Published:Updated:

“மோடிக்கு சன்னிதானத்தின் ஆசீர்வாதங்கள்!”

நா.சிபிச்சக்கரவர்த்தி, படம்: ப.சரவணகுமார்

“சன்னிதானத்தின் ஆசீர்வாதங்கள். `ஜாலி கேள்வி - பதில்’ பகுதியா? ஆனால், நான் சீரியஸாத்தானேப்பா பதில் சொல்வேன். பரவாயில்லையா?” எனக் கேட்டுவிட்டு அதிர்வேட்டுச் சிரிப்பு சிரிக்கிறார் மதுரை ஆதீனம்.

“அக்காவுக்கு வெளியே ரொம்ப நல்ல பேர் இருக்கு. அந்தப் பேரைக் காப்பாத்துற மாதிரி ஈஸியான கேள்வியா கேளுப்பா. பா.ஜ.க பற்றி எல்லாம் கொஸ்டீன்ல இருக்கும்ல?” எனக் கனிவாக விசாரிக்கிறார் காங்கிரஸ் கட்சி சட்டமன்ற உறுப்பினர் விஜயதரணி.

“இந்த வாரம் நானும் ஆட்டத்துக்குள்ள வர்றேனா தம்பி... நல்லது. சுலபமான கேள்வி களாக் கேளுங்க” - தயாராகிறார் நடிகர் ஜோ மல்லூரி.

“மோடிக்கு சன்னிதானத்தின் ஆசீர்வாதங்கள்!”

“பொது அறிவுல நான் கில்லிதான். ஆனாலும் நீங்க ரொம்ப டஃப்பா கொஸ்டீன் பேப்பர் செட் பண்ணியிருந்தீங்கனா, நான் என்ன பண்றது? எனிவே... கேளுங்க மோதிப்பார்த்துடலாம்” - ஆர்வமாகிறார் செய்திவாசிப்பாளர் பனிமலர் பன்னீர்செல்வம்.

“பிரதமர் மோடி, வானொலி மூலம் மக்களிடம் பேசும் நிகழ்ச்சியின் பெயர் என்ன?”

விடை: மன் கி பாத்.

மதுரை ஆதீனம்:
யோசித்தவர், “அட... அந்த நிகழ்ச்சி பேரு ‘மேக் இன் இந்தியா’. ரொம்ப நல்ல நிகழ்ச்சி. இந்தியாவின் முன்னேற்றத்துக்காக நாடு நாடாக மோடி சென்றுவருகிறார். இதை ஜாலி டூர்னு எல்லாம் சொல்றாங்க. நான் அப்படிச் சொல்ல மாட்டேன். இன்னமும் மீதம் உள்ள அனைத்து நாடுகளுக்கும் மோடி சென்று வர, சன்னிதானத்தின் வாழ்த்துகள்; ஆசீர்வாதங்கள். அப்படியே இந்த ‘மேக் இன் இந்தியா’ வானொலி நிகழ்ச்சிக்கும் ஆதீனத்தின் ஆசீர் வாதங்கள்னு போட்டுக்கோங்க” என்றவர் “இந்த நிகழ்ச்சி எப்போ ரேடியோவுல வருது தம்பி?” என விசாரிக்கிறார்.

விஜயதரணி: பட்டெனப் பதில் வருகிறது... “மன் கி பாத். இதுக்கு தமிழில் சரியான அர்த்தம் `மனசாட்சியின் குரல்’. ஆனால், மோடிக்கு மனசாட்சி இருக்கானு தெரியாதுங்க” என்றவர் “இந்தப் பதிலைப் படிச்சிட்டு எதிர்க்கட்சிக்காரங்க `விஜயதரணிக்கு எவ்வளவு குறும்பு பாரு?’னு சொல்லப்போறாங்க” - வெட்கப்பட்டுச் சிரிக்கிறார்.

ஜோ மல்லூரி: “ஏதாவது வித்தியாசமான பேராகத்தான் இருக்கும். நாட்டில் வசிக்கும் கோடி மக்களுடன் மோடி பேசுறார். அப்படின்னா கொஞ்சம் கமர்ஷியலா ‘மோடி வித் கோடி’னு வெச்சிருப்பாங்களோ?”

பனிமலர் பன்னீர்செல்வம்
: “எனக்கு இந்தக் கேள்விக்கான பதில் தெரியும். ஆனா, இப்ப டக்குனு ஞாபகம் வரலையே. மோடின்னா `வெளிநாட்டுப் பிரதமர்'னு தோணும். அதுதான் ஞாபகத்துக்கு வருது.”

“மோடிக்கு சன்னிதானத்தின் ஆசீர்வாதங்கள்!”

`` ‘ஷூட் த குருவி’ எனத் தொடங்கும் பாடல் எந்தப் படத்தில் வருகிறது?’’

விடை: ஜில் ஜங் ஜக்.

மதுரை ஆதீனம்:
“அய்யோ... `ஷூட் த குருவி’னு ஒரு பாடலா? குருவி இனமே அழிஞ்சிட்டு வருது. இதுல இப்படி ஒரு பாட்டா? ரொம்ப வன்மமா இருக்கே. இப்போகூட டி.வி-யில ஏதோ ஒரு பாட்டு ஓடுச்சு. ‘இது எந்த மொழிப் பாட்டு?’னு கேட்டேன். ‘தமிழ் சினிமா பாட்டுதான் சன்னிதானம்’னு சொன்னாங்க. எனக்கு ஏதோ புரியாத மொழிப் பாடலைக் கேட்பதுபோலவே இருந்தது. அந்தக் காலத்துல எவ்வளவு அழகான வரிகளோடு பாடல் வந்தது. அதுவும் டி.எம்.எஸ் பாடின பாடல் எல்லாம் கேட்டீங்கனா, அவ்வளவு பிரமாதமா இருக்கும். எனக்கு ரொம்பப் பிடிச்ச பாட்டுன்னா...” என ரூட் மாறி பாட்டுப் பாடத் தொடங்குகிறார்... “போனால் போகட்டும் போடா... இந்தப் பூமியில் நிலையாய் வாழ்ந்தவர் யாராடா?” எனப் பாதி பாடலைப் பாடிக் காட்டியவர், “சன்னிதானம் நல்லா பாடினேனா? அடுத்து இந்தப் பாடலைக் கேளுங்க. (சன்னிதானம் போதும்... ப்ளீஸ்) “பிறக்கும்போதும் அழுகின்றாய்... இறக்கும்போதும் அழுகின்றாய்... ஒருநாளேனும் கவலை இல்லாமல்... சிரிக்க மறந்தாய் மானிடனே...” என்றவர் சந்தேகமாக “என்னப்பா ரொம்ப நேரம் சத்தத்தையே காணோம்... பாட்டு கேட்டீங்கல்ல? இப்போ டைம் இல்லை. இல்லேன்னா, இன்னும் நிறையப் பாடல்கள் பாடிக் காமிப்பேன்.” (அப்பாடா!)

விஜயதரணி: “ `ஒய் திஸ் கொலவெறி’யா? அது தனுஷ் பாடின பாட்டுனு நினைக்கிறேன்” என்றவரிடம் மீண்டும் கேள்வியைச் சொன்னதும், “அட, ஆமாங்க. கொலவெறி பாட்டு நடுவில்தானே இந்த லைன் வரும். நான் சினிமாவுல ரொம்ப வீக்” - சிரிக்கிறார்.

“மோடிக்கு சன்னிதானத்தின் ஆசீர்வாதங்கள்!”

ஜோ மல்லூரி: “அய்யோ... மறந்துட்டேனே. இந்தக் கேள்விக்கு மட்டும் விடை கேட்டுட்டுச் சொல்லவா? அப்படியெல்லாம் சொல்லக் கூடாதா? இப்படி பிட்கூட அடிக்கவிடலைனா, எப்படி நாங்க பாஸ் ஆவோம்?”

பனிமலர் பன்னீர்செல்வம்:
“எந்தப் படம்னு தெரியலையே. இப்ப லேட்டஸ்ட்டா ‘நானும் ரெளடிதான்’ படத்துல வரும் பாட்டுதான் எனக்குப் பிடிச்சிருக்கு.”

“தமிழ்நாட்டில் இதுவரை எத்தனை முதலமைச்சர் வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்?”

விடை: கருணாநிதி, ஜெயலலிதா, அன்புமணி என இப்போது மூன்று பேர் களத்தில் இருக்கிறார்கள். அறிவிக்கப்படாத இன்னும் பலர் உள்ளனர்.

“மோடிக்கு சன்னிதானத்தின் ஆசீர்வாதங்கள்!”

மதுரை ஆதீனம்: “இது ரொம்பக் கஷ்டமான கேள்வியாச்சே. இதை எப்படிக் கணக்கு எடுப்பது? இங்கே பல முதலமைச்சர் வேட்பாளர்கள் இருக்காங்களே. தி.மு.க தலைவர், விஜயகாந்த், டாக்டர் அன்புமணி ராமதாஸ்னு பெரிய லிஸ்ட். ஒவ்வொருத்தரும் தன்னை முதலமைச்சர் வேட்பாளர்னுதான் சொல்றாங்க. ஆனா, அம்மா தான் இந்த முறையும் முதலமைச்சரா வருவார்.”

விஜயதரணி: “தி.மு.க-ல கருணாநிதி, ஸ்டாலின் ரெண்டு பேரு. அ.தி.மு.க-ல மக்கள் முதல்வர், முன்னாள் முதல்வர்னு ரெண்டு பேரு. தே.மு.தி.க-ல விஜயகாந்த் அவரது மனைவி பிரேமலதானு ரெண்டு பேரு. பா.ம.க-ல அன்புமணி அப்புறம் அவர் அப்பா ராமதாஸ் முதலமைச்சரா ஆகணும்னு ஆசைப்படுறாரானு தெரியலை. மக்கள் நலக் கூட்டணியில வைகோ, திருமாவளவன். பா.ஜ.க-ல அஞ்சு முதலமைச்சர் வேட்பாளர்கள் தமிழிசை, இல.கணேசன், நிர்மலா சீதாராமன், ஹெச்.ராஜா, பொன்.ராதா கிருஷ்ணன்னு பெரிய லிஸ்ட். உண்மையாகவே தமிழ்நாட்டில் முதலமைச்சர் வேட்பாளர்கள் இல்லாதது எங்க கட்சியில்தான். இந்தப் பெருமை எங்களுக்கு மட்டும்தான். சரி, இந்தப் பதிலைப் படிச்சிட்டு பா.ஜ.க-காரங்க கடுப்பு ஆவாங்கல்ல?”- சிரிக்கிறார்.

ஜோ மல்லூரி: “அய்யோ... வெவகாரமான கேள்வியா இருக்கே. சரி, என்னையும் சேர்த்து ஆறு பேர் இருக்காங்கனு போட்டுக்கோங்க. ஏன்னா, இங்கே அவ்வளவு முதலமைச்சர் வேட்பாளர்கள் இருக்காங்க. லிஸ்ட் போட்டா,  புத்தகம் பத்தாது.”

பனிமலர் பன்னீர்செல்வம்: “இப்ப வரைக்கும் குறைந்தது 25 முதலமைச்சர் வேட்பாளர்கள் களத்துல நிக்கிறாங்க. முதலமைச்சர் வேட்பாளர் விஷயத்துல மக்களே கன்ஃபியூஸாகிட்டாங்க ஜி.”

``டாஸ்மாக் நிறுவனத்தை ஏற்படுத்திய முதலமைச்சர் யார்?’’

பதில்: எம்.ஜி.ஆர்.

மதுரை ஆதீனம்: “டாஸ்மாக்னா என்னன்னே சன்னிதானத்துக்குத் தெரியாதே தம்பி...” எனச் சிரித்தவர், சொல்லலாமா... வேண்டாமா... என்ற தயக்கத்துடனேயே சன்னமான குரலில் “அம்மா ஆட்சியிலதானே டாஸ்மாக் தொடங்கினாங்க, இல்லையா... அப்போ கருணாநிதி ஆட்சியிலா?” (யோசிக்கிறார்) “பதிலை அப்புறம் பேசுவோம். அம்மா, இந்தச் சட்டமன்றத் தேர்தலில் பிரசாரம் செய்யச் சொன்னால், நான் அம்மாவுக்குப் பிரசாரம் செய்யத் தயாராக இருக்கேன்னு ஒரு வரி சேர்த்துக்கோங்க. சரி, சன்னிதானம் எல்லா கேள்விக்கும் சரியான பதில் சொல்லி யிருக்கேன்னு நினைக்கிறேன். அப்புறம் போன தடவை உங்களுக்கு ஒரு புக் அனுப்பினேனே படிச்சீங்களா? (சாமி... நான் கிளம்பட்டுமா?) இப்போ சன்னிதானம் லேட்டஸ்ட்டா ஒரு புக் எழுதியிருக்கேன். உங்க அட்ரஸ் 757, அண்ணா சாலை, சென்னை-2 தானே. நானே அனுப்பிடுறேன்'' அவ்வ்வ்வ்!

விஜயதரணி:
“எம்.ஜி.ஆர். டாஸ்மாக் பற்றி ஒரு மசோதாவை சட்டமன்றத்தில் தாக்கல் செய்ய ரெடி பண்ணினேன். ஆனா அ.தி.மு.க-காரங்க விடலை. ரொம்ப நாளைக்கு அப்புறம் ஒரு பரீட்சை எழுதியிருக்கேன். அக்கா பாஸ்தானே?

ஜோ மல்லூரி:
டவுட்டாகவே, “டாக்டர் கலைஞர்... ச் ஸாரி... ஸாரி. ஜெயலலிதா... சரியா?”

பனிமலர் பன்னீர்செல்வம்: வேகமாக பதில் வருகிறது “கருணாநிதிதான். சசிகலா கம்பெனியான மிடாஸ்ல இருந்து தொடர்ந்து சரக்கு வாங்கிட்டு இருந்தார். அப்ப கருணாநிதி தானே பதில்?”