மற்ற எபிசோடுகள்
Published:Updated:

கலைடாஸ்கோப் - 17

எண்ணம் வண்ணம்: சந்தோஷ் நாராயணன்

கலைடாஸ்கோப் - 17

வன் தன் இடுப்பில் சுற்றியிருந்த பெல்ட்டின் இயந்திரப்  பட்டனைத் தொட்டுப் பார்த்துக்கொண்டான்.

தலைவரின் நேற்றைய உரை மூளைக்குள் எதிரொலித்தது. ‘கடவுளுக்காக, கடவுளின் பெயரால் இதைச் செய்வோம்’ என தலைவர் முடித்தது கூர்மையாக ஞாபகத்தில் இருந்தது.

செக்யூரிட்டிகளைக் கடந்து கூட்டத்துக்குள் ஊடுருவினான். இன்னும் சில நிமிடங்கள்தான். அழுத்தினால் எல்லாம் முடிந்துவிடும். தன்னைச் சுற்றி இருக்கும் நூற்றுக்கணக்கான மனிதர்கள் சிதறி விழுவார்கள். ‘கடவுளுக்காக, கடவுளின் பெயரால் இதைச் செய்வோம்.’

கண்களைச் சுழற்றி கூட்டத்தின் மீது பார்வையைப் படரவிட்டான். எல்லா உதடுகளிலும் புன்னகை. தன்னை யாரும் கவனிக்கவில்லை என்பதை உறுதிப்படுத்திக் கொண்டான். கூட்டத்தின் நடுவில் சென்று மனதுக்குள் சொல்லிக்கொண்டான்... ‘கடவுளுக்காக, கடவுளின் பெயரால் இதைச் செய்வோம்.’

அழுத்தினான்.

கண்ணைத் திறந்தபோது எங்கோ ஆகாயத்தில் எடையற்று மிதந்துகொண்டிருப்பதை உணர்ந்தான்.  ‘‘எனது பெயரால்தான் இதைச் செய்தாயா?” என்றது ஒரு குரல்.
‘‘யார்... யார் நீங்கள்?’’ என்றான்.

‘‘கடவுள். நீ கொன்று சிதறடித்த அந்தக் கூட்டத்திலேயே நானும் இருந்தேன். நீயும் பார்த்தாயா?” என்றது குரல்.

கலைடாஸ்கோப் - 17

‘‘நான் பார்க்கவில்லை, எங்கே... எங்கே இருந்தீர்கள்?’’ என அலறினான்.
‘‘உதடுகளில்’’ என்றது குரல்!

கலைடாஸ்கோப் - 17

கலைஞனுடைய வேலை, இருப்பதை அப்படியே காட்டுவது மட்டும் அல்ல... ‘மாற்று மெய்ம்மை’ என்றெல்லாம் சொல்லி உங்களைப் பீதியூட்ட நான் விரும்பவில்லை. எளிமையாகச் சொல்லவேண்டுமானால், சாதாரண பார்வைக்குத் தட்டுப்படாத வாழ்வின், உலகின் நுட்பமான இண்டுஇடுக்குகளைக்கூடக் காட்சிப்படுத்துவதும்கூடத்தான். அந்த வகையில் கலைஞன் நம் பார்வையைக்கூடத் தலைகீழாக மாற்றுகிறான். உலகையே ஒரு வேடிக்கைப்பொருளாகக்கூடக் காட்டுவான். அதற்கு உதாரணம்... அனிஷ் கபூரின் மாடர்ன் கண்ணாடிச் சிற்பங்கள்.
ஸ்டெயின்லெஸ் ஸ்டீல், கண்ணாடி போன்ற பிரதிபலிக்கும் பொருட்களை தனது கலைக்கு உபயோகிக்கிறார் அனிஷ். அதில் அவர் உருவங்கள் எதுவும் செய்வது இல்லை. அப்ஸ்ட்ராக்டான வடிவங்களைப் பிரமாண்டமான உருவில் காட்சிக்குவைக்கிறார். அதில் தெரியும் பார்வையாளர்களின் கோணலான, தலைகீழான பிரதிபலிப்புகள்தான் அவரது கலையை முழுமையாக்குகின்றன. ஒரு தலைகீழ் உலகை இதன் வழியாக உருவாக்குகிறார். மேலும் பிரமாண்டமான இன்ஸ்டாலேஷன் சிற்பங்களை, உலகம் எங்கும் பல பிரபலமான ஆர்ட்

கலைடாஸ்கோப் - 17

கேலரிகளில் நிறுவியும் இருக்கிறார்.

அனிஷ், மும்பையில் இந்திய அப்பாவுக்கும் யூத தாய்க்கும் பிறந்தவர்; பிறகு பிரிட்டனில் வளர்ந்தவர். இன்று உலகம் அறிந்த சிற்பக் கலைஞர். பிரிட்டனின் ‘டர்னர் விருது’ முதல் நமது ‘பத்மபூஷண்’ வரை பல விருதுகள் பெற்றவர். சமூக அக்கறை உள்ள ஒரு சுதந்திரக் கலைஞன். சமீபத்தில் ‘தி கார்டியன்’ பத்திரிகையில் இன்றைய இந்தியாவின் இந்துத்துவ அரசியலின் பிரச்னையைப் பற்றி இவர் எழுதிய கட்டுரை முக்கியமானது. மோடியின் பிரிட்டன் வருகையின்போது, அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் போராட்டத்தில் தான் கலந்துகொள்ளப்போவதாக எழுதியிருந்தார்.
‘கோணலான பார்வை தன் கலைகளில் இருக்கலாம். ஆனால், அரசியலில் இருக்கக் கூடாது’ என்பதை அவர் விரும்புகிறார் என்பது அந்தக் கட்டுரையில் தெரிகிறது. அது ஒரு சுதந்திரக் கலைஞனின் நேரான பார்வை!

கலைடாஸ்கோப் - 17

சிறுவயதில் ஊரில் மழை பெய்தால் கொண்டாட்டமாக இருக்கும். மழை ஓய்ந்தால் முற்றத்தில் தண்ணீர் ஓடைபோல வழிந்தோடும். அந்தத் தண்ணீரில்தான் குட்டி மாலுமிகளாக மாறி கப்பல்விடுவோம். நமக்குத் தெரிந்த முதல் எளிய ஓரிகாமி சிற்பம், இந்தக் காகிதக் கப்பல்தான். அண்ணன்களோ, மாமாக்களோ காகிதத்தை மடித்து நீட்டி அதைக் கப்பலாக மாற்றுவார்கள். அதில் குட்டி மாலுமிகளாக நாம் மாறி, ஓடும் மழைநீரில் கப்பல் விடுவோம். சேற்றில் செருப்பு இல்லாத கால்களுடன் ஓடியபடி கப்பலைக் கண்காணிப்போம்.

அன்று குழந்தைகள் கப்பல் செய்ய கற்றுக்கொள்ள சற்று நேரம் எடுக்கும். இன்றைய குழந்தைகள் சிக்கலான ஓரிகாமி சிற்பங்களைக்கூட சில நிமிடங்களில் செய்துவிடுகிறார்கள்... கப்பல் எம்மாத்திரம்? ஆனால், ‘மழைத்தண்ணீரில் விடுகிறார்களா?’, அந்தக் கேள்வி தரைதட்டி நிற்கிறது. காரணம் மழை என்பது கொண்டாட்டம் என்பதைத் தாண்டி, இன்று திண்டாட்டம் என்றாகிப்போனது அல்லவா? அதுவும் நகரத்தில் மழை பெய்தால் அரசாங்கமே தெருவில் ‘போட்' விடும் நிலைமையில் இருக்கும்போது, குழந்தைகள் ‘பேப்பர் போட்’ விடுவதை நினைத்து மட்டுமே பார்க்க முடியும்.

இதைப் பற்றி கடந்த முப்பத்தாறு வருடங்களாக நான் தினமும் பார்த்துக்கொண்டிருக்கும் ஒரு குழந்தையிடம் கருத்து கேட்டபோது ‘மழை பெய்தால் இனி தண்ணீர் தேங்கக் கூடாது. நீர் அதன் சொந்த இடமான ஏரி, குளம், குட்டை நோக்கிப்போக வழி செய்ய வேண்டும். அப்போதுதான் காகிதக் கப்பல்விட உற்சாகமாக இருக்கும். செய்வார்களா?’ என்றது தன் மழலை மொழியில்!

கலைடாஸ்கோப் - 17

உங்கள் கையில் இருக்கும் பென்சில் எவ்வளவு விலைமதிப்பானது தெரியுமா... ‘ஐந்து அல்லது பத்து ரூபாய்’ என்கிறீர்களா? இயற்கையின் ஒரு சிறிய விளையாட்டுதான் அதை உங்களுக்கு இவ்வளவு குறைந்த விலைக்குத் தருகிறது. இல்லை என்றால் அதன் மதிப்பு கோடிகளில் புரளும். ஏன் என்பதைக் கடைசியில் சொல்கிறேன். அதற்கு முன்னால் அந்தப் பென்சிலின் வரலாற்றைக் கொஞ்சம் முனை சீவிப் பார்க்கலாம்.

பென்சில்களைக் கண்டுபிடித்தவர் நிக்கோலஸ் ஜாக்கஸ் கான்ட் (Nicholas-Jacques Conte). ஆண்டு, 1795 என்கிறார்கள். இவர் நெப்போலியனின் ராணுவப் படை விஞ்ஞானி. பென்சிலில் உபயோகிக்கும் ‘கிராஃபைட்’க்கு அந்தச் சொல் வரக் காரணம் ‘கிராஃபைன்’ என்ற கிரேக்கச் சொல்தானாம். அதற்கு அர்த்தம் ‘எழுதுதல்’ (அல்லது வரைதல்). இன்றைய கணினியில் வரைவதை ‘கிராஃபிக் டிசைன்’ என்கிறோம். ஒரு சொல் எப்படி வரலாற்றில் பயணம் செய்கிறது பார்த்தீர்களா?

பென்சிலில் HB, 2B, 3B என்கிற குறிப்புகளைப் பார்த்திருப்பீர்கள்.  H என்பது Harder என்பதையும் B என்பது Black என்பதையும் குறிக்கிறது. பென்சிலில் கறுப்பு நிறத்தின் தன்மைக்கு ஏற்ப இப்படி வகைப்படுத்துகிறார்கள். உலகில் பெரும்பாலும் பென்சில்கள் மேற்பாகம் மஞ்சள் வண்ணத்தில் இருப்பதற்கான காரணமும் சுவராஸ்ய மானது. 1800-களில் சிறந்த கிராஃபைட்டுகள் சீனாவில்தான் கிடைக்குமாம். சீனாவின் மஞ்சள் வண்ணம் என்பது உயர் தரத்தையும் பெருமையையும் குறிப்பதாம். அதனால்தான் பென்சில் தயாரிப்பாளர்கள் தாங்கள் சீன கிராஃபைட்தான் உபயோக்கிக்கிறோம் என்பதைக் காட்ட, மஞ்சள் பென்சில்களை மார்க்கெட்டில் அறிமுகப்படுத்தினார்களாம்.

முதலில் சொன்ன கோடிகளின் மேட்டருக்கு வருவோம். ஆம், பென்சிலில் இருக்கும் கிராஃபைட் என்பது கார்பன் தனிமத்தின் சாஃப்ட் வெர்ஷன். அதில் கார்பன் அணுக்களின் சேர்க்கை அமைந்திருக்கும் விதம் கொஞ்சமே கொஞ்சம் மாறினால், அது மற்றொரு கெட்டியான சுத்த கார்பனாக மாறும். அதைத்தான் நாம் ‘வைரம்’ என்கிறோம்!

கலைடாஸ்கோப் - 17

‘உலகில் எந்தப் பாம்புக்கும் விஷம் இல்லை’ எனச் சொன்னால் நம்புவீர்களா? கேரளாவைச் சேர்ந்த வாவ சுரேஷ் நம்புகிறார். உலகிலேயே அதிகமாக பாம்புக்கடி வாங்கியவர்... 3,000 தடவைக்கு மேல்! அதில் 300, விஷப் பாம்புகள் எனச் சொல்லும் வகையறா கடித்தவை. ஆனால், ‘பாம்புகளுக்கு விஷம் இல்லை’ என ஒரு நேர்காணலில் சொன்னார் இந்தப் பாம்புகளின் காதலன்.

‘கோழிமுட்டையின் வெள்ளைக் கருவைக்கூட ஊசியின் மூலம் ரத்தத்தில் கலந்தால் மரணம் நிச்சயம். ஆனால், அதையே பச்சையாகவோ, ஆஃபாயில், ஆம்லேட் போட்டோ சாப்பிட்டால் எதுவும் ஆவது இல்லை. வெள்ளைக் கரு என்பது புரோட்டீன். பாம்புகளிடம் இருக்கிறது என நாம் சொல்லும் விஷமும் இந்த புரோட்டீன்தான். இந்த புரோட்டீன்தான் பாம்புகளுக்கு தங்கள் உணவைச் செரிமானம் செய்யப் பயன்படுகிறது. அதைத்தான் நாம் ‘விஷம்’ என்கிறோம். அந்த வார்த்தையே தவறு’ என்கிறார்.

கலைடாஸ்கோப் - 17

இது வரை 35,000 பாம்புகளுக்கு மேல் மீட்டு, காட்டில் விட்டிருக்கும் வாவ சுரேஷ், பாம்புகள் பற்றிய எந்தப் புத்தகமும் படிக்காத கட்டடத் தொழிலாளி. ஆனால், பாம்புகள் பற்றிய‌ ஆழமான அறிவையும் அவை மீதான அன்பையும் தன் அனுபவத்தால் அடைந்திருக்கிறார். ‘பாம்புகள் நமது உயிர்ச்சூழலின் முக்கியமான கண்ணி. அவற்றைக் காக்க வேண்டும்’ என்கிறார். சமீபத்தில் நான் பார்த்த சுவராஸ்யமான நேர்காணல் இவருடையதுதான்.