மற்ற எபிசோடுகள்
Published:Updated:

கலைடாஸ்கோப் - 19

எண்ணம், வண்ணம்: சந்தோஷ் நாராயணன்

புரொஃபஸர் பீதாம்பரம் கடவுள் துகளை தன் மாணவர்களுக்குக் காட்டினார்.

``ஹிக்ஸ் போஸான் என்று எல்லாம் ஆங்கிலத்தில் சொல்லிப் பயமுறுத்தினால் ஆச்சா... `கண்ணுக்குத் தெரியாது’ எனக் கதைவிட்டார்கள். இதோ இப்போது என் கைகளிலேயே இருக்கிறது’’ எனக் கைகளைத் தூக்கினார். கண்ணாடிப் பெட்டியில் பெப்பர் தூள்போல இருந்தது கடவுள் துகள்.

கலைடாஸ்கோப் - 19

கடவுளையே துகளாகச் சிறைப்பிடித்த கர்வம் குரலில் படர, ``இந்த வருட நோபல் எனக்குத்தான். இந்த வெற்றியைக் கொண்டாட இன்று இரவு மது விருந்து... சியர்ஸ்’’ என்றார் தன் மாணவர்களைப் பார்த்து.

இரவு கொண்டாட்டமாகக் கழிந்தது.

கலைடாஸ்கோப் - 19

ஹேங்-ஓவருடன் விடிந்த காலையில் அந்தக் கண்ணாடிப் பெட்டி காலியாக இருந்தது. அதிர்ச்சியில் ஏப்பம் விட்டபடி தன் உதவி மாணவனை அழைத்து, பெட்டியைக் காட்டினார்.

“நேற்று போதையில் ஆம்லேட்டுக்கு அதிகமாகப் போட்டது பெப்பர் இல்லையா?” என்றான் அவன்

கலைடாஸ்கோப் - 19

இன்று உலகம் எங்கும் நிகழும் பேரிடர்களை `இயற்கைப் பேரிடர்’ எனச் சொல்வதைவிட `மனிதர்களின் தவறுகளால் உருவாகும் பேரிடர்கள்’ என்கிறார்கள். இன்றைய தலைமுறை அதைப் பற்றி பேச ஆரம்பித்துவிட்டது. அது கலை, இலக்கியங்களிலும் பிரதிபலிக்கிறது.

ஹா ஷல்ட் (HA Schult), ஜெர்மனைச் சேர்ந்த கலைஞர். இவர் `குப்பை மாந்தர்கள்’ (Trash People) என்னும் தலைப்பில் ஆயிரக்கணக்கான சிற்பங்களைச் செய்து, உலகின் முக்கிய டூரிஸ்ட் ஸ்பாட்களான சீனப் பெருஞ்சுவர் முதல் எகிப்திய பிரமிடுகள் வரை காட்சிக்கு வைத்தார். அத்தனையும் கோலா டின், கம்ப்யூட்டரின் உதிரிபாகங்கள் என நவீன மனிதனின் குப்பைகளில் இருந்து உருவாக்கப்பட்ட மனித உருவங்கள்.

கலைடாஸ்கோப் - 19

`இயற்கை பற்றிய எந்தவிதமான அக்கறையும் இல்லாத நுகர்வுக் கலாசாரத்தைப் பிரதிபலிப்பதே எனது சிற்பங்கள்’ என்றார் ஹா. அதற்காக ஒட்டுமொத்த மனிதர்கள் மீதான நம்பிக்கையையும் ஹா இழக்கவில்லை என்பதற்கு உதாரணமும் இருக்கிறது. 2001-ம் ஆண்டில் பெர்லின் நகரின் பழைய அஞ்சல் அலுவலகத்தை, ஆயிரக்கணக்கான காதல் கடிதங்களால் மூடி, அன்பின் பிரமாண்டத்தால் பார்வையாளர்களை அசரவைத்திருக்கிறார்!

கலைடாஸ்கோப் - 19

`குளந்தொட்டு கோடு பதித்து, வழி சித்து

உளந்தொட்டு உழவயலாக்கி - வளந்தொட்டு

பாடு படுங்கிணற் றோடென்றிவ்வைம் பாற்

கடுத்தான் ஏகுசுவர்க்கத் தினிது'

`சிறுபஞ்ச மூலம்’ நூலில் காரியாசான் இயற்றிய பாடல் இது எனப் படித்தேன். அதாவது ஓர் ஏரியை அமைக்கும் முறை பற்றிய பாடல். `ஏரியில் மிகும் நீரானது, மதகுகள் வழியாகக் குளங்களை நிரப்பி, பின் உழவுக்கும் உபயோகமாகி, பிறகு மக்களுக்கான கிணறுகளை நிரப்பிச் செல்லும்படியாக ஏரிகளை அமைப்பவன் சொர்க்கத்துக்குப் போவான்’ என்கிறது இந்தப் பாடல். நமது முன்னோர்கள் நீர் மேலாண்மையில் காட்டிய ஆர்வம், கொண்டிருந்த அறிவு இதுபோல பல பாடல்களில் இருக்கின்றன.

பெரிய குளங்களுக்கு எல்லாம் காவலாளிகள் இருந்திருக்கிறார்கள். இரவு - பகல் பார்க்காமல் அவர்கள் கண்காணிப்பில் இருந்திருக்கிறார்கள். `பெருங்குளக்காவலன்’ என அவர்களுக்குப் பெயர். `பெருங்குளக் காவலன் போல எங்க அம்மா தூங்காமலேயே திரியுறா. நான் வெளியே ஓடிப்போயிருவேன்’ என அகநானூறு பாடலில் எழுதி இருப்பதை, ஒரு நேர்காணலில் சுட்டிக்காட்டுகிறார் பேராசிரியர் தொ.பரமசிவன்.

இன்றைய நீர் வளங்களைப் பாதுகாப்பதிலும் நெறிப்படுத்துவதிலும் ஆள்பவர்களின் நிலைமையைப் பார்த்தால், சொர்க்கத்துக்கா... நரகத்துக்கா? எதைப் பாடுவார்கள் புலவர்கள் என்பதை உங்கள் கற்பனைக்கே விடுகிறேன்!

கலைடாஸ்கோப் - 19

`நம்ம ஆட்களுக்கு கேஷுவல் ஷூ எப்போ போடணும்... ஸ்போர்ட்ஸ் ஷூ எப்போ போடணும்னே தெரியல’ என்றான் நண்பன். `டேய் நாம எல்லாரும் செருப்பு போட ஆரம்பிச்சே, சில பத்து ஆண்டுகள்தான் ஆகுது. ஞாபகம் வெச்சுக்கோ’ என்றேன்.

ஆமாம்... சில பத்து ஆண்டுகளுக்கு முன்னர்கூட செருப்பு என்பது பணக்காரர்களின் வஸ்து. இன்றும் செருப்பு இல்லாமல் உழைக்கும் கால்களைப் பார்க்கிறேன்.

அமெரிக்காவின் ஓரிகான் மாகாணத்தில் உள்ள `ஃபோர்ட் ராக் கேவ்’ என்னும் குகைகளில்தான் உலகின் பழமையான செருப்பைக் கண்டடைந்திருக்கிறார்கள். கார்பன் டேட்டிங் ஆய்வின்படி `அந்தச் செருப்புக்கு வயது 8,000 ஆண்டுகள்’ என்கிறார்கள். சுமேரியர்கள் காலத்தில் மிருகத் தோல்களால் செய்த செருப்புகளை அணிய ஆரம்பித்தார்கள் என்கிறது ஒரு குறிப்பு. பைபிளில்கூட செருப்புகள் பற்றிய குறிப்புகள் வருகிறதாம். நமது ராமாயணத்தில்கூட ராமனின் பாதுகைகளை வைத்து ஆட்சிசெய்ததாக அறிய முடிகிறது. பழைய பக்தி சினிமாக்களில்கூட மரத்தால் செய்த பாதணிகளைப் பார்த்திருக்கிறோம்.

இன்று ஃபேஷனுக்காகப் போடுவது முதல் சுகாதாரத்துக்காகப் போடுவது வரை, விதவிதமாக செருப்புகள் மார்க்கெட்டில் கிடைக்கின்றன.

ஒருமுறை ஊரில் அண்ணனுடன் வயலுக்குச் செல்லும்போது `வரப்பில் செருப்புப் போட்டு வராதே' என்றார். `வெளிநாட்டில் எல்லாம் முழங்கால் வரை ஷூ மாட்டிக்கொண்டு விவசாயிகள் இருக்கிறார்கள். இவர்கள் செருப்புகூடப் போடக் கூடாது என்கிறார்களே’ என அதிபுத்திசாலித்தனமாக நினைத்தேன். ஆனால், இயற்கையின் அதிர்வுகளை, தங்கள் பாதங்களால்கூட உணர முடியும் பழங்குடிகளின் வாழ்வியல்களை அறிந்த பிறகு, அந்தப் புத்திசாலித்தனத்தின் மீது கொஞ்சமாக வெட்கம் கவிந்தது!

கலைடாஸ்கோப் - 19

சென்னையில் தலைக்கு மேல் ஹெலிகாப்டர்கள் பறந்துகொண்டிருப்பதைப் பார்த்தபோது தட்டான்பூச்சிகளின் ஞாபகம் வந்தது. சிறுவயதில் தட்டான்களைத் துரத்தாதவர் யார் உண்டு? காட்டிலும் மேட்டிலும் அலைந்துதிரிந்து சேறும் சகதியுமாக விளையாடிய தலைமுறை அல்லவா நாம். `மழைக்காலத்தில் தட்டான்கள் பறக்கும்’ என மனதில் பதிந்திருக்கிறது. ஆனால், `உலர்வான பருவமே அவற்றுக்கு உகந்தவை’ என்பதை எங்கோ படித்தேன்.

தட்டான்களைப் பிடித்து வேடிக்கை காட்டுகிறோம் என, அதைப் பாடாய்ப்படுத்தியும் இருக்கிறோம். வேட்டைச் சமூகமாக இருந்த மனிதர்கள், சிறுவர்களை வேட்டையாடப் பழக்கும் வழிமுறைகளாகத்தான் தட்டான்கள், ஓணான்கள் பிடிக்கும் பழக்கம் சிறுவர்களுக்கு வந்திருக்க வேண்டும். இதை ஆந்த்ரோபாலோஜிஸ்டுகள்தான் உறுதிப்படுத்த வேண்டும். என் தலைமுறைச் சிறுவர்கள் சார்பாக இன்று தட்டான்களின் பேரன், பேத்திகளிடம் மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன். ஆனால், தட்டான்கள் அருகிவர இது காரணம் அல்ல.

பூமியில் டைனோசர்கள் தோன்றுவதற்கு முன்னரே இருக்கும் பூச்சியினங்களில் தட்டான்களும் ஒன்று. இன்று பூச்சிக் கொல்லிகளாலும் பருவநிலைகளைக் கெடுத்த தாலும் தட்டான்பூச்சிகள் அழிந்துவருவதாக அறிகிறோம். தட்டானின் குழந்தைப் பருவம் தண்ணீரில்தான். அப்போது அதன் முக்கிய உணவு கொசுக்களின் லார்வா. தட்டான்களை அழித்துவிட்டு, கொசுக்களைப் பெருக்கிவிட்டு இப்போது டெங்குக் காய்ச்சலுக்கு மருந்து வாங்க வரிசையில் நிற்கிறோம்.