எண்ணம் வண்ணம்: சந்தோஷ் நாராயணன்
அஞ்ஞானச் சிறுகதை
மிதிலை நகரம், சூரிய ஒளியில் பொன் நிறமாகச் சுடர்ந்தது.
கும்பகன் தன் கரிய மீசையை வருடியபடி, தன் மகள் நப்பின்னையுடன் ஆசனத்தில் அமர்ந்திருந்தான்.
வாடிவாசலைச் சுற்றி இருபக்கங்களும் நீளும் ஆட்டக் களத்தின் ஓரங்களில், மக்கள் பெரும் ஓசைகளாகவே மாறி ஆர்ப்பரித்தனர். எதிர்திசையில் திறந்த மூங்கில் படல்களை விலக்கிக்கொண்டு களத்தில் புகுந்து நடந்தான் மாயோன்.

புல்லாங்குழலையும் சூடியிருந்த மயில்பீலியையும் எடுத்து, கூட்டத்தில் இருந்த நண்பர்களிடம் வீசினான். தன் புஜங்களின் மீது புரண்ட கேசத்தை இறுகிய கருங்கரங்களால் அள்ளி முடிந்துகொண்டான். இடுப்பில் வஸ்திரத்தை இறுக்கினான். சூரியகிரணங்கள் அவன் கரிய தேகத்தில் பட்டு மினுமினுத்தன. கூட்டம் ஆர்ப்பரித்தது.
வாடிவாசலுக்குள் திமிறும் காளையின் அரவத்தைக் கேட்டவாறு, மாடத்தில் இருக்கும் நப்பின்னையை ஓரக்கண்ணால் பார்த்தான். அவள் முகம் பசுவின் மடிபோல மென்சிவப்பாகியது.
ஏறுதழுவலில் வென்றால், நப்பின்னை தன் துணைவி. பசுக்களின் மடியில் பாலை அருந்தியும் ஆயத்தில் கன்றுகளுடன் விளையாடியும் எருதுகளின் வாலில் ஊஞ்சலாடியும் வளர்ந்த தனக்கு, ஏறுதழுவுதல் ஒன்றும் பெரிய விஷயம் அல்ல என்று ஒரு கணம் தனக்குள் நகைத்துக்கொண்டான்.
ஆர்ப்பரிப்புடன் விடுபட்ட காளை, காற்றைப்போல அவனை நோக்கி வந்தது.
திடீரென ஒரு காவலாளி அரங்கில் தோன்றி முரசை அறைந்து ஓலையைப் படித்து உரக்கக் கூவினான். `மய்ய ராஜாங்க மன்றத்தின் உத்தரவு. ஏறுதழுவுதலை
88 கட்டளைகளுக்கு உட்பட்டு தடைசெய்கிறோம்.’
திகைத்து குனிந்து நின்றான் மாயோன். மண்ணைக் கிழித்தபடி வந்து முன்னங்கால்களை ஊன்றி சட்டென நின்றது காளை.

ஆவேசமான மூச்சுக்காற்று மண்ணில் பட்டு, புழுதி எழுவதை கூட்டம் பார்த்தது. காளையுடையதா மாயோ னுடையதா என்று கணிக்க முடியவில்லை!
நாஸ்டால்ஜியா நோட்
பொங்கல் வாழ்த்து அட்டைகள்
இப்போதெல்லாம் பண்டிகைகளின் பெயருக்கு முன்னால் ஒரு `ஹேப்பி’ போட்டு ஃபேஸ்புக்கிலோ, வாட்ஸ்அப்பிலோ ஷேர் செய்துவிட்டு, கடனே என்று நாளைக் கழிக்கிறோம். அடுத்த நாள் அலுவலக வேலையை நினைத்துக்கொண்டு மந்தமான சாயங்காலத்தைக் கடக்கிறோம். இந்த வார மினிமலிச ஓவியத்தில் உள்ளதுபோல ரிமோட்டின் சேனல்களுக்கு இடையே பொங்கலைக் கடந்துபோகிறோம். பண்டிகைகள் ஓர் ஓய்வு நாளாகச் சுருங்கிப்போய்விட்டன.

அன்றெல்லாம் பொங்கலுக்கு சில வாரங்களுக்கு முன்பே கடைகளில் வாழ்த்து அட்டைகள் வந்துவிடும். எம்.ஜி.ஆர்., சிவாஜி, ரஜினி, கமல் போன்ற நடிகர்கள் படம் முதல், பிள்ளையார், லட்சுமி, சரஸ்வதி போன்ற சாமி படங்கள் வரை தேவைக்குத் தேர்ந்தெடுக்கலாம். மாதவன் போன்ற ஓவியர்களின் கைவண்ணத்தில் கிராமத்துப் பெண்கள் கதிர் கொய்வதோ, உழவன் ஏர் ஓட்டுவதோ அல்லது குடும்பத்துடன் பொங்கல் வைப்பதோ போன்ற வண்ணமயமான படங்கள் மை வாசனையுடன் கிடைக்கும்.
ஐந்து பைசா முதற்கொண்டு ஐம்பது பைசா வரை வர்க்கவேறுபாடுகளில் கிடைக்கும் அந்த அட்டைகளை வாங்கி, எங்கோ ஊரில் இருக்கும் உறவுகளுக்கு கவிதை மாதிரி எதையாவது எழுதிவிட்டு, ஸ்டாம்ப் ஒட்டி சிவப்பு வண்ண போஸ்ட் பாக்ஸ்களைத் தேடி சமர்ப்பிப்போம். அது ஒரு `கார்டு காலம்’!
நானோ ஹிஸ்டரி
கலப்பை
கலப்பை வைத்து உழுத காலத்தில் எருது வைக்கோலைத் தின்று சாணம் போடும். அதுவும் உரம். `டிராக்டர் டீசல் மட்டுமே குடிக்கும்; சாணம் போடாது’ என நம்மாழ்வார் ஐயா சொன்னதாக ஞாபகம். இன்று ஏரும் இல்லை; எருதும் இல்லை என்றாகி விட்டது. எனினும் ஏர் என்பதன் வரலாறு என்ன என்று தேடினேன்.
கிறிஸ்துவுக்கும் 3,000 வருடங் களுக்கு முன்னர் மெசபடோமியாவில் எருதுகளை வைத்து ஏர் உழுததாக இணையத்தில் வரலாறு சொல்கிறது. இரும்புக் கலப்பைகளை முதலில் உருவாக்கியது யார் என்று தேடினால், 1797-ம் ஆண்டில் அமெரிக்காவின் இரும்புக்கொல்லர் சார்லஸ் நியூ போல்ட் என்கிறார்கள். அதற்கு முன்னால் மரத்தினால் செய்த கலப்பைகள்தானாம்.

ஆனால், `பொன்னேர் உழுதல்’ என்னும் நடைமுறை நம் மரபில் இருந்திருக்கிறது. `கார்விரி கொன்றைப் பொன்னேர் புது மலர்த் தாரன் மாலையன் மலைந்த கண்ணியன்’, `பொன்னேர் பசலை பாவின்று மன்னே!’ என அகநானூற்றுப் பாடல்களில் `பொன்னேர்’ என்கிற வார்த்தை வருகிறது. உண்மையில் பொன்னால் செய்த ஏரா அல்லது பொலிவைக் குறிக்க அப்படிச் சொன்னார்களா எனத் தெரியவில்லை. பருவகாலத்தின் முதல் உழுதலை `பொன்னேர் பூட்டல்’ என்றார்கள்.
1837-ம் ஆண்டில் ஜான் டீர் என்பவர் உருவாக்கிய நவீன இரும்புக்கலப்பை டிராக்டருக்கு முந்தைய வடிவம். சற்று அகலமான உலோகத் தகடால் செய்யப் பட்டது. ஆனால், நம் ஆட்கள் அகல உழுவதைவிட ஆழ உழுவதையே விரும்பி னார்கள்போல. கிட்டத்தட்ட பழைய, சற்று கூர்மையான கலப்பையையே உபயோ கித்துவிட்டு, நேரடியாக டிராக்டருக்கு மாறிவிட்டோம். எருதுகளை விற்றுவிட்டு யூரியாவுக்காக உரக் கடையில் காத்திருக் கிறோம்!
விஷுவல் கார்னர்
ஞாபகச் சிற்பங்கள்
கௌபாய் என்றால் க்ளின்ட் ஈஸ்ட்வுட் போல எப்போதும் டாலர்களைத் தேடிக்கொண்டோ, ரிவால்வரைச் சுழற்றிக்கொண்டோ திரிய மாட்டார்கள். அதெல்லாம் வெஸ்டர்ன் சினிமாக்கள் கொடுத்த பில்டுஅப். உண்மையில் மேய்ச்சல் மற்றும் விவசாய நில நிஜ ஹீரோக்கள் அவர்கள். `ஸ்பெயினில் இருந்து வட அமெரிக்க நிலங்களில் குடியேறிய முதல் ஐரோப்பியர்கள் இவர்கள்’ என்றும் சொல்கிறார்கள். நவீன வளர்ச்சி இன்று கௌபாய் வாழ்க்கையை சினிமா மெட்டீரியலாகச் சுருக்கிவிட்டது. நம் ஊரைப்போலவே அதன் மேய்ச்சல் மற்றும் விவசாயம் சார்ந்த வாழ்வியல் கிட்டத்தட்ட அழிந்துவிட்டது.
வட அமெரிக்க நகரமான சவுத் தகோடானில் இந்த கௌபாய் பரம்பரையில் வந்தவர் சிற்பி ஜான் லோபஸ் (John Lopez).

தன் முன்னோர்களின் வாழ்வியலின் ஞாபகமாக விவசாயத்துக்கும் மேய்ச்சலுக்கும் பயன்பட்ட பழைய பொருட்களைக்கொண்டு எருது முதல் குதிரை வரை விலங்குகளின் கொலாஜ் சிற்பங்களைச் செய்கிறார். வறண்ட நில மக்களான கௌபாய்களின் பயன்படுபொருட்கள் அவர்களுக்கே உரிய அழகியலைக்கொண்டது. அவர்கள் வாழ்வைப் போலவே பொருட்களும் துருவேறியவை. இரும்பு, பித்தளை என்று உலோகங்களின் வாசனையும் தோல்பொருட்களின் கடினத்தன்மையும் கொண்டது அவர்கள் உலகம். அந்தத் தன்மைகளை தன் படைப்பில் கொண்டுவந்து பழமையின் ஞாபகங்களை சவுக்குபோல பார்வையாளர் களின் மனதில் சொடுக்குகிறார்.

`எனக்கு இந்தச் சிற்பங்களில் மிகப் பிடித்தது இதன் டெக்சர். பழைய பண்ணை வாழ்க்கை சார்ந்த பொருட்களை அடுக்கடுக்காக வெல்டு செய்து இணைப்பதால் கிடைக்கும் இந்த டெக்சர், பார்ப்பவர்களின் நினைவுகளைக் கிளறி உற்சாகம்கொள்ளச்செய்கிறது’ என்று தன் அழகியலைப் பேசுகிறார்.
கௌபாய்களின் லவ்பாய்!
கொலாஜ்
கோலம்
`எறும்புகளுக்கும் உணவாகும்’ என அரிசி மாவில் கோலம் போடுவார்கள் அல்லவா. எங்களூரில் கோலம்போட கோலமாவுதான். அரிசி மாவில் புட்டு செய்வதோடு சரி. பெண்களின் ஆடுகளமான கோலம்போடுதலில் இறங்கிய நானெல்லாம், விரல்களில் விழுப்புண் பட்டுதான் கற்றுக்கொள்ளவேண்டியிருந்தது. கோலமாவை சுட்டுவிரலுக்கும் பெருவிரலுக்கும் இடையில் நுள்ளி எடுத்து தரையில் ஒரு கோடாக வரைவது அடிப்படை நுணுக்கம். முதலில் கோடு ஒழுங்காக வராது; பட்டையாகப் பிரியும். தொடர்ந்து பயின்றால், பட்டை மெள்ளக் கோடாக மாறும். பின்பு இஷ்டத்துக்கு ரைட் லெஃப்ட் எடுத்து கோடுகளை வளைக்கவோ நீட்டவோ முடியும். நான்கு புள்ளிகளில் ஆரம்பித்து நானூறு புள்ளிகள் வரை ஷேர்மார்க்கெட் பங்குகளைப்போல, கோலத்தின் அளவை நம் திறமைக்கு ஏற்றபடி விரிக்கலாம்.
கோலம் என்கிற விஷுவல் ஆர்ட், நம் ஃபோல்க் கலைகளின் ஒரு வெர்ச்சுவல் வடிவம். சிலப்பதிகாரத்தில் பல இடங்களில் `கோலம்’ என்னும் சொல் வருகிறது, ஒப்பனை என்னும் பதத்தில். ஒருவகையில் நாம் தரைக்குச் செய்யும் ஒப்பனையே கோலம். பழங்குடிகளின் வழிபாட்டில் தரை என்பதே முதல் புனிதப்பொருள். அதுவும் தெய்வம் முதல் காலடி எடுத்துவைத்து தன் வீட்டுக்குள் நுழையும் முற்றம், புனிதப்படுத்தப்படவேண்டிய ஒன்றாக அவர்கள் கருதியிருக்கலாம். கோலம் என்பது தண்ணீரோ பசுஞ்சாணமோ தெளித்துச் சுத்தப்படுத்தப்பட்ட தரைக்குச் செய்யும் ஒப்பனை.

அடிப்படையில் கோலம் ஒரு ஜியோமிதிக் கலைவடிவம். புள்ளிகள், கோடுகள், வளைவுகள் என கணித சூத்திரங்களுக்குள் அடங்கும் நேர்த்தியும் ஒழுங்கும்கொண்ட ஓர் அறிவியல் காட்சிக் கலை. தாந்திரிக் ஆர்ட்டிலும், கேரளாவின் `களம் வரைக்கல்’ போன்ற கலைகளிலும் அதன் நீட்சி உள்ளது. இன்றைய நவீன ஓவியங்களிலும்கூட இதன் தாக்கம் உள்ளது.
இன்று அப்பார்ட்மென்ட் கலாசாரத்துக்கு மாறி, முற்றம் என்கிற ஒரு வஸ்துவே இல்லாமல் வாழும் நாம் கோலத்தைப் பற்றி நினைத்துக்கூடப் பார்க்க முடியாத இடத்தை நோக்கி நகர்ந்துகொண்டிருக்கிறோம். கோலங்கள் பெண்களின் நுட்பமான அழகுணர்ச்சியின் வெளிப்பாடு. அசோகமித்திரனின் `கோலம்’ கதையில் வரும் விஜயாவை நினைத்துக்கொள்கிறேன்!