Published:Updated:

இந்திய வானம் - 22

இந்திய வானம்
பிரீமியம் ஸ்டோரி
News
இந்திய வானம்

எஸ்.ராமகிருஷ்ணன், ஓவியங்கள்: ரமேஷ் ஆச்சார்யா

மௌனத் துணை

ஒருமுறை நானும் எழுத்தாளர் கோணங்கியும் கோவில்பட்டியில் இருந்து சென்னைக்கு பஸ் ஏறினோம். இரவு 7 மணி இருக்கும். இரவு முழுவதும் கால்வினோ, மார்க்வெஸ், பஷீர், நகுலன், மௌனி, லா.ச.ரா., பிரமிள் என பல்வேறு இலக்கியவாதிகள் பற்றியும் புத்தகங்கள் பற்றியும் பேசிக்கொண்டே வந்தோம். வழியில் உணவகத்தில் பேருந்தை நிறுத்தியபோது தேநீர் அருந்தியபடியும் பேச்சு தொடர்ந்தது. இருவரும் உறங்கவே இல்லை.

விடிகாலையில் பஸ் தாம்பரத்தை நெருங்கிய போது முன் ஸீட்டில் இருந்தவர், என் பக்கம் திரும்பி, `தம்பி, நீங்கள் பேசியதை எல்லாம் கேட்டுக்கொண்டுதான் வந்தேன். இலக்கியத்துல இவ்வளவு விஷயம் இருக்கா... சோறு தண்ணி இல்லாம ரெண்டு பேரும் பேசிக்கிட்டுவர்றீங்க? நீங்க ஏதோ ஒரு சிறுபத்திரிகை நடத்துறதா சொன்னீங்களே, அதுக்கு இந்தப் பணத்தை வெச்சுக்கோங்க’ என 500 ரூபாயை நன்கொடையாகத் தந்தார்.

யார் அவர், எதற்காக தனது பணத்தை எடுத்து சிற்றிதழ் வெளியிடக் கொடுக்கிறார் என ஒன்றும் புரியவில்லை. ஆனால், புத்தகங்களின் முக்கியத் துவத்தை ஒருவருக்கு உணர்த்திவிட்டால், அவர் நிச்சயம் உதவிசெய்வார்; தேடிப்போய் புத்தகம் படிப்பார்; புத்தகங்களை நேசிக்கத் தொடங்கி விடுவார் என்பது நிஜம்.

புத்தகம் படிப்பது ஒரு தளம் என்றால், அதைப் பற்றி பேசுவதும், விவாதிப்பதும், மக்களிடையே எடுத்துச்சொல்வதும் அவசியமான இன்னொரு தளம். ஒரு திரைப்படம் வெளியாகும்போது குறைந்தபட்சம் ஆயிரம் பேராவது அதற்கு இணையத்தில் விமர்சனம் எழுதுகிறார்கள். ஃபேஸ்புக், ட்விட்டர் எனப் பகிர்ந்து கொள்கிறார்கள். ஆனால், சிறந்த கதை, கவிதை, நாவல்கள் பற்றி பேசுவதற்கு ஒரு சதவிகிதம் பேர்கூட முன்வருவதே இல்லை.

இந்திய வானம் - 22

இத்தனை சேனல்களில் ஒன்றில்கூட புத்தகம் தொடர்பான ஒரு நிகழ்ச்சி இல்லை. சிங்கப்பூர் அரசாங்கம் புத்தக வாசிப்பை மேம்படுத்த `Read Singapore’ என்ற நிகழ்ச்சியை நாடு முழுவதும் நடத்துகிறார்கள். அதில் புத்தக அறிமுகம், எழுத்தாளர்களுடன் சந்திப்பு, பயிலரங்குகள், கதை சொல்லும் நிகழ்ச்சி எனப் பல்வேறுவிதமான நிகழ்வுகள் நடைபெறுகின்றன. சிறார்கள், பதின்வயதைச் சேர்ந்தவர்கள், பெரியவர்கள் என தனிக்கவனம் கொடுத்து புத்தக வாசிப்பை மேம்படுத்துகிறார்கள். அதில் தமிழ் மொழி சார்ந்த நிகழ்ச்சிகளும் சிறப்பாக நடைபெறுகின்றன.
சென்னை புத்தகக் கண்காட்சி நடைபெறும் தருணத்தையொட்டி நாமும், `Read Chennai’ என வாசிப்பு இயக்கம் ஒன்றை நடத்தலாம்தானே!

ஒருமுறை டெல்லியில் இருந்து தமிழ்நாடு எக்ஸ்பிரஸில் சென்னைக்கு வந்து கொண்டிருந்தேன். சென்னையில் இருந்து வந்திருந்த அண்ணா பல்கலைக்கழக மாணவர்கள் ஒரு கம்பார்ட்மென்ட்டில் இருந்தார்கள். அவர்கள் திடீரென ஆளுக்கு ஒரு பையோடு எழுந்து ரயில் பெட்டிகளுக்குள் நடக்கத் தொடங்கினார்கள். அந்தப் பையில் தமிழ், ஆங்கிலம் மற்றும் இந்திப் புத்தகங்கள் இருந்தன. `யார் எந்தப் புத்தகத்தை வேண்டுமானாலும் படிக்க எடுத்துக்கொள்ளலாம். படித்து முடித்தவுடன், அங்கேயே வைத்துவிடவும். சென்னை வந்தவுடன் நாங்கள் சேகரித்துக் கொள்கிறோம்’ என்றார்கள்.

ஆச்சர்யமாக இருந்தது. 32 மணி நேரப் பயணத்தில் பயணிகள் தாங்கள் விரும்பிய புத்தகங்களைத் தேர்வுசெய்து படித்துக்கொண்டு வந்தார்கள். சிலர் படித்த புத்தகங்களைக் கொடுத்துவிட்டு, வேறு புத்தகங்களைப் பெற்றுவந்தார்கள்.

சென்னையை நெருங்கும்போது நான் அந்த இளைஞர்களிடம் சென்று பாராட்டுத் தெரிவித்தபடியே, `இந்த யோசனை எப்படி உருவானது?’ எனக் கேட்டேன்.

`பத்திரிகையில் ஒரு கட்டுரை படிச்சோம். அதுல ஒருத்தர் இப்படி எழுதியிருந்தார். அதை நாங்க ட்ரை பண்றோம்’ என்றார்கள்.

`என்ன எழுதியிருந்தார்?’ எனக் கேட்டேன்.

` `ராஜஸ்தான்ல ஒட்டகத்துல கொண்டுபோய் புக்ஸ் தர்ற மொபைல் லைப்ரரி இருக்கு. தாய்லாந்துல குக்கிராமங்களுக்கு யானையில கொண்டுபோய் புக்ஸ் கொடுக்கிறாங்க. நம்ம ஊர்ல லாங் ஜர்னி போற ட்ரெயின்ல தனியா ஒரு கம்பார்ட்மென்ட்ல ஏன் லைப்ரரி வைக்கக் கூடாது?’னு எழுதியிருந்தார், அதைத்தான் நாங்க ட்ரை பண்ணிப்பார்த்தோம்’ என்றார்கள்.
`அந்தக் கட்டுரையை நான்தான் எழுதினேன்’ என அவர்களிடம் சொன்னேன். சந்தோஷத்தில் சிரித்தபடியே, `சாரி சார், உங்க பெயரை மறந்துட்டோம்’ என்றார்கள். எழுத்தில் உருவான ஒரு பொறி என் கண் முன்னே செயலாக மாறியிருந்தது சந்தோஷம் அளித்தது.

உறவுகள் கைவிட்ட நிலையில் தனித்து வாழும் முதியவர்கள் பலருக்கு புத்தகங்களே ஆறுதலாக இருக்கின்றன. அவர்கள் புத்தகங்களை உயிருள்ள ஒன்றாகக் கருதுகிறார்கள்; அதனுடன் பேசுகிறார்கள்; விவாதிக்கிறார்கள்; படித்த புத்தகங்கள் பற்றி யாரிடமாவது பகிர்ந்துகொள்ளத் துடிக்கிறார்கள்.

வாக்வம் க்ளீனர் விற்க வந்த சேல்ஸ்மேனிடம் 100 ரூபாய் பணம் கொடுத்து, ஒரு முதியவர் தன்னோடு மதியம் வரை பேசிக் கொண்டிருக்கச் சொன்னதாக ஒரு தகவலை இணையத்தில் வாசித்து அதிர்ச்சியடைந்து போனேன். தனிமையும் பயமும் ஏக்கமுமாக வாழ்பவர்களுக்கு ஆறுதல் தருகின்றன புத்தகங்கள்.

நீலகண்டன் அப்படித்தான் எனக்கு அறிமுகம் ஆனார்.

`எனக்கு வயது 78. புக்ஸ் படிக்கிறது ஒண்ணுதான் எனக்கு இருக்கிற ஒரே வேலை. டி.வி பார்க்க விருப்பம் இல்லை. எப்போவாவது ரேடியோ கேட்பேன். தினமும் காலையிலும் மாலையிலும் வாக்கிங் போவேன். ஒரு நாளைக்கு பத்து மாத்திரைகள் விழுங்குறேன். எல்லா நோயும் உடம்புல இருக்கு. வீட்ல தனியா இருக்கேன். வொய்ஃப் செத்துப்போய் அஞ்சு வருஷமாச்சு. பிள்ளைங்க ஆளுக்கு ஒரு ஊர்ல. படிச்சதைப் பத்தி யார்கூடயாவது பேசணும். அதான் உங்களுக்கு போன் பண்றேன். நீங்க தப்பா எடுத்துக்கிட மாட்டீங்களே...’ எனப் பேசியபடிதான் எனக்கு நீலகண்டன் அறிமுகம் ஆனார்.

பெங்களூரில் வசிப்பதாகச் சொன்னார். சில நாட்கள் இரவு ஒரு மணி, இரண்டு மணிக்கு போன்செய்து `தி.ஜானகிராமன் படிச்சிக்கிட்டு இருக்கேன். மனுஷன் என்னமா எழுதியிருக்கார்’ என்றோ, `பிரபஞ்சனோட சிறுகதைகள் படிச்சிக்கிட்டு இருக்கேன்’ என்றோ புத்தகங்களைப் பற்றி கடகடவெனப் பேச ஆரம்பித்து விடுவார்.

இந்திய வானம் - 22

ஆரம்பத்தில் எரிச்சலாக இருந்தது. பின்பு `பாவம் மனிதர், இது ஒன்றுதான் அவருக்கு மனஆறுதல்’ எனக் கொஞ்ச நேரம் பேசிக்கொண்டிருப்பேன்.

திடீரென அவராக போன்செய்வதை நிறுத்திவிட்டார். என்ன ஆனது எனத் தெரியவில்லை. நான் ஒருமுறை போன் செய்த போது போன் அணைக்கப் பட்டிருந்தது. பின்பு ஒருநாள் அவராக போன்செய்து பேசினார்...

`என்ன சார்... நான் செத்துப் போயிட்டேன்னு நினைச்சிக் கிட்டீங்களா? திடீர்னு யார் கூடவும் பேச வேண்டாம்னு தோணிச்சு. போனை ஸ்விட்ச் ஆஃப் பண்ணிட்டேன். எல்லாரும் பயந்துட்டாங்க. நாம உயிரோட இருக்கிறதோட அடையாளமே போன் ரிங் ஆகுறதுதான்போல. காண்டேகர் படிச்சிருக்கீங்களா? `கிரௌஞ்ச வதம்’ நல்ல புத்தகம். அதைத் தேடுறேன்... கிடைக்க மாட்டேங்குது. புக்ஸ் எல்லாம் ஆன்லைன் ஸ்டோர் வழியாத்தான் வாங்குறேன். ஏன் சொல்லுங்க... ஆர்டர் எடுக்கிற பசங்ககூட கொஞ்ச நேரம் பேசலாம் இல்லையா? அதான்...’ எனச் சொல்லிச் சிரித்தார்.

சில மாதங்களுக்கு முன்பு ஒருநாள் `சென்னை வந்திருக் கேன். நாம சந்திக்கலாமா?’ எனக் கேட்டார்.

`எங்கே தங்கியிருக்கிறீர்கள்? வந்து பார்க்கிறேன்’ என்றேன்.

`நானே வந்து பார்க்கிறேன். மாலை ஐந்து மணிக்கு உங்க வீட்டுக்கு வருகிறேன்’ என்றார். ஆனால் பார்க்க வரவில்லை. தொலைபேசியும் அணைக்கப் பட்டிருந்தது.

அடுத்த சில நாட்களுக்குப் பிறகு அவராக போன்செய்து, `நேர்ல பார்த்து என்ன ஆகப் போகுது... உங்களை எதுக்கு நான் கஷ்டப்படுத்தணும்? அதான் பார்க்க வேணாம்னு டிசைட் பண்ணிட்டேன்’ என்றார். என்ன மனிதர் இவர் என வியப்பாக இருந்தது.

பின்னர் ஒருநாள் திடீரென போன்செய்து `நான் பயந்தது நடந்துருச்சு’ என்றார்.

`என்ன சார் ஆனது?’ எனக் கேட்டேன்,

`நைட் பெட்ல படுத்திருந்தேன். திடீர்னு கால்ல பயங்கர வலி. நரம்பு வெட்டி வெட்டி இழுக்குது. ரெண்டு காலையும் அசைக்க முடியலை. கையாலே காலை தடவிவிட்டா வலி குறையலை. உதவிக்கு யாரைக் கூப்பிடுறதுனு தெரியலை. செத்துப்போன என் வொய்ஃப் பேரைச் சொல்லிக் கத்துறேன். அவ எப்படி வருவா? ஆனா, அந்தச் சமயம் அவளைத்தான் கூப்பிடத் தோணுது. நிச்சயம் அவ என் குரலைக் கேட்டு வருவானு நம்பினேன். அந்த நிமிஷம்தான் அவ இறந்துபோனதை முழுசா உணர்ந்தேன். கால் வலியைவிட அந்தத் துக்கம் கண்ணீரை வரவெச்சிருச்சு. சத்தமா வாய்விட்டு அழுதேன்.
காலை அசைக்கவே முடியலை. இன்னைக்கு என் கதை முடியப்போகுதுனு நினைச்சேன். பேசாம பிளாட்பாரத்துல படுத்திருந்தாகூட உதவினு கூப்பிட்டா, நாலு பேர் வருவாங்க. இந்த அப்பார்ட்மென்ட்ல யாரு வருவா? அழுகையும் கண்ணீருமா கத்திட்டிருக்கேன்.

அந்த நேரம் திடீர்னு மனசுல கு.ப.ரா-வோட `விடியுமா?’ கதை ஞாபகம் வருது. அதுல வர்ற குஞ்சலத்தை நினைச்சுக்கிட்டேன். அற்புதமான கதை சார். அந்தக் கதையில் வர்ற சீதாராமைய்யர் மாதிரி நானும் கடைசியில செத்துப்போயிருவேன் தோணிச்சு. மனுஷனோட மனசு ஏன் சார் இப்படிக் கிடந்து பயப்படுது? `விடியுமா?’ங்கிற தலைப்புக்கு எவ்வளவு அர்த்தம் இருக்குனு அன்னைக்குத் தெரிஞ்சுக்கிட்டேன்.

மறுநாள் காலையில் விடிந்து வெளிச்சம் வந்தபோது காலை லேசா அசைக்க முடிந்தது. எப்படியோ எழுந்து டாக்டருக்கு போன் பண்ணி னேன். ஆம்புலன்ஸ் வந்து ஹாஸ்பிட்டலுக்குக் கொண்டுபோனாங்க. நிறைய டெஸ்ட் எடுத்து மருந்து கொடுத்திருக்காங்க. ஹாஸ்பிட்டல்ல படிக்கிறதுக்கு புக்ஸ் கிடைக்காமப்போயிருச்சு. அது ஒண்ணுதான் கவலை. எந்த ஹாஸ் பிட்டல்லயும் நல்ல லைப்ரரி கிடையாது. டி.வி வெச்சிருக்கிறவங்க, புக்ஸ் வெச்சிருக்கணும் தானே... ஏன் தோண மாட்டேங்குது?’

இந்திய வானம் - 22

நீலகண்டன் பேசிக்கொண்டே போனார். அவரது தனிமையும் வேதனையும் என்னைப் பற்றிக்கொள்ள பேச முடியாமல் தொண்டையில் வலி ஏற்பட அமைதியாக இருந்தேன்.
நீலகண்டன் சொன்னார்...

`1960-ல் ஹிராகுட்ல வேலை பார்த்தப்போ தனியா மூணு வருஷம் இருந்திருக்கேன். பன்னிரண்டு வருஷம் தனியா கிரீஸ்ல வேலை பாத்திருக்கேன். எப்பவும் புக்ஸ்தான் துணை.

இப்போ எனக்கு ஃப்ரெண்ட்ஸ் யார் தெரியுமா? எல்லாம் செத்துப்போன ரைட்டர்ஸ்... பாரதியார், கல்கி, தி.ஜானகிராமன், கு.ப.ரா., மௌனி... இப்படிப் பலரோடயும் பேசிட்டிருக் கேன். இப்போ நான் உயிர் வாழுறதே படிக்கிறதுக்கு மட்டும்தான். எந்த புக்கை, பாதி படிச்சிக்கிட்டு இருக்கிறப்போ என் லைஃப் முடியப்போகுதுனு தெரியலை. வானலோகத்துல லைப்ரரி உண்டா, புக் படிக்கவிடுவாங்களானு தெரியலை’ எனச் சொல்லிச் சிரித்தார். அந்தச் சிரிப்பில் கசப் பேறியிருந்தது.

புத்தாண்டுக்காக அவருக்கு சில புத்தகங்கள் வாங்கி அனுப்பியிருந்தேன். இரண்டு நாட்களுக்கு முன்னர் பெங்களூரில் இருந்து ஒரு போன் வந்தது. `நீலகண்டன் இறந்துபோய்விட்டார். நீங்கள் அவருக்குப் புத்தகங்களைப் பரிசாக அனுப்பியதற்கு நன்றி’ என அவரது மகன் பேசினார்.

`எப்போது?’ எனக் கேட்டேன்.

`ஒரு வாரம் ஆகிறது.’

`என்ன ஆனது?’ எனக் கேட்டேன்.

`அவர் ஒரு கேன்சர் நோயாளி. பல ஆண்டு காலமாக சிகிச்சை எடுத்துக்கொண்டிருந்தார். முற்றிய நிலை, வலி வேதனையோடு பிடிவாதமாக தனியே வாழ்ந்தார். படிப்பது ஒன்று மட்டும்தான் அவருக்குப் பிடித்தமான விஷயம். கடைசியாக அவர் படித்துக்கொண்டிருந்த புத்தகம் பிரேம்சந்தின் `கோதான்’. மின் தகனத்தின்போது அந்தப் புத்தகத்தையும் உடன் வைத்து எரித்துவிட்டோம்’ என்றார்.
வருத்தமாக இருந்தது. இன்னொரு பக்கம் நீலகண்டன் கோதானின் மீதிப் பக்கங்களை வான் உலகில் இருந்து படித்துக்கொண்டிருப்பார் என்றும் தோன்றியது.

புத்தகங்கள் வாழ்வின் மீதான பெரும் நம்பிக்கையை ஏற்படுத்துகின்றன. துயரத்தில் இருந்தும், வேதனைகளில் இருந்தும் விடுபட வைக்கின்றன. அந்த மௌனத் துணையை பலரும் உணராமல் இருக்கிறார்கள் என்பதே தீராத வருத்தம்!

- சிறகடிக்கலாம்...