Published:Updated:

சொல்வனம்

சொல்வனம்

பப்பிக் குட்டியும் நானும்... 

உறக்கம் கலைத்த முகத்தருகில்

புரண்டுகொண்டிருக்கும் அதன் நினைவுகளிலிருந்து

என்னை விடுவித்துக்கொள்ளவே நினைக்கிறேன்.

இன்னமும் ஈரமோடிருக்கின்றன‌

உலர மறுக்கும் அதன் நாவின் ஸ்பரிசங்கள்.

வழியின்றித் திகைக்கிறேன்

பின்தொடராமையின் வெறுமை

இருளைக் கொண்டுவந்து சேர்ப்பிக்கின்றது.

சொல்வனம்

வருகை அறியும்போதும்

வெளிக்கிளம்புவதற்கு ஒளியும்போதும்

சுழன்று கவ்விக்கொள்ளும் ஜீவன்

காற்றோடு கலந்துவிட்டிருந்தது.

தூரத்துக் குரைப்பொலி அதைப் போலில்லை.

இப்போதும்

தொண்டைக்குழிக்குக் கீழ் இறங்க மறுக்கும்

சோற்றுருண்டைகள் பப்பியினுடையதுதான்.

 - சா.பாலமுருகன்

சாயல்

'விரைந்து பார்த்துவிட்டு நகருங்கள்.

ஒருவருக்கு மேல் யாரும்

அருகில் இருக்கக் கூடாது.

மருத்துவர் வரும் நேரம் யாரும்

கூட்டமாக இருக்காதீர்கள்.

உணவு கொண்டு வருபவருக்கு மட்டுமே அனுமதி...’ என

சிடுசிடுத்துக்கொண்டிருந்ததில்

பார்க்க அவ்வளவாகப் பிடிக்கவில்லை

அரசு மருத்துவமனை செவிலியின் முகம்

நோய் நாட்களில்

மருந்தளித்துக் குணமாக்கி  

வீடு செல்லும் நேரத்தில்

சினேகமாகப் பார்த்துப் புன்னகைத்ததில்

தெய்வத்தின் சாயலிருந்தது. 

-  ந.கன்னியக்குமார்

ஒரு ஊர்ல ஒரு எறும்பு...

சற்றும் எதிர்பாராதவிதமாக

சர்க்கரை டப்பாவுக்குள்ளிருந்து

சறுக்கித் தரையில் விழுந்த எறும்பொன்று

அப்படியே மெள்ள ஊர்ந்து

அடுத்த ஐந்தாவது நிமிடத்தில்

வீட்டின் பின்கட்டுக்குச் சென்றது.

அங்கு அத்தனை காலமும்

தான் வாழ்ந்திருந்த

பின்வாசல் வேப்பமரப் பொந்திலிருந்து

தன்னைத் துரத்திவிட்டு சேமித்துவைத்திருந்த

சோளச் சிதறல்களையும் அபகரித்த

அந்தப் பெரிய எறும்பை முறைத்துவிட்டு

வடாம் தட்டுக்குள் தஞ்சம் புகுந்தது.

மாலையில் மீண்டும் தட்டோடு சேர்ந்தே

சமையலறை வரை நகர்ந்து

அடுப்பங்கரை மேல் வைக்கப்பட்டிருந்த

அஞ்சறைப் பெட்டியோடு ஒட்டிக்கொண்டு

மீண்டும் அலமாரியை அடைந்து

சர்க்கரை டப்பாவைக் கண்டுபிடித்து

உட்புகுந்துகொள்ளப்போன அந்தச் சமயம்,

சற்றும் எதிர்பாராதவிதமாக

சர்ரென்று சறுக்கிக் கீழே விழுந்... 

- கிருத்திகா தாஸ்