எண்ணம், வண்ணம்: சந்தோஷ் நாராயணன்

வைல்டு லைஃப்
``வைல்டு லைஃப் போட்டோகிராஃபர் ஆகணும். அந்தக் குறிப்பிட்ட விலங்குகள் உண்பது, உறங்குவது, உறவுகொள்வது என அதன் பெர்சனல் விஷயங்களைக்கூட போட்டோவா எடுத்துத் தள்ளணும்” - வெறியுடன் சொன்னான்.
கேமராவும் கையுமாக இருந்தவனை, அம்மாவும் அப்பாவும் முதலில் ஆச்சர்யமாகப் பார்த்தார்கள். பின்னர் அது கவலையாக மாறிற்று.
“தம்பி... இது கொஞ்சம் ஆபத்தான விஷயம்” என்றபடி அவன் தலையின் கருமுடிகளை விரல்களால் கோதினாள் அம்மா.
“அவை இங்கே வந்து ஒரு பிரச்னையும் இல்லாமல் திரும்பிப் போகின்றன. ஆனால், நாம் அங்கு போக ரொம்ப யோசிக்க வேண்டும். விலங்கு இனங்களிலேயே மிகக் கொடியவை அவைதான் என்பது நம் மூத்தோர் அனுபவம்” என்றார் அப்பா.

மயிர் அடர்ந்த அவன் கைகள் கேமராவின் கிளிக் பட்டனைத் தடவியபடி இருந்தன.
அவர்களுடைய பயத்தின் நியாயத்தைப் புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால், அதைச் செய்தே ஆகவேண்டும் என நினைத்தான். மௌனமாக பெற்றோரை வணங்கி, கேமராவுடன் புறப்பட்டான்். கிளைக்குக் கிளை தாவியபடி... காட்டில் இருந்து தொலைவில் தெரியும் நகரத்தை நோக்கி!
பல்லாங்குழி
மயிலாப்பூர் மார்கழித் திருவிழாவில், பட்டுப்பாவாடைச் சிறுமிகள் வரிசையாக போட்டிபோட்டு பல்லாங்குழி ஆடுவதை போன வருடம் பார்த்தேன். செஸ் போல பல ரவுண்டுகள் மோதலுக்குப் பிறகு சாம்பியன்ஷிப் எல்லாம் கொடுக்கிறார்களா என கடைசி வரை நின்று பார்க்கவில்லை. மொபைல் கேம் தலைமுறைகளுக்கு இப்படி ஏதாவது ஸ்பெஷல் அக்கேஷன்களில், இவற்றை எல்லாம் ஞாபகப்படுத்தினால்தான் உண்டு.

பல்லாங்குழி என்பது பெண்களின் ஆட்டம் என்றே மனதில் பதிந்திருக்கிறது. ஆனால், அது `இருபாலரும் ஆடும் ஆட்டம்’ என்கிறார் தேவநேயப்பாவாணர். சிறுவர்களாக இருந்தபோது பால்பேதம் இல்லாமல் ஆடியிருக்கிறோம். 14 குழிகள் கொண்ட பலகையில் புளியமுத்து அல்லது சோளிகள் போட்டு ஆடும் ஆட்டம். எங்கள் ஊரில் குன்னிமுத்து கிடைக்கும்போது அதையும் பயன்படுத்துவோம். இந்த 14 குழி என்பதுதான் மருவி, பல்லாங்குழி ஆனது என்கிறார்கள். தேடினால், இன்னும் பல அர்த்தங்கள் கிடைக்கும்.
ஆப்பிரிக்க நாடுகள் பலவற்றிலும் பல்லாங்குழி போன்ற விளையாட்டுகள் இருந்தன / இருக்கின்றன என்கிறது இணையம். பேராசிரியை தாயம்மாள் அறவாணன் கள ஆய்வுசெய்து பல்லாங்குழி பற்றி விரிவாக எழுதியிருக்கிறார். பல்லாங்குழியின் விதி, விளையாடும் முறை பற்றிய குறிப்புகள் விக்கிபீடியாவில் இருக்கின்றன. பல்லாங்குழியும் ஒருவகையான வாழ்வியல் பாடம் எனத் தெரிகிறது.
இயல்பு வாழ்க்கை?
மழையின்போது...
மின்சாரம் இல்லாததால் டி.வி பார்க்காமல், மொபைலில் நோண்டாமல் சகமனிதர்களுடன் பேசிக்கொண்டிருந்தது. கிடைத்த உணவையே பசித்து, ருசித்துச் சாப்பிட்டது. மொட்டைமாடியில் தூய்மையான மழைநீரையே குடிநீராகப் பிடித்துக் குடித்தது. வேலை வெட்டி எனப் பரபரப்பு காட்டாமல் பெண்டு, பிள்ளை களுடன் மூன்று நாட்கள் கூடவே இருந்தது. `யார்?’, `என்ன?’ என்ற கேள்விகள் இல்லாமல் உணவு - உடை - உறைவிடம் என ஒருவருக்கு ஒருவர் உதவியாக இருந்தது.

மழைக்குப் பின்பு...
காலையிலேயே டி.வி நியூஸ் பார்த்து பி.பி எகிறுவது. பக்கத்தில் இருப்பவரையே மறந்துவிட்டு மொபைலில் தனிக்குடித்தனம் நடத்துவது. பசிக்குதோ இல்லையோ... அரைகுறையாகச் சாப்பிட்டுவிட்டு அரக்கப்பரக்க வாகனங்களைக் கிளம்பிக்கொண்டு அலுவலகம் போவது. வாட்டர்கேன் சப்ளையருக்காகத் தேவுடு காப்பது. குடும்பத்துடன் செலவழிக்க நேரம் இல்லாமல் இருப்பது. `யார்?’ `என்ன?’ என்ற கேள்விகள் இல்லாமல் `எவன், எப்படி இருந்தா என்ன?’ என தன் பொழைப்பைப் பார்ப்பது.
இந்த இரண்டும், அதிகம் `பாதிக்கப்படாமல் பாதிக்கப்பட்ட’ சில நடுத்தரவர்க்க நண்பர்களின் கதை. இவற்றில் எது உண்மையில் இயல்பு வாழ்க்கை?
கோண்டு ஆர்ட்
இயற்கைக்கு எதிராக முஷ்டி முறுக்கிக்கொண்டு திரிகிறோம். ஆனால், இயற்கை அன்னையின் கை பெரியது அல்லவா? அதனால்தான் அவ்வப்போது நம் முதுகில் ரெண்டு தட்டு தட்டி, `இயற்கையின் படைப்பில் ஆகக் கடைக் குட்டிகளடா நீங்கள்...’ என எச்சரிக்கிறது. வீட்டுக்கு இளைய பிள்ளை, செல்லப் பிள்ளை என்பதுபோல மனிதர்களாகிய நாமும் கொஞ்சம் முரண்டுபிடிக்கிறோம். அன்னையைப் பாடாய்ப்படுத்துகிறோம். அன்னைகளுக்குச் சாந்தமாக ஒரு முகமும், ரௌத்திரமாக இன்னொரு முகமும் உண்டு என்பது நமது பண்பாட்டின் நம்பிக்கை. இதெல்லாம் உங்களுக்குத் தெரியாதது அல்ல. இருந்தாலும் யாராவது ஞாபகப்படுத்திக்கொண்டே இருக்க வேண்டியிருக்கிறது. எனக்கு அதை எப்போதும் ஆதிவாசிகளின் கலைகள் ஞாபகப்படுத்தும்.

மத்திய இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் பரவலாக வாழ்ந்துகொண்டிருக்கும் பழங்குடி இன மக்களில் கோண்டு இன ஆதிவாசிகள் முக்கியமானவர்கள். இவர்களின் ஓவியங்கள் ‘கோண்டு ஆர்ட்’ என இன்று உலகம் முழுவதும் கவனம் பெற்றிருக்கிறது. அடர்த்தியான வண்ணங்கள், அதை வரையும் நுட்பம் என தனித்துவமான கலை. வாழ்வியல் என்பது மரம், செடி, கொடி, விலங்குகள், பறவைகள் எல்லாம் கலந்ததுதான். மனிதன் அதில் ஒரு பாகம் மட்டுமே என்கிற உணர்வைத் தருகின்றன. இந்த ஓவியங்களில் மனிதர்களைவிட பிற உயிரினங்களே பிரதானம்.

இந்த கோண்டு ஆர்ட் இன்று பாரிஸில் இருந்து ஜப்பான் வரை பிரபலமாக இருக்கக் காரணம், கோண்டு இனத்தில் இருந்து வந்த ஒரு கலைஞன். பெயர் ஜங்கர் சிங் ஷ்யாம் (jangarh singh shyam). மத்தியப்பிரதேசத்தின் ஓர் ஆதிவாசிக் கிராமத்தில் இருந்து வெளியுலகுக்கு வந்தவர். ஜகதீஷ் சுவாமிநாதன் என்கிற பிரபல ஓவியரால் அடையாளம் காணப்பட்ட ஜங்கர், பிறகு தன் கோண்டு ஓவியங்களால் உலகக் கலை ஆர்வலர்களின் கவனம் பெற்றார். ஆனால், எல்லாவற்றையும் நுகர்பொருளாக்கத் துடிக்கும் நவீனப் பொருளாதாரம் கலைகளையும் விட்டுவைப்பது இல்லை. ஜப்பானில் மிதிலா மியூஸியம் என்னும் கலை மையத்தில் தங்கியிருந்து ஓவியங்கள் வரைந்துகொண்டிருந்த ஜங்கர், 2001-ம் ஆண்டு தன் 37-வது வயதில் தற்கொலை செய்துகொண்டார். கலை வியாபாரிகளின் கெடுபிடிகளால் மன அழுத்தம் ஏற்பட்டுத்தான் இப்படி ஒரு முடிவை எடுத்தார் என விமர்சனங்கள் இருந்தாலும், இன்று வரை அவரது தற்கொலைக்கான காரணம் புரியாத புதிர்.
வேட்டையாடப்படுவது ஆதிவாசிகளின் நிலங்கள் மட்டும் அல்ல... கலைகளும்தான்!
நாற்காலி
Chair என்ற ஆங்கிலச் சொல்லுக்கு வேர் cathedral என்ற லத்தீன் சொல் என்கிறார்கள். அதன் அர்த்தம் உட்காருவது (Sit) என்பதாம். அதன் பயன்பாட்டை மட்டுமே சொல்கிறது. ஆனால், நம் ஆட்கள் `நாற்காலி’ என மொழிபெயர்த்து, அதன் வடிவத்துக்கு ஓர் உயிர்த்தன்மை கொடுத்திருக்கிறார்கள். இதுதான் நாம். எல்லாவற்றையும் கவித்துவமாக்கிவிடுவோம்.

எதிர்காலத்தில் மனிதனின் உடலியல் பரிணாம மாற்றத்தில், மாறுதல் கொண்டுவரும் அளவுக்கு இன்று நாற்காலிகளின் பயன்பாடு இருக்கிறது. அதிலும் குறிப்பாக ஆபீஸ் சேர்கள். என்ன கொடுமை என்றால், இந்த ஆபீஸ் சேர்களைக் கண்டுபிடித்தவரே பரிணாமக் கோட்பாட்டைக் கண்டறிந்த சார்லஸ் டார்வின் தானாம். சேர்களுக்கு வீல் வைத்தால், தன் அலுவலகத்தில் கலைந்துகிடக்கும் குறிப்புகளை உட்கார்ந்தபடி நகர்ந்து சென்று எடுக்கலாம் என யோசித்திருக்கிறார்.
சம்மணமிட்டு உட்காருவது நல்லது என்கிறார்கள் `பழைய’ ஆட்கள். கணக்குப்பிள்ளைகளில் இருந்து அடகுக்கடை சேட்டுகள் வரை அப்படி உட்கார்ந்துதான் வேலைபார்த்திருக்கிறார்கள். உட்காரும் சமாசாரம் என்பதைத் தாண்டி நாற்காலி என்பது அதிகாரத்தின் பருவடிவம்போல் ஆகிவிட்டது. அரசியல் முதல் அலுவலகம் வரை பார்த்துக்கொண்டிருக்கிறோம்தானே. வரலாற்றில் சிம்மாசனங்கள் எல்லாம் ரத்தத்தால் கழுவப்பட்டவை அல்லவா... அதன் தொடர்ச்சிதான்போல சேர்கள்.