Published:Updated:

சங்கரபாண்டியன் சேவல்!

ம.மாரிமுத்து, படங்கள்: வீ.சக்தி அருணகிரி

சேவல் சண்டையும் பேட்டைக்காரரும் சினிமாவில் மட்டும் அல்ல, நிஜத்திலும் இருக்கிறார்கள் சங்கரபாண்டியனைப் போல. சிலுப்பிய சிவப்புக் கொண்டையும் மிரட்டும் பார்வையும் களத்தில் போட்டிச் சேவலை ஒரண்டு இழுக்கும் தில்லும் கண்டால், நிச்சயமாகச் சொல்லிவிடலாம்... `அது சங்கரபாண்டியன் சேவல்' என!

45 ஆண்டுகளாக சேவல் சண்டையையே தன் உயிராக நேசிக்கும் சங்கரபாண்டியன், மதுரையில் மதிக்கத்தக்க பேட்டைக்காரர்.

``சின்ன வயசுல ஆரம்பிச்சது. 65 வயசுலயும் சேவல் பாசம் போகலை. சேவல் சண்டையில ரெண்டு வகை இருக்கு. ஒண்ணு `கத்திக்கட்டு'. சேவல் கால்ல கத்தி கட்டிவிடுவாங்க. இன்னொண்ணு `வெற்போர்'. கத்தி கட்டாம, வெறுங்கால்ல விடுறது. சேவலுக்குச் சேதாரம் வந்துரும்கிறதால கத்திக்கட்டு கம்மியாத்தான் நடக்கும். நாங்க உள்பட பலரும் நடத்துறது `வெற்போர்'தான். அந்தக் காலத்துல சண்டைக்கு கடிகாரம் எல்லாம் பயன்படுத்த மாட்டோம். ஊதுவத்தியைத் தண்ணியில நனைச்சு, நெருப்புல பத்தவெச்சு, அது எரிஞ்சு அணையுற வரைக்கும் போட்டி நடக்கும்.

சேவலை ஒரு வயசுல பந்தயத்துக்காகத் தேர்வு பண்ணுவோம். நல்ல சேவலா இருந்தா, உடனே விளையாட விட்டுறலாம். பெரும்பாலும் பயிற்சி கொடுக்கணும். அதுவா காயம்பட்டு, முறைப்பு ஏறி, விளையாட ஆரம்பிக்க நாலைஞ்சு மாசம் ஆகும்.

சங்கரபாண்டியன் சேவல்!

எனக்கு அஞ்சு பையங்க இருக்காங்க. அவங்களுக்குக்கூட மெனக்கெட்டு சாப்பாடு கொடுத்தது இல்லை. ஆனா, என் சேவல்களுக்கு சத்தான உணவாத்தான் கொடுப்பேன். தினமும் காலையில் மஞ்சள்கரு இல்லாம ரெண்டு பச்சை முட்டை, 10 பாதாம் பருப்பு, ரெண்டு வெங்காயம்,  பேரீச்சம் பழம்,  பச்சைமிளகாய், 1/2 தக்காளி எல்லாத்தையும் கலந்துகொடுப்பேன். இதோட கொஞ்சம் தண்ணீர். இது காலை டிபன். மதியத்துக்கு நவதானியம், தட்டாம் பருப்பு, முட்டை வெள்ளைக்கரு, கொஞ்சம் தேன், கொஞ்சம் நல்லெண்ணெய் எல்லாத்தையும் கலந்து உருண்டையாக்கிக் கொடுப்போம். இந்த ரெண்டு வேளைச் சாப்பாடும் சரியா செரிச்சா, சேவல் வித்தியாசமாக் கொக்கரிக்கும். உடனே ஒரு பச்சை முட்டையை நைட் குடுத்துடுவோம். வாரத்துல ஒரு நாள் சுவரொட்டி (ஆட்டின் மண்ணீரல்) சாப்பிடக் கொடுப்போம். இதுதான் பொதுவா, சண்டைச் சேவலோட உணவுமுறை'' என ஆச்சர்யப்படவைக்கிறார்.

ஒரு சேவல் பந்தயத்துக்குத் தயார் செய்யப்படுவது, அதைவிடவும் ஆச்சர்யமாக இருக்கிறது. மொத்தம் 21 நாட்கள் விதவிதமான பயிற்சி கொடுக்கிறார்கள்.

``ஒரு நாள்விட்டு ஒரு நாள் அதிகாலை 5 மணிக்கு, 15 நிமிஷம் நீச்சல் பயிற்சி கொடுக்கணும். அப்பதான் சேவலின் காலில் கொழுப்பு சேராது; களத்துல எதிராளியை, வலுவா விட்டு விளாசும். நீச்சல் முடிஞ்ச மறுநாள் தேய்ப்புப் பயிற்சி. இதில், றெக்கையப் பிடிச்சு நீவிவிடுவோம். கழுத்தைத் திருப்பி சொடக்கு எடுப்போம். சாயங்கால நேரத்துல ஆற்றுமணல்ல நடக்கவிடுவோம். இப்படிச் செய்யும்போது சேவலின் தொடைகள் இன்னும் இறுகும். அடுத்து, ஒரு கம்பு மேல் சேவலை நிப்பாட்டுவோம். இதனால், சேவலின் விரல்கள்ல பிடிமானம் இன்னும் அதிகரிக்கும். இப்படி 19 நாட்கள் பயிற்சிக்குப் பிறகு, கடைசி ரெண்டு நாட்கள் முழுக்க முழுக்க இருட்டு அறையில் வெச்சு ஓய்வு எடுக்கவிட்டுருவோம்'' என்றவர், சேவல் சண்டையின் விதிமுறைகளை விளக்கினார்.

சங்கரபாண்டியன் சேவல்!

``11 X 11 சதுர அடி அளவு களத்துலதான் சேவல் விளையாடணும். பறந்து அடிச்சிட்டு நின்னுக்கிட்டு இருக்கிறப்ப, தன் அலகால பந்தயக் களத்தோட தரையைத் தொடக் கூடாது. அப்படித் தொட்டுட்டா, சேவல் தோத்துருச்சுனு அர்த்தம். அடிவாங்கி கீழே விழுந்தா கன்ஃபர்மா தோத்துடுச்சுனு அர்த்தம். இதை செக் பண்றதுக்கு ரெண்டு நடுவர்கள், ஒவ்வொரு சேவலுக்குப் பின்னாடியும் உட்கார்ந்திருப்பாங்க.

ஒவ்வொரு சுற்றும் முடியுறப்போ சேவலுக்குத் தண்ணி காட்டணும். அடிபட்ட இடங்கள்ல இருக்கிற ரத்தத்தை உறிஞ்சி வெளியே துப்பணும். கொஞ்சம் தண்ணி கொடுக்கணும். சில ஆட்டத்துல, சேவலோட சதை கிழிஞ்சிரும். அதையும் அங்கேயே தைச்சு களத்துக்கு அனுப்பணும்'' எனப் பேசிக்கொண்டே போகிறார் சங்கரபாண்டியன். சேவல் சண்டைக்கு விதிக்கப்பட்டுள்ள தடையைப் பற்றி கேட்டால் அப்படியே அமைதியாகிறார். 

சங்கரபாண்டியன் சேவல்!

``என் 45 வருஷ சர்வீஸ்ல எந்தச் சேவல்காரரும் சேவலுக்குச் சாராயமோ, போதை வஸ்துவோ கொடுத்தது இல்லை. பந்தயத்துல சேவல் ஜெயிச்சா பரிசோ அல்லது சர்ட்டிஃபிகேட்டோ கொடுப் பாங்க. படத்துலதான் சூதாட்டம் மாதிரி காமிக்கிறாங்க. உண்மையில் அப்படி இல்லை. எனக்குத் தெரிஞ்சு, என் கையால 1,000 சேவல்களைத் தொட்டு பயிற்சி கொடுத்திருக்கேன். 100-க்கும் அதிகமான பந்தயங்கள்ல ஜெயிச்சிருக்கேன். இது ஒரு ஆசை'' என்கிறார் மதுரையின் இந்தப் பேட்டைக்காரர்.