மற்ற எபிசோடுகள்
Published:Updated:

நம்பர் 1 - லஷ்மி அகர்வால் - 35

நம்பர் 1
பிரீமியம் ஸ்டோரி
News
நம்பர் 1 ( முகில் )

முகில்

நம்பர் 1 - லஷ்மி அகர்வால் - 35

''ப்ளீஸ்... கண்ணாடி குடுங்க.'' 

''இல்ல... வேணாம் லஷ்மி.''

''ஒரே ஒருதடவை முகம்

பார்த்துக்கிறேம்மா.''

     ''சொன்னா கேளு... வேணாம்மா.''

அந்தச் சம்பவத்துக்குப் பிறகு, லஷ்மி தன் முகத்தை  கண்ணாடியில் பார்த்து 10 வாரங்கள் ஆகியிருந்தன. மருத்துவமனையில் எங்கும் அவள் கண்ணாடி பார்த்துவிடாதவாறு கவனித்துக்கொண்டார்கள். பாவம், தாங்க மாட்டாள். முதல்கட்ட சிகிச்சை முடிந்து, வீட்டுக்குத் திரும்பியதும் அவள் கண்ணாடியைத்தான் தேடினாள், கிடைக்கவில்லை. அவளது பழைய புகைப்படங்களைக்கூட கழற்றி, மறைத்துவைத்துவிட்டார்கள். இருந்தாலும் எப்படியோ அவள் கையில் ஒரு கண்ணாடி கிடைத்தது. அவசர அவசரமாக அவள் தன் முகத்தை கண்ணாடியில் பார்த்த அந்த நொடியில்...

லஷ்மி அகர்வால். பிறந்ததில் இருந்தே சோதனைகளோடு வாழப் பழகியவள். 1990-ம் ஆண்டு டெல்லியில் பிறந்தபோது, அவளது பெற்றோருக்கு, தங்குவதற்கு ஒரு வீடுகூட கிடையாது. கனமழை கொட்டித்தீர்க்க, அவளது பெற்றோர் பிறந்த நான்கு நாளே ஆன பிஞ்சுடன் அருகில் ஒரு பேருந்து நிலைய பிளாட்பாரத்தில் தஞ்சம் புகுந்தனர். அம்மா ராதா, குழந்தையை நெஞ்சோடு அணைத்துக் கொண்டார். தன் மனைவியும் குழந்தையும் நனையாதவாறு தானே குடையாக மாறி நின்றார் முன்னா லால். சமையல்காரரான அவர், தன் பேரழகு மகளுக்கு 'லஷ்மி’ என ஆசையுடன் பெயரிட்டார். அவளுக்குப் பிறகு மகன் ராகுல் பிறந்தான். அவர்களின் வாழ்க்கையில் வாய்க்கும் வயிற்றுக்கும் இடையே வறுமை விளையாடியது.

நம்பர் 1 - லஷ்மி அகர்வால் - 35

லஷ்மிக்கு, சிறுவயது முதலே தேவதைக் கதைகளில் ஆர்வம். அதுவும் சிண்ட்ரெல்லா, அவளது பிரியத்துக்கு உரியவள். தன்னை ஒரு சிண்ட்ரெல்லாவாகவே அவள் கருதினாள், கந்தல் உடை அணிந்த ஏழை சிண்ட்ரெல்லா. லஷ்மிக்கு இந்திப் படங்கள் என்றால், உயிர். டி.வி-யில் சினிமா பாடல்கள் வரும்போது அதைப் பாடியபடி ஆடுவது பொழுதுபோக்கு. பருவக் கனவுகளுடன் வளர்ந்த லஷ்மி, டி.வி ரியாலிட்டி ஷோக்களில் கலந்துகொண்டு பாடினாள்; ஆடினாள்; பேசினாள்; தன் திறமைகளை வெளிப்படுத்தினாள்.

2005-ம் ஆண்டு. 15 வயது லஷ்மியின் மொபைலுக்கு ஒரு மெசேஜ் வந்தது (ஏப்ரல் 18) 'ஐ லவ் யூ’. அனுப்பியவன் பெயர் குட்டு என்கிற நஹிம் கான். 32 வயது ஆள். லஷ்மிக்கு ஒரு தோழி இருந்தாள். அந்தத் தோழிக்கு ஒரு காதலன் இருந்தான். அந்தக் காதலனின் சகோதரனே குட்டு. லட்சணமான லஷ்மி மீது அவனுக்கு ஒருதலைக் காதல். பல மாதங்களாக லஷ்மியைச் சுற்றிச் சுற்றி வந்து இம்சை செய்தான். அடுத்ததாக மொபைலில் காதல் தூது. 'உடனே பதில் சொல்’ என மறுநாளும் மெசேஜ் வந்தது. அவனைக் கண்டாலே, லஷ்மிக்குப் பிடிக்காது. அவனது தொல்லைகளில் இருந்து தப்பிப்பது எப்படி? தவித்தாள். ஆனால், எந்தப் பதிலும் அனுப்பவில்லை.

மூன்று நாட்கள் கழித்து, டெல்லியின் கான் மார்க்கெட் பகுதியில் லஷ்மி பஸ் ஸ்டாப்பில் நின்றுகொண்டிருந்தாள். பகல் பொழுது. கூட்டம் நிறைந்த பகுதி. நஹிம் அங்கே ராக்கி என்கிற பெண்ணுடன் வந்தான். லஷ்மி பயந்து நடுங்கினாள். வந்தவன் லஷ்மியை நெருங்கி அவளைத் தள்ளிவிட்டான். தான் மறைத்து வைத்திருந்த ஒரு பாட்டிலை எடுத்தான். அதைத் திறந்து, கீழேகிடந்த லஷ்மியின் முகம், கழுத்துப் பகுதியில் ஊற்றினான். ஆசிட்!

முதலில் ஏதோ தண்ணீர் தெளித்ததுபோல் உணர்ந்த லஷ்மி, அடுத்தடுத்த நொடிகளில் எரிச்சலை உணர்ந்தாள். மகா எரிச்சல்... பெரும் வலி. கைகளால் தடவினால், தோல் கையோடு உரிந்துகொண்டு வந்தது. உடல் எங்கும் நெருப்பின் தகிப்பு. கைகளால் கண்களை மூடிக்கொண்டு அலறித் துடித்தாள் லஷ்மி. யாரும் ஓடிவந்து தூக்கவில்லை. உதவி கேட்டுக் கதறிய சக மனுஷியைக் கண்டு பதறி, விலகி ஓடி வேடிக்கை பார்த்தனர். மேல் தோலும் உட்புறத் தோலும் சதையும் கருகும் வாடை. லஷ்மியின் காது மடல்கள் உருகிக் கரைந்தன. முகமும் உடலில் பல பகுதிகளும் கருகிப்போயின. உச்சமான எரிச்சல், வலி. துடித்த லஷ்மியை வேடிக்கை பார்த்தபடி வேகமாகக் கடந்துபோனது ஒவ்வொரு வாகனமும்.

ஓர் அரசியல்வாதியின் கார் வந்து நின்றது. மனிதாபிமானம் உள்ள அதன் ஓட்டுநர், காரில் இருந்து இறங்கி லஷ்மியைத் தூக்கிப் போட்டுக்கொண்டு மருத்துவமனைக்கு விரைந்தார். சம்பவ இடத்திலேயே யாராவது முதல் உதவி செய்திருந்தால் அல்லது மருத்துவமனைக்கு இன்னும் முன்னதாகவே கொண்டுவந்திருந்தால் பாதிப்பு குறைவாக இருந்திருக்கும் எனப் பரிதாப 'உச்’ கொட்டினர் மருத்துவர்கள். சிகிச்சைகளும் அறுவைசிகிச்சைகளும் வாரக்கணக்கில் தொடர்ந்தன. கைகளால் முகத்தை மூடிக்கொண்டதால் கண் பார்வை தப்பித்தது. ஆனால் முழு முகம், கழுத்துப் பகுதி, வலது கை, நெஞ்சுப் பகுதி ஆகியவை பெருமளவில் வெந்துபோயிருந்தன. 10 வார சிகிச்சைக்குப் பிறகு, சிதைந்த முகத்துடன் வீடு திரும்பினாள் லஷ்மி.

நம்பர் 1 - லஷ்மி அகர்வால் - 35

அப்போதுதான் அவள் கையில் கண்ணாடி சிக்கியது. எடுத்துப் பார்த்த நொடியில்... வெடித்து அழுதாள். தன் பழைய அழகு முகம் நினைவில் நிழலாடியது. அவளது விகார முகத்தைப் பார்க்க அவளுக்கே அச்சம். எனில், என்னைப் பார்க்கும் ஒவ்வொருவரும் பயந்து விலகத்தானே செய்வார்கள்! என் வருங்காலம், என்னை யார் திருமணம் செய்துகொள்வார்கள், என் வாழ்க்கையே முடிந்துபோய்விட்டதா? இதற்கு அவன் என்னைக் குத்திக் கொன்றிருக்கலாமே! பேசாமல், தற்கொலை செய்துகொள்ளலாமா?

விகாரம், விரக்தி, வேதனை... எல்லாம் லஷ்மியைக் குத்திக் கிழித்தன. வீட்டுக்குள்ளேயே முடங்கினாள். வெளியில் செல்லும்போது பர்தாவுக்குள் புதைந்துகொண்டாள். இந்த உலகத்தைப் பார்க்கவே வெறுப்பாக இருந்தது... குறிப்பாக ஆண்களை. ஆம், இந்த ஆண்கள் அனைவருமே கெட்டவர்கள்; ஈவுஇரக்கம் இல்லாதவர்கள். ஆனால், என் அப்பா அப்படி இல்லையே. பாவம், என் சிகிச்சைக்காக எவ்வளவு கஷ்டப்படுகிறார்.

எதையும் வெளியில் காட்டாமல் மகளைத் தேற்றினார் முன்னா லால். தந்தை கொடுத்த தைரியத்தால் கொஞ்சம் கொஞ்சமாக மீண்டார் லஷ்மி. மனதில் ஓர் எண்ணம் வலுப்பெற்றது. 'நான் மட்டும் அல்ல. என்னைப்போல ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்டவர்கள் எத்தனையோ பேர் இருக்கிறார்கள். அவர்களுக்காக நான் குரல்கொடுக்க வேண்டும். இனி, இந்தக் கொடுமைகள் யாருக்கும் நிகழாதவாறு தடுத்து நிறுத்த வேண்டும்.’ 2006-ம் ஆண்டில் அபர்ணா பட் என்கிற வக்கீலின் துணையுடன் லஷ்மி, ரூபா என்கிற (ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்ட இன்னொரு) பெண்ணுடன் இணைந்து, உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்றைத் தொடுத்தார்.

வழக்கின் சாராம்சம் இதுவே... 'வெளியில் யார் வேண்டுமானாலும் எளிதாக ஆசிட் வாங்கிவிட முடியும். விலையும் மிகக் குறைவு. ஆனால், ஆசிட் வீச்சால் பாதிக்கப்படும் நபர்கள் அனுபவிக்கும் சித்ரவதை என்பது வாழ்நாளுக்கானது. எனவே, யாரும் எளிதாக ஆசிட் வாங்கிக்கொள்ளலாம் என்ற நிலையை அரசு தடைசெய்ய வேண்டும். ஆசிட் விற்பனையை கடும் கட்டுப்பாடுகளுடன் முறைப்படுத்த வேண்டும். ஆசிட் வீச்சு குற்றத்தை கடும் குற்றமாகக் கருதி தண்டனையை அதிகப்படுத்தும் சட்டத்திருத்தம் மேற்கொள்ளப்பட வேண்டும். இந்தியாவில் ஆசிட் வீச்சால் பாதிக்கப்படும் நபர்களுக்கு உரிய சிகிச்சைகள், நிவாரணத்தொகை, வேலைவாய்ப்பு உள்ளிட்ட பிற உதவிகள் கிடைக்கும்விதத்தில் நெறிமுறைகளை வகுக்க வேண்டும்.’

இந்த வழக்கு ஒருபுறம் நீள, அடுத்தடுத்த ஆண்டுகளில் லஷ்மிக்கு மீண்டும் மீண்டும் அறுவைசிகிச்சைகள் நடத்தப்பட்டன. இடுப்பு, தொடை போன்ற பகுதிகளில் இருந்து தோலை எடுத்து முகம் மற்றும் பிற பகுதிகளை ஓரளவுக்குச் சீரமைத்தார்கள். வலியும் வேதனையும் மிகுந்த சிகிச்சைகள். எல்லாவற்றையும் மனவலிமையுடன் தாங்கிக்கொண்டு... ஒருவழியாக மீண்டுவந்தார்.

இடைப்பட்ட காலத்தில் தையல் கலை, அழகுக் கலை, கம்ப்யூட்டர் கோர்ஸ் என தன்னால் இயன்றதைக் கற்றுக்கொண்டார். வேலை தேடியபோது, யாரும் பக்கத்தில் சேர்த்துக்கொள்ளவில்லை. பள்ளி ஒன்றில் வேலை கேட்டுச் சென்றபோது, 'பிள்ளைங்க பயப்படுவாங்க.

நீ போயிரு!’ என விரட்டிவிட்டார்கள். ஆனால், இனி எதை வேண்டுமானாலும் எதிர்கொள்ளத் தயார் எனும் அளவுக்கு லஷ்மியின் மனம் பலம் அடைந்திருந்தது; பக்குவப்பட்டிருந்தது. நான் ஏன் என் முகத்தை மறைத்துக்கொண்டு வாழ வேண்டும்? இந்த முகமே இனி என் அடையாளம். இதுதான் என் போராட்டத்தை வலிமையாக்கும் ஒரே அடையாளம்.

இருந்தாலும் விதி அந்தக் குடும்பத்தை விடுவதாக இல்லை. லஷ்மியின் தம்பி ராகுல், காசநோயால் பாதிக்கப்பட்டான். மகளுக்கும் மகனுக்கும் மருத்துவச் செலவுகளுக்காகவே ஓடி ஓடி உழைத்த முன்னாலால், தளர்ந்துபோனார். 2012-ம் ஆண்டு 45 வயது முன்னா லால் மாரடைப்பால் இறந்துபோனார். குடும்பத்தின் ஒரே நம்பிக்கையான தந்தையின் இழப்பு, லஷ்மியை முடக்கிப்போட்டது. ஆதரவற்றுத் தத்தளித்த லஷ்மியை, 'நான் இருக்கிறேன். கவலைப்படாதே’ என தோள்கொடுத்துத் தேற்றியது ஓர் உறவு.

அலோக் தீட்ஷித். கான்பூரில் பிறந்தவர். இந்தியன் ஏர்ஃபோர்ஸில் சில காலம், பத்திரிகையாளராகப் பணிபுரிந்தவர். பின்னர் சமூக ஆர்வலராகச் செயலாற்றத் தொடங்கினார். அதன் ஒரு பகுதியாக ‘Stop Acid Attacks’ என்ற இணையவழிப் போராட்டத்தைத் தொடங்கியிருந்தார். தந்தையை இழந்து லஷ்மி தவித்துக்கொண்டிருந்த நேரத்தில், அலோக் அறிமுகம் ஆனார். 'நானும் உங்களுடன் இணைந்து Stop Acid Attacks மூலமாகப் போராட விரும்புகிறேன்’ என்றார் லஷ்மி அழுத்தமாக. அந்தத் தைரியமும் போராட்டக் குணமும் அலோக்கைக் கவர்ந்தன. தன் தீவிரமான செயல்பாடுகள் மூலம் Stop Acid Attacks போராட்டங்களின் முகமாக மாறினார் லஷ்மி.

'ஆசிட் வீச்சால் பாதிக்கப்படுபவர்களுக்கு அரசு உரிய நிவாரணம் வழங்கவும், ஆசிட் விற்பனையைத் தடைசெய்யவும், குற்றவாளிக்குக் கடும் தண்டனைகள் வழங்கவும் புதிய சட்டங்கள் கொண்டுவர வேண்டும்’ என Stop Acid Attacks அமைப்பினர் இணையத்தின் மூலம் 27 ஆயிரம் பேரிடம் கையெழுத்து வாங்கினர். மத்திய உள்துறை அமைச்சர் சுஷில்குமார் ஷிண்டேயின் காரை மறித்து அவரிடமே கையெழுத்துப் பெற்றார். டெல்லி மருத்துவ மாணவி பாலியல் பலாத்கார சம்பவத்தை அடுத்து, பெண்கள் பாதுகாப்புத் தொடர்பாக மக்களவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாவில் ஆசிட் வீச்சும் குற்றமாக அறிவிக்கப்பட்டது. 'ஆசிட் வீசுவோரை எதிர்த்து பெண்கள் தாக்குதல் நடத்தினால், அது தற்காப்பாகக் கருதப்படும். குற்றவாளிகளுக்கு, குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்படும்’ என்றும் அறிவிக்கப்பட்டது.

2006-ம் ஆண்டு லஷ்மி தொடுத்த பொதுநல வழக்கில் ஒருவழியாக தீர்ப்பு வந்தது.  'ஆசிட் விற்பனையை ஒழுங்குபடுத்த, அனைத்து மாநில அரசுகளின் தலைமைச் செயலாளர்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் நிர்வாகிகள், 2014-ம் ஆண்டு மார்ச் மாதம் 31-ம் தேதிக்குள் தகுந்த விதிமுறைகளை வகுக்க வேண்டும். புகைப்படத்துடன்கூடிய அரசு அடையாள அட்டை வைத்திருப்பவர்களுக்கு மட்டுமே ஆசிட்டை விற்க வேண்டும். 18 வயதுக்கு உட்பட்டோருக்கு எந்தக் காரணம்கொண்டும் ஆசிட் விற்கக் கூடாது. வழக்கு பதிவு செய்யும்போது, ஆசிட் வீசியவர் அதை எங்கு இருந்து வாங்கினார் என்பது பற்றியும் விசாரிக்க வேண்டும். ஆசிட் வீச்சுக் குற்றத்தில் ஈடுபட்ட நபரை, ஜாமீனில் வெளிவர இயலாத பிரிவில் கைதுசெய்ய வேண்டும். ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்டவர்களின் மறுவாழ்வுக்கு மாநில அரசு மூன்று லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும்.’

இந்த உத்தரவுகள், லஷ்மியின், அவரது சக போராளிகளின் இடைவிடாத போராட்டங்களுக்குக் கிடைத்த பலன்கள். ஆனால், மத்திய அரசும் மாநில அரசுகளும் இது குறித்து எந்த மேல் நடவடிக்கையும் எடுக்கவில்லை. உச்ச நீதிமன்றமே 2014-ம் ஆண்டு இறுதியில் கடிந்துகொள்ளும் அளவுக்குத்தான் அரசுகளின் செயல்பாடுகள் தொடர்ந்துவருகின்றன. அதை வலியுறுத்தித்தான், லஷ்மியும் அலோக்குடன் கைகோத்துப் போராடிவருகிறார். ஆம், கைகோத்து.

லஷ்மி மீது ஆசிட் வீசிய வழக்கில்... குட்டுவுக்கு 10 ஆண்டுகளும், குற்றத்துக்கு உடந்தையாக இருந்த ராக்கிக்கு ஏழு ஆண்டுகளும் சிறைத் தண்டனை வழங்கப்பட்டது. கைதான சில நாட்களிலேயே பெயிலில் வெளியே வந்த குட்டு, இன்னொரு பெண்ணைத் திருமணம் செய்துகொண்டு மீண்டும் உள்ளே சென்றான். ஆனால், தனக்கு நேர்ந்த கொடுமைக்குப் பிறகு, தான் மிகவும் விரும்பிக் கேட்கும் காதல் பாடல்களைக் கேட்பதைக்கூட விட்டிருந்தார் லஷ்மி. 'என்னை யார் காதலிக்கப்போகிறார்கள்? என் வாழ்க்கையில் திருமணமே கிடையாது’ என உறுதியான முடிவெடுத்திருந்தார். அலோக்கைச் சந்தித்த பின் அந்த எண்ணம் மாறியது.

'லஷ்மி அழகானவள். அவளது மனம் மிகவும் அழகானது. அதுதான் எனக்கு வேண்டும்’ என அலோக் அவரிடம் காதலைச் சொன்னார். 'என்னை, என் வலிகளை முழுமையாகப் புரிந்துகொண்டவர் அலோக். அவரைவிட சிறந்த வாழ்க்கைத் துணை எனக்குக் கிடைக்காது’ - காதலை ஏற்றுக்கொண்டார் லஷ்மி. ஆனால், அலோக்கின் வீட்டில்தான் கடும் எதிர்ப்பு. 'என் மகனுக்கு மிக அழகான மனைவி அமைய வேண்டும்’ என ஆசைப்பட்ட அலோக்கின் தாய், ஒருவழியாக லஷ்மியைச் சந்தித்துப் பேசிய பிறகு மனதார ஏற்றுக்கொண்டார்.

அலோக், தன் கழுத்தில் முறைப்படி தாலி கட்டுவார் என்றுதான் லஷ்மி எதிர்பார்த்தார். 'நாம் இறுதி வரை ஒன்றாக வாழ்வோம். திருமணம் எல்லாம் வேண்டாம்’ என உறுதியாகச் சொல்லிவிட்டார் அலோக். அதற்குப் பின்னால் உள்ள காரணமும் வலுவானதுதான். 'திருமணம் செய்துகொள்ள வற்புறுத்தித்தான் பெரும்பாலான ஆசிட் வீச்சு சம்பவங்கள் நடைபெறுகின்றன. திருமணத்தில் மணமகள் எவ்வளவு அழகாக இருக்கிறாள் என்றே எல்லோரும் பார்க்கிறார்கள். அப்படிப்பட்டவர்களால் எங்கள் உன்னத உறவைப் புரிந்துகொள்ளவே இயலாது.’

லஷ்மியின் தளராத முயற்சிகளால் Stop Acid Attacks அமைப்பின் செயல்பாடுகள் மேலும் தீவிரம் அடைந்திருக்கின்றன. தன்னைப்போல் ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு (ஆண்களுக்கும்) மருத்துவ உதவிக்கு ஏற்பாடு செய்வது, அவர்கள் மனம் தளராதவிதத்தில் கவுன்சலிங் கொடுப்பது, அவர்களுக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுப்பது என தொடர்ந்து செயலாற்றி வருகிறார் லஷ்மி.

'சத்யமேவ ஜெயதே’ நிகழ்ச்சியின் ஒரு எபிசோடில் அலோக்கும் லஷ்மியும் பங்குகொண்டு பேசியதன் மூலம், இந்தியா எங்கும் ஆசிட் வீச்சு சம்பவங்கள் குறித்த அதிர்வலைகள் எழுந்தன. தவிர, உலகம் எங்கும் ஆசிட் வீச்சு சம்பவங்கள் நடைபெற்றுக்கொண்டுதான் இருக்கின்றன. இந்தியாவில் காதலிக்கச் சொல்லி, திருமணம் செய்யச் சொல்லி வற்புறுத்தல், கணவன் - மனைவி தகராறு, குடும்பச் சண்டை, வழிப்பறி போன்ற பல்வேறு சூழல்களில் 2014-ம் ஆண்டு மட்டும் 309 ஆசிட் வீச்சு குற்றங்கள் பதிவாகியுள்ளன. பதிவுசெய்யப்படாத குற்றங்களின் எண்ணிக்கை தனிக் கணக்கு. இது முந்தைய ஆண்டுகளில் பதிவான எண்ணிக்கையைவிட மிக அதிகம்.

இப்படிப்பட்ட சூழலில்தான் அலோக் - லஷ்மி குழுவினரின் போராட்டங்கள் தொடர்கின்றன. 'உச்ச நீதிமன்றம் மூன்று லட்ச ரூபாய் நிவாரணம் வழங்கச் சொல்லியிருப்பதை வரவேற்கிறோம். ஆனால், எங்களில் பலருக்கு 30 முதல் 40 அறுவைசிகிச்சைகள் தேவைப்படுகிறதே! அதற்கான செலவுக்கு எங்கே போவோம்? சமூகம், எங்களை வெறுத்து ஒதுக்குகிறது. வேலை கிடைப்பது இல்லை. ஆக, எங்களுக்கு அரசாங்க வேலை கிடைக்க வழிவகை செய்ய வேண்டும். இதை ஒவ்வொரு கட்சியும் தங்கள் தேர்தல் அறிக்கையில் சேர்க்க வேண்டும். கடும் தண்டனைகளால் குற்றவாளிகள் திருந்தப்போவது இல்லை. மாற்றம், அவர்கள் மனதில் உண்டாக வேண்டும்; இந்தச் சமுதாயத்தில் உண்டாக வேண்டும். வருங்காலத் தலைமுறை குரூர எண்ணங்களுடன் வளராமல், நல்ல ஒரு சமூகமாகத் தழைக்க வேண்டும் என்பதற்காகவே நாங்கள் எங்கள் முகத்தை முன்னிறுத்திப் போராடுகிறோம்.’

- லஷ்மியின் இந்தச் சமூக அக்கறையை அங்கீகரிக்கும்விதமாக NDTV, 2014-ம் ஆண்டு International ‘Unsung Hero of the Year’ விருதை வழங்கி கௌரவித்தது. சர்வதேச அங்கீகாரமாக International Women of Courage Award- ம் லஷ்மிக்கு வழங்கப்பட்டது. வாஷிங்டனில் நடந்த விழாவில் விருது வழங்கிய மிச்சேல் ஒபாமா, லஷ்மியை அன்புடன் ஆரத் தழுவிக்கொண்டார். அந்தச் சர்வதேச சபையில் லஷ்மி கவிதை ஒன்றை வாசித்து முடிக்க, அனைவரும் கண்கள் கலங்க எழுந்து நின்று கைதட்டினார்கள். அந்தக் கவிதை வரிகள் வீரியமானவை...

'நீ என் முகத்தில் அமிலத்தை ஊற்றவில்லை...

என் கனவுகளில் ஊற்றிவிட்டாய்.

நிச்சயம் உன் இதயத்தில் இருந்தது

காதல் அல்ல... அதுவும் அமிலமே!

உன்னால் என் முகத்தைத்தான்

சிதைக்க முடிந்தது...

மீண்டெழுந்த என் புன்னகையை அல்ல!’

என் குழந்தை அழுமோ?

நம்பர் 1 - லஷ்மி அகர்வால் - 35

2015-ம் ஆண்டு மார்ச் மாதம் ஒரு பெண் குழந்தைக்குத் தாய் ஆகியுள்ளார் லஷ்மி. கர்ப்ப காலத்தில் லஷ்மியின் மனதைப் பிசைந்த கேள்வி, 'என் முகத்தைப் பார்க்கும் என் குழந்தை, பயந்து வீறிட்டு அழுமோ?’ என்பதுதான். ஆனால், தன் மகள் தன்னைக் கண்டு, முதன்முதலில் சிரித்த கணத்தில் சிலிர்த்து அழுதார் லஷ்மி. குழந்தைக்கு அலோக்-லஷ்மி இட்டுள்ள பெயர் 'பிஹு.’

தொகுப்பாளர் லஷ்மி

நியூஸ் எக்ஸ் சேனலின் Udaan என்ற நிகழ்ச்சித் தொகுப்பாளர் ஆகியிருக்கிறார் லஷ்மி. சமூகத்தில் பலவிதங்களில் பாதிக்கப்பட்ட நபர்களை தொடர்ந்து பேட்டி எடுத்துவருகிறார். ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்ட ஒரு பெண், மற்றவர்களது சோகத்தை வெளிக்கொண்டுவந்து குரல் எழுப்பும் இந்தச் சமூக விழிப்புஉணர்வு நிகழ்ச்சி பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

நம்பர் 1 - லஷ்மி அகர்வால் - 35

சமீபத்தில் லஷ்மியும், ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்ட அவரது தோழிகளும், போட்டோகிராஃபர் ராகுலின் உதவியுடன் ஃபேஷன் போட்டோஷூட் ஒன்றை நடத்தினர். ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்ட ரூபா வடிவமைத்த உடைகள் அவை. அந்த போட்டோக்கள் இணையத்தில் வைரலாகப் பரவி பரபரப்பை ஏற்படுத்தின.