Published:Updated:

சமூகப் பேரிழிவு!

சமூகப் பேரிழிவு!

சமூகப் பேரிழிவு!

நாகப்பட்டினம் மாவட்டம் திருநாள் கொண்டச்சேரி என்ற கிராமத்தில், இறந்துபோன தலித் முதியவர் ஒருவரின் உடலை பொதுப்பாதையில் எடுத்துச் செல்லவிடாமல் தடுத்த ஆதிக்கச் சாதியினரின் சாதித் திமிரும், இந்த அநீதிக்கு அனைத்து வகைகளிலும் துணை நின்ற அரசின் அதிகாரத் திமிரும் நவீனத் தீண்டாமையின் கோர முகங்கள். 

இந்தியாவின் எத்தனையோ கிராமங்களைப்போல, திருநாள் கொண்டச்சேரியும் ஊர் என்றும் சேரி என்றும் பிரிந்துதான் இருக்கிறது. செத்த பிறகும் ஒட்டியிருக்கும் திமிர் சாதிக்கு மட்டுமே இருப்பதால், ஊருக்கும் சேரிக்கும் தனித்தனியே சுடுகாடு. அங்கே சேரி சுடுகாட்டுக்குச் செல்ல சாலை வசதி இல்லை. இறந்தவர்களின் உடலை வயல் வரப்புகளின் வழியேதான் தூக்கிச் செல்ல வேண்டும்.

சுடுகாட்டுக்குச் செல்ல பொதுப் பாதை இருக்கிறது. ஆனால் அதன் வழியே செல்ல, ஆதிக்கச் சாதியினர் அனுமதிப்பது இல்லை. கடந்த நவம்பர் மாதம் 26-ம் தேதி குஞ்சம்மாள் என்ற மூதாட்டி மரணம் அடைந்தார். மழை நேரச் சகதியில் வயல், வரப்புகளின் வழியே பிணத்தைத் தூக்கிச் செல்வது சிரமம் என்பதால், பொதுப்பாதையில் செல்ல தலித்கள் முயல... ஆதிக்கச் சாதியினர் அதை ஏற்கவில்லை. பதற்றம் உருவாகி, போலீஸ் குவிக்கப்பட்டு, இறுதியில் ‘எப்போதும் ஊர் வழக்கம்போல வரப்பின் வழியே தூக்கிச் செல்லுங்கள்’ என தீர்ப்பு சொன்னார்கள் சட்டத்தின் காவலர்களான காவல் துறையினர்.

இந்த நிலையில்தான் கடந்த 3-ம் தேதி குஞ்சம்மாளின் கணவர் செல்லமுத்து இறந்துபோனார். பொதுப்பாதையில் விட மாட்டார்கள் என்பது தெரிந்ததால், செல்லமுத்துவின் பேரன் உயர் நீதிமன்றத்தின் கதவுகளைத் தட்டினார். ‘பொதுப்பாதையில் எடுத்துச்சென்று அடக்கம் செய்ய வேண்டும். இதற்கு காவல் துறை பாதுகாப்பு கொடுக்க வேண்டும்’ என்று உத்தரவிட்டது நீதிமன்றம். ஆனால், சாதி வெறிக்கு முன்னால் நீதிமன்றம் எம்மாத்திரம்? சட்டம் பெரியதா... சாதி பெரியதா என்றால், சாதியே பெரியது என்பதை மறுபடி ஒருமுறை நிரூபித்தார்கள் திருநாள் கொண்டச்சேரியின் ஆதிக்கச் சாதியினர். 
 
இந்திய அரசியல் சாசனத்துக்கு எதிராகவும், நீதிமன்ற உத்தரவுக்கு எதிராகவும் செயல்படும் அவர்களின் மீது வழக்கு தொடர்ந்து கைதுசெய்யவேண்டிய காவல் துறையோ, பொக்லைன் மூலம் புதிய பாதை அமைத்து, ‘இதன் வழியே சடலத்தை எடுத்துச் செல்லுங்கள்’ என்றது. சாதிப் பாகுபாட்டைக் கலைவதற்கு நீதிமன்றம் உத்தரவிட்டால், தீண்டாமைச் சாலை அமைத்து சாதிவெறியை மேற்கொண்டும் உறுதிப்படுத்தும் வேலையைச் செய்தது காவல் துறை. அந்தச் சாலையில் செல்ல மறுத்து, பொதுப்பாதையின் வழியே செல்வதற்கு தலித்கள் முயல... அவர்கள் மீது தடியடி நடத்திய காவல் துறை, ‘சமூக அமைதியைச் சீர்குலைத்ததாக’ 50 தலித்களைக் கைதுசெய்திருக்கிறது.

மனித மாண்புகளுடன் வாழ அனுமதிக்காத இந்த அநீதியான சாதிவெறி அமைப்பு, கண்ணியமான மரணத்துக்கும் தடையாக நிற்கிறது. இதை அகற்றவேண்டிய அரசின் காவல் துறையோ, நீதிமன்ற உத்தரவையே காலில் போட்டு நசுக்கி, சாதி காக்கிறது. சாதியைப் பயன்படுத்திக்கொள்வதில் புதிய புதிய நுட்பங்களைக் கையாளும் அரசியல் கட்சிகளும் அரசும், சாதியை ஒழிக்க ஒரு வழி கண்டறியும் என நம்புவதற்கு இனி இடம் இல்லை. மனிதகுல வளர்ச்சிக்கு பெரும் தடையாக இருக்கும் சாதியை, நாம்தான் தூக்கித் தூர வீச வேண்டும். ஏனெனில் கழிவைச் சுமந்துகொண்டு வெகுதூரம் பயணிக்க முடியாது!