
மருத்துவர் கு.சிவராமன்
'தென்னை மரத்தில் தேள் கொட்டினால், பனை மரத்தில் நெறிகட்டுமா என்ன?’ எனும் வாழ்வின் பிழைகளைச் சுட்டிக்காட்டும் வழக்குமொழி உண்டு. ஆனால், உயிர் பிழை விஷயத்தில், இது அப்படியே நேர்மறை. பனை மரம் என்ன, பக்கத்துக் காட்டில் உள்ள ஆலமரத்தில்கூட நெறிகட்டும். அடிபட்ட புண்ணுக்கு அருகில், கால் இடுக்கில், சளி கட்டும்போது கழுத்து, தொண்டைப் பகுதிகளில் காசம் முதலான சில தொற்றுநோய் வரும்போது நுரையீரல், கழுத்துப் பகுதியில், யானைக்கால் வியாதி முதலான நிணநீர் நாள அடைப்பில் நெறிகட்டுவது போன்றவை நோய்கள் வரவின் முக்கியமான அடையாளம். அப்படி இல்லாமல், நோய் எங்கோ ஓர் இடத்தில் ஒளிந்திருக்க, ரொம்ப நாளாக வலி இல்லாமல் வேறு எங்கோ நெறிகட்டி இருப்பதும் ஸ்கேனில் ஒரு நோயைத் தேடும்போது தட்டுப்படும். இந்த 'நெறி’ கட்டுவது என்பது (Swelling of Lymph Glands) உயிர் பிழையின் மிக முக்கிய சந்தேகக் குறி!
முழுமையாக இயந்திரங்களின் பிடியில் சிக்கிக்கொண்ட மருத்துவ உலகம், உடலை உற்றுப்பார்த்து நோய் அறியும் கலையை சமீபகாலமாக இழந்துவருகிறது. 'அனுமானங்கள் வழியாக அல்ல... Evidence based Medication எனத் தடயங்கள் அல்லது அறிவியல் ஆதாரங்கள் பின்னணியில் மட்டும்தான் மருத்துவம்’ என முழுமையாக நகர்ந்துவிட்டது மருத்துவத் துறை. நோயாளிகளின் அவஸ்தைகளை அமைதியாகக் கேட்பது, கேள்விகள் கேட்டு அவரின் நேரடிப் பதில்கள் மூலம் அறிவது, உற்றுப்பார்ப்பது, தட்டிப்பார்ப்பது, தடவிப்பார்ப்பது என நோயாளியின் உடல் மீதான பரிசோதனைகள் மருத்துவத் துறையில் அநாவசியம் ஆகிவருகிறது. உயிர் பிழையின் மௌனமான வளர்ச்சிக்கு இந்த உதாசீனம்கூட ஒரு காரணம்.

'என்ன... முகம் வாடியிருக்கு... காய்ச்சலா?’, 'முகம் ஏன் அதப்பலாக இருக்கு... சிறுநீர் சரியாப் பிரியலையோ?’, 'உடம்பு உப்புசமா தெரியுதே... தினமும் மலம் கழிக்கிறீங்களா?’, 'ஏன் கோணலா நடக்குறீங்க... இடுப்பு எலும்பு தேஞ்சிருச்சா?’, 'முன்புறமாக் குனிஞ்சு ஏன் படுத்திருக்கே... அல்சரா, அப்பெண்டிசைட்டிஸா..?’ என்றெல்லாம் மருத்துவர்கள் கேட்ட காலம் உண்டு. கண்களைப் பார்த்து 'சோகையா?’ என முடிவெடுப்பது, கண்ணுக்குள் கருவிழியைச் சுற்றியுள்ள வளையத்தைப் பார்த்து 'ஈரல் நோயா?’ என யோசிப்பது, நாக்கின் வெடிப்பையும் சிவந்தும் வெளுத்தும் இருக்கும் திட்டுக்களையும் பார்த்து, 'இது Atopic Tongue அலர்ஜி’ என அனுமானிப்பது, தடவிப்பார்த்தே 'ஈரல் நான்கு விரல்கடை வீங்கி இருக்கிறதே... இது மலேரியாவின் தாக்குதலா?’ என விவாதிப்பது, 'வலது பக்க விலாவுக்குக் கீழே ஐந்து மாதக் கருவின் தலைபோல தட்டுப்படுதே... அது பித்தப்பை வீக்கமாக இருக்குமோ?’ எனக் கேள்வி எழுப்புவது... இவை எல்லாமே மருத்துவப் படிப்பின் இறுதி ஆண்டு கேள்வி பதில்கள்.
துரிதகால நவீன மருத்துவத் துறை இந்தக் கேள்விகளை மறந்தேவிட்டது. விளைவு... 'அடுத்த இ.எம்.ஐ-க்கு எவ்வளவு கட்டணம்?’, 'தக்காளி இன்னும் விலை ஏறுமா?’, 'ரசத்துக்கு எலுமிச்சம்பழம் போதாதா?’ போன்ற யோசனைகளுடன் சேர்த்து வெகுஜனம் இந்த மருத்துவச் சந்தேகங்களை, நலப் புரிதலை அறிந்திருப்பது காலத்தின் கட்டாயமாகிவருகிறது.
புறவாசலில் உட்கார்ந்து, இரு கால்களில் குழந்தையைக் குப்புறப் படுக்கப்போட்டுக் குளிப்பாட்டும்போது, நலங்குமாவை காதுகளின் இடுக்கில், கழுத்தில் தடவும்போது... 'காதுக்குக் கீழே கழுத்துல நெறிகட்டியிருக்கு. சளியா இருக்குமோ?’ என அடுத்த முறை தர்மாஸ்பத்திரி போகும்போது மறக்காமல் கேட்ட என் பாட்டியை இன்னும் மறக்க முடியவில்லை. 'இவ்வளவு பெருசா முன்கழுத்துப் பகுதியில நெறிகட்டியிருக்கே! ஏம்மா, இத்தனை நாளா கவனிக்கவில்லையா?’ எனக் கேட்டால், 'எங்கே டாக்டர் இருக்கு... பாக்கலையே! வீக்லி ஒன்ஸ் ஷவர்ல அவனே குளிக்கிறான். I didn't notice yet...’ எனச் சொல்லும் நவீன பெற்றோரையும் மன்னிக்க முடியவில்லை.
எங்கு நெறிகட்டி இருந்தாலும், உதாசீனப்படுத்தாமல் உற்றுப்பார்க்கவேண்டிய காலகட்டம் இது. நாள்பட்ட புண், காசம், சில கிருமித் தொற்று இவற்றில் நோயைக் குண்மாக்க வெள்ளை அணுக்கள் குவியும்போது அந்தப் பகுதி வீங்கும். கிருமியுடனான போராட்டத்தில் சற்று சீழ் கோத்து, காய்ச்சல் வரும். இப்படியான நெறிகட்டுதல் எல்லாமே முற்றிலும் மருத்துவத்தால் குணமாகக்கூடியவை. காய்ச்சல் இல்லாத காமாலைக்காக ஈரலை, கருத்தரிப்பு தாமதத்துக்காக சினைப்பை அல்லது கருப்பையை கொஞ்சம் உற்றுப்பார்க்கவோ, யதேச்சையாக எடுக்கப்படும் அல்ட்ரா சவுண்டு ஸ்கேனில் ஆங்காங்கே இரைப்பையைச் சுற்றி, ஈரலைச் சுற்றி, இதயத்தில் இருந்துவரும் முதல் முக்கிய நாடியைச் சுற்றி தென்படும் நிணநீர்க் கட்டிகள் அதன் வீக்கங்கள் கொஞ்சம் கலவரப்படுத்தக்கூடியவை. அவற்றில் சில தொற்றாக இருக்கலாம் அல்லது வெள்ளை அணுக்களின் நிணநீர்க்கோளப் புற்றாக (Lymphoma), வேறு எங்கோ ஒளிந்திருக்கக்கூடிய புற்றின் பரவுதலாக (Metastasis) இருக்கக்கூடும். அடுத்தடுத்து பல சோதனைகளைச் செய்து அதன் முகவரியை அறிவது மிக அவசியம். ஏனென்றால், சாதாரணமாக இப்படி வரும் வெள்ளை அணுக்களின் புற்றுக்கள் ஆரம்ப நிலையிலேயே கண்டறியும்போது, அநேகமாக முற்றிலும் குணப்படுத்தக்கூடியவை; வேரோடு நீக்கக்கூடியவை. தேவை, கொஞ்சம் வேகம் மட்டுமே!
தாமஸ் ஹாட்கின்ஸ்! மேற்கத்திய மருத்துவ உலகின் மிக முக்கியமான உடற்கூறியல் விஞ்ஞானி. பிணங்களை அறுத்து, எந்த நோயினால் அந்த மனிதன் இறந்தான் என ஆராயும் ஆய்வுப்பணியை அவர் மேற்கொண்டது, 18-ம் நூற்றாண்டின் இறுதிக்காலத்தில். 'காசமும் இல்லாமல், பாலுறவு நோயிலும் அல்லாமல் ஏதோ ஒரு புதுவித நோயில் ஏராளமான இளைஞர்கள் உடலின் உள்ளே ஆங்காங்கே நெறிகட்டி மரணம் அடைகிறார்கள். இந்த மரணத்துக்குக் காரணம் தொற்று அல்ல’ எனத் தெரிந்துகொண்ட ஹாட்கின்ஸுக்கு, அது புற்று எனத் தெரியாது. ஆனால், அவரது அந்த ஆவணமும், அவர் அறுத்து சேமித்துவைத்திருந்த உடற்கூறுகளின் அருங்காட்சியகமும் இன்றும் ஐரோப்பாவில் உள்ளன. அவரது ஆய்வு அப்போது பேசப்படாதது மட்டும் அல்ல, உதாசீனப்படுத்தப்பட்டது!
30-35 ஆண்டுகளுக்குப் பின் (அவர் மரணத்துக்குப் பின்னர்) அப்படியான நிணநீர் நெறிகட்டிய வீக்கத்தை ஆராய்ந்த அவருக்குப் பின்னர் வந்த விஞ்ஞானிகள், அந்தக் கட்டிகளில் ஆந்தையின் கண்களைப் (Owls Eye) போல இருந்த வெள்ளை அணுக்களைக் கண்டறிந்து, 'இது வெறும் கிருமி வீக்கம் அல்ல... புற்று’ எனச் சொன்னார்கள். அதை வெகு நாட்களுக்கு முன்னரே நுட்பமாக ஆவணப்படுத்திய ஹாட்கின்ஸின் பெயராலேயே அது 'ஹாட்கின்ஸ் லிம்போமா’ எனப் பெயரிடப்பட்டது. முதலில் கதிர்வீச்சாலும், பின்னர் கீமோவாலும் இப்போது இரண்டைக்கொண்டும் பெரும்பாலும் புற்றைக் குணப்படுத்தக்கூடிய வெற்றியை நவீனம் அடைந்திருக்கிறது. இந்த வெற்றிக்குப் பின்னால், நம் ஊர் தூத்துக்குடியில் இருந்தும், ஏரலில் இருந்தும் போன நித்யகல்யாணிச் செடியின் பங்கும் உண்டு. இந்தச் செடியின் வேரில் இருந்து பிரித்தெடுத்த வின்கிரிஸ்டின் மருந்துதான் இன்று வரை அந்த நோய்க்கான கூட்டு கீமோ சிகிச்சையின் பிதாமகன்.

ஹாட்கின்ஸ் அறுத்து ஆராய்ந்து ஆவணப்படுத்திய இந்த நிணநீர்க்கட்டிகளைக் குறித்து 1,500 ஆண்டுகளுக்கு முன்னதாக நம் ஊர் யூகிமுனிச் சித்தர் கழுத்தைச் சுற்றி முத்துமாலை போலவும், உடலுக்குள் தோலுக்கு அடியில் மாலை போட்ட மாதிரி உள்ள வீக்கத்தை 'கண்டமாலை’, 'கழலை’ என ஆவணப்படுத்தினார். 'குணப்படுத்த அசாத்தியமானது’ என்றும் எச்சரித்தார். அவரை தமிழ் உலகம் 18 சித்தர்களில் ஒருவராக்கிப் பரவசப்பட்டதோடும், தமிழரின் உச்ச அறிவியல் எனப் புளகாங்கிதம் அடைந்ததோடும் நின்றுவிட்டது. ஆனால், மேற்கத்திய விஞ்ஞானம் ஹாட்கின்ஸுக்குப் பின்னர் வந்த விஞ்ஞானிகள் கப்லன், வின்சென்ட் டே விட்டா, பிங்க்கல் போன்ற விஞ்ஞானிகளின் மூலமாக வரிசையாக ஆராய்ந்ததில், இன்று சில நெறிகட்டும் வெள்ளை அணுக்களின் ரத்தப் புற்றுக்காவது முற்றும் வைக்கப்பட்டுவிட்டது.
ஹாட்கின்ஸைப் போல நுட்பமான மருத்துவக் கழுகுப் பார்வைகொண்டிருந்தவர் நம் ஊர் மருத்துவர் மறைந்த பேரா. செ.நெ.தெய்வநாயகம். உலகம், ஹெச்.ஐ.வி வைரஸை அடையாளம் காண 5,000 - 6,000 ரூபாய் செலவு செய்துகொண்டிருந்த நேரத்தில் 'நாக்கில் பாருங்க... கருந்தேமல்!
(Melanosis tongue), நகத்தைப் பார்த்தீங்களா? குறுக்குவாட்டுல கறுப்புப் படலம் (Grey banding)... இது ஹெச்.ஐ.வி-யாகத்தான் இருக்கும்...’ எனச் சொல்லிவிட்டு, 'வெளிப் பெண்களோடு தொடர்பு உண்டா தம்பி?’ என அவர் கேட்பதைப் பார்க்கும்போது, இவர் நம் ஊர் ஹாட்கின்ஸ் எனத் தெரியும். 'ஏம்மா,
நீ குழந்தையைக் குளிப்பாட்டும்போது கழுத்தை தடவிப்பார்க்க மாட்டே! இப்படித் தூக்கலா கோலிக்காய் மாதிரி இருக்கே. இதைக் கேட்க வேணாம்?’ என ஓர் அதட்டு அதட்டி... 'அட! ஒண்ணும் இல்ல புள்ள. இளங்காசம்... பிரைமரி காம்ப்ளெக்ஸ்னு பேரு. ஆறு மாசம் மாத்திரை போடு, சரியாயிடும். கூடவே எள் உருண்டை, கடலைமிட்டாய், வாழைப்பழம் கொடுக்கணும். அதை விட்டுடக் கூடாது ஆமாம்..!’ எனச் சொல்வார் அவர்.
சமூகத்தைக் குறுக்குவாட்டில் அறிந்த, உயர இருந்து விசாலமாகச் சிகிச்சைசெய்த பேராசிரியர் தெய்வநாயகம். அவர் காலத்தில் இன்னும் கூடுதலாகக் கொண்டாடப்பட்டிருக்க வேண்டியவர். அவர்தான் நவீனத்தையும் மரபையும் பிணைத்துச் சொன்ன கூட்டுச் சிகிச்சையின் தத்துவங்களால், ஏல சுப்பாராவ் மாதிரி, ஹாட்கின்ஸ் மாதிரி, பாரதி மாதிரி, ஜே.சி.குமரப்பா மாதிரி சம காலத்தில் இல்லாவிடினும் பின்னாட்களில் நிச்சயம் கொண்டாடப்படுவார். ஏனென்றால், நவீனமும் மரபும் இணையும் ஆலிங்கனத்தில் மட்டும்தான் இனி மருத்துவத்தில் புத்துயிர் பிறக்கும்; உயிர் பிழை தெறித்து ஓடும்!
- உயிர்ப்போம்...