எண்ணம் வண்ணம்: சந்தோஷ் நாராயணன்

``இந்த இன்ஜெக்ஷனைப் போட்டீங்கன்னா, உங்க குழந்தை நிச்சயமா டாக்டர் ஆகிடும்; சொந்தமா மல்ட்டி ஸ்பெஷாலிட்டி ஹாஸ்பிட்டல் கட்டும்... கேரடி” என்றான் சேல்ஸ்மேன் விவேக்.
பெற்றோர்கள், கண்களைச் சுருக்கிக் கேட்க ஆர்வமானார்கள்.
விவேக், தன் பார்வையைத் தாழ்த்தவும், அசிஸ்டென்ட் திறந்துவைத்த ஃப்ரீஸர் பாக்ஸில் ஆவிபறக்க விதவிதமான இன்ஜெக்ஷன்கள் இருந்தன.
``இந்த இன்ஜெக்ஷனைப் போட்டீங்கன்னா, சூப்பர் இன்ஜினீயர். எதிர்காலத்துல யு.எஸ்-ல செட்டில் ஆகலாம். இது சிங்கர் ஆகுறதுக்கு. பட்டமும் பங்களாவும் ஷ்யூர் ஷாட். இதோ இந்த ஊசி மேத்தமேட்டீஷியன் ஆகுறதுக்கு. உங்க வீட்டில் இருந்தும் ஒரு ராமானுஜன், சகுந்தலா தேவி வரணுமா... வேண்டாமா?” என்றான்.
பெற்றோர்கள், வாயைப் பிளந்தபடி அதை ஆமோதித்தார்கள். அசிஸ்டென்ட் ஆச்சர்யமாகப் பார்த்தான்.
``இப்படி என்ன வேணுமானாலும் ஆகலாம். நீங்க கண்ட கனவு, நீங்க வாழணும்னு ஆசைப்பட்ட வாழ்க்கையை உங்க பிள்ளைகள் மூலமா நிறைவேற்றிக்கலாம்” - கொஞ்சம் அழுத்திச் சொன்னான். பெற்றோர்கள் பெருமூச்சு விட்டபடி தயாரானார்கள்.

``ஒவ்வொரு கேட்டகரிக்கும் ஒரு ஊசிதான் இருக்கு. யார் அதிகபட்சமா ஏலம் எடுக்கிறீங்களோ, அவங்களுக்குத்தான் இந்த ஊசி” என்று கைகளை புரொஃபஷனலாக கூட்டத்தை நோக்கி விரித்தான்.
பெற்றோர்கள், அடித்துப் புரண்டார்கள். சூடாக விற்றுத் தீர்ந்தது.
அசிஸ்டென்ட், பணத்தை எண்ணியபடி கேட்டான், “சார், எல்லா இன்ஜெக்ஷனையும் வித்துட்டீங்க. ஆனா, இந்த ஒரு ஊசியை மட்டும் ஏன் நீங்களே வெச்சிருக்கீங்க?”
“இது என் குழந்தைக்கு” என்றான் விவேக்.
``இதைப் போட்டா என்ன ஆகலாம்?” என்றான் அசிஸ்டென்ட்.
புன்னகைத்தபடி சொன்னான் விவேக், ``சேல்ஸ்மேன்”!

கட்டிப்பிடி
‘வசூல்ராஜா எம்.பி.பி.எஸ்’ படத்தில் கமல்ஹாசன் செய்ததுதான் கட்டிப்பிடி வைத்தியம். அதை கிறிஸ்டோபர் டேவிட் ரியான் (சுருக்கமாக சி.டி.ஆர்) என்னும் ஆர்ட்டிஸ்ட் செய்கிறார். ஆனால், கமல் மாதிரி நேரில் இல்லை; தன் கிராஃபிக் ஆர்ட்டில். போர்ட்லாண்டைச் சேர்ந்த விளம்பரத் துறை கிராஃபிக் டிசைனரான சி.டி.ஆர்., ‘கலை வழியாக அன்பும் அமைதியும்கொண்ட சிறந்த உலகை உருவாக்க ஆசைப்படுகிறேன். அதைத்தான் என் படைப்புகள் சொல்கின்றன’ என்று ஒரு நேர்காணலில் சொன்னார்.
அதை எப்படி தன் கலையில் கம்யூனிக்கேட் பண்ணுகிறார்? கணினி ஓவியரான சி.டி.ஆர், குழந்தைத்தனமான / வேடிக்கையான உருவங்களை வரைகிறார். அந்தக் கற்பனை ஜீவிகள், புகைப்படங்களில் பிரபலங்களை, சாமானியர்களை, பிரபலமான விஷயங் களைக் கட்டிப்பிடிப்பதுபோல கணினியில் இணைக்கிறார். இந்த சீரீஸ் கிராஃபிக் ஓவியங் களுக்கு, அவர் ‘பிக் ஹக்ஸ்’ (Big Hugs) எனப் பெயரும் வைத் திருக்கிறார்.

இசைக் கலைஞர் ஜான் லென்னான், ஓவியர் ஆன்டி வார்ஹோல் முதல் இளம் வயது ஒபாமா வரையிலான பிரபலங்கள், ஸ்டார் வார்ஸ் போன்ற திரைப் படங்களின் கதாபாத்திரங்கள், சுதந்திர தேவி சிலை, ஈஃபிள் டவர் போன்ற அஃறிணைப் பொருட்கள் என, இவருடைய கற்பனை ஜீவிகள் எந்தவித பேதமும் இன்றி கட்டிப்பிடி வைத்தியம் பார்க்கிறார்கள்.
மேற்குலகில், சந்திப்புகளின்போது கட்டிப்பிடித்து வரவேற்பார்கள். நமது பாரம்பர்யத்தில் வணக்கம்தான் சொல்கிறோம். ஏன் தெரியுமா? `சாதி’தான் காரணம் எனக் கேள்விப்பட்டிருக்கிறேன். உண்மையா என எனக்குத் தெரியாது. ஆனால், வணக்கம் சொல்வதில் இருக்கும் அழகை மறுக்கவும் முடியாது. `கைகளைக் கூப்புவதால் காந்தசக்தி விரல் நுனியில் குவியும்’ என்பது மாதிரியான ஏதேனும் காரணம்கூடச் சொல்வார்கள். இது ஆராய்ச்சிக்கு உரியது. மனிதர்கள், பேதமற்ற தூய்மையான அன்பில் அணைத்துக் கொள்வது நல்லதுதான். ஆனால், அதை இப்படி ஓவியத்தில் கற்பனை ஜீவிகள் கற்றுத்தரும்படி ஆகிவிட்டதுதான் வருத்தம்!

காலண்டர்
சந்திரன், சூரியன், புவியின் காலநிலை மாற்றங் களைக்கொண்டுதான் பெரும்பாலான காலண்டர்களை வடிவமைத்திருக்கிறார்கள் நம் முன்னோடிகள். எகிப்தில் நைல் நதியில் வருடம் தவறாமல் வரும் வெள்ளத்தை அடிப்படையாகக் கொண்டுகூட காலண்டரை அமைத்திருக்கிறார்கள். ‘இன்று பருவம் தப்பி மழையும் வெயிலும் அடிக்கின்றன’ எனப் பேசிக்கொள்கிறோம். காலண்டர்களை ரீடிசைன் பண்ணவேண்டியிருக்குமா? தெரியவில்லை.
நாம் இன்று பயன்படுத்துவது கிரிகோரியன் காலண்டர். 1582-ம் ஆண்டு உருவாக்கப்பட்ட இந்த காலண்டருக்கு வடிவம் கொடுத்தவர், பதிமூன்றாம் போப் கிரிகோரி. பெயர்க்காரணம் அதுதான். ஆனால், கிறிஸ்து பிறப்பதற்கும் பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே ரோமில் காலண்டர் உருவாக்கப்பட்டிருந்தது. விஷயம் என்னவென்றால், வருடத்துக்கு 10 மாதங்கள்தான். மார்ச் மாதம்தான் வருடத்தின் முதல் மாதம். ரோமில் ‘அக்டோ’ (Octo) என்றால் எட்டு என அர்த்தமாம். அதாவது அக்டோபர் மாதம் என்பது எட்டாவது மாதம். ‘நோவம்’ என்றால் ஒன்பது (அட, நம்மூரில் ‘நவம்’ எனச் சொல்வோமே!) அதன்படி நவம்பர் ஒன்பதாவது மாதம். பிற்காலத்தில் ஜனவரி, பிப்ரவரி சேர்த்த பிறகு, மாதங்களின் பெயர்கள் அர்த்தமற்று இடம் மாறி வேடிக்கையாகிவிட்டன.
கி.மு 45-ல் ரோமப் பேரரசர் ஜூலியஸ் சீஸரால் சீரமைக்கப்பட்ட காலண்டரின் பிற்காலத் திருத்தம்தான் கிரிகோரியன் காலண்டர். கிறிஸ்துவின் பிறப்பை அடிப்படையாகக்கொண்டு கி.மு., கி.பி என உருவாக்கப் பட்டது. ஆனால், கிறிஸ்துமஸை நாம் டிசம்பர் மாதம் 25-ம் தேதியே கொண்டாடிவிடுகிறோம். ‘ஏன் ஜனவரி ஒன்றில் இருந்து வருடத்தை ஆரம்பிக்கிறோம்?’ என்பது ட்ரில்லியன் டாலர் கேள்வி. கிரிகோரியன் காலண்டரை, பெரும்பாலான நாடுகள் முதலில் ஏற்றுக்கொள்ளவில்லை. ஆளாளுக்கு தங்களுக்கு என ஒரு காலண்டரை வைத்திருந்ததே காரணம். பிறகு, உலகம் மெள்ள ஒரு சமரசத்துக்கு இறங்கிவந்தது. கிரிகோரியன் காலண்டருடன் தங்கள் உள்ளூர் காலண்டர்களையும் இணைத்து வெளியிடத் தொடங்கியது. நாம் முழுதாக ஒரு தமிழ் வருடத்தைப் பார்க்க வேண்டும் என்றால், அடுத்த வருட ஆங்கிலக் காலண்டரையும் வாங்கவேண்டியிருக்கிறது.
2016, லீப் வருடம். இதுவும் ‘ஜூலியன்’ காலண்டர் கணக்கினால் கிடைத்த குழப்பம் அல்லது தெளிவு. லீப் வருடத்தின் பிப்ரவரி 29-ம் தேதியில் பிறந்தவர் களுக்கு நான்கு வருடங்களுக்கு ஒருமுறைதான் பிறந்த நாள் வரும் என்பது தெரிந்த சேதி. ஆனால், ஸ்வீடனில் 1712-ம் ஆண்டு கிரிகோரியன் காலண்டரை ஒப்புக்கொள்ளும் விஷயத்தில் கொஞ்சம் குழப்பி, பின்னர் திருத்தி வெளியிட்டதால், 1712-ம் ஆண்டு ஸ்வீடனில் மட்டும் பிப்ரவரி - 30 வந்திருக்கிறது. அன்று பிறந்தவர்கள் அதற்குப் பிறகு பிறந்த நாளே கொண்டாடி யிருக்க முடியாது. ‘கால’க்கொடுமை என்பது இதுதானோ?

பால் ஐஸ்... கப் ஐஸ்..!
`பிரிக்க முடியாதது..?’ என நாகேஷ் பாணியில் யாராவது வினவினால், ‘பால்யமும் ஐஸ் வண்டியும்’ எனச் சொல்வேன். டிரில் பீரியடு விட்டால், பி.டி மாஸ்டரின் விசில் சத்தத்தையும் மைதானத்தின் எல்லையையும் ஒருசேரத் தாண்டினால், ஐஸ் விற்கும் அண்ணா சைக்கிளில் பெட்டியுடன் நிற்பார். தெருக்களில் எதிர்பாராத நேரத்தில் ‘பால் ஐஸ், கோன் ஐஸ், கப் ஐஸ்’ எனப் பிரத்யேக ஸ்வரத்தில் குளிர் வந்து பாயும் காதினிலே!
இந்த ஐஸ் வியாபாரிகள் சைக்கிளை ஸ்டாண்ட் போட்டு, ஐஸ்பெட்டியின் சதுர மூடியைத் திறக்கும்போது நீராவி மெள்ளக் கலைந்து வெளியேறுவது அழகு. ‘இவர்களுக்கு மட்டும் எங்கு இருந்து கிடைக்கிறது?’ என சிறுமூளையை யோசிக்கச்செய்யும் ஒரு வகை வஸ்து கைகளில் இருக்கும். லோட்டா மூடிபோல இருக்கும் அதை கைகளில் வைத்து ஆட்டினால், மணி அடிப்பதுபோல சத்தம் வரும். சில வியாபாரிகள் ஆட்டோ ஹார்ன் மாதிரி ஒன்றை வைத்திருப்பதைப் பார்த்திருக்கிறேன்.
நீட்டுகிற சில்லறைக்கு ஏற்ற மாதிரி கலர் கலராக சேமியா ஐஸ் முதல் கப் ஐஸ் வரை கைகளில் சில்லிடும்; நாவில் உருகும்; முழங்கை வரை வழியும். எக்ஸ்சேஞ்ச் மேளாபோல பழைய பொருட்களுக்கு ஐஸ் தரும் வியாபாரிகளும் உண்டு. அப்போது எல்லாம் ஊருக்குச் சின்னதாக ஐஸ் ஃபேக்டரிகள் இருக்கும். இன்று அந்தச் சிறு வியாபாரிகள் வெயிலில் போட்ட ஐஸ்போல கரைந்து கொண்டிருக்கிறார்கள். பெரிய கம்பெனிகள், குச்சி ஐஸுக்கே கோடியில் விளம்பரம் பண்ணுகின்றன. கடைகளில் கேட்டால் பிராண்டிங் பண்ணி பேக் செய்யப்பட்ட குச்சி ஐஸுகளை ஃப்ரீஸரில் இருந்து எடுக்கிறார்கள். விலையைக் கேட்டால் மூளை ஜில்லிடுகிறது!

நடனம்
புத்தாண்டு கொண்டாட்டங்களில் பார்க்கிறேன். GEN Z யுவாக்கள் எலெக்ட்ரிக் கிடாருக்கு ஒருசேர கூந்தலை விரித்துப்போட்டு ‘ஹெட் பேங்கிங்’ என, தலையை பூம் பூம் ஆட்டுகிறார்கள் அல்லது குத்துப் பாடல்களுக்கு இடுப்பை முறிக்கிறார்கள்.
குறுந்தொகையில் வரும் ‘மள்ளர் குழீஇய விழவி னானும்…’ என ஆரம்பிக்கும் செய்யுளைப் பாடியது ஆதிமந்தி என்னும் பெண் (‘பாற்புலவர்’ எனச் சேர்த்தால், சற்றே ரொமான்டிக் தன்மை குறைகிறது). ஆட்டனத்தி என்னும் தன் காதலனைத் தேடுவதாக வரும் பாடல். இருவருமே ஆட்டத்தில் வல்லவர்கள். இப்படி ஆதிமந்தி, ஆட்டனத்தி பரம்பரையில் வந்த நாம் வெறுமனே ஹெட் பேங்கிங் மட்டும் பண்ணினால் போதுமா? நமது நடன வகைகளின் ஒரு லிஸ்ட்டைத் தேடிப்பார்த்தேன்... மலைப்பாக இருந்தது. சில, இப்போது சுத்தமாகக் களத்தில் இல்லை.
கரகாட்டம், காவடியாட்டம், மாடு ஆட்டம், உறியடி ஆட்டம், கொள்ளிக்கட்டை ஆட்டம், புலி ஆட்டம், கணியான் கூத்து, சிலம்பாட்டம், குறவன் - குறத்தி ஆட்டம், கைச்சிலம்பாட்டம், பொய்க்கால் குதிரை ஆட்டம், பறையாட்டம், கும்மியாட்டம், பொம்மலாட்டம், தேவராட்டம், வில்லுப்பாட்டு, தப்பாட்டம், மின்னல் கோலாட்டம், கரடியாட்டம், தெருக்கூத்து, மேடைக்கூத்து, பாம்பு நடனம், சேவையாட்டம், பேயாட்டம், சாமியாட்டம், கெங்கையம்மன் ஆட்டம், குறவஞ்சியாட்டம், அரிகதை ஆட்டம், காளியாட்டம், மயிலாட்டம், ஒயிலாட்டம், கோலாட்டம்.
இன்னும் தேடினால் லிஸ்ட் நீளலாம் அனுமார் வாலாட்டம்!