ஓவியம்: எஸ்.ஏ.வி.இளையராஜா
பரவசப் பயணம்
உன்னோடே ரயிலிலேறி
அமர்ந்து உறங்கி
வழியோரக் காட்சிகள் ரசித்து
தேநீரருந்தி
கோழிக்கோடு சந்திப்பில் இறங்கி
பேருந்திலேறி
உன் ஊருக்குப் பயணிக்கும்
இந்த ஞாயிறின் திடீர் பயணம்
பரவசமாகவே இருக்கிறது
நான் என் ஊரில்
என் வீட்டிலிருந்தபோதும்.
- சௌவி
நெருங்கிய தோழியென அறியப்பட்டவள்
நெருங்கிய தோழியென அறியப்பட்டவள்
காணொளி அழைப்பில் வந்திருந்தாள்
தன் நிச்சயிக்கப்பட்ட திருமணம்
நின்றுவிட்ட தகவலுடன்.
பதற்றமடைந்தவனின் மறுமொழி கவலையின்றித் தொடர்ந்தவள்
பீர் போத்தலையேந்திய 'அவனின்’
முகநூல் படம்தான் காரணமென்றாள்.
சிறுநேர அமைதிக்குப் பின்னர்

வாழ்வழிக்கும் மதுத் தீமைகளை ஒவ்வொன்றாய்ப் பட்டியலிட்டவள்
அதோடு நிறுத்தியிருக்கலாம்.
உன்னைப்போல ஒருவன்தான் துணையாக
விருப்பமென்று குறும்புன்னகை தந்தவள்
துண்டித்துவிட்டாள் நேரடி அழைப்பை.
பன்னீர்ப்பூ நறுமணம் அறை பரவும் அத்தருணத்தில்
குற்றவுணர்வுச் சாராயம் நிரம்பி வழியுமென் மதுக்கோப்பை விரிசலை அறிந்திருக்கவில்லை என் நெருங்கிய தோழியென அறியப்பட்டவள்.
- தர்மராஜ் பெரியசாமி
வலது
அவர் எப்போதும்
இடது தோளிலேயே
மம்பட்டி சுமந்து நடந்தார்
இடது கையாலேதான்
ஒருவரை ஓங்கி அறைந்தார்
அரிவாள் பிடித்தார்
தீப்பெட்டி கொளுத்தினார்
குழாய் மூடினார்
கல்லெறிந்தார்
களை பிடுங்கினார்
ஊரிலெல்லோரும் அவரை
'இடது’ என்றே அழைத்தார்கள்
அவருக்கு
வலது பக்க உதட்டுக்கு மேலே
ஒரு பெரிய மச்சம் இருந்தது
வலது கையில்தான்
ஒருமுறை கொப்பளம் வந்திருந்தது
வலது கால் செருப்பு மட்டும்
எப்போதும் அதிகம் தேய்ந்திருந்தது
அவருக்கு வலது பக்கக் காதோரத்தில்தான் முதலில் நரைக்கத் தொடங்கியிருந்தது
படுக்கையிலேயே ஒருநாள்
அவர் மரணித்திருந்தபோது
வலது பக்கமாகத்தான் ஒருக்களித்துக்கிடந்தார்
ஊரிலெல்லோரும் அவரை
'இடது’ என்றே அழைத்தார்கள்.
- அருண் காந்தி
சின்னக்கா
ஷாம்பு வாங்கிய ரெண்டு ரூபாயைக்
கணக்கெழுதி
ரவிக்கை கிழிய அண்ணன் சட்டையை
எடுத்துடுத்தி
தம்பி கழுத்தை இறுக்கிக்கட்டி
தெருவைச் சுற்றி
கருக்கலில் அப்பா எழுப்பி
பாடம் படிச்சு
ராப்பகலா அக்காகூட
வேலை செஞ்சு...
அம்மாவுக்கு நெஞ்சுவலி என்றதும்
மூணுமணி பஸ்ஸில் வந்த சின்னக்கா
திரும்பிக்கூடப் பாக்காம
அஞ்சுமணி பஸ்ஸுக்கு ஓடுது
’லேட்டாப்போனா
மாமா திட்டுவாரு’னு.
- பச்சோந்தி