Published:Updated:

இது அல்கொய்தா 2.0 - பயங்கரவாதத்தின் நிஜ முகம்!

மருதன்

முழுப் பொய்யைக் காட்டிலும் ஆபத்தானது அரை உண்மை. 'ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பு பிரான்ஸைத் தாக்கியது. அதனால் பதிலுக்கு பிரான்ஸ், சிரியா மீது போர் தொடுத்துள்ளது’ என்பது உண்மையின் ஒரு பகுதி மட்டுமே. முழு உண்மை என்ன? 

துருக்கியின் தலைநகரம் அங்காராவில் கடந்த மாதம் நடைபெற்ற தாக்குதலில், 102 பேர் கொல்லப்பட்டார்கள். ரஷ்ய விமானம் எகிப்தில் தகர்க்கப்பட்டபோது, 224 பேர் இறந்துபோனார்கள்; பெய்ரூத்தில் 43 பேர்; அதற்கு மறுநாள் பிரான்ஸ் குலுங்கியபோது 129 பேர் கொல்லப்பட்டனர். இவை அனைத்தும் ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பால் நிகழ்த்தப்பட்டவை. நாம் புரிந்துகொள்ளவேண்டிய முதல் விஷயம், பிரான்ஸ் தாக்குதல் என்பது தனியொரு சம்பவம் அல்ல; நடைபெற்றுவரும் நீண்ட போரின் ஒரு பகுதி. இரண்டாவதாக... ஐ.எஸ்.ஐ.எஸ்., பிரான்ஸ் மீது போர் தொடுக்கவில்லை. அது உலகத்தின் மீது தனது ஜிகாத் போரைப் பிரகடனம் செய்திருக்கிறது.

சிரியாவில் சமநிலை குலைந்து கலகமும் குழப்பமும் ஏற்பட்டதுதான் அனைத்துக்கும் காரணம். ஆஃப்கானிஸ்தானை ஓரம்கட்டிவிட்டு, உலகின் நம்பர் 1 அகதி உற்பத்தித் தொழிற்சாலையாக மாறியிருக்கிறது சிரியா. இந்தப் போர், சிரியாவை எப்படி எல்லாம் மேலும் சீரழிக்கப்போகிறது என்பது அடுத்தடுத்து நமக்குத் தெரியப்போகிறது. ஆனால், பிரான்ஸை எப்படி இந்தப் போர் சீரழித்துக்கொண்டிருக்கிறது என்பது இப்போதே புலப்படத் தொடங்கி விட்டது. சட்டங்களைத் திருத்தியமைக்கும் பணியில் தற்சமயம் தீவிரமாக இறங்கியுள்ளது பிரான்ஸ். 'அவசரநிலைப் பிரகடனம் செய்யப்பட்டால், அது 12 நாட்களுக்கு மட்டுமே அமலில் இருக்கும்’ எனும் விதியை மாற்றி மூன்று மாதங்கள் வரை நீட்டிக்க விரும்புகிறார் பிரான்ஸின் அதிபர் ஹாலண்டே. மக்களுக்கு ஜனநாயக உரிமைகள் அதிகம் அளிக்கப்பட்டிருப்பது ஆபத்தானது என்பதால், அரசியலமைப்புச் சட்டத்தைத் திருத்தி அந்த உரிமைகளைச் சுருக்கவும் குறைக்கவும் ஹாலண்டே முயன்றுவருகிறார்.

இது அல்கொய்தா 2.0 - பயங்கரவாதத்தின் நிஜ முகம்!

உதாரணத்துக்கு 'இரட்டை குடியுரிமைகள் கொண்டிருப்பவர்கள் இனி பிரான்ஸின் குடிமக்கள் அல்ல’ என அறிவிக்க விரும்புகிறது ஹாலண்டே அரசு. இதன் மூலம் அகதிகளைச் சட்டப்படி உரிமைகள் அற்றவர்களாக ஆக்க முடியும். அடுத்து, விசாரணை எதுவும் இல்லாமல் எவரையும்

இது அல்கொய்தா 2.0 - பயங்கரவாதத்தின் நிஜ முகம்!

சிறையில் அடைப்பதற்கான அதிகாரத்தைப் பெற விரும்புகிறார். பிறகு, மேலதிக ராணுவப் பலத்தைக் கூட்டி, எல்லைக் கட்டுப்பாடுகளை அதிகரித்து, கண்காணிப்பு கேமராக்களை அதிகப்படுத்தி, மக்கள் நடமாட்டத்தை ஆராய்ந்து, உளவு நிறுவனங்களின் பணிகளை அதிகப்படுத்தி ஒரு போலீஸ் நாட்டின் சாயலை பிரான்ஸுக்கு வழங்க அவர் தயாராகிவிட்டார்.

எகிப்தில் வீழ்த்தப்பட்ட விமானத்துக்கு ஐ.எஸ்.ஐ.எஸ்-தான் காரணம் என்பது நிரூபணமாகி விட்ட நிலையில், ரஷ்யாவும் சிரியா மீதான தனது போரைத் தீவிரப்படுத்தியுள்ளது. இதைத் தொடர்ந்து, உக்ரைன் விவகாரத்தில் சில மாதங்களுக்கு முன்பு வரை 'வில்லன் நம்பர் 1’ ஆக இருந்த புடின், இப்போது கதாநாயகனாக மாறியிருக்கிறார். 'கிரீமியாவை ரஷ்யா பலவந்தமாக தன் நாட்டுடன் இணைத்துக்கொண்டுவிட்டது’ என பெருத்த குரலில் அமெரிக்காவும் பல உலக நாடுகளும் சில மாதங்களுக்கு முன்னர்தான் குற்றம்சாட்டின. இப்போது அவர்கள் அனைவரும் ஒரே குரலில் ரஷ்யாவின் போரையும் புடினையும் ஆதரிக்கிறார்கள்.

பிரான்ஸ், ரஷ்யா இரு நாடுகளுடனும் அணி சேர்ந்து, சிரியா மீதான தாக்குதலைத் தீவிரப்படுத்தியுள்ளது அமெரிக்கா. உலகின் பலம் பொருந்திய மூன்று நாடுகளான அமெரிக்கா, ரஷ்யா, பிரான்ஸ் மூன்றும் இணைந்து உலகின் மிகப் பலவீனமான ஒரு நாட்டின் மீது கூட்டுப் போரைத் தொடங்கியுள்ளன. இப்படி போட்டி போட்டுக்கொண்டு அவர்களால் தாக்கப்பட்டுக்கொண்டிருக்கும் சிரியா இப்போது எந்த நிலையில் இருக்கிறது?

சமீபத்திய புள்ளிவிவரங்களின்படி கடந்த நான்கரை ஆண்டுகளில் 2.20 லட்சம் சிரியா மக்கள் உள்நாட்டுப் போரால் கொல்லப்பட்டிருக்கிறார்கள். வீட்டைவிட்டு இறங்கி, பக்கத்து கடைக்குச் சென்று ரொட்டி வாங்கி வருவது என்பது சிரிய மக்களைப் பொறுத்தவரை ஓர் ஆபத்தான பயணம். தலைநகர் டமாஸ்கஸில் தொடங்கி அலெப்போ, ரக்கா, தீர் எஸ்ஸோர், ஹோம்ஸ் என நாடு முழுவதிலும் நொறுங்கிய கட்டடங்களும் அப்புறப்படுத்தப்படாத சடலங்களும் இறைந்துகிடக்கின்றன. பள்ளிகள், மசூதிகள், கடைவீதிகள், சந்தைகள் எதுவொன்றும் குண்டுவீச்சுக்குத் தப்பவில்லை. நீண்டகாலமாக ஆட்சியில் இருக்கும் பஷார் அல் ஆசாத் அரசு சிறிது சிறிதாகத் தன் நிலப்பரப்பை

ஐ.எஸ்.ஐ.எஸ் வசம் இழந்துவருகிறது. பல பகுதிகளில் ஏற்கெனவே ஐ.எஸ்.ஐ.எஸ் ஓர் இணை அரசாங்கத்தை நடத்திவருவது குறிப்பிடத்தக்கது. சிரியா மக்கள் முத்தரப்பு அபாயத்தில் சிக்கியிருக்கிறார்கள். ஒரு பக்கம் ஆசாத் அரசாங்கம் மக்களைப் புறக்கணிக்கிறது, அவர்கள் மீது போரும் தொடுக்கிறது. 'எங்களுடன் இணையுங்கள்’ என மற்றொரு பக்கம் ஐ.எஸ்.ஐ.எஸ் மிரட்டலுடன்கூடிய தாக்குதலைத் தொடுக்கிறது. இன்னொரு பக்கம் அமெரிக்கா, ரஷ்யா பிரான்ஸ் மூன்று நாடுகளும் மாறி மாறி குண்டுகளைப் பொழிந்துகொண்டிருக்கின்றன. மொத்தத்தில் மரணம் உறுதி. யாரிடம் இருந்து என்பதில்தான் குழப்பம்.

'என் சிரியா சகோதரர்களைக் கொன்றதற்குப் பழி தீர்க்கவே நாங்கள் வந்திருக்கிறோம்’ பாரிஸ் தாக்குதலில் ஈடுபட்ட ஒரு பயங்கரவாதி இப்படிக் கத்தியதாக சிலர் சொல்லியிருக்கிறார்கள். ஆனால், உண்மையில் ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பின் நோக்கம் பழிவாங்குவது அல்ல. மனிதாபிமானமற்ற, காட்டுமிராண்டித்தனமான வழிமுறைகளைப் பயன்படுத்தி தாக்குதல்கள் தொடுத்துவரும் அவர்கள், உண்மையில் உலக அரசியலின் அசைவுகளை உன்னிப்பாகக் கவனித்துப் புரிந்துவைத்திருப்பவர்கள். ஒரு செயலைச் செய்தால் உலகம் அதை எப்படிப் பார்க்கும், எப்படி எதிர்வினையாற்றும் என்பதைக் கணக்குப்போட்டு வைத்திருப்பவர்கள். ஐ.எஸ்.ஐ.எஸுக்கு மட்டும் அல்ல, அல்கொய்தா தொடங்கி பல பயங்கரவாத அமைப்புகளுக்கு இந்த அபார ஆற்றல் இருக்கிறது.

இது அல்கொய்தா 2.0 - பயங்கரவாதத்தின் நிஜ முகம்!

ஓர் உதாரணம்... பெரும் அழிவை ஏற்படுத்துவதுதான் ஒசாமா பின் லேடனின் திட்டம். தனியாக அதை நிகழ்த்திக்காட்டுவதற்கான பண பலமோ, ஆள் பலமோ தன்னிடம் இல்லை என்பதை உணர்ந்த பின் லேடன், அந்தப் பணியை உலகின் நம்பர் 1 பலம் வாய்ந்த நாட்டிடம் ஒப்படைக்க முடிவுசெய்தார். ஒரே ஒரு 'செப்டம்பர்-11’ நிகழ்வு மூலம் சமகால வரலாற்றின் மிகப் பெரிய அவுட்சோர்ஸிங் பணி அமெரிக்காவிடம் ஒப்படைக்கப்பட்டது. ஈராக், ஆஃப்கானிஸ்தான் எனத் தொடங்கி ஒரு மாபெரும் பேரழிவை அமெரிக்கா உலகுக்குப் பரிசளித்தது. அல்கொய்தாவால் நிச்சயம் இவ்வளவு பரவலான ஒரு சேதத்தை ஏற்படுத்தியிருக்க முடியாது.

ஐ.எஸ்.ஐ.எஸ்., அல்கொய்தாவின் தோழமை அமைப்பு அல்ல என்றபோதும், ஒசாமா பின் லேடனின் வழிமுறையைப் பின்பற்றியே பாரிஸ் தாக்குதலை அவர்கள் மேற்கொண்டிருக்கிறார்கள். அதேசமயம் அல்கொய்தாவைக் காட்டிலும் மிகுந்த சாதுர்யத்துடன், எட்டே பேரைப் பயன்படுத்தி உலகம் தழுவிய அளவில் பீதியையும் குழப்பத்தையும் கலகத்தையும் ஏற்படுத்திவிட்டார்கள்.

இதை பிரான்ஸ் மீதான தாக்குதலாக மட்டும் சுருக்கிப் புரிந்துகொள்வது பிழை. இது ஒரு வெற்றிகரமான சீண்டல். பிரான்ஸின் மீது வீசப்பட்ட ஒரு தூண்டில். பிரான்ஸ் முனைப்புடன் பாய்ந்து வந்து அந்தத் தூண்டிலைப் பிடித்துக்கொண்டுவிட்டது. அதேபோல் எகிப்தில் வீசப்பட்ட தூண்டிலையும் ரஷ்யா பற்றிக்கொண்டுவிட்டது. அமெரிக்காவைத் தூண்டிவிடுவதற்கு இனியும் தூண்டில்கள் தேவைப்படாது.

இது அல்கொய்தா 2.0 - பயங்கரவாதத்தின் நிஜ முகம்!

ஒசாமா உயிருடன் இல்லை; புஷ் அதிகாரத்தில் இல்லை என்றபோதும் அவர்களுக்குப் பிறகு வந்தவர்கள் இந்தப் போர் பாரம்பர்யத்தைக் காத்துத் தொடர்ந்துகொண்டிருக்கிறார்கள். அந்த வகையில், ஐ.எஸ்.ஐ.எஸ் என்பது 'அல்கொய்தா 2.0’ என்பதைத் தவிர வேறு இல்லை. ஹாலண்டே, புடின், ஒபாமா மூவரையும் 'ஜார்ஜ் புஷ் 2.0’ என்னும் பொதுப் பெயரிலும் அழைக்க முடியும்.

பிரிட்டன், பிரான்ஸ், சவுதி அரேபியா தொடங்கி பல நாடுகளுடன் அவ்வப்போது கூட்டுச் சேர்ந்து மத்திய கிழக்குப் பிரதேசத்தைக் கிட்டத்தட்ட தகர்த்து முடித்துவிட்டது அமெரிக்கா. ஆஃப்கானிஸ்தான், ஈராக், லிபியா, சிரியா, ஏமன் என்னும் ஐந்து நாடுகள் முழுமையாக உருக்குலைத்துவிட்டன. இதன் விளைவாக மத்திய கிழக்கு மட்டும் அல்லாமல் ஆசியா, ஆப்பிரிக்கா, அமெரிக்கா, ஐரோப்பா என சர்வதேச அளவில் பயங்கரவாதமும், அதற்கு எதிரான போரும் பரவிக்கொண்டிருக்கின்றன. இந்த இரண்டும் போட்டி போட்டுக்கொண்டு பெரும் சேதத்தை ஏற்படுத்திக்கொண்டிருக்கின்றன. இந்தப் போரில் யார் வெற்றிபெறுவார்கள் என்பதைச் சொல்ல முடியவில்லை. ஆனால், யார் தோற்றுக்கொண்டிருக்கிறார்கள் என்பதைச் சட்டெனச் சொல்லிவிடலாம்... அவர்கள் 'மக்கள்’!