Published:Updated:

வைக்கோல் வாழ்க்கை

கவிதைகள்: யுகபாரதி

ஆளுக்கொரு வேலை

அவரவர்க்கு பல தேவை

ஊசி முனையளவும்

ஊர் உலகை நினையாமல்

காசொன்றே வாழ்வென்று

கரைகிறது ஜனக்கூட்டம்

வாசலில் கோலமிட

வாய்ப்பில்லா பெருநகரில்

பூசணிப்பூ வாசத்தை

நுகர்ந்ததில்லை மார்கழிகள்

யோசனைகள் மொத்தமுமே

இ.எம்.ஐ என்றாக

செல்போனில் இழவுகேட்டு

வைக்கோல் வாழ்க்கை

சொல்லுகிறோம் ஆறுதலை

வாழ வழி தெரியவில்லை

வருசமெல்லாம் நடைப்பயிற்சி

பணமிருந்தால் போதுமெனும்

பரிதவிப்பில் இளைத்துவிட்டோம்

சக்கையான வைக்கோலை

உண்ட பசு பால் கறக்க

சத்தியத்தைத் தொலைத்துவிட்ட

சம்பாத்யம் என்னத்துக்கு?

மனத்தூறல்

பெருமழை கூட்டிவந்த

பிழைகளை நாமறிவோம்

ஏரிகளைத் திறந்துவிட்டு

சேரிகளைச் சிதைத்தோரை

காரணம் சொல்லச்சொன்னால்

வருணனுக்கு வசைமாரி

திட்டமிட வக்கில்லை

திட்டுவதா பதிலென்றால்

கொட்டிவிட்ட மழை வெள்ளம்

கொடுப்பினையாம்

படிப்பினையாம்

மரம் செடி கொடி ஆறு கடல்

நதி ஓடை வாய்க்கால் வயல்

காடு கரை ஆடு மாடு அணில்

வைக்கோல் வாழ்க்கை

கோழி பல்லி மனிதன் என

யாருக்கும் காவலில்லை

எதற்கிந்தக் குடியரசு

ஊருக்குக் கேடுசெய்து

ஊழலுக்குத் துணைபுரிந்து

பேருக்கு ஆட்சிசெய்தால்

பிழைக்குமா சமுதாயம்

காருக்கு மானியங்கள்

கம்ப்யூட்டர் விதிவிலக்கு

மதுவுக்கு ஆதரவு

மறுப்பவர்க்கு சிறைக்கூடம்

இருப்பதை இழந்த எங்கள்

எதிர்பார்ப்பு ஏற்றமல்ல

கெடுத்ததைச் சரிசெய்யும்

கிளர்ச்சி. 

கூட்டுவண்டி

கொம்பு நீண்ட செவலைகள்

கூட்டு வண்டியிலேக

பெரிய மாமா கிளம்புவார்

பெரம்பலூர் சந்தைக்கு

போற வழிநெடுக

எம்.ஜி.ஆர் பாட்டு வரும்

கவிச்சை நெடியடிக்கும்

கண்சிமிட்டல் இடையிடையே

மூணுசீட்டில் விட்ட காசு

மூழ்கிவிட்ட சம்பா பயிர்

ஏலம்போன நகைநட்டு

எதிரியான சொந்தபந்தம்

எத்தனையோ கதையளப்பார்

இருமிக்கொண்டே புகைபிடிப்பார்

நடந்ததைச் சொல்லிச்சொல்லி

நாலு மைல் கடந்தபின்னே

கைநழுவிப்போன அவர்

வைக்கோல் வாழ்க்கை

காதலியை நினைத்தழுவார்

நுகத்தடியாய் அழுத்தும் அந்த

நினைவுகளில் மூழ்கியதும்

அச்சாணி இழந்துவிட்ட

வண்டியாக அவர் நொடிப்பார்

சாதி செய்த சூழ்ச்சி எண்ணி

சங்கடத்தில் நகங்கடிப்பார்

கூடாமல்போன ஆசை

கொல்லுவதைச் சொல்லாமல்

அத்தைக்குப் பூ வாங்கி

அடிமடியில் முடிந்து வைப்பார்

பெரிய மாமா பிரியமானவர். 

ஆடோட்டி

ஆடோட்டும் மேரியம்மா

அழுததில்லை இன்று வரை

கருவமுள் தைத்து

கால்கடுத்த வேளையிலோ

புருஷன்தனைவிட்டு

புகையாகிப் போகையிலோ

சொட்டுக் கண்ணீரையும்

விட்டதில்லை அவள் கண்கள்

மாமியார் கொடுமைசெய்ய

மனசொடிந்துபோனதுண்டு

நாத்தனார் ஏளனத்தில்

நாண்டுகொள்ள நினைத்ததுண்டு

பெற்றெடுத்தப் பிள்ளைகளே

பேசாமல் பிரிந்த பின்னும்

வைக்கோல் வாழ்க்கை

தத்தெடுத்த ஆடுகளால்

தலைநிமிர்ந்து வாழுகிறாள்

உற்றாரின் உதவிகளில்

ஓரு சாண் வயிறடங்க

சுருங்கியப் பொழுதுக்குள்ளே

சுருண்டதில்லை அவள் இதயம்

ஒளியிழந்த கண்களுக்குள்

உறக்கத்தைப் புதைத்த அவள்

பட்டியிலே படுத்திருப்பாள்

பாவிகளை மன்னித்து

கால விரல் நரை எழுத

கால் விரலும் நடுநடுங்க

காத்திருப்பாள் நள்ளிரவில்

கர்த்தர் வரக்கூடுமென்று.1 

நல்லறச் சாலை

யாரோ சொல்லி யாரோ கேட்டு

யார் யாரோ சேர்ந்து யாருக்காகவோ

உருவாக்கிய சாலையில்தான்

நம்முடைய கால்களும்

நிழல்சோற்றைக் கையிலேந்தி

இரு மருங்கும் எழுந்து நிற்கும் மரங்களோ

இன்றைய உயிர்களுக்காக

என்றைக்கோ சிந்தித்தவை

இவ்வழியே யார் வருவார்

இவ்வழியே யார் போவார்

யூகித்துச் செய்திருந்தால்

இத்தனை சாலைகளும்

இத்தனை இத்தனை ஊர்களும்

எழில் பூக்க அமைந்திருக்குமா

ஓரிடத்தில் குறுகலாகவும்

இன்னோரிடத்தில் அகலமாகவும்

அதனதன் இயல்புப்படி

படுத்திருக்கின்றன சாலைப் பாம்புகள்

கொளுத்தும் வெயிலெனினும்

கொட்டுகிற மழையெனினும்

உள்வாங்கிச் செரித்துக்கொள்ளுமவை

உமிழ்ந்து விரட்டுவதில்லை நம்மை

ஒரு சாலையென்பது

வைக்கோல் வாழ்க்கை

போய் வருவதற்கான வழிமட்டுமல்ல

நமக்கு முன்னேயும்

நமக்குப் பின்னேயும் பதிந்த

பதியப்போகிற தடங்களின் தடயம்

சாலைகளின் பயன்பாடுகள்

வெவ்வேறானவை என்றாலும்

நோக்கமும் எதிர்பார்ப்பும் ஒன்றுதான்

ஒரு சாலையின் முடிவில்

இன்னொரு சாலை தொடங்க வேண்டும்

சாலைகள் முடிவுறும் சமயத்தில்

வந்துசேர்பவை சமாதிகள்.