Published:Updated:

சரிகமபதநி டைரி 2015

வீயெஸ்வி, படங்கள்: சொ.பாலசுப்ரமணியன், பா.காளிமுத்து

`கச்சேரி' என்ற பெயரில் கதைசெய்துவிட்டுப் போவோர் உண்டு. `(ஹரி)கதை' எனச் சொல்லிவிட்டு முக்கால் கச்சேரி செய்வோரும் உண்டு. சமீபகாலமாக ‘கதா கச்சேரி' வலம் வந்துகொண்டிருக்கிறது. இங்கே ஒரே மேடையில் கதை, கச்சேரி இரண்டும் உண்டு. டூ இன் ஒன்!

கிருஷ்ண கான சபாவில் ‘கிருஷ்ணம் வந்தேம் ஜகத்குரு' எனத் தலைப்பிட்டு, கிருஷ்ணனின் கதையை தேவகியின் கருவில் பகவான் இருந்தது தொட்டுச் சொன்னார் துஷ்யந்த் தர். பக்கத்திலேயே உட்கார்ந்து கிருஷ்ணன் பாடல் களாகத் தேர்ந்தெடுத்து கச்சேரி செய்தார்கள், `கர்னாடிகா பிரதர்ஸ்' என்று அறியப்படும் கே.என்.சசிகிரண், பி.கணேஷ்.

கோபியரைப் பரிகாசம் செய்தவன்; மாதரை அனவரதமும் தன் மீது மோகிக்கச்செய்து, இறுதியில் தன்னையே வணங்கச் செய்தவன்; தன் மகனென்று எண்ணி யசோதை மகிழ்ச்சியுடன் முத்தமிடவும், கபடமாகச் சிரித்தவன்... யாரோ கூறியது மாதிரி தெரிகிறதா? எல்லாம் நம்ம தியாகராஜர்தான்! ஆரபி ராகப் பாடலான ‘ஸாதிஞ்செநெ ஓ மனஸா...'வின் சரணத்தில் இப்படி வர்ணிக்கிறார் அவர். துஷ்யந்த் அறிமுகப்படுத்த, பிரதர்ஸ் பாடினார்கள்.

ஆண்டாளின் ‘ஒருத்தி மகனாய்ப் பிறந்து...' திருப்பாவையும் பட்டியலில் உண்டு. மற்றபடி, ஊத்துக்காடு வேங்கடகவிதான் நிறையத் தொகுதிகளை - ஸாரி - பாடல்களைக் கைப் பற்றினார் - மன்னிக்கவும், தேர்தல் காய்ச்சல்! குறிப்பாக, 12-வது நூற்றாண்டில் ஜெயதேவர் பாடியிருப்பதன் அடிப்படையில் 17-வது நூற்றாண்டில் ‘ஸ்வாகதம் கிருஷ்ணா' என ஊத்துக் காட்டார் பாடியிருக்கும் அதிசயத்தையும், ராசலீலை காட்சிகளையும் துஷ்யந்த் தர் வர்ணித்தது ஜோர்.சீஸனில் மாறுபட்ட அனுபவம்!

சரிகமபதநி டைரி 2015

ஆங்கில அகராதியைப் புரட்டி `Consistency' என்ற சொல்லுக்கு அர்த்தம் பார்த்தபோது, ‘ஒரே சீராக இருத்தல்' என இருந்தது. அதே வார்த்தைக்கு சங்கீத அகராதியில் ‘சிக்கில் குருசரண்' எனப் பொருள். மெயின் ஸ்லாட்டுக்கு வந்து வருடங்கள் பல ஆனாலும், கிடைத்த இடத்தைத் தக்கவைத்துக் கொள்ள தன் பாடும் திறனை மட்டுமே மூலதனமாகக்கொண்டு, மேலும் முன்னோக்கிப் பயணித்து வருபவர்!

பார்த்தசாரதி சாமி சபாவில், ஹம்சத்வனியில் வர்ணம் முடித்து, தொடர்ந்து இரண்டு, மூன்று உருப்படிகளைப் பாடியதும், தோடிப் பிரவேசம். அலட்டல், ஆர்ப்பாட்டம் இல்லாமல், உருட்டல் பிரட்டல் இல்லாமல், அழகான கையெழுத்தில் விடைத்தாள் எழுதுவது மாதிரி, சிம்பிள் அலங்காரத்தில் தோடியை மகன் அறிமுகப்படுத்தி அப்ளாஸ் திரட்டி சென்றதைக் கண்டு முன் வரிசையில் உட்கார்ந்து உவகையுற்றார் அவரது அம்மா. வயலினில் தோடியை நாகை ராம் நிழலாகத் தொடர்ந்தது கச்சிதம்.

சரிகமபதநி டைரி 2015

இளையவர்களுக்கு மிருதங்கம் வாசிக்கும்போது உமையாள்புரம் சிவராமன் ‘யூத்' ஆகிவிடுகிறார். பாடுபவர் கீர்த்தனைகளையும் ஸ்வரங்களையும் பாடும்போது இவரது மிருதங்கமும் கூடவே பாடிவருவது விந்தை. வாசிக்காமல் இவர் இடைவெளி கொடுக்கும்போது ‘சிவராம சுநாதம்' காதுகளை மயில் இறகுகளால் வருடுவது மாதிரி ஒலிப்பது புதுக்கவிதை. ‘தனி'யையோ கேட்க வேண்டாம். கலையைக் காதலிக்க, வயது என்றுமே தடை கிடையாது. இந்த 80 வயதிலும் சிவராமன் தன் மிருதங்கக் கலையைக் காதலிக்கிறார். அதனாலேயே இன்னமும் இளமையாக இருக்கிறார்.

‘`தீட்சிதர்...''

“உள்ளேன் ஐயா.''

“தியாகராஜர்...''

“பிரசென்ட் சார்.''

“சியாமா சாஸ்திரி...''

“யெஸ் சார்.''

ஒன்றரை மணி நேரத்தில் இப்படி மும்மூர்த்தி களின் பாடல்களைப் பாடி, பதிவேட்டில் `டிக்' போட்ட இரட்டையர்கள் அர்ச்சனாவும் ஆர்த்தியும், சங்கீத கலாநிதி வேதவல்லியின் மாணவிகள். ‘ நாதாதி குருகுஹ ஜயதி' என மாயாமாளவ கெளள ராகத்தில் தீட்சிதர் பாடிய அவரது முதல் கீர்த்தனை, சகோதரிகளின் கச்சேரியில் போணி. முன்னால் வடமொழியில் சுலோகம். அது வேதவல்லி பாணி!
இந்த விறுவிறு, சுறுசுறு சகோதரிகள் தியாக பிரம்ம கான சபாவில் கரகரப்ரியாவைப் பங்குபோட்டு ஆலாபனைசெய்து, அபூர்வமாகப் பாடப்படும் ‘மித்ரி பாக்யமே'வை ‘சித்ரரத்னமய...' என அனுபல்லவியில் தொடங்கி, பிழையின்றிப் பாடினார்கள்.

இரு குரல்கள் சேர்ந்து பாடும்போது ஒரு குரலாக கலகலவென ஒலிக்கும் அர்ச்சனா- ஆர்த்தி சகோதரிகளைப் பற்றி இப்போதே ஃபீல்டில் பரவலாகப் பேசுகிறார்கள்.

போகப்போக, பாடப்பாட மேன்மேலும் பரிமளிக்கப்போவது நிச்சயம்.

பார்த்தசாரதி சாமி சபா மேடையில் இரண்டு பாவாடை தாவணிகள். மூத்தவர் அனாஹிதா, எம்.ஓ.பி-யில் பட்டப்படிப்பு முடித்து, இசையில் மேற்படிப்பு தொடர்கிறார். இளையவர் அபூர்வா, அதே எம்.ஓ.பி-யில் இறுதி ஆண்டு. இருவரும் சித்ரவீணை ரவிகிரணின் மாணவிகள். ‘முத்ரா' நடத்திய கச்சேரிப் போட்டியில் வாய்ப்பாட்டுப் பிரிவில் முதல் இடம் வென்றவர்கள். அறிமுகப் படலம் போதும்!
கடுகு தாளிப்பது மாதிரி படபடவெனப் பாடுகிறார்கள் சகோதரிகள். கச்சேரிப் பட்டியலை ஜனரஞ்சகமாக அமைத்துக்கொள்கிறார்கள். அதாவது, வெற்றி நோக்கி எஸ்கலேட்டரில் வலது கால் எடுத்துவைத்துவிட்டார்கள்.

அபூர்வா பாடிய லதாங்கி, அனாஹிதா பாடிய பேகடா, இருவரும் ஒன் பை டூ பங்கிட்டுக் கொண்ட கரகரப்ரியா என ஒவ்வொன்றுமே ‘நாங்கள் சாதிக்கப்போகிறோம்...' என்பதை நிரூபிப்பதற்கான அடையாளங்கள்.

`கர்னாடக இசை உலகின் எதிர்காலம் இருள் மண்டிக்கிடக்கிறது' என இன்னமும் புலம்பிக்கொண்டிருப்பவர்கள் போக வேண்டிய இடம் கண் ஆஸ்பத்திரி!

சரிகமபதநி டைரி 2015

வீணை இசைக் கலைஞர் ராஜேஷ் வைத்யாவுக்கு, துணிவு அதிகம். பின்னே..? திரும்பவும் மழை வந்துவிடும் என்கிற அச்சத்தில் இந்த சீஸனில் யாம் கேட்டவரையில் யாருமே அமிர்தவர்ஷினி ராகம் பாடவோ, வாசிக்கவோ இல்லை. ஆனால், ராஜேஷ் வைத்யா அகாடமி கச்சேரியில் இந்த ராகத்தை ‘தில்'லாக வாசித்தார். ஒருவேளை, பேய் மழை சமயத்தில் இவர் சென்னையில் இருக்கவில்லையோ!
வாய்ப்பு கொடுத்த மியூஸிக் அகாடமிக்கு ஒருதடவைக்கு இருதடவை நன்றி சொன்ன ராஜேஷ், வீணைக்குத் துணையாக, இரண்டு மிருதங்கங்கள் - தபலா - கஞ்சிரா - கடம் மற்றும் ஸ்பெஷல் எஃபெக்ட்ஸ் கொடுக்க ஒருவர். தாரை தப்பட்டை மாதிரி சவுண்டு கொடுக்கும் தாளவாத்தியக் கச்சேரி!

கர்ணரஞ்சனியில் ஆரம்பித்தார். இரண்டாவதாக, ஹம்ஸத்வனியில் ‘வாதாபி'யை வென்றார். ராகமாலிகை ஸ்வரங்கள். பின்னர், அமிர்தவர்ஷினி முடித்துவிட்டு தேஷ் ராகத்தில் `Cloud nine’ என்ற தலைப்பிட்ட சொந்தப் பாடல். தொடர்ந்தது கதனகுதூகலம். ராஜேஷின் குரு வீணை சிட்டிபாபு நினைவுக்கு வந்தார். துர்கா ராகத்தில் ஒரு பாட்டு முடிந்ததும் ‘தனி' ஆவர்த்தனம். இத்தனை லயக் கருவிகள் சேர்ந்திசைக்கும் போது அதைக் ‘கூட்டு ஆவர்த்தனம்' எனச் சொன்னால் பொருத்தமாக இருக்குமோ?

வீணையை மீட்டும்போது, ராஜேஷ் வைத்யாவின் கை விரல்கள் சாகசம் புரிகின்றன; ஸ்வரங்கள் ஜாலம் புரிகின்றன. ஆனால், ஏதோவோர் அமைதியின்மை. ஃப்யூஷன் மியூஸிக் கேட்பது போன்ற உணர்வு.

குறைந்தபட்சம் டிசம்பர் சபாக்களில் வாசிக்கும்போதாவது ஒரே ஒரு மிருதங்கத்தை மட்டும் துணைக்கு வைத்துக்கொண்டு, சம்பிரதாயமான வீணைக் கச்சேரியை ராஜேஷ் வைத்யா நிகழ்த்த வேண்டும் என விரும்புகிறது மனம்.

செய்வீர்களா தோழரே..?

வருடம் 1959... இசைமேதை மதுரை மணி ஐயர் மியூஸிக் அகாடமியில் ‘சங்கீத கலாநிதி' விருது பெற்றபோது அவருக்கு வயது 47.

இந்த வருடம் ஜனவரி முதல் தேதி அன்று இதே மியூஸிக் அகாடமியில் இதே பெருமைமிகு விருது பெற்ற சஞ்சய் சுப்ரமணியனுக்கும் வயது 47. விருது கொடுப்பதற்கென அமெரிக்காவில் இருந்து பறந்து வந்த கணிதப் பேராசிரியர் மஞ்சுல் பார்கவாவுக்கு 41 வயது. இவருக்கு தபலா வாசிக்கவும் தெரியும்; எக்கசக்கக் கணக்குவழக்கு வைத்து எழுதி கொண்டுவந்த தலைமை உரை வாசிக்கவும் தெரியும்!
இந்த டிசம்பரில் சஞ்சய் விசிறிகள் முகநூலில் செய்த அலம்பல்கள் அளவுக்கு அதிகம். தங்கள் ஹீரோ நின்றால் ஒரு போட்டோ, உட்கார்ந்தால் ஒரு போட்டோ என்பது ஃபேஸ்புக்கில் தினசரி வாடிக்கையாக இருந்தது. அவர் பாடிய இடங்களுக்கு எல்லாம் துரத்திச் சென்று அரங்கில் இருந்து ஐபோன் வழியே அப்டேட் கொடுத்துக் கொண்டிருந்தவர்களும் உண்டு. கொஞ்சம் ஏமாந்தால் புது கலாநிதிக்குக் கோயில் கட்டி குடமுழக்கு செய்திருப்பார்கள்!

‘நான் பார்த்தவரையில் அகாடமியில் விருது பெற்ற சங்கீத கலாநிதி சஞ்சய் கச்சேரிக்கு வந்த அளவு பெரும் கூட்டம் வேறு ஒருவருக்கும் வந்தது இல்லை' என்று நிறைவு விழா வரவேற்பு உரையில் பூரித்தார் என்.முரளி.

நிசமாலுமா..?!

- டைரி புரளும்...