Published:Updated:

அவநிதா என்னும் சிட்டுக்குருவி

கவிதைகள்: பாண்டித்துரை, படம்: சி.சுரேஷ் பாபு

1  

கவிதைக்குள்

கொண்டுவர நினைக்கும்போதெல்லாம்

அவநிதா

'பாப்பா பாவம்

பாப்பா வேணாம்’ என்று

இரண்டு படிகளைக் கடந்துவிடுகிறாள்

அவள் விரல் பட்ட கதவு

எழுப்பும் இசை ஒரு கவிதை.

2

கொண்டாட்டமாக இருந்தது

அவநியின் விளையாட்டில்

என்னையும் சேர்த்துக்கொண்டது

இப்போதைக்கு

பந்தைப் பொறுக்கி மட்டும் தரவேண்டும்

அவள் எறியும் தூரம் வரை ஓடி.

3

அவநிதா

வாயை உப்பி

காற்றைத் துப்புகிறாள்

மழைச்சாரலுடன்

'ப்பூ’ என்ற சொல்லையும்.

4

கைகளுக்குள் சிரிப்பைப்

பொத்தித்தருகிறாள்

வீடெங்கும்

சிரித்த கையோடு

விளையாடிய அவநிதா.

அவநிதா என்னும் சிட்டுக்குருவி

5

'அவநிதா

சிட்டுக்குருவி எனப் பறந்தாள்’

என்றாள் அம்மா

'இல்லை’ என்ற அவநிதா

தத்தித் தத்திக் காண்பித்தாள்

அம்மா சிட்டுக்குருவியைப் பார்த்துக்கொண்டு.

6

'உங்களைப் போலவே

சிரிக்கிறாள்’ என்றார்கள்

நானும் ஒருமுறை சிரித்துப்பார்த்தேன்

அவநிதாவைத்தான் காணவில்லை.

7

பொம்மையைத் தொலைத்த அவநிதா

அழத் தொடங்கினாள்

கட்டிலுக்கு அடியில்

ஒளிந்துகொண்டிருக்கும் பொம்மைக்கு

அழுகையின் ஆரம்பம்

இன்னும் கேட்டிருக்கவில்லை.

8

இரவின் தூக்கத்தில்

அவநிதா ஒரு பாடலைப் பாடுகிறாள்

ஆழ்ந்த உறக்கத்தின் பாடலானது

டோரா பொம்மைக்கானதாக

இருக்கக்கூடும்.

9

உடைந்து விழுந்த

அவநியின் சொற்கள்

ஜோசிகாவைக் குதூகலமாக்கிவிடுகின்றன

சித்தப்பாவிடம் பேசிக்காண்பிக்கிறாள்

இப்படி இப்படி அவநிதாவாகி

உடைந்து விழுந்த

சொற்களின் வழியே.

10

அவநிதாவின் பொம்மையை

மீனுக்குட்டி பறித்துவிடுகிறாள்

குட்டியான அவநியின் வருத்தம்

அந்தப் பொம்மையைத் தொற்றிக்கொள்கிறது

மீனுக்குட்டியின் கைகளுக்குள்

அவநி வருத்தமாகத் தொற்றிக்கொண்டிருந்தாள்

பத்மாக்கா வரும் நேரத்தில்

இறங்கி வரக்கூடும் சிரித்துக்கொண்டு.