Published:Updated:

இந்திய வானம் - 15

இந்திய வானம்
பிரீமியம் ஸ்டோரி
News
இந்திய வானம்

எஸ்.ராமகிருஷ்ணன், ஓவியங்கள்: ரமேஷ் ஆச்சார்யா

கல்யாணக் கோபம்

 ராஜஸ்தானியத் திருமணம் ஒன்றுக்குச் சென்றிருந்தேன். மணமகன், தெரிந்தவர்; மணமகள், ராஜஸ்தானிப் பெண். ஃபேஸ்புக் வழியாக உருவான காதல். இப்படி ஒரு திருமணம் ஏற்பாடு ஆனது, இரண்டு வீட்டாருக்கும் வியப்பாக இருந்தது.

பெண் வீட்டில் இருந்து, திருமணத்தை தங்களின் பாரம்பர்ய முறையில் நடத்த வேண்டும் என்ற வேண்டுகோளை மட்டும் முன்வைத்தார்கள். ஆகவே, ஜெய்ப்பூரில் திருமணம் நடைபெற்றது. கோலாகலமான விழாவாக நடைபெற்ற திருமணத்தில் ஒரு நாட்டுப்புறப் பாடல் பாடப்பட்டது. 'அந்தப் பாடலுக்கு என்ன அர்த்தம்?’ எனக் கேட்டேன்...

கல்யாணப் பெண் திருமணத்துக்கு

முன்னர் விடும் கண்ணீர் வேறு

திருமணத்துக்குப் பிறகு சிந்தும் கண்ணீர் வேறு.

கணவன் வீட்டில் மகள் விடும் கண்ணீரின் சத்தம்

எவ்வளவு தூரத்தில் இருந்தாலும்

பெற்றோருக்குக் கேட்டுவிடும்.

ஆனால் அருகில் இருக்கும் கணவனின்

காதுகளுக்குத்தான் கேட்காது.

- இப்படி அந்தப் பாடல் நீண்டுபோய்க்கொண்டிருந்தது. ஆண்டாண்டு காலமாக வாழ்ந்து பெற்ற அனுபவம் பாடலாக உருப்பெற்று இருக்கிறது. எவ்வளவு படித்திருந்தாலும், எத்தனை வசதி இருந்தாலும் திருமண பந்தம் என்பது ஆணுக்கும் பெண்ணுக்கும் சரியாக அமைந்துவிடுவது அரிய விஷயமே! ஆகவேதான் இன்றும் திருமணத்தில் இந்தப் பாடல் பாடப்படுகிறது.

தொழிலில் வெற்றியாளராக உயர்ந்த எத்தனையோ பேர், சொந்த வாழ்வில் மகள் அல்லது மகனின் திருமணம் சரியாக அமையாமல்போய், தோற்றுப்போன மனிதர்களாக, துயரத்துடன் வாழ்ந்துவருவதை அறிவேன்.

ஆன்டன் செகாவின் சிறுகதை ஒன்றில் புதிதாகத் திருமணம் செய்துகொண்ட ஒருவன், தனது பால்யகால நண்பனை ரயிலில் தற்செயலாகச் சந்திக்கிறான். இருவரும் கட்டித் தழுவிக்கொள்கிறார்கள். 'படித்த பெண்ணைத்தான் திருமணம் செய்துள்ளேன். என் வாழ்க்கையே மாறிவிட்டது. மிகவும் சந்தோஷமாக இருக்கிறேன். திருமணம், இத்தனை சந்தோஷங்களையும் உறவுகளையும் ஏற்படுத்திவிடும் என நான் எண்ணியதே இல்லை’ என தன் கல்யாணத்தைப் பற்றி வியந்து வியந்து பேசுகிறான்.

இந்திய வானம் - 15

பயணிகள் பலரும் அதைக் கேட்டு ரசிக்கிறார்கள். அப்போதுதான் தெரியவருகிறது... அவன் செல்லவேண்டிய ரயிலுக்குப் பதிலாக வேறு ரயிலில் ஏறிவிட்டிருக்கிறான்; அவனது புது மனைவி இன்னொரு ரயிலில் போய்க்கொண்டிருக்கிறாள் என்று. புதிதாக திருமணம் செய்துகொண்டவனின் கையில் பணம் இல்லை. அத்தனை பணமும் மனைவியிடம் இருக்கிறது. ஆகவே, அடுத்த ரயிலில் போய் மனைவியோடு சேர்ந்துகொள்ள, பயணிகளே பணம் தந்து அனுப்பிவைக்கிறார்கள்.

இன்று வாசிக்கும்போது இந்தக் கதை சாதாரணமாக, 'இதில் என்ன இருக்கிறது?’ என யோசிக்கவைக்கிறது, ஆனால், 100 வருடங்களுக்கு முன்னர் இந்தக் கதை வெளியாகியிருக்கிறது. அந்தக் காலத்தில் படித்த பெண்ணைத் திருமணம் செய்துகொள்வது என்பது பெரிய விஷயம். அதைவிடவும் திருமணம் என்பது ஆண் - பெண் இருவருக்கும் பெரிய கனவு. அதுவும் வசதியான இடத்தில் திருமணம் செய்துகொண்டுவிட்டால் வாழ்க்கை செட்டில் ஆகிவிடும் என்ற ஆசை, எல்லோரிடமும் இருந்தது. அதை அடைந்தவர்கள் பெருமையாக நினைத்துக்கொண்டார்கள்.

100 ஆண்டுகளுக்குப் பிறகும் இந்த மனநிலை மாறிவிடவில்லை. ஆனால், திருமணம் குறித்த வியப்பும் கொண்டாட்ட மனநிலையும் இன்று வடிந்துபோயிருக்கிறது. திருமணம் இன்று ஒரு நிகழ்வு. பெற்றோர்கள், உறவினர்கள் அடையும் சந்தோஷத்தில் கால் பகுதியைக்கூட மணமகனோ, மணமகளோ அடைவது இல்லை.

'புதுமணக் களை என்பது 30 நாட்களுக்கு இருக்கும்’ என்பார்கள். இன்று மூன்று நாட்களுக்குக்கூட இருப்பது இல்லை. திருமணம் ஏற்படுத்தும் சந்தோஷத்தைவிடவும் பிரச்னைகளும் கோபதாபங்களும் வருத்தங்களும் அதிகமாகிவிட்டிருக்கின்றன.

சண்டை இல்லாத திருமண வீடு ஒன்றுகூட இல்லை. சண்டையிடுவதற்குக் காரணம் பெரிதும் அற்பமானதே. ஒவ்வொரு திருமணத்தின்போதும், ஏதோ ஓர் உறவு பிரிந்து போய்விடுகிறது அல்லது கசப்பான அனுபவத்தைப் பெற்றுவிடுகிறது.

என் நண்பரின் தந்தை, கடந்த 15 ஆண்டுகளாக எந்தத் திருமணத்துக்கும் போவது இல்லை. காரணம், அவரது தம்பி மகளின் திருமணத்துக்காக அவர்களுக்கு ரயிலில் டிக்கெட் போட்டபோது ஏ.சி கோச்சில் டிக்கெட் போடவில்லை; சரியான லாட்ஜில் ரூம் போடவில்லை; ஏன் கல்யாண மண்டபத்துக்குப் போய் வர கார்கூட ஏற்பாடு செய்யவில்லை என்ற வருத்தம். இந்த வருத்தத்தை திருமண நாளின்போதே கொட்டித் தீர்த்துவிட்டார்.

'பொண்டாட்டி பேச்சைக் கேட்டுக்கொண்டு என்னை அண்ணன் கோபித்துக்கொள்கிறான்’ என, தம்பி தன் மனைவியிடம் புகார்செய்ய அது பெரிய பிரச்னையாகி, கல்யாண வீட்டில் சாப்பிடாமலேயே அவர்கள் வெளியேறிவிட்டார்கள். அந்த அவமானத்தை ஆறாத வடுபோல இன்றும் வைத்துக்கொண்டிருக்கிறார்.

எந்தக் கல்யாணத்துக்கு யார் அவரை அழைத்தாலும், இந்தச் சம்பவத்தைச் சொல்லிக்காட்டுகிறார். 'என்னை இல்லாதவன் என ஒதுக்கி அவமானப்படுத்திவிட்டான். ஆனால், வசதியான அவனது மச்சினனைக் கௌரவமாக நடத்தினானே! அந்த எண்ணம் ஏன் சொந்த அண்ணனை நடத்த மனம் வரவில்லை?’ எனப் புலம்பிக்கொண்டே இருக்கிறார்.

குடும்பத்தில் ஓர் உறவு அவருக்குத் துண்டிக்கப்பட்டுவிட்டது. இது இனி எளிதில் ஒட்டிக்கொள்ளாது. இந்தக் கோபம், அவமானம் எதையும் திருமணத் தம்பதிகள் கண்டுகொள்ளவே இல்லை. 'அவர்கள் தனக்கு நடந்த அவமானத்துக்கு மன்னிப்பு கேட்பார்கள்’ என நண்பனின் தந்தை நினைத்துக்கொண்டிருந்தார். அது நடக்கவில்லை என்றதும் மணமக்களையும் அவர் வசைபாடத் தொடங்கிவிட்டார். இப்போது அந்த வெறுப்பு குடும்பப் பகையாக வளர்ந்து நிற்கிறது.

இப்படி ஒவ்வொருவர் திருமணத்துக்குள்ளும் யாரோ காயப்பட்டுவிடுகிறார்கள்; கசப்போடு வெளியேறிப்போகிறார்கள்; கண்ணீருடன் சண்டையிடுகிறார்கள். எவ்வளவு வசதியான வீட்டுத் திருமணத்திலும் இந்தப் பிரச்னையைத் தவிர்க்க முடியவில்லை.

இது திருமணத்தின் ஒரு பக்கம் என்றால், இதன் மறுபக்கம் திருமணம் பற்றிய கனவுகள். ஆண்களைவிடவும் பெண்கள் திருமணம் பற்றிய நிறையக் கனவுகளை, ரகசியமாகத் தங்களுக்குள் வளர்த்துக்கொண்டே வருகிறார்கள்.

எந்த மண்டபத்தில் திருமணம் நடைபெற வேண்டும், திருமணத்தின்போது என்ன விதமான ஆடை அணிந்துகொள்ள வேண்டும், ஹனிமூனுக்கு எந்த ஊருக்குப் போய் வர வேண்டும்... என எல்லாவற்றையும் ரகசியமாக மனதுக்குள் திட்டம் வகுத்துக் கொண்டிருக்கிறார்கள். அது நிறைவேறாமல் போகும்போது அடையும் ஏமாற்றம் உடனே வெளிப்படுவது இல்லை. மாறாக, திருமண வாழ்வில் எதிரொலிக்கத் தொடங்கிவிடுகிறது.

'குல்ஹிமா’ என்ற தன் அத்தையைப் பற்றி, எழுத்தாளர் அம்ருதா ப்ரீதம் தனது வாழ்க்கை வரலாற்று நூலில் ஒரு நிகழ்வைக் குறிப்பிடுகிறார்.

பஞ்சாபி கிராமம் ஒன்றில் குல்ஹிமா என்கிற பெண்ணுக்குத் திருமணம் நடக்கிறது. முதலிரவுக்காக மணமகனின் வீட்டுக்கு அழைத்துப்போகிறார்கள். அங்கே கட்டிலே கிடையாது. தரையில் பாயை விரித்திருந்தார்கள். முதலிரவு என்றாலே பூச்சரங்கள் தொங்கும், கட்டில், பால், பழம் எனக் கனவுகொண்டிருந்த குல்ஹிமாவுக்கு, அந்த வெறும்பாயும் ஒரு டம்ளர் பாலும் திகைப்பை ஏற்படுத்திவிடுகின்றன.

முதலிரவில்கூட கட்டில் இல்லையே என்ற ஏக்கத்தை அவளால் கட்டுப்படுத்திக்கொள்ள முடியவே இல்லை. இதைப் பற்றி கணவனிடம் எப்படிப் பேசுவது எனப் புரியாமல் அவள் கோபத்துடன் தலைகவிழ்ந்து உட்கார்ந்திருக்கிறாள். கணவனோ காமத்துடன் அவளை நெருங்குகிறான். 'கட்டில்கூடவா நமக்குக் கிடையாது?’ என குல்ஹிமா அழுகிறாள்,

'எதற்கு கட்டில், யார் வீட்டில் கட்டில் இருக்கிறது, இத்தனை நாட்கள் உன் வீட்டில் கட்டிலில்தான் தூங்கினாயா?’ என கணவன் திட்டி சண்டையிடுகிறான். அவளும் பதிலுக்குச் சண்டையிட, கோபத்தில் அவளை அடித்துவிடுகிறான். அழுதபடியே பாயில் சுருண்டு படுத்துக்கொள்கிறாள். அப்போது அவள் மனதில், தான் பார்த்த சினிமாக்களில் வந்த முதலிரவுக் காட்சிகளில், அலங்காரமான கட்டிலில் மணமகனும் மணமகளும் கட்டிக்கொண்டு ஆடிப்பாடி உறங்குவது நினைவுக்கு வருகிறது. அதை நினைத்துக் கேவிக் கேவி அழுகிறாள்.

'முதலிரவில் தன்னைச் சந்தோஷப் படுத்தவில்லை’ எனச் சொல்லி குல்ஹிமாவை அவளது கணவன் விரட்டிவிடுகிறான். கிராமத்தில் பசுமாடுகளை மேய்த்தபடியே அவள் தனியே அலைகிறாள். கணவன், ராணுவத்துக்குப் போய்விடுகிறான். 30 வருடங்களுக்குப் பிறகு ஒருநாள், தற்செயலாக அவள் கணவனை சந்தையில் சந்திக்கிறாள். அவன் மறுமணம் செய்து, மனைவியை இழந்து தனியே வாழ்ந்துகொண்டிருக்கிறான்.

இந்திய வானம் - 15

அவர்கள் சந்தையில் சந்தித்துக்கொண்டபோது குல்ஹிமாவைத் தன்னோடு வந்து வாழும்படியாக அழைக்கிறான்; குல்ஹிமா மறுக்கிறாள். அப்போது அவளது கணவன் 'என் வீட்டில் இரட்டை மரக்கட்டில் இருக்கிறது. வந்துவிடு. உன்னை சந்தோஷமாக வைத்துக்கொள்கிறேன்’ என அழைக்கிறான். குல்ஹிமா கண்ணீர்விட்டபடியே 'இனி எனக்கு அந்தக் கட்டில் எதற்கு?’ என விலகிப்போய்விடுகிறாள்.

குல்ஹிமாவின் வாழ்க்கை, என்றோ நடந்த விஷயம் அல்ல; இன்றும் தொடரும் ஒரு விஷயம். முதலிரவு குறித்த கற்பனை கலைந்துபோய் கசப்புஉணர்ச்சி பீறிடத் தொடங்குவது இன்றும் நடைபெறுகிறது.

பிரச்னை, 'கட்டில் இல்லை’ என்பது அல்ல. தனக்குள் குல்ஹிமா வளர்த்துக்கொண்டிருந்த கனவு கலைந்துபோய்விட்டது. இனி ஒருபோதும் அதைச் சாத்தியப்படுத்த முடியாது என்பதே.

வாழ்நாள் முழுவதும் திருமணம் பற்றி கனவுகண்ட இளம்பெண், தங்கள் காதலை வீட்டார் ஏற்றுக்கொள்ளாதபோது, ரகசியமாகப் பதிவுத்திருமணம் செய்துகொள்ள ஒப்புக்கொண்டுவிடுகிறாள். திருமணமும் நடந்தேறிவிடுகிறது. ஆனால், அவள் தன் வாழ்நாள் முழுவதும் பத்திரிகை அடித்து, ஊரைக் கூட்டி, சாப்பாடு போட்டு, வீடியோ எடுத்து திருமணம் நடக்கவில்லை என்பதைச் சொல்லிக்காட்டிக்கொண்டே இருக்கிறாள்.

இந்த வலியை அவளால் கடந்துபோக முடியவே இல்லை. ஒவ்வொரு முறை அவளது திருமணம் பற்றிய பேச்சு வரும்போதும், அவள் குற்றவுணர்ச்சியோடு 'தனக்கு அந்தக் கொடுப்பினை இல்லை’ என நினைத்து கண்ணீர்விடுகிறாள். பிடித்த காதலனைத் திருமணம் செய்துகொண்டதைவிடவும் கனவு கண்டபடி திருமணம் நடக்காமல்போன வருத்தம் மறையாத வேதனையாக எஞ்சிவிடுகிறது.

இன்னொரு திருமணத்தில் புது மனைவியை கணவர் வீட்டார் 'ஏன் வீட்டுக்குள் செருப்பு போட்டுக்கொண்டு நடக்கிறாள்?’ எனத் திட்டியிருக்கிறார்கள். அது அவளது நெடுநாளைய பழக்கம். அந்தப் பெண்ணால் இதைத் தாங்கிக்கொள்ள முடியவில்லை. கோபித்துக்கொண்டு தாய்வீட்டுக்கு வந்துசேர்ந்துவிடுகிறாள்.

பெண் வீட்டார் இதைப் பெரிய விஷயமாக எடுத்துக்கொண்டு மாப்பிள்ளை வீட்டில் 'மாமியாரும் மாமனாரும் தன் மகளை வரதட்சணை கேட்டுக் கொடுமைப்படுத்துகிறார்கள்’ என போலீஸில் புகார் கொடுத்துவிட்டார்கள்.

உடனே இந்தப் புகாரை விசாரிக்க மணமகனின் தாய் - தந்தையை போலீஸ் காவல் நிலையத்துக்கு அழைத்துப்போய்விடுகிறது. தங்களை 'வாழ்நாளில் முதல்முறையாக இப்படி போலீஸ் ஸ்டேஷனில் உட்கார வைத்துவிட்டாளே’ என மணமகனின் பெற்றோர் அழுது கண்ணீர் வடிக்க, பிரச்னை முற்றிவிடுகிறது. இன்று அவர்கள் பிரிந்து வாழ்கிறார்கள்.

தன் பெற்றோரை போலீஸ் ஸ்டேஷனில் ஒப்படைத்த அந்தப் பெண்ணை, இனி வாழ்நாளில் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டேன் என கணவன் உறுதியாக இருக்கிறான். பெண் வீட்டிலும் இப்படியான ஒரு திருமணம் தேவையே இல்லை என முறித்துக்கொள்ளவே விரும்புகிறார்கள். அவர்களின் திருமண வாழ்க்கை மொத்தமே  12 நாட்கள்தான். இவ்வளவுதானா திருமணம், இதற்குத்தானா இத்தனை உறவினர்கள் ஒன்றுகூடி ஆசீர்வதித்தார்கள்?

கார்லோஸ் ஹாரிஸ் என்கிற உளவியல் ஆய்வாளர், தனது உரை ஒன்றில் முறிந்த உறவுகளுக்கான காரணத்தை விளக்குகிறார்...

'குடும்ப உறவுகளின் பிரிவுக்கு முக்கியமான காரணம் 'கோபம்’. இந்தக் கோபத்தின் மூலம் எது... யோசித்தது உண்டா?

உண்மையில் நாம் கோபம்கொள்வதன் வழியே நமது இருப்பை அடையாளப்படுத்த முயற்சிக்கிறோம். கோபம் என்பது, ஒரு மனப் பழக்கம். ஒரு தந்திரம், மிகச் சாதாரணச் செயல் ஒன்றுக்கு, ஏதோ ஒரு தருணத்தில் கோபம் அடையத் தொடங்குகிறவன், பின்னர் அதையே பழக்கம் ஆக்கிக்கொள்கிறான். இது அவன் தொடர்புடைய எல்லா செயல்களிலும் வெளிப்படத் தொடங்குகிறது. இதை, தனது இயல்பாகக் கருத ஆரம்பித்துவிடுகிறான். அதுதான் பல்வேறு பிரச்னைகளுக்கு மூலக்காரணம்.

ஒரு பிரச்னை வளர்வதற்கு முன்முடிவுகளே பிரதானக் காரணம். நாம் ஒரு செயலைத் தனித்து அணுகுவது இல்லை. நமது முன்முடிவின்படி அதை ஒரு சதியாகவோ, அவமானப்படுத்தும் வழிமுறையாகவோ கருதுகிறோம். தற்செயல் அல்லது தவறாக நடந்துவிட்ட விஷயம் என ஒன்றை நாம் நினைப்பதே இல்லை.

இதுபோலவே பேச்சுவார்த்தை முற்றியே சண்டை ஏற்படுகிறது. பேச்சை கையாளத் தெரியாமல்போனதே இதற்கான காரணம். அமைதியாக உணர்ச்சிவசப்படாமல் பேசத் தொடங்கும்போது பிரச்னை எழுவதே இல்லை.

பிறரைப் பற்றி குறை கூறுவதற்கு நாம் விரும்புகிறோம். அதை ஒரு பழக்கமாக உருமாற்றியிருக்கிறோம். அதேபோல மற்றவர் நம்மைப் பற்றி குறை கூறும்போது நாம் கோபம் அடைகிறோம். உண்மையில் குறை கூறுதல் என்பது ஒரு வகை வம்புப்பேச்சே.

இந்திய வானம் - 15

அளவுக்கு அதிகமான வேலையைச் செய்வது அல்லது ஒன்றுமே செய்யாமல் இருப்பது இரண்டும் பிரச்னையை வேகமாக உருவாக்கிவிடும். உற்சாக மிகுதியில் ஒன்றைச் செய்ய ஆரம்பித்து, முடியாமல் கைவிடும்போதுதான் அவப்பெயர் உண்டாகிறது.

விட்டுக்கொடுத்தல், புரிந்துகொள்ளுதல், நன்றி பாராட்டுதல், ஏற்றுக்கொள்ளுதல், பக்குவமாக உரையாடுதல், பொறுமையுடன் காத்திருத்தல் இவை யாவும் ஒன்றுசேர்ந்ததே வாழ்க்கை. அதைப் புரிந்துகொள்ளாமல்போனதே இன்றைய சிக்கல்களுக்கான முக்கியமான காரணம்’ என்கிறார் கார்லோஸ் ஹாரிஸ்.

இரண்டு தேசங்களுக்கு இடையில் உருவாகும் பிரச்னைகளைக்கூடப் பேசித் தீர்த்துக் கொண்டுவிட முடிகிறது. ஆனால், உறவுக்குள் ஏற்படும் சிக்கலை எவராலும் பேசித் தீர்த்துவிட முடிவதில்லை. முந்தைய காலங்களில் சில பெரியவர்கள் இப்படிப் பேசி ஒன்று சேர்த்துவைப்பதை தங்களின் கடமையாகக் கருதினார்கள். பெரியவர்கள் சொன்னால் இரண்டு வீட்டிலும் ஏற்றுக்கொண்டார்கள். இன்று அப்படியான பெரியவர்களும் இல்லை; ஏற்றுக்கொள்ளும் மனநிலையில் எந்த மனிதரும் இல்லை.

கல்யாணப் புகைப்படங்களில் நாம் சிரித்தபடியே போஸ்கொடுப்பது, இந்த ஒரு நிமிடத்துக்குப் பிறகு, சிரிப்பு சாத்தியம் இல்லை என்பதற்காகத்தானோ எனச் சந்தேகமாக இருக்கிறது!

- சிறகடிக்கலாம்...