மற்ற எபிசோடுகள்
Published:Updated:

கலைடாஸ்கோப் - 22

எண்ணம் வண்ணம்: சந்தோஷ் நாராயணன்

கலைடாஸ்கோப் - 22

`ஐ லவ் யூ' - உள்ளுக்குள் சொல்லிப்பார்த்துக் கொண்டான் நவநீதன். எப்படியாவது சொல்லிவிட வேண்டும். ருக்மணி எதிரில் அமர்ந்திருந்தாள்.

``பிளாக் ஹோல் தியரியில ஒரு சுவாரஸ்யமான விஷயம் இருக்கு தெரியுமா?” என்றாள் ருக்மணி.

`அதுவா முக்கியம்?' - இது மனதில். “சொல்லு... என்ன சுவராஸ்யம்?” என்றான் உதட்டில்.

``இயற்பியல் அறிஞர் பிரையான் கிரீனின் தியரி படிச்சிருக்கியா? அதாவது நாம் வாழும் இந்தப் பிரபஞ்சம் பிளாக் ஹோல்னால உள்ளே இழுக்கப் படுறப்போ, என்ன நடக்கும் தெரியுமா? அதன் விளிம்பான ஈவன் ஹாரிஸானில் இருக்கும் விசை காரணமாக, ஒரு சிதறிய கண்ணாடியில் படும் ஒளிபோல நாலா பக்கங்களிலும் இந்தப் பிரபஞ்சம் பிரதிபலிக்கும்” என்றாள் உற்சாகமாக.
``ம்ம்... புரியுது. இங்கே நீயும் நானும் இருக்கிறதுபோல இன்னும் நூற்றுக்கணக்கான நவநீதன்களும் ருக்மணிகளும் வெவ்வேறு பிரபஞ்சங்கள்ல இருப்பாங்க இல்லையா?” என்றான் நவநீதன். `சொல்லிவிடலாமா?’ என உள்ளே யோசித்தான்.

“ஆமாம்... ஆனால், அவை எல்லாம் பிம்பங்கள்தான்; ஒரிஜினல் இல்லை” என்றாள்.

``எல்லா நவநீதன்களுக்கும் ருக்மணிகளுக்கும் காலம் ஒண்ணுபோல இருக்குமா?” என்றான். `சொல்லு... சொல்லு...’ என்றது மனது.

“இல்லை... அது பிரதிபலிக்கும் தூரத்தைப் பொறுத்து மாறலாம்” எனப் புன்னகைத்தாள்.

“ஐ லவ் யூ” - எதிர்பாராத கணத்தில் வந்துவிட்டது. அவள் பார்வை ஒரு நொடி பதறியது. விருப்பமின்மை, முகத்தில் படர்ந்தது.

“சாரி ருக்மணி... விருப்பம் இல்லன்னா விட்டுடு. இனி அப்படி உன்னை ஒருபோதும் நினைக்க மாட்டேன்” என்றான்.

கலைடாஸ்கோப் - 22

`ஐ லவ் யூ’ - உள்ளுக்குள் சொல்லிப்பார்த்துக்கொண்டார்கள் நவநீதன்கள். எப்படியாவது சொல்லிவிட வேண்டும். ருக்மணிகள் எதிரில் அமர்ந்திருந்தார்கள்!

கலைடாஸ்கோப் - 22

`கண்களும் கதை பேசுதே!’ என நம் கவிஞர்கள் வியப்பார்கள். நிஜமாகவே கண்களால் கதை சொல்கிறார் ஒரு பெண். பெயர் தால் பெலேக் (Tal Peleg). மேக்கப் ஆர்ட்டிஸ்ட்டான தால், தன் கண்களையே கேன்வாஷாகப் பயன்படுத்துகிறார்.

``மேக்கப் என்பது, சிறப்பான‌ கலைதான். ஆனால், பெண்களை அழகுபடுத்துவது என்பதைத் தாண்டி, அதில் ஏதாவது செய்ய வேண்டும் என நினைத்தேன். எனது எமோஷனை வெளிப்படுத்தவோ அல்லது கதை சொல்லவோ முயல்கிறேன். அதுவே இது...” என தன் கண்களைக் காட்டுகிறார்.

சிறு வயதில் இருந்தே மேக்கப் மீது தீராத ஆர்வம். தன் தங்கையின் முகத்தை வெள்ளோட்டம் பார்த்தவர், பிறகு ஓவியக் கல்லூரில் கிராஃபிக்ஸ் டிசைன் கற்றுக்கொண்டு, முழு நேர மேக்கப் ஆர்ட்டிஸ்ட் ஆகிவிட்டாராம்.

கலைடாஸ்கோப் - 22

சின்னஞ்சிறு பூனைக்குட்டிகள் முதல் தேவதைக் கதைகளில் வரும் கதாபாத்திரங்கள் வரை விதவிதமான ஓவியங்களை வரைகிறார். கண் மைகள், நீர்வண்ணங்கள் மற்றும் மேக்கப் தூரிகைகளைக்கொண்டு, தால் உருவாக்கும் சித்திரங்கள் அவர் கண்களைச் சுற்றி கலர்ஃபுல்லாக விரிகின்றன.

குழந்தைமையை தன் கண் இமையில் கொண்டுவரும் தாலின் இந்த ஓவியங்களைப் பார்ப்பவர்கள், ஆச்சர்யத்தில் கண்கள் விரிய புருவம் தூக்குவார்கள்போல!

கலைடாஸ்கோப் - 22

இணையப் போராளிகள் போல சட்டிகளில் பொங்கிக் கொண்டிருந்த சோற்றை, இன்று பிரஷர் குக்கருக்குள் அடைத்து, விடலைகளைப்போல விசில் அடிக்க வைத்துவிட்டோம். பொங்கல் அன்று மட்டும் சிலர் மண்பானைகளை வாங்கிச் சமாதானம்கொள்கிறோம்.

மண்பானைகளின் வரலாறு, நமது கிழக்கு ஆசிய நாடுகளில்தான் ஆரம்பிக்கிறது. கி.மு 14,000 ஆண்டுகளுக்கு முன்னரே மண்ணால் செய்யும் பாண்டங்களைப் பயன்படுத்தியதற்கான தடயங்கள் கிடைத்திருக்கின்றன. களிமண்ணில் குழிகள்போல செய்து, அதில் ஆற்றில் இருந்து தண்ணீரைப் பிடித்துக் கொண்டுவருவது, தானியங்களைச் சேகரித்துவைப்பது எனப் பயன்படுத்தியிருக்கிறார்கள்.  
`மண்பாண்டங்களைச் செய்ய, சக்கரத்தை எப்போது பயன்படுத்தினார்கள்?’ என்பதில் ஆய்வாளர்களுக்குள் இன்றும் அடிதடிதான். கி.மு 8,000-ல் இருந்து கி.மு 1,400 வரை எனக் குழப்புகிறார்கள். கி.மு 3,000-க்குப் பிறகு தொடங்கிய உலோகக் காலத்தில்தான் என்கிறது ஒரு தரப்பு. சிந்துசமவெளி, ஹரப்பா நாகரிக ஆய்வுகளில் மண்பாண்டங்கள் கிடைத்திருக்கின்றன.

இருங்கோவேளைப் பார்த்து கபிலர் பாடிய பாடலில் `வடபால் முனிவன் தடவினுள் தோன்றி’ என்கிற ஒரு வரி வருகிறது. ` ‘தட’ எனக் குறிப்பிடப்படுவது மண்பாண்டத்தைத் தான்’ என்கிறார் பேராசிரியர் ஐராவதம் மகாதேவன்.

அஃகுப்பானை, அகட்டுப்பானை, அடிசில்பானை என ஆரம்பித்து வடிநீர்ப்பானை, வாழைப்பானை, வெள்ளாவிப்பானை... என 60-க்கும் மேற்பட்ட  பானைகளின் பெயர்கள் தமிழில் இருக்கின்றன என்பதில் இருந்து, நாம் மண்பாண்ட நுட்பத்தில் எவ்வளவு அறிவுடன் இருந்திருக்கிறோம் என்பதை அறிய முடிகிறது.

இவ்வளவு அறிவையும், வேண்டாத மருமகளைப்போல‌ போட்டு உடைத்துவிட்டோம்!

கலைடாஸ்கோப் - 22

மர்ஃபி, பிலிப்ஸ், நெல்கோ... என இந்தப் பெயர்கள் வாயில் நுழையாவிட்டாலும், 70-களிலேயே எங்கள் ஊரில் ரேடியோ நுழைந்துவிட்டது. மின்சாரம் வராத வீடுகளிலும் ரேடியோக்கள் பாட்டரி உதவியுடன் பாட ஆரம்பித்துவிட்டன. ஒன்பதாம் நம்பருக்குள் கறுப்பு கலர் மின்னல் பூனை குதிக்கிற மாதிரி லோகோ உள்ள, எவரெடியின் சிவப்பு கலர் பாட்டரிகளின் ஞாபகம், மனதில் மெல்லிய மின்சாரமாகக் கசிகிறது.

ரேடியோவில் ஸ்டேஷன்களை ட்யூன் பண்ணுவதற்காக ஒரு திருகி இருக்கும். அதைத் திருகினால் ஸ்கேல் மாதிரி அமைப்பின் மீது சிவப்பு முள் நகர்ந்து, கரகரத்து, கடுகு தாளிப்பது, நாகஸ்வர சீவாளி டெஸ்ட்டிங், குழந்தை கீச்சு குரலில் வீறிட்டு அழுவது, காதில் கிடார் கம்பியை விட்டு ட்யூன் செய்வது... என இம்சித்துவிட்டு எங்கேனும் ஒரு கணத்தில் ஸ்டேஷன் பிடிக்கும்.
`ஆகாசவாணி, செய்திகள் வாசிப்பது...’ எனப் பழகிய குரல்கள் நிதானமாக நாட்டுநடப்புகளைச் சொல்லும். இரவில் நாடகங்களில் குரல்களே கதாபாத்திரங்களாகி, `அன்பே...’ எனக் காதலிக்கும்; ஹாஸ்யம் சொல்லும்; துப்பறியும்; அழுதுவடியும். ஒலிச்சித்திரம் என்னும் சினிமா காதுகளில் ஓடும்.

கொழும்பு வானொலியில் ஒலிபரப்பாகும் திரைப் பாடல்கள், எம்.எஸ்.வி-யை இளையராஜாவை... திண்ணைக்கே கூட்டிவரும். `உங்கள் அப்துல் ஹமீத்…’ என்ற குரலை இப்போது நினைத்தாலும், காதுகளில் கம்பீரத் தேன்வந்து பாய்கிறது அல்லவா!

கலைடாஸ்கோப் - 22

`பூமி, தட்டையானதா... உருண்டையானதா?’. அரிஸ்டாட்டிலுக்கு முந்தைய தத்துவவாதிகளான தாலஸ் முதல் டெமாக்ரட்டிஸ் வரை `பூமி தட்டையானது’ என்றே நம்பினார்கள். ஆனால், கிரேக்கக் கணிதவியலாளர் பித்தாகரஸ் `பூமி உருண்டை’ என்பதைக் கணித்துச் சொல்லியிருக்கிறார். பின்னர் அரிஸ்டாட்டிலும் `பூமி உருண்டையானதுதான்’ என்பதை நம்பினார். பெரும்பாலான நாடுகளில் பூமி தட்டையானது என்றே நம்பிக்கொண்டிருந்தார்களாம். 17-ம் நூற்றாண்டு வரை சீனா அதைத்தான் நம்பிவந்தது என்கிறார்கள்.

ஆனால், இன்றும் `பூமி டிஸ்க்போல தட்டையானது’ எனச் சொல்லும் `ஃப்ளாட் எர்த் சொசைட்டி’ போன்ற அமைப்புகளில் அமெரிக்கர்கள், பிரிட்டிஷ் ஆசாமிகள் இருக்கிறார்கள். அவர்கள் பூமியில் அடித்துச்சொல்வது என்னவென்றால், நடுவில் ஆர்ட்டிக் சர்க்கிளும் ஓரங்களில் பனிச்சுவராக அன்டார்ட்டிகாவைக் கொண்டதுமான டிஸ்க் வடிவில்தான் உலகம் இருக்கிறது; தட்டையான உள்பரப்பில்தான் நாடுகளும் கடலும் உள்ளன என்பதே. அந்தரத்தில் விட்டு எறிந்த ஃப்ரிஸ்பீ போல அது பறந்துக்கொண்டிருப்பதாக அவர்கள் நம்புகிறார்களோ... என்னவோ!

`நாசா போன்ற அமைப்புகள் நிதி திரட்டுவதற்காக போலியான விண்வெளித் திட்டங்களை உருவாக்குகின்றன. `உலகம் உருண்டை’ எனச் சொல்வதன் மூலமாக அது அடையும் பொருளாதாரப் பலன்கள் ஏராளம்’ என ஃப்ளாட் எர்த் தியரி பேசுபவர்கள் சாடுகிறார்கள்.

ஆனால், உலகம் உருண்டையானதுதான் என்பதை எப்படிச் சொல்கிறார்கள்? `ஈர்ப்புவிசைதான் காரணம்’ என்கிறார்கள் விஞ்ஞானிகள். `Hydrostatic equilibrium' எனச் சொல்கிறார்கள். அதாவது பூமியின் ஈர்ப்புவிசை தன்னைத்தானே எல்லா பக்கங்களில் இருந்து உள்ளிழுத்துக் கொள்ளும்தன்மை மற்றும் சுழற்சி. ஒரு கரடுமுரடான கல் தண்ணீரின் விசையில் அடித்துச் சுழலச் சுழல, அதன் மைய விசை காரணமாக, அது உருண்டை வடிவத்தை அடையும். இயற்கையின் மிகத் திறமையான எளிய வடிவம் உருண்டைதான். இதெல்லாம் நவீன அறிவியல், கணிதம், இயற்பியல்... என இன்ன பிறவற்றை ஆராய்ந்து சொல்கிறது.

ஆனால், எனக்கு ஆச்சர்யம் என்னவென்றால் `அண்டப் பகுதியின் உண்டைப் பிறக்கம்’ என ஒன்பதாம் நூற்றாண்டிலேயே மாணிக்கவாசகர் பாடியிருக்கிறார் என்பதுதான்!