன்படுத்திக்கொண்டிருக்கிறார்கள். பெரும்பாலும் வீட்டிலேயே செய்துகொள்வதுதான் வழக்கம்.

பிறகு, வழக்கம்போல தொழில் புரட்சி துடைப்பத்தையும் விட்டுவைக்கவில்லை. 1810-ம் ஆண்டு, புரூம் மெஷின் என்கிற இயந்திரம், நாணல்களை அமுக்கி, நசுக்கி தட்டையாகச்செய்து கூடவே கைப்பிடியும் வைத்து நாம் இன்று பார்க்கும் நவீன வடிவத் துடைப்பங்களை உருவாக்க ஆரம்பித்திருக்கிறது. அதற்கும் சில வருடங்களுக்கு முன்னர் '1797-ம் ஆண்டில்தான் லெவி டிக்கன்சன் என்கிற விவசாயி தன் மனைவிக்காக சோளத்தின் வைக்கோல்களை ஒன்றாகக் கட்டி, துடைப்பத்தைக் கண்டுபிடித்தார்’(?) என்கிறது ஒரு கூகுள் குறிப்பு.  

இன்று ஃபைபர் நார்கள், நைலான் நூல்கள் என்ற உருவிலும் வடிவிலும் விதவிதமாக விற்பனைக்கு வந்திருக்கிறது. 2008-ம் ஆண்டில் ஐரோப்பாவைச் சேர்ந்த மூன்று வயது பாலகன் சாம் ஹவ்டன் இரட்டைத் தலை துடைப்பத்துக்கு 'இளவயது கண்டுபிடிப்பாளன்’ என்னும் பட்டத்துடன் காப்புரிமை வாங்கியிருக்கிறான். துடைப்பம் உயரம்கூட இல்லாத அவன், 'என் தந்தையின் வேலையை எளிமையாக்குவதற்காக இதைக் கண்டுபிடித்தேன்’ எனப் பேட்டி கொடுத்ததை முன்னர் படித்தேன்.  

நல்லவேளை நம் ஊர் ஈர்க்குச்சி துடைப்பத்துக்கு யாரும் காப்புரிமை வாங்கவில்லை. வாங்கியிருந்தால் பாட்டிகளின் சுருக்குப்பையில் 'காப்பிரைட்’ எனக் கையை விட்டிருப்பார்கள்!

கலைடாஸ்கோப் - 16

மஞ்சப்பை

இன்று கையை வீசிக்கொண்டு கடைக்குப் போகிறோம். பாலித்தீன் கேரிபேக்கில் பொருட்களை வாங்கிக்கொண்டு வீட்டுக்கு வருகிறோம். வாங்கி வந்தது உணவுப்பொருளாக இருந்தால், அடுத்த நாளே ஜீரணமாகிவிடும். ஆனால், அதைத் தாங்கிவந்த பாலித்தீன் பைகள் பூமியின் அஜீரணத்துக்குக் காரணமாகிவிடுகின்றன. இந்த பாலித்தீன் குப்பைகளால் வடிகால் இல்லாமல், மழைத் தண்ணீரே துக்கத்தில் தொண்டை அடைத்து தெருவில் நிற்கிறது.

முன்னர் எல்லாம் திருமண வீடுகள், ஜவுளிக் கடைகள் எனப் பல காரணங்களால் இந்த மஞ்சப்பைகள் வீட்டுக்கு வரும். பள்ளிக்குப் புத்தகம் கொண்டுபோவது முதல் சந்தைக்கு காய்கறி வாங்கப்போவது வரை இந்த மஞ்சப்பை பண்பாடு அன்றாடப் பயன்பாடு.

அவற்றில் அச்சடிக்கப்பட்ட கடைகளின் முகவரியோ மணமக்கள் பெயரோ மங்கல் ஆகும் வரை துவைத்து, காயப்போட்டு உபயோகித்தனர் தாத்தாக்கள். அப்பாக்கள் பாலித்தீனுக்கு மாறிவிட்டாலும் இன்று பேரன்கள் ரீசைக்கிளிங் பற்றி பேச ஆரம்பித்திருக்கிறார்கள். மஞ்சப்பை என்பது நமது வின்டேஜ் பொருட்களில் ஒன்று. அதை புதிய வடிவங்களில்கூட டிசைன் பண்ணி மார்க்கெட்டுக்குக் கொண்டுவரலாம். விளம்பர பன்ச்கூட ரெடி. 'பாலீத்தீன் பைகள் மண்ணில் அழியாமல் இருக்கும்,

மஞ்சப்பைகள் மனதில் அழியாமல் இருக்கும்.’ 'வேண்டாம்... நாங்களே எழுதிக்கொள்கிறோம்’ என்கிறீர்களா?  

டிமான்டி காலனிகள்!

தமிழில் Blog எழுத ஆரம்பித்ததும், யார் 'வலைப்பூ’ எனத் தமிழ்ப்படுத்தினார்களோ தெரியவில்லை. பூத்து, காய்த்து, கனிந்து, உதிர்ந்துவிட்டதுபோல கிடக்கிறது நிலைமை. காரணம், 'பாகுபலி’ படத்தின் காளகேயர்கள் போன்ற 'மைக்ரோ பிளாக்’ எனச் சொல்லப்படும் சமூக வலைதளங்களின் அதிரடிப் படையெடுப்பு.

கலைடாஸ்கோப் - 16

140 எழுத்துக்களில் ட்வீட்டுவது, நான்கு வரிகளில் ஃபேஸ்புக்கில் எழுதுவது எனக் 'குறுகத்தரிக்கும்’ கலைக்கு பிளாகர்களின் தலை தப்பவில்லை. இரண்டாயிரத்தின் இடைப்பகுதியில் ஆரம்பித்து, அதன் கடைசிப் பகுதியில் கிட்டத்தட்ட அழிவின் விளிம்பை நோக்கிச் சென்றுவிட்ட தமிழ் வலை எழுத்து, அதன் ஆகக் குறுகிய காலத்திலும் அடிதடி சண்டை எனக் கழிந்தது இன்றைய சோஷியல் நெட்வொர்க் இளம் தலைமுறைக்குத் தெரியாமல் இருக்கலாம்.

இன்று மனதில் தோன்றுவதை டக்கென ட்விட்டரில் தட்டினோமா, ஃபேஸ்புக்கில் போட்டோமா, ஆர்டி பண்ணினோமா லைக்ஸ் அள்ளினோமா... என 'மா’வன்னா தலைமுறையாகி எதிலும் அவசரத்தைத் தெறிக்கவிடுகிறோம். மணித்தியாலங்களுக்கு ஒரு ட்ரெண்டை 'வெச்சு’ செய்கிறோம். அதற்குள் அடுத்த ஸ்டேட்டஸ் மெசேஜைப் பார்க்க டைம்லைனை ஸ்க்ரோல் செய்கிறோம். இதில் ஆறஅமர பிளாக் படிக்கச் சொன்னால் ஏற இறங்கப் பார்ப்பார்கள்தானே!

வலைப்பூக்களில் 'பாட்ஷா’ டானாக இருந்த பலர், இன்று ட்விட்டர், ஃபேஸ்புக்கில் மாணிக்கங்களாக ஆட்டோ ஓட்டிக்கொண்டிருப்பதைப் பார்க்கிறேன். பல பிளாகுகள் திருமண மண்டபங்களாகிவிட்ட சினிமா தியேட்டர்போல, அவ்வப்போது ஏதாவது சடங்கு நடக்கிறது அல்லது ஆள் நடமாட்டம் இல்லாத 'டிமான்டி காலனி’போல அமானுஷ்யமாகக் காத்தாடுகிறது.