மற்ற எபிசோடுகள்
Published:Updated:

கலைடாஸ்கோப் - 18

எண்ணம்,வண்ணம்: சந்தோஷ் நாராயணன்

கலைடாஸ்கோப் - 18

பலி

ரிஷியின் முகம் விசித்திரமாக இருப்பதாக விமலுக்குத் தோன்றியது. 

``மச்சி பல வருஷத்துக்குப் பிறகு உன்னைப் பார்த்ததுல ரொம்ப சந்தோஷம்டா” என்றான் விமல். ரிஷி சினேகமாகப் புன்னகைத்தான். அவர்களுக்கும் பின்னால் சென்னையின் அந்த பிரமாண்ட ஷாப்பிங் மால் பரபரத்துக்கொண்டிருந்தது.

“எப்போ சென்னை வந்தே? பதினஞ்சு வருஷமாச்சு பாத்து...” என்றான் ரிஷி.

“நேத்துதான். சின்ன பிஸினஸ் மீட். அப்புறம், உன் வீடு எங்கே இருக்கு?”

``இங்கே பக்கத்துலதான். ஒரு லேக் வியூ அபார்ட்மென்ட். இன்ஸ்டால்மென்ட்ல வாங்கிட்டேன்.”

“லேக் வியூ அபார்ட்மென்ட்னு சொல்லி லேக்கையே வீடாக்கி வித்துடுறாங்களே மச்சி. மழை வரும்போது வாங்கினவங்க ரொம்பக் கஷ்டப்படுறாங்களே...”

சட்டென்று ரிஷியின் முகம் மாறியதைக் கவனித்தான்.

“சாரிடா, நீகூட குடும்பத்தோட சிரமப்பட்டேன்னு கேள்விப்பட்டேன்” என்றான் விமல்.

“ஓ.கே. இப்போ சம்மர்தான். நீ தைரியமா எங்க வீட்டுக்கு வரலாம்” என்று மறுபடி சிரித்தான் ரிஷி.

``கண்டிப்பாடா” என்று சொல்லி திரும்பும்போதுதான் அதைக் கவனித்தான்.

கலைடாஸ்கோப் - 18

ரிஷியின் காதுக்கும் கன்னத்துக்கும் நடுவில் அசைந்து கொண்டிருப்பது என்ன? அதை எங்கேயோ பார்த்திருக்கிறேனே... அடக்கடவுளே, அது… அது… மீன்களுக்கு இருப்பதைப் போன்ற செவுள் அல்லவா?

கலைடாஸ்கோப் - 18

குடை

நமது தமிழ் சினிமா கவிஞர்கள் ரொமான்ஸ் என்றாலே பல தடவை பாடல் வரிகளில் குடை பிடித்து விடுவார்கள். குடைக்கு அப்படி ஒரு ரொமான்டிக் தன்மை இருக்கிறது. நிறைய ஓவியங்களிலும் குடைகளைப் பார்த்திருக்கிறேன். நவீன இலக்கிய விமர்சகர்கள் சொல்வதுபோல சொன்னால், குடை என்பது குடை அல்ல, ஒரு குறியீடு. அரவணைப்பை, அன்பை, பாதுகாப்பைச் சொல்லும் குறியீடு. ஆனால், இப்போதெல்லாம் ரௌத்திரம் காட்டும் மழைக்கு எதிராகக் குடை பிடிப்பது என்பது, ரௌடியை அடிக்க லாலிபாப் எடுத்துக்கொண்டு போவதுபோல.

பள்ளிகளுக்கும் கல்லூரிகளுக்கும் மட்டும்தான் விடுமுறை கொடுப்பார்களா என்று சலித்தபடி, அலுவலகத்துக்கு டிமிக்கி கொடுத்து, வீட்டில் இருந்த ஒரு பெருமழை நாளில், இந்தக் குடையின் ஹிஸ்டரியை கொஞ்சம் விரித்துப் பார்க்கலாம் என்று இணையத்தைத் துழாவினேன்.

வழக்கம்போல `எகிப்தியர்கள்தான் முதலில் குடை பிடித்தவர்கள்’ என்கிறது இணையம். பிறகு சீனா 11-ம் நூற்றாண்டில் மேலும் சற்று மெருகேற்றிய குடைகளைத் தயாரித்ததாம். `பனை ஓலையை வட்டமாக அமைத்து, நடுவில் ஒரு குச்சியை வைத்து, குடைகளைச் செய்தார்கள்’ என்கிறார்கள். நமது மலையாள மாவேலி மன்னன் வைத்திருந்தது குடை போலத்தான். இன்றும் ஓணக் கொண்டாட்டங்களின் போது இந்தக் குடையை ஒரு சிம்பல்போல பயன்படுத்துவதை நீங்கள் பார்த்திருக்கலாம். எங்கள் ஊரில் சேப்பைக் கிழங்குச் செடியின் பெரிய இலைகளை குடைபோல பிடித்துக்கொண்டு போகும் பெரியவர்களை முன்பு பார்த்திருக்கிறேன்.

ஆனால், வரலாற்றில் குடை என்பது சாமானியர்களுக்கு என்பதைவிட பணக்காரர்களின் அடையாளமாகவும் இருந்திருக்கிறது. `ராஜ குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்கு குடை என்பது ஓர் அதிகாரத்தின் அடையாளம்போல’ என்று நினைக்கிறேன். `வெண்கொற்றக்குடை' என்றெல்லாம் கேட்டிருக்கிறோம். நம்மூர் தமிழ் சினிமாக்களில்கூட ஜமீன்தார்களுக்கு யாராவது குடை பிடித்துக்கொண்டு வருவதைப் பார்த்திருக்கிறோம்.

கம்பியைக் கட்டி, அதன் மேலே துணி விரித்த இன்றையக் குடைகளைக் கண்டுபிடித்தவர் சாமுவேல் ஃபாக்ஸ். ஆண்டு 1852. வருடத்துக்கு 3 கோடியே 30 லட்சம் குடைகள் அமெரிக்காவில் விற்பனை ஆவதாக ஒரு புள்ளிவிவரம் சொல்கிறது. ஜன்னலுக்கு வெளியே அடிக்கும் மழையைப் பார்த்தால், அமெரிக்க ரிக்கார்டை பிரேக் செய்துவிடுவோம்போல.

கலைடாஸ்கோப் - 18

திசைகளின் இடையே...

கூகுள் ஸ்ட்ரீட் வியூ (google street view) பார்த்திருப்பீர்கள். கூகிள் மேப்பின் அடுத்த பரிணாம வளர்ச்சி எனச் சொல்லலாம். இணையம் வழியாக உலகின் தெருக்களில் வெர்ச்சுவலாக நீங்கள் வலம் வரலாம். நேரடியாக தெருவில் நடப்பதுபோல 360 டிகிரி கோணங்களில் திரும்பி (அல்லது திருப்பி) பார்க்கலாம். பிரத்யேகமாக வடிவமைத்த தானியங்கி கேமராக்களை கார், படகு, மோட்டார் பைக் என இடத்துக்கு ஏற்றவாறு 360 டிகிரியில் இயக்கி, புகைப்படங்களாக எடுத்து இணைக்கிறார்கள். இந்தியா உள்பட சில நாடுகளில் இப்படி போட்டோ எடுக்கத் தடைகூட இருக்கிறது. இதெல்லாம் ரும்பாலும் நமக்கு தெரிந்த விஷயம்தான்.

ஆனால் ஜான் ராஃப்மேன் (jon rafman) என்னும் கனடாவைச் சேர்ந்த கலைஞர், இந்த கூகுள் ஸ்ட்ரீட் வியூவில் மணிக்கணக்காகத் தேடி சில போட்டோக்களை மட்டும் எடுத்து காட்சிக்கு வைக்கிறார். கூகுளின் தானியங்கி கேமராக்கள் சுட்டுத்தள்ளும் உலகத் தெருக்களின் புகைப்படங்களில் யாரும் கவனிக்காத சம்பவங்கள், வன்முறை, குற்றங்கள்கூட பதிவாகி இருக்கும். அப்படிப்பட்ட காட்சிகளைத்தான் ஜான் `கட் அண்ட் பேஸ்ட்’ பண்ணி 9 கண்கள் (9 eyes) என்னும் பெயரில் கண்காட்சிகளாக வைக்கிறார்.

கலைடாஸ்கோப் - 18

``கூகுள் ஸ்ட்ரீட் வியூவை ஒவ்வொரு தடவை பிரவுஸ் பண்ணும் முன்பும் மனதளவில் என்னைத் தயார் படுத்திக்கொள்வேன். எந்த மாதிரியான காட்சிகள் எனக்கு கிடைக்கும் என்று தெரியாதே. சில காட்சிகளை தேடித் துழாவிக் கண்டுபிடிக்க 12 மணி நேரம்கூட ஆகும். அதைச் சரியாகக் கண்டுபிடித்து எடிட் பண்ணி காட்சிப்படுத்துவதே ஓர் ஆர்ட்டிஸ்டாக என்னுடைய பணி என்று நினைக்கிறேன்” என்னும் ஜான் ராஃப்மேனுக்கு நவீன சிற்பி எனும் இன்னொரு முகமும் இருக்கிறது.

தொழில்நுட்பத்துக்கு கண்கள் மட்டுமே உண்டு, `பார்வை’ இல்லை.

நாஸ்டால்ஜியா நோட்

பம்பரம்

சமீபத்தில் ஊருக்குச் சென்றபோது ஒரு பம்பரம் வாங்கினேன். அதை சென்னையில் நான் வேலை செய்யும் கார்ப்பரேட் அலுவலகத்தின் மதிய இடைவேளையில் தளத்தில் விட்டும், கயிற்றால் சட்டென்று தூக்கி கைகளில் வாங்கிச் சுழற்றியும், காற்றில் எறிந்து லாவகமாகக் கைகளில் ஏந்தியும் காட்டியபோது, Born and brought up chennai இளம் நண்பர்கள் கோலாவை உறிஞ்சியபடி குறளி வித்தைக்காரனைப்போல என்னைப் பார்த்தார்கள். நடுவயதைத் தாண்டிய சிலர் கண்ணீர் மல்க, நடுங்கும் கைகளால் அதை வாங்கினார்கள். ஒரு கணம் ஊர் சிறுவர்களாக மாறி மீண்டார்கள்.

பம்பரம் விடுவது உலகெங்கும் இருக்கும் பழக்கம். சூதாட்டம் முதல் எதிர்காலத்தைக் கணிப்பது வரை சற்று சீரியஸான விஷயங்களுக்கும் பம்பரம் பயன்படுத்தப்பட்டிருப்பதை அறிகிறேன். கிறிஸ்டோபர் நோலனின் இன்செப்ஷனில் டி காப்ரியோவின் பம்பரம் ஞாபகம் வருகிறதா?

கலைடாஸ்கோப் - 18

பம்பரங்களின் விதவிதமான வண்ணங்கள்தான் சிறுவயதில் நம்மை ஈர்க்கும் முதல் விஷயம். ஊரில் பெரும்பாலும் பெட்டிக்கடைகளிலேயே கிடைத்துவிடும். புதுசாக வாங்கும்போது சோனியாக ஓர் ஒல்லி ஆணி அடித்திருப்பார்கள். அதைக் கழற்றி விட்டு ஸ்ட்ராங்காக வேறொரு ஆணியை அடித்துக்கொள்வோம். விளையாட்டில் எதிராளியின் பம்பரத்தை ஆக்கர் வைக்க கொஞ்சம் ஸ்ட்ராங் தேவைப்படும்.

பம்பரக் கயிற்றைச் சுற்றும்விதமே ஊருக்கு ஊர் வேறாக இருப்பதை பிற்பாடுதான் அறிந்தேன். காதைச் சுற்றி மூக்கைத் தொடுவதுபோல, ஆணியில் இருந்து ஆரம்பித்து பம்பரத்தில் உச்சந்தலை வழியாக மறுபடி ஆணிக்கே வந்த பின்பு, பம்பரத்தின் கீழ்ப்பாகத்தில் சுற்றுவது எங்கள் ஊர் வழக்கம். கொஞ்சம் உக்கிரம் அதிகம். சுழற்றி எறிந்தால் எதிராளியின் பம்பரங்கள் வட்டத்தை விட்டு (அட உண்மையாவே) தெறிக்கவிடுவோம். நாஸ்டால்ஜியா நோட் என்றால் இப்படி கவித்துவமாக முடிப்பதுதானே குலவழக்கம். ``இன்று நம் ஞாபகங்களில் மட்டும் சுழல்கிறது பால்ய கால பம்பரம்.” எப்பூடி?

கலைடாஸ்கோப் - 18

கான் மேன்

வில் ஸ்மித் நடித்த சமீபத்திய படமான ஃபோகஸ் (Focus) பார்த்தீர்களா? பக்காவாக பிளான் போட்டு ஏமாற்றுவதையே கலை நுட்பத்துடன்(?) செய்பவர்களை கான் மேன் (Con man) என்று சொல்வார்கள். இந்த Con என்பது ஆங்கிலத்தில் Confidence என்பதின் சுருக்கம். காரணம் இப்படி ஏமாற்றும் நுட்பத்தை `கான்ஃபிடன்ஸ் ட்ரிக்’ என்று சொல்கிறார்கள். எதிராளியைச் சுற்றி ஒரு டிராமாவை நிகழ்த்தி உண்மைபோல் நம்பவைத்து ஏமாற்றுவது.

உலக அளவில் சில கான் மேன்களைப் பற்றி தேடினால் ஃப்ராங் அபாக்நால் (Frank Abagnale) முதலில் இருக்கிறார். பைலட், டாக்டர், டீச்சர் என்று விதவிதமான வேஷங்களில் உலகம் சுற்றி ஏமாற்றி இருக்கிறார். ஸ்பீல் பெர்கின், `கேட்ச் மீ இஃப் யூ கேன்' படம் இவரைப் பற்றியதுதான். இப்போது அரசாங்கமே இவர் திறமையை வியந்து அமெரிக்கன் செக்யூரிட்டி கன்சல்டன்ட் வேலை கொடுத்திருக்கிறது. இதுவும் உண்மையான வேலையா, இல்லை உட்டாலக்கடியா... தெரியவில்லை.

நம் ஊர் நட்வர்லால் என்பவரும் லிஸ்ட்டில் இருக்கிறார். இவர் ஏமாந்தவர்களுக்கு தாஜ்மகால், செங்கோட்டை மற்றும் நமது நாடாளுமன்றத்தை பலமுறை விற்க முயற்சி செய்திருக்கிறார்.
இதை விட சுவாரஸ்யம் நாடாளுமன்றத்துடன் 545 எம்.பி-களையும் இனாமாக கொடுப்பதாகச் சொன்னதுதான். கான் மேன்களையே விற்க முயன்ற கான் மேன்!