ஆ.விஜயானந்த், படங்கள்: தி.குமரகுருபரன், ஓவியம்: ஹாசிப்கான்
'ஊரெங்கும் மழை வெள்ளம்...
தத்தளிக்குது தமிழகம்
இது யாரோட குத்தம்னு
கேட்காதே சிறைவாசம்...''
- 'மூடு... டாஸ்மாக்கை மூடு...’ பாடலுக்காக தேசத்துரோக வழக்கில் கைதுசெய்யப்பட்ட கோவன், ஜாமீனில் வெளியில் வந்து புழல் சிறை வாசலில் நின்று மீண்டும் பாடினார்... 'மூடு டாஸ்மாக்கை மூடு! ’
சிறை வளாகத்தையே அரசியல் மேடையாக்கி, கோவன் குழுவினர் முழங்க... சிறை அதிகாரிகளும் காவல் அதிகாரிகளும் என்ன செய்வது எனத் திகைத்து நின்றனர்.

மதுவுக்கு எதிராகப் பாடல் பாடிய 'குற்றத்துக்காக’, கோவனை ஒரு நள்ளிரவில் வீடு புகுந்து கைதுசெய்தது தமிழ்நாடு போலீஸ். தேசத் துரோகம் மற்றும் சமூகத்தின் இரு பிரிவினரிடையே பகையை உருவாக்குதல் ஆகிய இரு பிரிவுகளில் வழக்குகள் பதிவுசெய்யப்பட்டன. புழல் சிறையில் அடைக்கப்பட்ட கோவனை, விசாரணைக்காக இரண்டு நாட்கள் கஸ்டடி கேட்டது போலீஸ். அதற்கு, கோவன் சார்ந்த மக்கள் கலை இலக்கியக் கழக அமைப்பைச் சேர்ந்தவர்கள் நீதிமன்றத் தடை உத்தரவு பெற்றார்கள்.
17 நாட்கள் சிறைவாசத்துக்குப் பிறகு இப்போது கோவன் வெளியில் வந்திருக்கும் நிலையில், அவருக்குப் பிணை வழங்கியதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்திருக்கிறது தமிழ்நாடு அரசு. இன்னொரு பக்கம், 'கோவன் மீது எதன் அடிப்படையில் தேசத் துரோக வழக்கு பதிவுசெய்யப்பட்டது?’ என மனுத் தாக்கல் செய்யுமாறு உயர் நீதிமன்றம், தமிழ்நாடு அரசுக்கு உத்தரவு பிறப்பித்திருக்கிறது.
அரசியல் கட்சிகள், மனித உரிமை அமைப்புகள் என அனைத்துத் தரப்பினரும் கோவன் கைதைக் கண்டித்து அறிக்கை வெளியிட்டு, போராட்டம் நடத்திய நிலையில்... தமிழ்நாட்டில் நிலவும் கருத்துரிமைக்கு எதிரான அடக்குமுறையின் அடையாளமாக கோவன் மாறியிருக்கிறார்.
''ம.க.இ.க என்ற அமைப்பின் முழு நேரப் பிரசாரப் பாடகராக இருக்கிறீர்கள். இதற்கு முன்னர் சிறை அனுபவம் உண்டா?''
'நிறைய உண்டு. இதுவரை 15 முறை கைதுசெய்திருக்கிறார்கள். நான் ம.க.இ.க-வில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக முழு நேர ஊழியன். ஆரம்பத்தில் பொய் வழக்குகள் போட்டார்கள். நேரு சிலை குண்டுவெடிப்பு உள்பட, எனக்கு சம்பந்தமே இல்லாத வழக்குகளில் என் பெயர் இருக்கும். தலைவர்கள் யாராவது திருச்சிக்கு வந்தால், என்னையும் தோழர்களையும் தடுப்புக் காவலில் வைப்பார்கள். எங்களுக்காகக் குரல்கொடுக்க ஒரு வக்கீல்கூட வர மாட்டார். கடுமையான போலீஸ் அடக்குமுறை இருக்கும். இப்போது நிலைமை பரவாயில்லை. 'மக்களுக்காக சமரசம் இல்லாமல் உழைப்பவர்கள்’ என எங்களை அங்கீகரித்து, புரிந்துகொள்ளத் தொடங்கியிருக் கின்றனர்.

புழல் சிறையில் என்னை தனிமைச் சிறையில் அடைத்திருந்தனர். சாப்பாட்டு நேரங்களில் சிலருடன் பேசும் வாய்ப்பு கிடைத்தது. 'எப்போது விடுதலை?’ என்பதே தெரியாமல் ஏராளமானவர்கள் அங்கு இருக்கிறார்கள். ஜாமீனில் எடுப்பதற்குக்கூட வழி இல்லாமல் பலர் உள்ளே அடைக்கப்பட்டிருக்கிறார்கள். சிறை என்பது, சமூகத்திடம் இருந்து மனிதர்களைப் பிரிக்கிறது. உறவு, சுற்றம், உலகம் எல்லாவற்றிலும் இருந்து விலக்கி ஒரு குறுகிய சுவருக்குள் அடைக்கிறது. மக்களிடம் இருந்து பிரிக்கப்படுவதுதான் உண்மையான துயரம்.''
''உங்களைக் கைதுசெய்தபோது என்ன நடந்தது?''
'நள்ளிரவு 2:30 மணிக்கு கதவு தட்டப்பட்டது. கதவைத் திறந்ததும் தப்பி ஓட முயலும் குற்றவாளியைப் பிடிப்பதுபோல, என் கழுத்தை இறுக்கிப் பிடித்து, அமுக்கி எதையும் பேசவிடாமல் கொண்டுபோனார்கள். உள்ளூர் போலீஸ் ஒருவர் அதில் இருந்ததால், அவர்கள் காவல் துறையினர் என்பதைத் தெரிந்துகொண்டோம். என் மகன் ஒரு வழக்குரைஞர். 'எதுக்காகக் கைது... வாரன்ட் இருக்கிறதா?’ என அவர் கேட்டதற்கு, 'உன் வேலையைப் பாரு’ எனச் சொல்லிவிட்டு இழுத்துச் சென்றனர். அதன் பிறகுதான், வந்தது மத்தியக் குற்றப் பிரிவின் சைபர் க்ரைம் போலீஸ் எனத் தெரிந்துகொண்டேன். அதன் பிறகு சென்னைக்கு அழைத்துவந்து, வேப்பேரியில் உள்ள கமிஷனர் அலுவலகத்தில் வைத்திருந்தார்கள். 'மதுவுக்கு எதிராகப் பாடியதற்காக உங்களைக் கைதுசெய்திருக்கிறோம்’ என்றார்கள். 'அம்மாவுக்கு எதிராகவும் நீங்க பாட்டு பாடியிருக்கீங்கல?’ எனக் கேட்டார் ஓர் அதிகாரி. யார் யாரோ வந்து கேள்விகேட்டார்கள். எங்களின் 'வினவு’ தளத்தில் மதுவுக்கு எதிராக நான் பாடிய பாடல்களை வெளியிட்டிருந்தார்கள். அதைப் பற்றியும் கேட்டார்கள். நாள் முழுக்க விசாரணை தொடர்ந்துகொண்டே இருந்தது. ஓர் அதிகாரி, 'அம்மாவை இப்படித் திட்டலாமா? அம்மாவைத் திட்டின வரியை மட்டும் மாற்றி, பாராட்டிப் பாட முடியுமா?’னு கேட்டார். அவங்களை என்னத்தைச் சொல்றது? 'டாஸ்மாக் மூலமா மக்களுக்கு இவ்வளவு துன்பத்தை இந்த அரசுதான் பண்ணுது. அரசுதான் குற்றவாளி. போலீஸா இருக்கிற நீங்க குற்றவாளியை விட்டுட்டு, குற்றவாளியைப் பற்றி பாட்டு பாடின என்னைக் குற்றவாளியா மாத்துறீங்க’னு சொன்னேன். அதிகாரிகள் எந்தப் பதிலும் சொல்லலை.'

''உங்கள் குடும்பப் பின்னணி என்ன?''
'அடிப்படையில் நான் ஒரு கூலி விவசாயியின் மகன். கீழத் தஞ்சை அருகில் உள்ள பெருமங்கலம்தான் என் ஊர். அப்பா சுப்பையா, அம்மா பார்வதி. எல்லோரையும்போல படிச்சு வேலைக்குப் போகணும்கிற முனைப்புதான் இருந்தது. தயானந்த சரஸ்வதி பள்ளியில்தான் படிச்சேன். தினமும் பூஜை, பஜனை என பக்திமயமாக வளர்ந்தேன். திருச்சி பெல் கம்பெனியில் மெஷினிஸ்ட்டாக வேலையில் சேர்ந்தேன். இப்போது திருச்சியில் அரவானூர் கிராமத்தில் வசிக்கிறோம். என் அப்பாவுக்கு, நான் நல்லா சம்பாதிச்சு நிலபுலன்கள் வாங்கணும்கிறதுதான் கனவு. என்கூட பிறந்தது மூன்று சகோதரிகள். கடைசி தங்கை லதா, என்னோடு பாட்டு பாடுகிறார். நாங்க எல்லாரும் ஒன்றாகத்தான் இருக்கிறோம்.''

''பாட்டு பாடுவதையே முழுநேர வாழ்க்கையாக அமைத்துக்கொள்ள, எப்போது முடிவுசெய்தீர்கள்?''
' 'பெல்’ நிறுவனத்தில் பணிபுரிந்தபோது, மதிய உணவு இடைவேளையில் கேன்டீன் முன்பு கூடுவோம். எல்லாரும் பாடும்போது நானும் பாடுவேன். அங்கே இருந்த சில தோழர்கள், 'உங்க குரல் நல்லாயிருக்கு. சினிமா பாட்டு பாடுறதுக்குப் பதிலா, இந்தப் பாட்டை பாடுங்க’னு மக்கள் பிரச்னையை மையப்படுத்தின பாடலைக் கொடுத்தாங்க. 'நாட்டுப்புறப் பாட்டாளிகளே... நகர்ப்புற சீமான்களே... காதைக் கொஞ்சம் திருப்புங்க, எங்க கதையைக் கொஞ்சம் கேளுங்க’னு அந்தப் பாட்டு வரி இருந்தது. அப்போ பாட ஆரம்பிச்சது. அதன் பிறகு தஞ்சையில் நடந்த விவசாயக் கூலிப் போராட்டம், சீனிவாச ராவ் போராட்டம், சாதி ஒழிப்புக்கு திராவிட இயக்கம் செய்த பணிகள் என எல்லாவற்றையும் இயக்கத் தோழர்கள் சொன்னார்கள். அப்படித்தான் ம.க.இ.க அமைப்பைத் தேர்வுசெய்தேன். வேலையைவிட அரசியல் சிந்தாந்தம் முக்கியம் என நினைத்ததால், 'பெல்’ வேலையை விட்டுட்டேன். அப்போ எனக்கு 35 ஆயிரம் ரூபாய் சம்பளம்.''

'உங்கள் பாடல்கள் இப்போது சமூக வலைதளங்களின் பரபரப்பு. உங்களின் அடுத்தடுத்த திட்டங்கள் என்ன?'
' 'பாட்டு பாடியதைக்கூட இந்த அரசால் ஏற்றுக்கொள்ள முடியவில்லையே?’ என்ற கோபம்தான் மக்களுக்கு ஏற்பட்டுள்ளது. எங்கள் பாடல்களில் உள்ள சில வரிகள் ரசனைக்குறைவாக இருப்பதாகச் சொல்கிறார்கள். அது மக்களின் ரசனை; மக்களின் வார்த்தை. நாங்கள் எங்கும் ரூம் போட்டு பாட்டு எழுதுவது இல்லை. மக்களின் துன்பதுயரங்களை நேரடியாகக் கேட்டு, அவர்களின் மொழியிலேயே வெளிப்படுத்துகிறோம். அதனால்தான் இத்தனை பெரிய மக்கள் ஆதரவு.
இத்தனை ஆண்டுகளாக எல்லா சமூகப் பிரச்னைகள் குறித்தும் பாடல்கள் பாடிக்கொண்டுதான் இருக்கிறோம். தமிழகம் முழுவதும் நாங்கள் செல்லாத ஊர்கள் இல்லை. சில ஆயிரம் பேரிடம் பாடியதை இப்போது அரசு தனது அராஜக நடவடிக்கையின் மூலம் பல லட்சம் பேரிடம் கொண்டுசென்றிருக்கிறது. அந்த வகையில் ஜெயலலிதாவுக்கு பெரிய நன்றி. இந்தக் கைதுக்காக நாங்கள் அஞ்சப்போவது இல்லை; இத்துடன் முடங்கிவிடப்போவதும் இல்லை. இனிமேல்தான் கூடுதல் வேகத்துடன் இயங்கப்போகிறோம். மது ஒழிப்புப் பிரசாரப் பாடல்களை இனி வீதிதோறும் முழங்கப்போகிறோம்.''
'அப்படிச் செயல்பட்டால், முன்பைவிட வேகமாக அரசாங்கம் உங்களை ஒடுக்க நினைக்குமே?'
'அரசின் ஒடுக்குமுறை எங்களுக்கு ஒன்றும் புதிது அல்ல. எங்கள் அடுத்த செயல்பாடுகளை எல்லோரும் கவனித்துக்கொண்டிருக்கிறார்கள். இனி, எங்கள் குரலை நசுக்க நினைத்தால், மக்களே கேள்விகேட்பார்கள் என்ற அச்சம் ஆட்சியாளர்களுக்கு ஏற்பட்டுள்ளதை உணர்கிறேன். இந்த அச்சத்தை அதிகரிக்கச் செய்வோம். மக்களின் ஆதரவைப் பெருக்குவோம். என்னைக் கைதுசெய்த பிறகு எங்கள் தோழர்கள் பாடிய பாடல்தான் இதற்கு சரியான பதில்...
போதை தெளிய தமிழனுக்கு
பாட்டு ஒண்ணு பாடினதுக்கு
தேசத் துரோக வழக்கு எதற்கு?
தேடித் தேடி கைது எதற்கு?
எங்க பாட்டை நிறுத்த முடியாது
வாய்ப் பூட்டு போட முடியாது
பூட்டணும்னா கடையைப் பூட்டு
மிடாஸுக்கு விலங்கை மாட்டு
பாடு அஞ்சாதே பாடு - மக்கள்
தாலியறுக்கும் டாஸ்மாக்கை
மூடும் வரை பாடு!''