Published:Updated:

இந்தியாவின் மெஸ்ஸி!

சார்லஸ்

சுனில் செத்ரி... இந்தியாவின் லியோனல் மெஸ்ஸி. இந்தியக் கால்பந்து அணியின் கேப்டன் சுனில் செத்ரி, சர்வதேசக் கால்பந்து போட்டிகளில் இந்தியாவின் டாப் ஸ்கோரர். 31 வயதான செத்ரி, இதுவரை இந்தியாவுக்காக அடித்த கோல்கள் 50. தற்போது மும்பை அணிக்காக ஐ.எஸ்.எல் போட்டிகளில் விளையாடிவரும் செத்ரி இங்கேயும் டாப் ஸ்கோரர். 6 கோல்கள் அடித்து 2015 சீஸனில் முதல் இடத்தில் இருக்கிறார். மும்பை அணிக்காக விளையாட, மற்ற எந்த வீரருக்கும் கிடைக்காத அதிகபட்ச தொகையாக 1.20 கோடி ரூபாய்க்கு ஒப்பந்தமாகி பரபரப்பு கிளப்பியவர் செத்ரி.

நேபாளத்தைப் பூர்வீகமாகக்கொண்டது செத்ரியின் குடும்பம். இவரது பெற்றோர், ஹைதராபாத்தில் செட்டில் ஆனவர்கள். இளம் வயதில் செத்ரியின் அப்பா இந்திய ராணுவக் கால்பந்து அணியில் விளையாட, இவரது அம்மா நேபாள நாட்டின் தேசிய பெண்கள் அணிக்காக விளையாடினார். பெற்றோர் வழியில் ஃபுட்பால் ஃபீவர் செத்ரிக்கும் தொற்றிக்கொண்டது.

'' 'அப்பா, அம்மா இருவருமே கால்பந்து வீரர்கள். அதனால்தான் நான் கால்பந்து வீரன் ஆனேன்’ எனச் சொன்னால் அது பொய். கால்பந்து எனக்கு மிகவும் பிடித்த விளையாட்டாக மாற இரண்டாயிரம் காரணங்கள் இருக்கின்றன. அதில் முக்கியமானது 'கால்பந்துதான் உலகின் சிறந்த விளையாட்டு’ என்கிற நிஜம். ஓட்டப்பந்தயம், மாரத்தான் போன்ற தடகளப் போட்டிகளில் கலந்துகொள்ள ஸ்டாமினா அதிகம் இருக்க வேண்டும். செஸ் போன்ற விளையாட்டுகளுக்கு மூளை வேண்டும். ஆனால், கால்பந்து விளையாட எல்லாமே வேண்டும். அதனால்தான் ஐ லவ் ஃபுட்பால்'' -எனர்ஜி இன்ட்ரோ கொடுக்கிறார் செத்ரி.

இந்தியாவின் மெஸ்ஸி!

போர்ச்சுக்கல் நாட்டின் புகழ்பெற்ற 'ஸ்போர்ட்டிங் லிஸ்பான்’ அணிக்காக விளையாடத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரே இந்தியர் செத்ரிதான். 2007-ம் ஆண்டு இந்திய அணிக்குள் இடம்பிடித்த செத்ரி, இந்தியா 24 ஆண்டுகள் கழித்து ஆசியக் கோப்பை கால்பந்து போட்டிகளுக்குத் தகுதிபெறக் காரணமாக இருந்தவர். டஜிகிஸ்தான் அணிக்கு எதிராக செத்ரி அடித்த ஹாட்ரிக் கோல்கள் இந்தியாவை உச்சம் தொடவைத்தன.

இந்தியாவின் மெஸ்ஸி!

''என் தோல்வி பற்றி நான் யோசிக்கவே மாட்டேன். தொடர்ந்து 13 போட்டிகளில் விளையாடி, ஒரு போட்டியில்கூட கோல் அடிக்கவில்லை என்றாலும், நான் ரொம்ப கூலாகவே இருப்பேன். ரசிகர்கள் திட்டுகிறார்களே, மீடியா தவறாக எழுதுகிறதே என்றெல்லாம் யோசிக்க ஆரம்பித்தால், ஒரு ஸ்ட்ரைக்கரால் எந்தக் காலத்திலும் கோல் அடிக்க முடியாது. எப்போதுமே பாசிட்டிவ் எனர்ஜியோடு இருக்க வேண்டும். இதுதான் என் ஸ்டைல்'' என்கிறார் செத்ரி.

இந்தியாவின் மெஸ்ஸி!

ஆனால், செத்ரிக்கு மிகவும் பிடித்த பொழுதுபோக்கு, கிரிக்கெட் விளையாடுவது. பாலிவுட் சினிமா ரசிகரான செத்ரி, கொங்கனா சென்னின் பெரிய ஃபேன்.

இந்தியாவின் மெஸ்ஸி!

''பள்ளியில் படிக்கும்போது யாரைப் பார்த்தாலும் கலாய்த்து கமென்ட் அடிப்பது, வம்பிழுத்து சண்டைபோடுவது என மிகவும் மோசமான பையனாக இருந்தேன். என்னை மீட்டு, மேலே கொண்டுவந்தது கால்பந்துதான். விளையாட்டின் மீது ஆர்வம் செலுத்திவிட்டாலே போதும். ஒழுங்கு, கவனம், திறமை, டீம் ஸ்பிரிட் எல்லாமே வளரும்'' என்கிறார் செத்ரி!

தம்ஸ் அப் செத்ரி!