Published:Updated:

அந்தக் கணம்... அது ஒரு தரிசனம்!

பாஸ்கர் சக்தி, படங்கள்: அமர் ரமேஷ்

மர் ரமேஷ், அமெரிக்காவில் எம்.எஸ் படிக்கச் சென்று, பொழுது போக்குக்காகப் புகைப்படம் எடுக்கத் தொடங்கியவருக்கு, இப்போது அதுவே வேட்கையாகிவிட்டது. ”பல வெளிநாடுகளில், இளைஞர்கள் படித்து முடித்த உடனே வேலைக்குச் செல்லாமல் தங்கள் நாட்டின் பல பகுதிகளுக்கும் பயணம் செய்வார்கள். நம் நாட்டு இளைஞர்களும் அப்படி மாநிலம் முழுவதையும் சுற்றிப்பார்க்க வேண்டும்'' எனச் சொல்லும் அமர் ரமேஷ், இதை வலியுறுத்தி சில மாதங்களுக்கு முன்னர் ’டிஸ்கவர் தமிழ்நாடு' என்ற பெயரில் தமிழ்நாடு முழுக்க பயணித்துப் புகைப்படங்கள் எடுத்தார். அதில் இருந்து சில காட்சிப் பதிவுகள் இங்கே... 

அந்தக் கணம்... அது ஒரு தரிசனம்!
அந்தக் கணம்... அது ஒரு தரிசனம்!

தீவனம் கரைக்கையிலே

திமிறாமக்கூட நிக்கும்

வண்டி பூட்டி வாரையிலே

தன்னால வீடு வரும்

எத்தனை சத்தத்திலும்

என் சத்தம் தெரிஞ்சிருக்கும்

வேற ஊருக்காரனுக்கு

விக்கப்போறேன்

என்ன பண்ணும்?

அந்தக் கணம்... அது ஒரு தரிசனம்!

நட்டது லச்சம் நாத்து

லச்சமும் பயிரா ஆச்சு

பெத்தது ஒத்தைப்புள்ளை

நாத்தைப்போல்தானே அவளும்

புடுங்கி நட்ட பின்னே

திரும்பியும் பார்க்கவில்லை

ஆகட்டும் அதனாலென்ன

நடவுல சொகமா இல்ல?

அந்தக் கணம்... அது ஒரு தரிசனம்!

வீரப்பனார் கோயில் மட்டும்

வளந்திருக்கும் பச்சைப் புல்லு

கரடு தாண்டிப் போனமின்னா

வயிறு முட்ட மேஞ்சிருப்போம்

கரடெல்லாம் மேடாச்சு

காடெல்லாம் வீடாச்சு

மேய்ச்சல் நிலம் சுருங்குதய்யா

மேனியெல்லாம் நடுங்குதய்யா!

அந்தக் கணம்... அது ஒரு தரிசனம்!

ஞாவகத்தில் நிக்குதய்யா போன காலம்

ஏதாச்சும் நடக்கணும் இனி வாற காலம்

காத்திருந்து கழியுதய்யா இந்தக் காலம்

காலையிலேர்ந்து காத்திருக்கோம் ஒருத்தனும் காணோம்!

அந்தக் கணம்... அது ஒரு தரிசனம்!

அப்பன் சொத்து அஞ்சு ஏக்கர்

அத்தனையும் தென்னம்புள்ள

அரும்பாடுபட்ட நிலம்

ஆடு, கோழி பஞ்சமில்ல

சம்சாரி வாழ்க்கையில

சம்பாத்தியம் நிக்கவில்லை

கல்யாணம் காதுகுத்து

காலேஜு கருமாதி

காலமெல்லாம் உழைச்சாலும்

கரையேற மார்க்கமில்ல

தோப்பெல்லாம் வித்தாச்சு

இளநி இப்ப வண்டியில

தார் ரோட்டில் யேவாரம்

தாகமின்னும் தீரவில்ல!

அந்தக் கணம்... அது ஒரு தரிசனம்!

அய்யனாரு செஞ்சவன்

அவர் ஏறும் குதிரை செஞ்சவன்

புள்ளையாரும் செஞ்சவன்

பிடிமண்ணில் வித்தை செய்பவன்

சட்டி பானை செஞ்சாலும்

நான் சாமிபோல் படைப்பவன்!

அந்தக் கணம்... அது ஒரு தரிசனம்!

நெடிதுயர்ந்த தாயின்

நிழலில் விளையாடும்

பச்சை மூங்கிலைத்

தின்று பசியாறும்

காட்டாற்றில் புரண்டு

களித்து விளையாடும்

காட்சிப்பொருளா அது?

கானகத்தின் பேருயிரே!

அந்தக் கணம்... அது ஒரு தரிசனம்!

’வெளியில வெயில் எரிக்க...

அடுப்புல அனல் தகிக்க

புழுங்கிச் சாகிறேனே'னு

பொலம்பையில அவஞ் சொன்னான்...

’உயிர்ச்சூடு நிக்கணும்னா

பசித்தீயை அணைக்கணும்

அதுக்குத்தானே வேகிறோம்'னான்.

நிசந்தானே...

சூடுதான் உயிர்,

வெயில்தான் ஜீவன்!

அந்தக் கணம்... அது ஒரு தரிசனம்!

அச்சில சுத்தும்

ஆக்கர் வாங்கும்

வேகச் சுழலில் மயங்கி நிற்கும்

அந்த நொடியை ’ரொங்குதல்’ என்போம்.

அதிக வேகம் அசையாது நிற்கும்

அந்தக் கணம் அதுவொரு தரிசனம்!