மற்ற எபிசோடுகள்
Published:Updated:

நம்பர் 1 - பியர் கிரில்ஸ் - 37

நம்பர் 1
பிரீமியம் ஸ்டோரி
News
நம்பர் 1 ( முகில் )

முகில்

நான் சாப்பிட்டு இதோடு முப்பத்தாறு மணி நேரம் ஆகுது. இப்ப நான் ஏதாவது சாப்பிட்டே ஆகணும். அதோ அங்க ஒரு ஒட்டகம் செத்துக்கிடக்குது. செத்து பல நாட்கள் ஆயிருக்கும்னு நினைக்கிறேன். துர்நாற்றம் வீசுது. பரவாயில்லை. நான் அதை வெட்டி சாப்பிடப் போறேன் (மூச்சு வாங்க கறியை வெட்டி, ஒரு துண்டை உண்கிறார்). த்தூ... த்தூ... ரொம்பக் கேவலமா இருக்கு. டயரை அப்படியே கடிச்சுச் சாப்பிடுற மாதிரி இருக்கு. வேற வழியில்லை. நான் நெருப்பு மூட்டி, இதைச் சமைச்சுச் சாப்பிடப்போறேன்.’

நிச்சயம் இவருக்கு அறிமுகம் தேவையே இல்லை. டிஸ்கவரி தமிழ் சேனல் வழியாக நம் வீடுகளிலும் மனதிலும் நுழைந்து, நாடோடியாகவும் காடோடியாகவும் உலவிக்கொண்டிருப்பவர் பியர் கிரில்ஸ். பேராபத்துகளை ‘ப்பூ’வென ஊதித் தள்ளிவிட்டு பெரும் சாகசங்களை அநாயாசமாக நிகழ்த்தும் அசகாய சூரர்; நாம் வாழும் உலகின் அதீத விநோத மனிதரும்கூட. யார் இவர்... எங்கு இருந்து முளைத்துவந்தார்?

நம்பர் 1 - பியர் கிரில்ஸ் - 37

மைக்கேல் கிரில்ஸுக்கும் ஸாராவுக்கும் திருமணத் துக்குப் பிறகு பிறந்த மகள் லாரா. தனக்கு ஒரு தங்கை வேண்டும் என்பது லாராவின் ஆசை. ஆனால், ஸாராவுக்கு அடுத்தடுத்து மூன்று முறை அபார்ஷன். நான்காவதாகக் கர்ப்பம் தரித்தபோது, ஒன்பது மாதங்களும் படுக்கையிலேயே கிடந்தார். இப்படிப் பல்வேறு சிக்கல்களைத் தாண்டி ஒருவழியாகப் பிறந்தது ஆண் குழந்தை (1974). `எட்வர்டு’ எனப் பெயர் வைத்தனர். லாராவுக்கு தம்பியின் பெயர் பிடிக்கவே இல்லை. அவள் தன் செல்லத்தம்பியை ‘டெடி பியர்’ என வாஞ்சையுடன் கொஞ்சினாள். அப்படியே ‘பியர்’ என்ற பெயர் நிரந்தரமாக ஒட்டிக்கொண்டது. பள்ளியில் ஓர் இடத்தில் நிற்காமல் அங்கும் இங்கும் தாவிக்கொண்டே இருந்த பியர் கிரில்ஸுக்கு, மற்றவர்கள் வைத்திருந்த பெயர் `மங்க்கி.’ யாராலும் எளிதில் கட்டுப்படுத்த முடியாத, வாலில்லா குரங்காகத்தான் வளர்ந்தான் பியர். வீட்டின் மரச்சுவரில் துளையிட்டு, தப்பித்து வெளியேறிவிடுவான். ஆம், பியர் பிஞ்சிலேயே சைல்டு Vs வைல்டு ஆகத்தான் வளர்ந்தான்.

எட்டாவது வயதிலேயே சாரணர் படையில் சேர்ந்தான். ஜிம்முக்கும் செல்ல ஆரம்பித்தான். துறுதுறுவெனத் திரிந்த அவனுக்கு, தாத்தா வளர்த்த பெரிய நாய்கள் மீது மட்டும் பயம். ஒருமுறை அதில் ஒன்று, பியரின் மூக்கு, வாய்ப் பகுதியைக் கடித்தும்விட்டது. மிரண்டு, மீண்டுவந்த பியருக்கு விலங்குகள் மீதான பயம் குறைய ஆரம்பித்தது. ஒரு விடுமுறைக் காலம். குடும்பத்துடன் சைப்ரஸுக்குச் சென்றார்கள். மதியப் பொழுது ஒன்றில் பியரை மலைப்பிரதேசத்துக்கு அழைத்துச் சென்றார் அப்பா. உயரத்தில் இருந்து பனியில் சறுக்கியபடி வந்தவர்கள், திடீரென வழிமாறி, மரங்கள் அடர்ந்த காட்டுப் பகுதி ஒன்றினுள் மாட்டிக்கொண்டார்கள். ‘நிற்காதே... மலை இறங்கிக்கொண்டே இருப்போம்’ என்றார் தந்தை. இருள் சூழ ஆரம்பித்தது. மூச்சுவாங்க சமவெளிப் பகுதி ஒன்றை அடைந்தனர். ‘அடுத்து எங்கே செல்வது? இடது பக்கம் செல்வோமா?’ தந்தை கேட்க, கொஞ்சம் யோசித்த பியர், ‘வலது பக்கம் செல்வோம்’ என்றபடி நடக்க ஆரம்பித்தான். தந்தையும் பின்தொடர்ந்தார். அடுத்த ஒரு மணி நேரத்தில் வெற்றிகரமாக வீட்டை அடைந்தார்கள். பியரின் முதல் சாகச அனுபவம் அது.

மிக இளம் வயதிலேயே கராத்தேவில் பிளாக் பெல்ட் வாங்கினான். சோதனைகளில் தற்காத்துக்கொள்வது எப்படி என்ற கலை பியருக்குப் பிடிபட ஆரம்பித்தது. வயது 17... பள்ளி விடுமுறை நாட்கள்... நண்பர்களுடன் கடற்கரை ஒன்றில் போதை ததும்பக் கொண்டாட்டங்கள். இருள் சூழ, நண்பர்கள் அனைவரும் மயங்கிச் சரிய, பியர் தனியாளாக வீட்டை நோக்கி நடக்க ஆரம்பித்தார். இருளில், திசை தெரியாத சாலையில், அரை போதையில் நடப்பது ‘த்ரில்’லாக இருந்தது. புத்தியில் கிறுக்குத்தனம் ஏறியது. உடைகளைக் களைந்து யாருமற்ற ஊரில் ஓட ஆரம்பித்தார். போலீஸ் அமுக்கியது. விசாரணைக்குப் பின்னர் எச்சரித்து அனுப்பியது. இருந்தாலும் அந்த அனுபவம் பியருக்குத் தித்திப்பாகப் போதையூட்டியது.

அதற்குப் பின்னர் அவ்வப்போது முதுகுப் பையை மாட்டிக்கொண்டு ஊர் ஊராக, இலக்கு இல்லாமல் சுற்றிவிட்டுத் திரும்ப ஆரம்பித்தார். அப்படித்தான் பெர்லினில் குப்பைகள் நிறைந்த பகுதியில், தன் முதுகுப் பையை ஒளித்துவைத்துவிட்டு ஊர் சுற்றினார். மீண்டும் வந்து பார்த்துபோது, குடிகாரன் ஒருவன் பியரின் பையுடனும், கையில் கத்தியுடனும் நின்றுகொண்டிருந்தான். கராத்தே உதவியது. அவனை வீழ்த்திவிட்டு, பையைப் பிடுங்கிக்கொண்டு ஓடினார்; சிலர் துரத்தினார்கள். பல தெருக்களில் தப்பித்து ஓடி, இறுதியில் சர்ச் ஒன்றை அடைந்தார். பூட்டிக் கிடந்தது. யோசிக்காமல், மளமளவென அதன் மீது ஏறினார். மணிக்கூண்டு. அந்த இரவில், அத்தனை உயரத்தில் நூற்றுக்கணக்கான புறாக்களின் ‘பக் பக்’ ஓசையுடன் உறக்கம். ‘வாவ்! இந்த அனுபவங்கள் அனைத்துமே சுகமாக  இருக்கின்றன!’ தனக்குள்ளேயே சிலிர்த்துக்கொண்டார் பியர்.

பியரின் தாத்தா உலகப் போர்களில் பணியாற்றியவர். சாகச விரும்பி. அதேபோலவே பியரும், பள்ளிப்படிப்பை முடித்த பின், ராணுவத்தில் சேர விரும்பினார். அப்போது ஓய்வுபெற்ற இந்திய ராணுவ அதிகாரி ஒருவரது அழைப்பின் பெயரில், பியரும் அவரது நண்பரும் இந்தியாவுக்கு வரும் வாய்ப்பு அமைந்தது. இமயமலைப் பகுதிகளில் விதவிதமான பயிற்சிகளை எடுத்தனர். குறிப்பாக மலையேற்றப் பயிற்சி. பியருக்கு எட்டு  வயதிருக்கும்போது,  எவரெஸ்ட்டின் புகைப்படத்தை முதன்முதலில் அவரது தந்தை காண்பித்தார். அப்போது இருந்தே அதன் உச்சியில் உற்சாகமாக நிற்கும் கனவைக் காண ஆரம்பித் திருந்தார் பியர். பல மாதப் பயிற்சிக்குப் பிறகு கொல்கத்தாவுக்குச் சென்றார். அன்னை தெரசாவுடன் சந்திப்பு. நெகிழ்வான நினைவுகளுடன் பிரிட்டன் திரும்பினார்.

1994-ம் ஆண்டு. பியர், பிரிட்டிஷ் ராணுவத்தின் சிறப்புப் படையான SAS (Special Air Service) தேர்வுக்காகச் சென்றார். பியரைவிட வலிமையான பலர் அங்கே குவிந்திருந்தனர். ஆனால், மனமும் வலிமையாக இருந்தால்தான் அந்தக் கடுமையான, சவாலான ஆரம்பகட்டத் தேர்வுகளைக் கடந்து முன்னேற முடியும். `நட, ஓடு, உருளு, ஏறு, குதி, தாவு, தவழு, தொங்கு’ என மற்ற நேரம் எல்லாம் வைப்ரேஷனிலேயே இருக்கவைப்பார்கள். அத்தனை பயிற்சிகளையும் மூச்சைப் பிடித்துக்கொண்டு தேறிவந்த பியர், சதுப்பு நிலங்கள் நிறைந்த மலைப்பகுதி ஒன்றில் தேங்கிவிட்டார். ‘வெளியே போ’ எனத் தேர்வுக் குழுவினர் வாசலைக் காட்டினர். தோல்வி, கண்ணீர்,  விரக்தி. அதற்காக பியர் விட்டுவிட வில்லை. அடுத்த சில மாதங்களில் நடந்த தேர்வில் மீண்டும் கலந்துகொண்டார். அது பனிக்காலம் என்பதால், எல்லாம் வழக்கத்தைவிட கடினமானதாகவே இருந்தன. ஆனால், தோல்வி கொடுத்திருந்த வெறியும் தெம்பும், வில்லில் இருந்து தெறித்த அம்பாக SAS-க்காகத் தேர்வுபெற்றார் பியர்.

வெவ்வேறு இடங்களில் பணி. விதவிதமான அனுபவங்கள். 1996-ம் ஆண்டு, ஸாம்பியாவில் இருந்தபோது, பணி நிமித்தமாக ஹெலிகாப்டரில் இருந்து குதித்தார். சுமார் 16,000 அடி உயரம். 3,000 அடி உயரத்தை அடைந்தபோது, பாராசூட்டை விரிக்க முயன்றார். குடை விரியவில்லை... பழுது. பியரின் உடல் தரையை வேகமாக நெருங்கியது. போதிய அவகாசம் இல்லாததால் உபரி பாராசூட்டையும் விரிக்கத் தவறினார். கடும் வேகத்தில் பாராசூட்டுடன்கூடிய முதுகுப்பை தரையில் மோதி, அதே வேகத்தில் மீண்டும் தூக்கி எறியப்பட்டு உருண்டு சுருண்டு விழுந்தார் பியர்.

நம்பர் 1 - பியர் கிரில்ஸ் - 37

மருத்துவமனையில் கண்விழித்தபோது, முதுகெலும்பில் மூன்று இடங்களில் முறிவு. பல காலம் படுத்த படுக்கையாகக் கிடந்தார். வலி, வேதனை, அறுவைசிகிச்சைகள். ‘மீண்டும் எழுந்து நடப்பதே சந்தேகம்’ எனச் சொன்னார்கள். உடைந்துபோன பியர், பின்னர் மனதால் நிமிர்ந்தார்; பின்னர் உடலால். பல மாதங்கள் விடாமுயற்சியில் சகஜநிலைக்குத் திரும்பினார். நடந்தது நடந்துவிட்டது. `ரிஸ்க் இல்லாத வேலை ஒன்றைச் செய்தபடி, ஓரமாக அமர்ந்து ரஸ்க் சாப்பிடலாம்’ என பியர் முடிவெடுக்கவில்லை. ‘என் சிறு வயதுக் கனவை நிறைவேற்றப் போகிறேன்’ என தீர்க்கமாக அறிவித்தார். ஆம், எவரெஸ்ட்டில் ஏறுவது.

பணம்? முந்தாநாள் முதுகெலும்பு உடைந்தவனுக்கு யார் ஸ்பான்ஸர் செய்வார்கள்? DLE (Davis Langdon and Everest) என்ற லண்டன் நிறுவனத்தைப் பெரும்பாடுபட்டுச் சம்மதிக்க வைத்தார். `எவரெஸ்ட்டின் உச்சியில் DLE-ன் கொடியைப் பறக்கவிடுவேன்’ என உறுதியளித்தார். எவரெஸ்ட்டில் ஏறுவதற்கு முன்னோட்டமாக ஸ்காட்லாண்டின் மலைகளில் பயிற்சியெடுத்தார். மலையேற்றத்தின்போது உடன் வந்த பெண் ஷாராவைப் பிடித்தது. பழகினார்கள். உள்ளுக்குள் காதல் பீறிட்டாலும், முத்தங்கள் வரை முன்னேறினாலும் லட்சியத்துக்கு இடையூறாக எதுவும் தேவை இல்லை என பியர் இதயம் காத்தார்.

1998-ம் ஆண்டு, பிப்ரவரியில் நேபாளம் பகுதியில் ஒரு குழுவினருடன் இணைந்து பயிற்சிகளை ஆரம்பித்தார் பியர். மார்ச் 31. ஷாராவுக்குப் பிறந்தநாள் என்ற நினைவுடன் மலையேறிக்கொண்டிருந்த பியர், ஓர் இடத்தில் சறுக்கினார். மாபெரும் பள்ளத்தை நோக்கி உருண்ட பியரை, பாசக்கயிற்றில் இருந்து உடன் இருந்த ஒருவர் வீசிய கயிறு காப்பாற்றியது. இன்னும் பல சோதனைகள், வேதனைகளைக் கடந்து, 1998-ம் ஆண்டு, மே 26-ம் தேதி காலை 7:22-க்கு உலகின் உச்சியில் நின்றபடி சாகசப்புன்னகை பூத்தார் பியர். `மிக இளம் வயதில் (23) எவரெஸ்ட் தொட்ட பிரிட்டிஷ்காரர்’ என்ற சாதனை வசமானது. (பின் இந்தச் சாதனை முறியடிக்கப்பட்டது). லண்டனுக்குத் திரும்பிய பியரை, விமான நிலையத்தில் காற்று புகாமல் அணைத்து வரவேற்றார் ஷாரா. ஷாரா முன்பாக மண்டியிட்டு, இதயம் திறந்தார். ‘என்னைத் திருமணம் செய்துகொள்வாயா?’ இன்பக் கணங்கள்.

சாகச விரும்பி பியர், அடுத்தடுத்த முயற்சிகளைத் தொடர்ந்தார். தனிநபர் மோட்டார் போட் மூலமாக பிரிட்டனைச் சுற்றிவரும் முயற்சி, பாத்டப் ஒன்றில் நிர்வாணமாகத் துடுப்பு போட்டபடி, தேம்ஸ் நதியில் வலம்வருவது, 11 மீட்டர் நீளம்கொண்ட ரப்பர் மிதவைப் படகு மூலமாக அபாய கடல் பகுதியான வட அட்லாண்டிக், ஆர்டிக் பெருங்கடலைக் குழுவினருடன் கடப்பது எனப் புதிய புதிய சாதனைகளை நிகழ்த்தினார். எல்லாம் வெவ்வேறு நலத்திட்டங்களுக்காக நிதி திரட்டும் நோக்கில் நிகழ்த்தப்பட்டன. 2005-ம் ஆண்டு, பலூனிஸ்ட்டான டேவிட் ஹெம்பிள்மென் மற்றும் சிலருடன் இணைந்தார் பியர். அவர்கள் சுமார் 25,000 அடி உயரத்தில் பலூனில் பறந்தபடியே, ஆக்ஸிஜன் மாஸ்க்குடன் இரவு விருந்து உண்டு புதிய சாதனை படைத்தனர். இந்த நிகழ்வுக்கான பயிற்சிக்காகவும் ஏற்பாடுகளுக்காகவும் சுமார் 200 முறை பியர் பாராசூட் மூலம் குதிக்கவேண்டியிருந்தது. ஒருமுறைகூட பயத்தால் அவரது முதுகெலும்பு சில்லிடவில்லை.

நம்பர் 1 - பியர் கிரில்ஸ் - 37

அடுத்தது என்ன? எவரெஸ்ட் மீண்டும் பியரை அழைத்தது. இந்த முறை பாராஜெட் பாரா மோட்டார் உதவியுடன் எவரெஸ்ட் சிகரத்தின் மேல் பறக்கும் முயற்சி. 29,500 அடி உயரத்தில், மைனஸ் 60 டிகிரி செல்சியஸ் குளிரில், ஆக்ஸிஜன் மிகக் குறைவான அபாய சூழலில் எவரெஸ்ட் சிகரப் பகுதியில் பியர் பறக்க, அது சேனல் 4, டிஸ்கவரி சேனல்களால் படம்பிடிக்கப்பட்டது. இப்படியாக தன் அதிரடி சாகசங்களால் கவனம் ஈர்த்த பியருக்குக் கிடைத்த முதல் டி.வி ஷோ, `Escape to the Legion.’ பியரும் 11 பேரும், சஹாரா பாலைவனத்தில் தவித்து, தத்தளித்து, தன்மையாகக் கடந்துவரும் நிகழ்ச்சி (2005).

இதன் அடுத்தகட்டமாகத்தான் `Born Survivor’ நிகழ்ச்சியின் முகமாக சேனல் 4-ல் ஒப்பந்தம் செய்யப்பட்டார் பியர் கிரில்ஸ். இந்த நிகழ்ச்சியே பிற நாடுகளில் `Man Vs Wild’ என்ற பெயரில் ஒளிபரப்பாகியது. ஐந்து வருடங்களில் ஏழு சீஸன் ஒளிபரப்பும் அளவுக்கு டெரா ஹிட்.  உலகம் அறிந்த சாகசமுகமாக பியர் கிரில்ஸ் மக்கள் மனதில் இடம்பிடித்தார். தன்னந்தனிக் காட்டிலோ, பாலைவனத்திலோ, பனிப்பிரதேசத்திலோ, மலைமுகட்டிலோ, கடலிலோ, தீவிலோ, ஆற்று வெள்ளத்திலோ, குமுறும் எரிமலைக்கு அருகிலோ, எரியும் வனத்திலோ அல்லது மனித வாசமற்ற வேறு ஏதோ ஆபத்துகள் நிறைந்த இடத்தில் பியரை இறக்கிவிடுவார்கள். அங்கே மாட்டிக்கொள்ளும் அந்த மனிதன், தன் வசம் இருக்கும் ஒரு சில அடிப்படைப் பொருட்களைக் கொண்டு, இயற்கையாகக் கைகளில் அகப்படும் விஷயங்களைப் பயன்படுத்தி, எப்படி அந்தச் சூழலில் இருந்து தப்பித்து, பாதுகாப்பான இடத்துக்கு உயிர்மீண்டு வருகிறார் என்பதே நிகழ்ச்சி.

தான் ராணுவத்தில் பணியாற்றியபோது கற்றுக்கொண்ட விஷயங்கள், தானாகவே கண்டுபிடித்த புதிய உத்திகள், அந்தந்த நெருக்கடிகளில் தோன்றும் உடனடி யோசனைகள் ஆகியவற்றைப் பயன்படுத்தி, ஆபத்துகளில் இருந்து மீண்டுவருகிறார் பியர். அதுவும் பசிக்கு உணவாக, தாகத்துக்குத் தண்ணீராக பியர் தேர்ந்தெடுக்கும் விஷயங்கள் பலமுறை ‘உவ்வே’ ரகம். வேட்டையாடுவார் அல்லது எப்போதோ செத்துப்போன விலங்குகளின் மாமிசத்தை வெட்டித் தின்பார். ஊர்ந்து செல்லும் பாம்பை, பெரிய பல்லியைப் பிடித்து தலையை அறுத்து நெருப்பில் சுட்டு, `டெலிஷியஸ்' என உண்பார். தவளை, பூரான், ஓணான் எதுவும் தப்பாது. பூச்சிகளைப் பிடித்து உள்ளங்கையில் கசக்கி, உருட்டி வாயில் திணித்து, கரக் முரக் சத்தத்துடன் உண்டுகொண்டே, ‘புரதம் நிறைந்த இந்த உணவைச் சாப்பிட்டால்தான் உயிர் வாழ முடியும்’ என்பார் இயல்பாக. தன் சிறுநீரைத் தானே குடிப்பது, யானையின் ஈரச் சாணத்தை வாயில் போட்டு தாகம் தணிப்பது, செத்த ஒட்டகத்தை அறுத்து, வயிற்றுப்பையில் சேகரமாகியிருக்கும் நீரைப் பருகுவது என பியர் செய்யும் செயல்கள் எல்லாம் ‘மனுஷனா இவன்?’ என முகம் சுளிக்கவைக்கும். அதேசமயம் நம் புருவங்களையும் அனிச்சையாக உயர்த்தவும் செய்யும்.

இந்த `மேன் Vs வைல்டு’ நிகழ்ச்சி குறித்த ஏகப்பட்ட சர்ச்சைகளும் உண்டு. `தனி மனிதனை எந்தவிதப் பாதுகாப்பும் இல்லாமல், யாருமற்ற இடத்தில் தவிக்கவிடுவது மனித உரிமை மீறல்’ என்ற குற்றச்சாட்டு எழுந்தது. இதற்குப் பிறகே `பியருக்கு தனிமனிதப் பாதுகாப்பு விதிகளின்படி உரிய பாதுகாப்பு வழங்கப்படுகிறது’ என்றும், `பியர் கிரில்ஸ் படப்பிடிப்புக் குழுவினருடன்தான் பயணம் செய்கிறார்’ என்றும் நிகழ்ச்சியின் ஆரம்பத்தில் தெளிவாக அறிவிக்கத் தொடங்கினர். உரிய பாதுகாப்புகளுடன் நிகழ்ச்சியில் பங்கேற்றாலும் பியர் அடைந்த காயங்கள், சந்தித்த விபத்துகளுக்குக் குறைவில்லை. தவிர, நிகழ்ச்சிக்கு என பியர் அநாயாசமாகச் செய்யும் ஆபத்தான காரியங்களை, இன்னொரு மனிதனால் நினைத்தே பார்க்க முடியாது என்ற அளவில் அவர் தனித்துவம் பெறுகிறார். உலகின் நம்பர் 1 சாகசக்காரராக, உயிர் பிழைப்பாளராக (Survivor) அறியப்படுகிறார்.

‘வாழ்க்கைக்கும் மரணத்துக்கும் இடையிலான கோடு மிகவும் மெல்லியது. ஆபத்தில் நாம் என்ன செய்கிறோம் என்பதே நாம் கோட்டின் எந்தப் பக்கத்துக்குச் செல்லப்போகிறோம் என்பதைத் தீர்மானிக்கிறது. அரிதாகத்தான் அதிர்ஷ்டம் கைகொடுக்கும். ஆகவே, உயிர் பிழைப்பதற்கான மாற்று வழிகள் எப்போதும் கைவசம் இருக்க வேண்டும். எனக்கு பயமே கிடையாது என்கிறார்கள். அது தவறு. நான் நிறையவே பயப்படுவேன். அதே சமயம் அந்தப் பயத்தில் இருந்து உடனடியாக மீண்டுவருவதற்கான வழிகளையும் கண்டுபிடித்துவிடுவேன். பாலைவனமோ, பனிப்பிரதேசமோ அல்லது பாதுகாப்பான இடமோ  எங்கும் பிழைத்துக் கிடப்பதற்கான விதி ஒன்றே ஒன்றுதான். முயற்சியைக் கைவிடாதே’ - அர்த்தத்தோடு சொல்கிறார் பியர்.

தன் அனுபவங்களைக்கொண்டு பியர், ஸ்காட்லாண்டின் மலைப்பகுதிகளில் ‘சர்வைவல் அகாடமி’ ஒன்றை ஆரம்பித்து நடத்திவருகிறார். இதன் நோக்கம் இயற்கைப் பேரிடர் மற்றும் பிற ஆபத்துகளில் சிக்கிக்கொள்ளும் மக்கள், அவற்றை எதிர்கொண்டு சமாளித்து, மீண்டுவருவது எப்படி எனப் பயிற்சி அளிப்பது. தீப்பெட்டியோ, லைட்டரோ இன்றி நெருப்பு பற்றவைப்பது முதல் தாற்காலிகக் கூடாரம் அமைப்பது, இருப்பதைக் கொண்டு சமைப்பது, மலையேறுவது, ஆற்றைக் கடப்பது எனப் பல்வேறுவிதமான பயிற்சிகளை அளிக்கிறது இந்த அகாடமி.

விரைவில் வேறு நாடுகளிலும் இந்த சர்வைவல் அகாடமியை ஆரம்பிக்கும் திட்டங்களுடன் இருக்கிறார் பியர் கிரில்ஸ். 2015-ம் ஆண்டு, டிசம்பர் முதல் வார வெள்ளத்தில் சிக்கிய தமிழ்நாட்டு மக்களுக்குக்கூட இப்படி ஒரு அகாடமி தேவைப்படு கிறது என்பது உண்மைதான். இதை மாற்றியும் சொல்லலாம். இந்த வெள்ளத்தில் தப்பிப் பிழைத்து, பூஜ்ஜியத்துக்குச் சரிந்துகிடக்கும் வாழ்வை மீண்டும் நம்பிக்கையுடன் எதிர்கொள்ளத் தயாராக நிற்கும் நாம் ஒவ்வொருவருமே பியர் கிரில்ஸ்தான்!

உலகப் புகழ் கத்தி!

 `பியர் கிரில்ஸ் சர்வைவல் கிட்' என பல பொருட்கள் விற்பனைக்குக் கிடைக்கின்றன. அதுவும் பியரால் வடிவமைக்கப்பட்ட, அவர் நிகழ்ச்சியில் பயன்படுத்தும் அந்தக் கத்தி, இதுவரை பல மில்லியன் கணக்கில் விற்றுத் தீர்ந்திருக்கிறது.

நம்பர் 1 - பியர் கிரில்ஸ் - 37

 `The Scout Association’, 2009-ம் ஆண்டில் பியர் கிரில்ஸுக்கு தலைமை சாரணர் பதவி அளித்தது. `2018-ம் ஆண்டு வரை அவர் அந்தப் பதவியில் இருப்பார்’ என்றும் அறிவித்திருக்கிறது.
 பியர், பல்வேறு இடங்களுக்குச் சென்று தன்னம்பிக்கை உரைகள் ஆற்றிவருகிறார். பல புத்தகங்களை எழுதியுள்ளார். முதல் புத்தகமான `Facing Up’, பிரிட்டனின் டாப் 10 புத்தகங்கள் வரிசையில் இடம்பெற்ற பெருமைக்கு உரியது. 2012-ம் ஆண்டில் இவரது சுயசரிதை `Mud, Sweat and Tears’ என்ற பெயரில் வெளியானது. தவிர, குழந்தைகளுக்கான சர்வைவல் புத்தகங்களையும் எழுதியிருக்கிறார்.

 இவருக்குப் பிடித்த உணவு, காட்டில் பிடித்து நெருப்பில் வாட்டி உண்ணும் பாம்பு. இதுவரை உண்டதிலேயே பிடிக்காத உணவு, ஆடு ஒன்றின் விதைப்பை.

 எவரெஸ்ட் பயணத்தையே தன் வாழ்வின் சிறந்த பயணமாகச் சொல்கிறார் பியர். அவர் அடிக்கடி செல்லும் நாடு கிரீன்லாந்து. ‘உலகில் மனிதன் காலடி படாத பல இடங்கள் அங்கேதான் இருக்கின்றன’ என்கிறார்!

நம்பர் 1 - பியர் கிரில்ஸ் - 37

பியர் - ஷாரா தம்பதிக்கு மூன்று மகன்கள். எங்கு சென்றாலும் தன் குடும்பத்தின் போட்டோவை ஷூவில் மறைத்துவைத்திருப்பார். எந்தக் காட்டில் கிடந்தாலும் இரவில் சாட்டிலைட் போன் மூலமாக குடும்பத்தினருக்கு குட் நைட் சொன்ன பிறகே உறங்கச் செல்வார். நார்த் வேல்ஸ் அருகில் ஒரு தீவில் 20 ஏக்கரைச் சொந்தமாகக்கொண்ட பியருக்கு, அங்கு, தான் அமைத்த வீட்டில், மின்சாரம், வெளியுலகத் தொடர்பு எதுவும் இல்லாமல் குடும்பத்துடன் சென்று தங்குவதே மிகவும் பிடித்தமான விஷயம்!

நம்பர் 1 - பியர் கிரில்ஸ் - 37

கட்டுரையாசிரியர் முகில், விகடன் முன்னாள் மாணவப் பத்திரிகையாளர் (2001-02). சொந்த ஊர் தூத்துக்குடி. வசிப்பது சென்னையில். முழு நேர எழுத்தாளர். பத்திரிகை, தொலைக்காட்சி, சினிமா என வெவ்வேறு தளங்களில் இயங்கிவருகிறார். இதுவரை இருபதுக்கும் மேற்பட்ட தமிழ் நூல்களை எழுதியிருக்கும் இவர், வரலாற்று நூல்களை எழுதுவதில் அதிகக் கவனம் செலுத்திவருகிறார்.
(தொடர்புக்கு: writermugil@gmail.com)